Share

Jul 31, 2025

டி.வி. சீரியல் சினிமா எனும் பூதம்

26.07.2026

R.P. ராஜநாயஹம் ' சினிமா எனும் பூதம்' தொலைக்காட்சி தொடர் தொடர்ந்து பார்ப்பவர் பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் சிவநேசன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கதிரவன் ஹோட்டலில் அடையாளம் கண்டு கொண்டு 
சிவநேசன் உற்சாகமாக ' நீங்க ராஜநாயஹம் தானே?
முரசு டிவியில் சினிமா எனும் பூதம் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டரை மணிக்கு எப்போதும் பார்க்கிறேன். ரொம்ப பிரமாதமா பண்றீங்க' 

அன்று சனிக்கிழமை ஆண்டாள் கோவிலில் பட்டிமன்றத்தில் பேசுவதற்காக வந்திருந்தார்.

Jul 30, 2025

வேடிக்க - 43

வேடிக்க - 43

Despair 
Hidden Emotions
Coldest Hope

பொம்பள ஒன்னு 
'இளையராஜாவுக்கு மருமகளா ஆகியிருக்க வேண்டியவ. நடக்காம போயிடுச்சு ' ன்னு சொல்லுது.

இன்னொன்னு ' கமல்ஹாசங்கிட்ட  love you சொல்லலாம்னு போனா 
அவுரு Sister னுட்டாரு' ங்குது 

All's well that ends well 

'Oft expectation fails, and most oft there where most it promises; and oft it hits where hope is coldest, and despair most fits.'
- Shakespeare

தமிழ் படுத்திருக்குண்ணே

"தமிழ் படுத்திருக்குண்ணே 
தமிழ் படுத்திருக்கு"

அப்பல்லோல தான
 'அப்பா தமிழ்' கூட  சிகிச்சைக்காக படுத்திருந்தது

Jul 28, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை கோவிந்தா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர
தேரோட்டம் 

பதநி நொங்கு 

பதநி நொங்கு வண்டியை தள்ளிக்கொண்டு வந்த பெரியவரிடம் 

ராஜநாயஹம் " சார், பதநி நல்லா இருக்கா?"

பதநிக்காரர்: இருபத்தைந்து வருடத்திற்கு முன்பே பதநியில கலப்படம் செய்றத நிறுத்திட்டேன். 
(ஸ்ரீவி) திருவண்ணாமலை கோயில்ல புரட்டாசி சனிக்கிழம கலப்பட பதநிய விக்க நின்னேன். மூணு மணி நேரமா விக்கவேயில்ல. பசி மயக்கம்.
'கோவிந்தா, மன்னிச்சிடு. உன் மேல ஆணை. இனிமே கலப்பட பதநி விக்க மாட்டேன். என்ன நீ காப்பாத்து கோவிந்தா'ன்னு கண்ணீர் விட்டேன்.
பிரார்த்தனயா தேங்காய் ஒடச்சேன். தேங்கா சில்லுகள பொறுக்கி எடுத்து வீட்டுக்கு கொண்டு வந்து வீட்டுக்காரி கிட்ட குடுத்து 'தேங்கா சட்னி அரச்சி இத நம்ம ரெண்டு பேரு மட்டும் சாப்பிடனும். வேற யாருக்கும் குடுக்காத.' ன்னேன்.

"அப்பறம் மறு நாள் கலப்படமே செய்யாத சுத்த பதநியோட திருவண்ணாமல போனேன். ஒடனே வித்துப்போச்சி. அன்னயிலருந்து எப்பவும் சுத்தமான பதநி தான் விக்றேன்"

நொங்கு பதநி சுந்தரமூர்த்தி.

பன ஓலையில் நொங்குப்பதநி 
ரொம்ப ருசி.

Jul 23, 2025

ஏழு இசைக்குலங்கள்

சப்த ஸ்வரங்கள் பற்றி 
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 
"ஏழு இசைக்குலங்கள்" என்பாராம். 
எடிட்டர் இயக்குநர் லெனின் சொல்வது.  ஏழு இசைக்குலங்கள் என்றே காதில் விழுந்தது.
 காலகாலமாக சங்கீதத்தில் நனைந்து பல இசை நுணுக்க கிரகிப்பிலும் ஆர்வம் கொண்டிருந்த போதும் பட்டுக்கோட்டையின் இந்த அடிப்படையான வார்த்தை 
"ஏழு இசைக்குலங்கள்" யாரும் கவனப்படுத்தியதில்லை.

சரிகமபதநி
ஏழு இசைக்குரல்கள்.
"குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்"

கிருஷ்ணன் பஞ்சு பீம்சிங் உறவு. கிருஷ்ணன் லெனினுக்கு தாய்மாமா என்பது தெரியும்.
பஞ்சுவின் சகோதரர் 'கண்மலர்' பட்டு என்ற பட்டாபி ராமன் என்று  தவறாக எண்ணம்.
சாது மிரண்டால், மதராஸ் டூ பாண்டிச்சேரி இயக்கிய இரட்டையர்களில் ஒருவரான திருமலையின் சகோதரர் பட்டு என்று லெனின் சொல்லித்தெரிந்தது.

Jul 21, 2025

தூவானம்

"இந்த கிருஷ்ணபரமாத்மா 
பல சிசுபாலர்களால் அவமானப்படுத்தப்பட்டார். 
ஒரு இலக்கியப் பாரம்பரியத்தையே துவக்கி வைத்து இந்த துரோணர் ஏகலைவர்களாலேயே கூட
 உதா சீனப்படுத்தப் படுகிறார்.
வீழ்ந்த பின்னும் மறைந்த பின்னும் சிகண்டிகளால் அம்புத் துளைப் படுகிறார் இந்த பீஷ்மர்."
(1989 நவம்பர் மாதம் 19ம் தேதி புதுவை பல்கலைக்கழகத்தில் 
R.P. ராஜநாயஹம் எழுதி வாசித்த கட்டுரையில் மேற்கண்ட வரிகள்.
"மேலும்" இலக்கிய இதழில் 1990 மே மாத இதழில் வெளி வந்தது.)

.

தூவானம் 
- R.P. ராஜநாயஹம் 

சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆகியோர் ஜானகிராமன் மீது அசூயை கொண்டிருந்தால் அது கற்றோர் காய்ச்சல், வித்துவ செருக்கு காரணமாக 'தன் இருப்பு' குறித்த பதற்றம் சம்பந்தப்பட்ட மனோதத்துவ சிக்கல்.
தி.ஜா. வின் மகத்தான சாதனை இவர்களை தள்ளாட்டம் காணச்செய்ததில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? 
அசோகமித்திரனுக்கும் சு.ராவுக்கும் இருந்த பொறாமை புகைச்சல் பற்றி அவர்கள் தனிப்பேச்சில் அடிக்கடி உணர்ந்ததுண்டு. இத்தனைக்கும் கவனமாக உஷாராக வார்த்தை பிரயோகம் செய்வார்கள். கிரா பற்றி சு.ராவுக்கும் சு.ரா பற்றி கி.ராவுக்கும்.
இந்திரா பார்த்தசாரதிக்கு இவர்கள் பற்றி இல்லை என்று யார் சொல்ல முடியும்?

எழுத்துலக பிரபலங்கள் மற்ற  கலைஞர்கள் போல அதீத தன் முனைப்பு கொண்டவர்கள்.
தன்னைப்பற்றியே தான் சிலர் கவனமாக, பலர் வெளிப்படையாக பேசுவர்.
தான் சாதனையாளன் என்றே மனம் முழுக்க வியாபகம்.

கடுமையாக தி.ஜாவை தாக்கிய பிரபஞ்சன் பின்னர் 'ஜானகிராமனை மிஞ்ச ஆளேயில்லை' என்றதும் 
மிக கடுமையாக தி.ஜாவை நாலாந்தர எழுத்தாளராக கருத்து கொண்டிருந்த சாரு நிவேதிதா உன்னதமானவராக கொண்டாடுவதும் பார்க்க முடிந்திருக்கிறது.

மழ விட்டாலும்....

"உயர்ந்த இடத்தில் இருப்பவன் நான்"

"உயர்ந்த இடத்தில் இருப்பவன் நான்"

'கலைஞரின் அணையா விளக்கு'                          மு.க.முத்து
- R.P. ராஜநாயஹம் 

கலைஞர் கருணாநிதி வீடு உள்ள
 அதே கோபாலபுரம் தெருவில் 
என் மறைந்த நண்பன் சவ்வாஸ் முபாரக்கின் சகோதரி பாப்பாத்தியக்கா
 வீட்டுக்கு(1986ல்) போயிருந்தேன்.
 எதிர் வீடு முக முத்து வீடு.

அங்கிருந்து கிளம்பும்போது 
கலைஞர் வீட்டிலிருந்து வெளியேறிய நபர்
 முழு போதையில் சட்டை பட்டன் அனைத்தும் திறந்திருந்த நிலையில் நடக்க முடியாமல் நடந்து வந்துகொண்டிருந்தார். முக முத்து.

சேகண்டி இனாயத்துல்லா " இங்க பாரு, மு.க.முத்து!"

தன் வீட்டில் நுழைந்த அவர் அங்கே எதிர் வீட்டில் நின்றிருந்த என்னையும்,சேகண்டி இனாயத்தையும் சவ்வாஸ் பரூக்கையும் 
பார்த்துக்கொண்டே தான் நுழைந்தார்.

உடனே வெராண்டாவில் உட்கார்ந்தார்.

உள்ளே இருந்து ஒரு ஆள் அப்போது சாப்பாட்டு தட்டை கொண்டு வந்து வைத்தவுடன் 
அதிலிருந்த மாமிசத்தை உடல் மடிய குனிந்து ஜவ்வை இழுத்து கடித்து சாப்பிட்டார்.

வீழ்ச்சி என்பதன் முழு படிமம்.

கோட்டையில பொறந்தாலும் 
விதி போட்ட புள்ளி தப்புமா?

குழந்தையாய் இருக்கும்போது தாயை இழந்து சிறுவனாய் இருக்கும்போது தாயற்ற பிள்ளை.

 அப்பா மீட்டிங் பேசி விட்டு படுக்கும்போது பாட்டியாலும் மாறன் தாயாராலும் வளர்க்கப்பட்ட முத்து திருவாரூரில் 
அப்பா அசதி தீர கால் பிடித்து விடுவார்.

அப்பா அந்த காலத்தில் நூறு ரூபாய் தருவார். 
முக முத்து சேட்டை செய்தால் அப்பாவுக்கு 
அடிக்க கூட தெரியாது. 
தூசி தட்டுவது போல் இவர் உடம்பில் தட்டி
' சீ ராஸ்கல்.. ராஸ்கல் சீ ' என்பார்.

எழுபதுகளில் கட்சி உடைந்த நிலையில் கலைஞர் கருணாநிதி அரசியல் சொல்லடி கல்லடி படும் போதும் அப்போது முக முத்து திமுகவின் அரசியல் எதிரிகளால் அரசியலில் பகடை யாய் உருட்டப்பட்ட போது அவரை புத்திர பாசத்தோடு பாதுகாத்து 
தன் எதிரிகளை நோக்கி சொன்னார்
 " பாவம் அவன் ஒரு இளந்தளிர். 
அவனை விட்டு விடுங்கள். "

அவரின் புத்திர பாசத்திற்கு அக்னி பரீட்சை வைத்து தந்தையை சித்திரவதை செய்ய ஆரம்பித்தார் முக முத்து.

ஜெயலலிதா கொடுத்த ஐந்து லட்சத்திற்கு கூட விலைபோனார் என்பது கலைஞர் எதிர்கொண்ட மிக மோசமான சோகம்.

எம்.ஜி.ஆர் முதல்வராயிருந்தபோதே,
ஒரு முறை முத்து கோவித்துக்கொண்டு
 ராமாவரம் தோட்டத்திற்கு போய்விட்டார்.
 ஆனால் எம்.ஜி.ஆர் அவரை சமாதானப் படுத்தி ‘நான் அப்பாவிடம் பேசுகிறேன்’ 
என்று திருப்பி அனுப்பி விட்டார்.

பைபிளில் கெட்ட குமாரன் என்று ஒரு கதை உண்டு.

ஒரு வழியாக அவருடைய வனவாசம் முடிந்து
 வீடு திரும்பிய நிகழ்வை தமிழ் பத்திரிக்கைகள் அனைத்தும் கொண்டாடின.
திருந்திய கெட்ட குமாரன்.

முக முத்து வின் மனைவி, (தாய்மாமன் சிதம்பரம் ஜெயராமன் மகள்) குழந்தைகளோடு அவரை விட்டு பிரிந்த பின் இவர் நடத்திய வாழ்க்கையில் சம்பந்த பட்டவர்கள்.

நெல்லூர் அனுசூயா இவருக்கு வேலைக்காரியாக வந்து இவருக்கு ஒரு பெண் மகவை பெற்ற பின் வீட்டம்மா ஆகியதால் அதன் பின் வேலைக்காரியாக வந்த சீர்காழி பானுவும் இவருக்கு மனைவியாகி பானு இல்லாமல் முத்துவால் வாழவே முடியாது என்ற நிலை 
மு. க. முத்துவுக்கு ஏற்பட்டது.

பானுவும் முக முத்துவும் "மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ ?" பாடி
லாயிட்ஸ் காலனி ஹௌசிங் போர்டில் தினமும் அக்கம் பக்கத்தார் கேட்க கச்சேரி நடத்தியது, 

சிவாஜி கணேசன் இறந்த போது முக முத்து தி நகர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பிராந்திகடையை திறக்க சொல்லி அனுசூயா, பானுவுடன் காரில் வந்து (அழகிரி கொடுத்த கார் ) ரகளை செய்தது -"ஏண்டா சிவாஜி செத்துட்டா உலகமே அழிஞ்சிடுச்சா. கடையை திறங்கடா டே."

அண்ணாவின் பிரபல நாடகம். 'வேலைக்காரி ' திரைப்படமாகவும் வந்து அவருக்கு 
தமிழகத்தின் பெர்னாட் ஷா பட்டம் வாங்கி
 தந்த வேலைக்காரி காவியம்.
முக முத்துவுக்கு அண்ணா மீது ரொம்ப பிரியம்.
அதனால் வேலைக்காரி மீதும்.

அனுசூயா முகமுத்து மகள் ஷீபா பீஸ் கட்ட முடியாமல் பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் ஆகி இருக்கிறாள். அறிவுநிதியின் ஆட்கள் மிரட்டி அடிக்கவும் செய்யும் போது போலீசுக்கும் போக முடியாமல் அனுசூயா மிரண்டு "இவன் கிட்ட சிக்கிக்கிட்டேன். போதா குறைக்கு நானே எனக்கு ஒரு சக்களத்தியை தேடிகொண்டேன் ' என்று கண்ணீர் விட்ட விஷயம்.

எல்லாம் எப்போதோ நடந்த பழைய விஷயங்கள்.........

2003ம் ஆண்டு முத்து திருவாரூரில் இருந்த போது இவரிடம் ஒருவர் 'அண்ணே உங்க செல் போன் நம்பர் கொடுங்க' என்று கேட்ட போது 
இவர் பதில்
 "போய்யா என் வாழ்க்கையே செல்லரிச்சு போச்சி"
.................

முகமுத்து சொந்தக்குரலில் பாடிய ஒரு பாடல்
’அணையாவிளக்கு’ படத்தில்
‘கூன் பிறையை போற்றிடுவோம்
குர் ஆனை ஓதிடுவோம்
மேன்மை மிகு மெக்காவின் திசை நோக்கி பாடிடுவோம்
நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
பிறர் நலனை விரும்பி நானும் வேண்டவா
யாரும் வருவார் யாரும் தொழுவார்
நாகூர் ஆண்டவன் சன்னிதியில்
நானும் உண்டு நீயும் உண்டு
நபிகள் நாயஹம் முன்னிலையில்’

இந்தப்பாடலை நான் என் முஸ்லிம் நண்பர்களை சந்திக்கும்போது எப்போதும் பாடுவேன்.

‘ ராஜநாயஹம், நீங்க எங்க மார்க்கத்தில் பிறந்திருக்க வேண்டிய ஆள்’ என்று நெகிழ்வார்கள்.

முகமுத்து பாடிய இன்னொரு பாடல்
‘சமையல்காரன்’ படத்தில்
’சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க,
நான் சொத்தா நினைக்கிறது 
உங்க அன்பைத்தானுங்க’

தாயில்லாமல் வளர்ந்த பிள்ளை.
Spoilt Child.

முத்து பாடல் கச்சேரியில் அப்பா வசனம் எழுதி கல்யாண்குமார் நடித்த ’தாயில்லாப் பிள்ளை’ படத்தில் டி.எம்.எஸ் பாடிய பாடலை 
எப்போதும் அனுபவித்துப் பாடுவார்.

‘தாயில்லாப் பிள்ளை
பேச வாயில்லாப் பிள்ளை’
அதில் சரணமுடிவில்
‘இன்று ஊருமில்லை உறவுமில்லை யாரும் இல்லையே
நான் கடந்து வந்த பாதையிலே அமைதி இல்லையே
நான் தாயில்லாப்பிள்ளை 
பேச வாயில்லாப்பிள்ளை’

தன் நடவடிக்கைகளால் உறவுகளை 
சிரமப்படுத்தி அவர்களிடம் 
கெட்ட பெயர் வாங்கியவர்.
நல்லா இருந்தாலே உறவுகள் சீராக இருக்க முடியாத உலகம் இது.

தம்பி தமிழரசுவின் மகள் திருமணத்திற்கு கூட
அதிருப்தி காரணமாக மு.க.முத்து போக விரும்பவில்லை.

குடித்து விட்டு முன் ஒரு தடவை அப்பாவை பார்க்க மாடியேறிய போது முக முத்துவை 
பிடித்து கீழே தள்ளி விட்டார் மு.க தமிழ் 
என்ற வருத்தம் கூட மறந்திருக்க முடியாது.

உறவுகளுக்கு இவரால் பல வருத்தங்கள். 

குடும்பத்தில் மூத்த பிள்ளை சரியில்லை என்ற வருத்தம் அப்பாவுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் இருக்கத்தானே செய்யும்.
இவருக்கு தன்னை அவர்கள் 
உதாசீனம் செய்கிறார்கள் என வருத்தம்.

தயாளு அம்மையார், ராசாத்தி அம்மாள் பிள்ளைகள் வேறு , பத்மாவதி பெற்ற முத்து வேறு, அவர்கள் கண்ணில் வெண்ணை, 
தன் கண்ணில் சுண்ணாம்பு என்ற ஆதங்கம்.

முக அழகிரி மீது மட்டும் முத்துவுக்கு பாசம் பிரியம் இருக்கிறது .
"அப்பாவுக்கு புகழ் போதை, 
அழகிரி நல்ல தம்பி, 
ஸ்டாலின் மாறவேண்டும் "

கட்சியை விட்டு அழகிரி ஓரம் கட்டப்பட்ட போது கோபால புரம் வீட்டிற்கு போய் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்து 
சத்தம் போட்டிருக்கிறார். 
மாடியில் இருந்து
 அவருடைய அப்பா ரீயாக்ஸன்
 "முத்து குரல கேட்டு எவ்வளவு நாளாச்சி"

எல்லாம் பழைய விஷயங்கள்.........

2011 சட்டசபை தேர்தலின் போது மிகவும் உடல் நிலை சீர்கெட்டு ஆஸ்பத்திரியில் சீரியசாக இருந்தார். தி.மு.க தலைவரே பிரச்சார மேடையிலேயே சொன்னார்- 'என் மூத்த மகன் மு.க.முத்து இன்று மிக ஆபத்தான உடல் நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்..'

இதுவும் பழைய விஷயம்..

இப்போது அப்பாவும் இல்லை.

.............

மீள்

https://www.facebook.com/share/v/15k2yd3j81/

Jul 18, 2025

புதிய பட்டம்

புதிய பட்டம் 

R.P. ராஜநாயஹம்
 "அறிவாலயம் அல்சேஷன்"

எதிர்பாராத சந்திப்பு

16.07.2025
12.15 pm

கலைஞர் டிவியில் கடந்த நான்கு வருடங்களில் இரண்டாவது எதிர்பாராத சந்திப்பு. 

12.30pm சினிமா எனும் பூதம் ஷூட் ஆரம்பிக்க இருந்த நிலையில்

Jul 14, 2025

சரோஜாதேவி

சரோஜா தேவி
- R.P.ராஜநாயஹம்

சரோஜா தேவி .The most poetic Actor.
ஆண் நடிகர், பெண் நடிகர் இரு பாலாரையும் 'Actor' என்றே குறிப்பிடலாம்.


எஸ்.எஸ்.ஆர்  குமுதம் ஒன்றில் சரோஜா தேவி அவருடைய திருமண பத்திரிகை கொடுக்க வந்த போது
 ' என்ன சரோஜா ? நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம் என்று இருந்தேன். இப்படி செஞ்சிட்டியே ' என்று ஜோக் அடித்ததாக குறிப்பிட்டிருந்தார். இது பரவாயில்லை.

சிவாஜி கணேசன் சரோஜாதேவியின் மாப்பிள்ளையிடமே
 " நான் சரோஜாவை கல்யாணம் செய்யலாம் என்று நினைச்சிகிட்டு இருந்தேன். நீங்க முந்திட்டீங்க " என்று விவஸ்தையில்லாமல் ஜோக் அடித்து இருக்கிறார். 
இதை சரோஜதேவியே  பேட்டியில் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

டி ஆர் ராமண்ணா கூண்டுக்கிளி, புதுமைபித்தன் படங்களில் தான் இயக்கிய பி.எஸ்.சரோஜாவை இரண்டாவது திருமணம் செய்தார். பின்னர் தன் படத்தில் நடித்த ஈ.வி.சரோஜாவை மூன்றாவது மனைவியாக்கி கொண்டார். 
அடுத்து ராமண்ணா 'மணப்பந்தல் ' படத்தில் சரோஜாதேவியை கதாநாயகியாக புக் செய்தவுடன் அவருடைய அக்கா டி,ஆர்.ராஜகுமாரி பதறி போய் ' டே உனக்கும் சரோஜா என்ற பேருக்கும் ரொம்ப வில்லங்கம் உண்டு. இவளையும் கல்யாணம் பண்ணிடாதே. சத்தியம் செய் ' என்று சொன்னதாக சொல்வார்கள்.

சரோஜா தேவி என்ற புனை பெயரில் யாரோ ஒரு ஆள் ஆபாச கதைகள் எழுதி அந்த காலத்தில் "சரோஜா தேவி புத்தகம் " ரொம்ப பிரபலம்.

சிறுவனாய் இருக்கும்போது 'நீதி போதனை' வகுப்பில் 'வாடாமல்லி ' என்ற சரோஜாதேவி புத்தகம் படிக்கும் போது 
'நீதி போதனை' ஆசிரியர் வில்சன் சார் அவர்களிடம் மாட்டிக்கொண்டேன். 

பின்னர் அதே ஆண்டு பள்ளியிறுதி ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழாவில் நான் ' நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே' பாடலை ஆர்கெஸ்ட்ரா வில் பாடினேன். 

வில்சன் சார் 'டேய், நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே' பாட்டை பாட நம்ம ஸ்கூல்லே வேறு பயலே இல்லையாடா. என்னடா இவன் பாடுறான். The Devil quoting the bible' என்று விழா முடிந்தவுடன் கிண்டல் பண்ணினார்.

சரோஜா தேவி சில வருடங்களுக்கு முன் முன்னாள் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா விஷயத்தில் ஏன் பயங்கரமாக மூட் அவுட் ஆகி அழுது அழுது கண்ணீர் வற்றி சிரமப்படவேண்டியிருந்தது?எவ்வளவோ வதந்திகள் நடிகைகள் பற்றி வரத்தான் செய்யும். இவர் அதைப்பற்றி ரொம்ப வேதனைப்பட்டிருக்க தேவையில்லை.

சாவித்திரியை மயிரிழையில் மிஞ்சி விட்டவர் சரோஜாதேவி. இவருக்கு கிடைத்த சான்ஸ் அப்படி. 

எம் ஜி ஆர் கூட நடித்தவர்களில் எல்லோரையும் விட பொருத்தமாய் அமைந்த நடிகை சரோஜா தேவி மட்டுமே. நாடோடி மன்னன் துவங்கி அரசகட்டளை வரை. 

சிவாஜியின் மணியான அத்தனை படங்களிலும் 'பாக பிரிவினை ' துவங்கி ஆலயமணி,புதிய பறவை என்று எத்தனை படங்கள். 
ஜெமினி கணேசன் படங்கள் 'கல்யாண பரிசு ' முதல் ' பணமா பாசமா ' வரை.
ஜெமினியை 'அண்ணா' என அழைப்பார் சரோஜா தேவி.

இப்படி Platform சரோஜா தேவி தவிர பிற நடிகைகளுக்கு கிடைக்கவில்லை. அதனால் ஏனைய நடிகைகளின் பொறாமைக்கும் உள்ளானவர். 
சாவித்திரி பல சிக்கல்களை தன் வாழ்வில் சந்தித்து சிரமத்திற்கு உள்ளாகி தன் முடிவுகள் பலவற்றினால் தொழிலில் பிரச்னைகளை ஏற்படுத்தி கொண்டதால் அவரை சரோஜா தேவி ஓவர் டேக் செய்தார்.
 
சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா மூவரும் தமிழ் திரையின் குறிப்பிடத்தக்க சாதனையாளர்கள். நடனம் அவ்வளவாக தெரியாவிட்டாலும் தங்கள் நளினமான பாவனைகளால்,நடிப்பால் பத்மினியையே மிரட்டியவர்கள்.

பத்மினியின் நடிப்பில்மிகை, செயற்கை தனம் இருந்தது .

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளை தமிழ் திரையுலகில் முழுமையாக ஆக்கிரமித்தவர் சரோஜாதேவி. அதற்கு பின்னர் இவர் அளவுக்கு வேறு யாருக்கும் , எந்த நடிகைக்கும் மேடை கிடைத்ததில்லை. 

தங்கத் தகட்டழகி, தாமரை முகத்தழகி,சிரிக்கும் சிங்காரி,
அபிநய சரஸ்வதி.
கட்டான உடை உடுத்தி சிட்டாகப் பறந்து வரும் தென்னை மரத்து சிட்டு, தேன் போன்ற லட்டு, தட்டு,லொட்டு, எவர் சில்வர் தட்டு போன்ற கன்னங்கள் கொண்ட கன்னடத்து கிளி.

இவருக்காக ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் திரைப்பட சான்ஸ் தேடிய 
பத்மா சுப்ரமணியத்துக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். 
சில முயற்சிகள் சீரிய 
முயற்சிகள் என காலம் காட்டுகிறது.

......

மீள் பதிவு

1.சினிமா எனும் பூதம் பாகம் 1 
புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது

2.முரசு டிவியில் ஒளிபரப்பாகும்
 R.P. ராஜநாயஹம் ' சினிமா எனும் பூதம் '
ஒவ்வொரு ஞாயிறன்றும் 
காலை எட்டரை மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிற
தொலைக்காட்சி தொடரில் 
"சரோஜாதேவி" நிகழ்ச்சி இடம் பெற்றிருக்கிறது

Jul 10, 2025

மச்சம்

அஷ்வத் சின்ன மீன் தொட்டியில் வளர்த்த Fighter செத்து விட்டது.

'கல்யாணமாம் கல்யாணம்'(1974) குடுமி வச்ச பட்டிக்காட்டு ஜெய்சங்கரோட அப்பா உச்சிக்குடுமி வச்ச தங்கவேலுவும் பணக்கார தேங்கா சீனிவாசனோட பங்களாவுல மாடி கிராதியில இருந்து தூண்டில் போட்டு ஹால்ல இருக்கிற வளர்ப்பு மீன் தொட்டியில உள்ள மீன்கள ஒளப்புவதை பார்த்து தேங்கா பதறி 
" ஐய்யோ, ஐய்யய்யோ, மீன் தொட்டியில வளக்ற வெல ஒயர்ந்த மீனுகள பிடிக்க அப்பனும் மகனும் தூண்டி.."
உடனே ஜெய்சங்கர் உற்சாகமா" நேத்து கூட நானும் எங்கப்பாவும் ரெண்டு மீன இந்த தொட்டியில தூண்டி போட்டு பிடிச்சி சுட்டு தின்னோம் "

"கல்யாணமாம் கல்யாணம்" சிரிப்பு படம்.

சாப்பிட சுவையான சில வகை மீன்கள பத்தி சொலவடயெல்லாம் உண்டு.

(கோயம்புத்தூர் உக்கடம் லாரி பேட்ட மீன் மார்க்கெட்)
கிளங்கான் மீன் : 'கிளங்கான் அலஞ்சான் கொழஞ்சான்'

ஊழி மீன் : ' உள்ளதெல்லாம் குடுத்து ஊழிய வாங்கு'

மடவை மீன் : ' மக்கள வித்து மடவய வாங்கலாம் ' 

பெத்த பிள்ளய வித்து  'மடவை'  வாங்கனா 
கூட தப்பேயில்ல.

எங்க செய்துங்கநல்லூர் ஆச்சி நல்ல பிராயத்துல பதநிய பாத்தா காசில்லாட்டி 
கால் வெரல் மெட்டிய கழட்டி குடுத்துட்டு பதநி வாங்கி குடிச்சிரும். சங்கரன் கோயில் அத்த இத அம்மய நெனச்சா சொல்றதுண்டு. அத்தக்கி இப்ப வயசு தொண்ணூத்தி எட்டு. 
தாத்தா போல நிச்சயமா செஞ்சுரி தாண்டும்.

The web of our life is of a mingled yarn, good and ill together

- Shakespeare 

Life is complicated at the best of times

Jul 8, 2025

With Editor Director B.Lenin

08.07.2025
 8pm

A serendipitous happy discovery in Coimbatore Avinashi road.
Happy accident.


With B.Lenin, a saint among all Cine personalities.
A noble movie editor, director.

Son of  A. Bhimsingh

https://www.facebook.com/share/v/16ZHSN4e4i/

https://www.facebook.com/share/p/1Fvm37SCkL/

Jul 1, 2025

புதுவையில் தி.ஜா. கருத்தரங்கம்

புதுவையில் தி. ஜா. கருத்தரங்கம் 
- R.P.ராஜநாயஹம் 

1989 
புதுவை பல்கலைக்கழகத்தில் 
தி. ஜா. கருத்தரங்கம் நடந்த போது அந்த ஊரில் பிரமுகர், தியேட்டர்கள், கல்யாண மண்டபம் போன்றவற்றிற்கு அதிபதி ஒரு பெரியவர். 
அவர் புரவலர். அந்த நிகழ்ச்சிக்கு நிதி தந்திருக்கலாம். விழா மலரை இந்திரா பார்த்தசாரதியிடம் இருந்து நான் பெற்ற போது பார்த்தார். ராஜநாயஹம் ஒரு இளைஞன் என்று கண்டு கொண்டார். 

விழா ஆரம்பித்த பிறகு அதன் பின்னர் வந்த திருப்பூர் கிருஷ்ணன் அந்த புரவலர் தான் ராஜநாயஹம் என்று நினைத்திருக்கிறார். 

அப்புறம் புரவலர் பேச எழுந்த போது தான் நான் இல்லை என்பதை புரிந்து கொண்டாராம். 

ராஜநாயஹம் என்ற பெயர் பெரியவர் என்பதாக தன்னை கருத வைத்து விட்டதாக விழா முடிந்த பிறகு திருப்பூர் கிருஷ்ணன் கூறினார். 

நான் தான் முதல் கட்டுரை வாசித்தேன். திருப்பூர் கிருஷ்ணனும் வாசித்தார். 

முன்னதாக புரவலர் பேசும் போது 'ராஜநாயஹம் போன்ற இளம் உள்ளங்களை கவர்ந்திருக்கிறார் என்றால் ஜானகிராமன் எப்பேர்ப்பட்ட எழுத்தாளர் என்பது புரிகிறது' என்றார். 

உடனே எழுதப்பட்ட ஒரு காகிதத்தில் இருந்து சிரத்தையாக வாசித்தார். 'ஜானகிராமன் பெரிய எழுத்தாளர். அவருக்கு மனைவி இரண்டு.' - pause.. 
இந்திரா பார்த்தசாரதி உடனே என்னைப் பார்த்து அதிர்ச்சியை தன் உடலை ஒரு குலுக்கு குலுக்கி வெளிப்படுத்திய காட்சி இப்போதும் மறக்க முடியாதது. 

புரவலர் தொடர்ந்தார் '.. மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள் ' 

'அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள் ' என்று எழுதிக்கொடுத்ததை அப்படி விபரீதமாக வாசித்திருக்கிறார். 

என்னிடம் ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு ' நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் புதுமைப்பித்தன்,
 கு. ப. ரா, ந.பிச்சமூர்த்தி, மௌனி, க. நா. சு துவங்கி அழகிரி சாமி, லாசரா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கரிச்சான்குஞ்சு, வெங்கட்ராம், 
கி. ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சன் என்று கோணங்கி வரை  படித்தவன் நான். யாரை படித்தாலும் தி. ஜானகிராமன் தான் விசுவரூபம் எடுத்து தெரிகிறார் 'என்று பயமறியா இளங்கன்றாக சொன்னேன். 
கிராவும், இ. பாவும் விழாவில் இருந்தார்கள். 

திருப்பூர் கிருஷ்ணன் கேட்ட கேள்வி கூட நினைவிருக்கிறது.' அன்பே ஆரமுதே குறைப்பட்டுப் போன நாவல் என்று எப்படி சொல்கிறீர்கள் ' என்றார். அவருக்கு பிடித்த பெண் பாத்திரம் அன்பே ஆரமுதே ருக்மணி. 
தொடர்கதையாக எழுதப்பட்ட நாவல்களில் அன்பே ஆரமுதே மட்டும் பாதிக்கப்பட்டது என்பது 
என் துணிபு. 

விழா முடிந்ததும் இந்திரா பார்த்தசாரதியுடன் திருப்பூர் கிருஷ்ணனும், நானும் அவர் வீட்டுக்கு சென்றோம். இந்திரா மாமியின் அன்பான உபசரனை. 

வீட்டில் இருந்து வெளியே வந்ததும் திருப்பூர் கிருஷ்ணன் என்னிடம் சொன்னார் :
" நீங்கள் கருத்தரங்கில் ஜானகிராமன் தான் விஸ்வரூபம் எடுத்து தெரிகிறார் என்று சொன்ன விஷயம் கி. ரா வையும் இ. பா. வையும் புண்படுத்தியிருக்கும் "

திருப்பூர் கிருஷ்ணன் 'தமிழின் தரமான எழுத்தாளர்களை விரல் மடக்கி எண்ண ஆரம்பித்தால் முதல் விரலையே ஜானகிராமனுக்காக தான் மடக்க வேண்டியிருக்கும்" என்று கணையாழியில் எழுதியிருந்ததையும் கூட முன்னதாக நான் வெளியிட்டிருந்த தி. ஜா. நினைவு மதிப்பீட்டு மடலில் சேர்த்திருந்தேன். 

நான் வெளியிட்டிருந்த அந்த நினைவு மதிப்பீட்டு மடல் பார்த்து விட்டுத் தான் துணை வேந்தர்
 இந்த கருத்தரங்கம் நடத்த ஆணையிட்டார். 

திருப்பூர் கிருஷ்ணன் சென்னை சென்ற பிறகு இந்த புகைப்படம் அனுப்பி வைத்தேன். 

அன்போடு பதில் கடிதம் எழுதினார் 
'என் மனைவி ஜானகியிடமும், 
குழந்தை அரவிந்தனிடமும் புகைப்படத்தில் உங்களை காட்டி 
"இவர் தான் ராஜநாயஹம் "என்று சொன்னேன்"

https://www.facebook.com/100006104256328/posts/2764552157091566/?app=fbl

https://www.facebook.com/100006104256328/posts/3089461101267335/?app=fbl

https://www.facebook.com/100006104256328/posts/2764208050459310/?app=fbl

https://www.facebook.com/100006104256328/posts/2764208050459310/?app=fbl

https://www.facebook.com/100006104256328/posts/2764484970431618/?app=fbl

https://www.facebook.com/100006104256328/posts/2707398902806892/?app=fbl

https://www.facebook.com/100006104256328/posts/2459406510939467/?app=fbl
....

மீள்