Share

Sep 9, 2012

பின்னிய மேகச்சடை

Oct 29, 2009


பின்னிய மேகச்சடை

திஜானகிராமன் மோகமுள் நாவலில் :" நிலவொளியில் வெண்மை பூண்ட மேகங்கள் கப்பல் கப்பலாக விம்மிக் கொண்டிருந்தன. வில்லடித்த பஞ்சுப் படலம் ஒன்றின் மீது சந்திரன் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது,வலையில் படாமல் ஓடுவது போல."

எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் கவிஞர்களைப் பற்றி சிலாகித்து சொன்ன வார்த்தைகள்-
" காலக்கறையானால் அரிக்கப்படாத பூமரங்கள் கவிஞர்கள். நிழலும் நறுமணமும் நல்கும் இத்தருக்கள் தான் வறண்ட நம் சமூக வாழ்வின் அரிய செல்வங்கள்."

கவியுள்ளம் பெறுவதற்கு ' உள்ளதை உள்ளத்தில் வாங்கி உயிரூட்டும் சுக்கிரத்தவிப்பு வேண்டும். உள்ளதுக்கு அப்பால் ஆழ்ந்து எரியும் சூரியத்தகிப்பு கூட வேண்டும் ' என்பார் பிரமிள். 'புட்டிகுடியையும் குட்டி அடியையும் அவுத்து அவுத்துக் காட்டிவிட்டால் கவிதை ஆகுமா?' என ஆவேசமாக கேட்டவர் அவர் .

நிலவு.அதைச்சுற்றி மேகங்கள் .இதை இரவில் பார்க்கிறார் பிரமிள்.
"நிலவை மழித்தான் தேவ நாவிதன்
சிகையாய் முகில்கள் வானில் விரிந்தன "


இது தான் உள்ளதை உள்ளத்தில் வாங்கி உயிரூட்டும் சுக்கிரத்தவிப்பு!எஸ் வைத்தீஸ்வரன் : 'வானம் கட்டுப்பாடற்று பெற்றுத்திரியவிட்ட
மேகங்கள், பொல்லாவாண்டுகள். நினைத்த இடத்தில்,கவலையற்று,நின்று தலையில் பெய்துவிட்டு,மூலைக்கொன்றாய் மறையுதுகள் வெள்ளை வால்கள் !'

சுக்கிரத்தவிப்பு!

சாதாரண உண்மைகளை ஒரு சரியான தலைப்பு கொடுத்துக்கூட நல்ல கவிதையாக்கிவிட முடியும் . புரட்சி என்ற தலைப்பில் ராஜசுந்தரராஜன் எழுதிய கவிதை அப்படி ஒரு கவிதையை உருவாக்கியது . அந்த 'புரட்சி ' என்ற தலைப்பு இல்லாவிட்டால் அது கவிதையே அல்ல என்றாகி விடும் .
புரட்சி
மேகத்தில் இருந்து
மழை மட்டுமல்ல
மின்னலும் பிறக்கும் .

இது உள்ளதுக்கு அப்பால் ஆழ்ந்து எரியும் சூரியத்தகிப்பு !

.......

Oct 31, 2009


குழந்தையும் காலமும்

புதுமைப் பித்தன் கதையொன்றில் ஆற்று நீரில் தன் கால்களை விட்டு விளையாடும் குழந்தை ஒன்று . வானில் சூரியன் தவிப்பான் . குழந்தையின் பாததரிசனம் வேண்டி. குழந்தையின் பாதங்கள் எப்போது நீரில் இருந்து வெளிவரும் என ஏங்கும் சூரியன். அவ்வளவு சுலபமாய் கிடைத்து விடுமா குழந்தையின் பாத தரிசனம் என புதுமைப்பித்தன் கேட்பார்.வெங்கட் சுவாமிநாதன் துவங்கி பலரும் இந்த 'புதுமைப் பித்தன் பன்ச் ' பற்றி மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறார்கள்.
காலச்சக்கரம் சுற்றியது.காலம் நகர்கிறது , காலம் போய்க்கொண்டிருக்கிறது. காலம் ஓடியது. காலம் ஓடிவிட்டது. காலம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற காலம் Cliché கள் நாம் வாசித்து ,கேட்டு சலித்தவை தான்.
சமீபத்தில் முகுந்த் நாகராஜனின் கவிதை பரவசம் தந்தது
"தயங்கித் தயங்கி
அம்மாவின் கைப்பிடித்து
மெதுவாகப் படி இறங்குகிறது
குழந்தை
சீராகப் போய் கொண்டிருந்த
காலம்
சற்று தயங்கித் தயங்கி
முன்னகர்கிறது "

.....................பெரியவர்கள் உலகில் உழைக்க உகுக்கப்படும் சிறுவர் சிறுமிகளின் labour பற்றி பிரச்சார சத்தமில்லாத கவிதை ஒன்று -
"தீப்பெட்டியைத் திறந்து
பார்த்தேன்
அத்தனையும் பிஞ்சுக்கரங்கள் "
மறைந்த கந்தர்வன் கவிதை ????

சுஜாதா கூட குழந்தைத்தொழிலாளி பற்றி ஒரு கவிதை முன்னர் எழுதியிருக்கிறார் .
அதில் ஒரு வரி இன்னும் மறக்க முடியவில்லை . ஏனென்றால் வெளியூர் போக நேரும்போது அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிட வேண்டியிருப்பதால் .
" ஹோட்டலில் சாப்டவுடன் இலை எடுப்பாய் "

...........................

Oct 20, 2009


கவிதைக் கனி பிழிந்த சாற்றினிலே


புதுமைப்பித்தனின் "கடவுளும் கந்தசாமியும் " சிறுகதையில் கந்தசாமியிடம் கடவுள் எச்சரிக்கையுணர்வுடன் சொல்வார் :" உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம், உடன் இருந்து வாழ முடியாது "
கந்தசாமி இதற்கு கடவுள் முகத்தில் அடித்தாற்போல பதில் சொல்வார் ." உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு."

பிரபலமான தேவதேவன் கவிதை ஒன்று

"காட்சியளிப்பதே தன் கடமையென உணர்ந்தவராய்
எழுந்தார்
துயர் குழப்பமிக்க இவ்வுலகில்
தன் கடமை என்னவென்ற வெகு
யோசனைக்குப் பின் கடவுள் "


என்ன தான் எச்சரிக்கையாகவும் கௌரவ பிரக்ஞையுடனும் கடவுள் இருந்தாலும் அவரை டென்சன் ஆக்காமல் மானிட ஜன்மங்கள் இருப்பதில்லை . சமீபத்திய ஆனந்தவிகடன் ஒன்றில் 'யூத்து கூத்து' பகுதியில் ஒரு ஜோக் .
" கடவுள் எப்போ டென்சன் ஆவாரு "
" கல்யாணம் ஆகாத பொண்ணு கர்ப்பமாகி வயிறு ஊதிபோய் நிற்கும்போது அவங்க வீட்டிலே " ஐயோ கடவுளே ! இப்படி பண்ணிட்டியே !" ன்னு புலம்புறப்ப தான் "
....


ஊருக்கு சொல்லுமாம் பல்லி!கழனியில் விழுமாம் துள்ளி ! - இது சொலவடை .
பல்லி விழும் பலன் என்று சோதிட சாஸ்திரத்தில் ஒரு பகுதி உண்டு . " பல்லி தலையில் விழுந்தால் மரணம் " - இப்படி பீதி கிளப்பும் பலன்கள் !
வாலிழந்த பல்லியைப் பார்த்து பிரமிள் எது கவிதை எனக்கேட்டு எழுதிய கவிதை .
"கவிதை -
இறக்கத்துடிக்கும் வாலா?
உயிரோடு மீண்ட உடலா ?"

சுவரில் நிற்கும் பல்லி ஏன் அசையாமல் நிற்கிறது . சுவற்றையே தான் தான் தாங்கி சுமந்துகொண்டிருப்பதாய் பல்லி நினைக்குமாம் . தான் அசைந்தால் சுவர் விழுந்து வீட்டில் உள்ள மனிதர்கள் செத்து விடக்கூடாதே என்று ஆடாமல் அசையாமல் நிற்குமாம்!செருக்கு!நினைப்புக்கார பல்லி!


சுவற்றில் உள்ள பல்லியை பாப்லோ நெருடோ தன் கவிதையில் கூறுகிறார் :
“ A Drop of Crocodile on the wall”


மாம்பழத்தைப் பிழிந்தால் துளித்துளியாக மாம்பழச்சாறு தான் வரும் . திராட்சையைப் பிழிந்தால் துளித்துளியாக திராட்சைச்சாறு கிடைக்கும். ஆனால் கவிதைக்கனி பிழிகையில் வெளிவரும் சாறு அப்படியல்ல . -பல்லி A Drop of Crocodile ஆகிப் போகிறது.
.......

Sep 8, 2009


புல்லை நகையுறுத்தி

புல்லை நகையுறுத்தி , பூவை வியப்பாக்கி விந்தை செய்யும் ஜோதி என்று குயில் பாட்டில் பாரதி சூரிய நமஸ்காரம் செய்வார் .

' புல்லை நகையுறுத்தி '
சூரியோதயம் புல்லை நகையாக்குகிறது . அல்லது புல்லுக்கு நகை தருகிறது .பாரதி புல்லை நகையாக்கினார் .
தாணு பிச்சையா என்ற தங்க நகை செய்யும் ஆசாரி ,தங்கத்தொழிலாளியின் கவிதை தொகுப்பு 'உறை மெழுகின் மஞ்சாடிப் பொன் '. அதில் ஒரு தங்கமான கவிதை -
காதில் தங்கத்தில் தொங்கட்டான் போட்டுக்கொள்ள வசதியில்லாத ஏழைப்பெண் . என்றாவது காதில் தொங்கட்டான் போட்டுக்கொள்ள முடியும் என்ற ஆசையும் நம்பிக்கையும் போகுமோ ? காதின் துளை மூடிவிடாமல் இருக்க வேப்பங்குச்சியை ஒடித்து சொருகியிருக்கிறாள் . மழை பெய்கிறது . மழைத்துளிகள் ஏழைப்பெண் காதில் வழிகிறது . காதில் உள்ள வேப்பங்குச்சியிலிருந்து சொட்டு சொட்டாக தொங்கட்டான் ஆகி .....
" ஓடித்துரசி போட்டுக்கொண்ட
வேப்பங்குச்சியால் உகுக்கிறாள்
தொங்கட்டானைப் போலுள்ள
மழைத்துளிகளை "

விவசாய எதிர்பார்ப்பை பொய்க்க வைத்த மழை பற்றி தேர்ந்த முதிர்ந்த விவசாயி " நேத்து பெஞ்சது என்ன மழையா ? மாமியா செத்ததுக்கு மருமக அழுத மாதிரில்லே இருந்துச்சு . மழைன்னா புருஷன் செத்தா பொண்டாட்டி அழுதமாதிரி இருக்கணும் ."

எஸ்.வைத்தீஸ்வரன் கவிதை - மேகங்களின் சேட்டை பற்றி :
வானம் கட்டுப்பாடற்று
பெற்றுத் திரியவிட்ட
மேகங்கள் ,
பொல்லா வாண்டுகள் .
நினைத்த இடத்தில் ,கவலையற்று ,
நின்று தலையில் பெய்துவிட்டு ,
மூலைக்கொன்றாய் மறையுதுகள்
வெள்ளை வால்கள் !"

மழை ,மேகங்கள் எனும்போது மின்னல் பளிச்சிடும் .
பிரமிளின் மின்னல் படிமங்கள் - ககனப் பறவை நீட்டும் அலகு, கடலில் வழியும் அமிர்த தாரை

'யது நாத்தின் குருபக்தி 'சிறுகதையில் தி.ஜானகி ராமன் :மின்னலின் அழகைக் காண ஒரு கணம் போதாதா ? ஒரு கணத்திற்கு மேல் தான் கிடைக்குமா ?'


மேக்பெத் நாடகத்தின் முதல் வசனம்
“When shall we three meet again?
In thunder,lightning or in rain
....1 comment:

  1. சுக்கிரத்தவிப்பும் சூரியத்தவிப்பும் அற்புதம்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.