Share

Jun 7, 2023

ஊக்க முழுங்கிட்டான் சட்டி

நான்கே வயதில் நான். 
தாத்தா, ஆச்சியுடன் செய்துங்கநல்லூரில்.

'சட்டி' பாவம். ஊக்கு முழுங்கி செத்துட்டான்.
சட்டி பதினஞ்சு வயசு பய.
அப்பல்லாம் நெறய்ய பசங்க பள்ளிக்கூடம் போக வாய்ப்பேயில்லாமல் ஏதேனும் சின்னதா எடுபிடி வேலை செய்வார்கள். 

சட்டி தெருவில் உள்ள செவருல மாட்டுச்சாணிய வட்டமான வரட்டியா தட்டி ஒட்டிக்கொண்டு நிற்கும் போது பாத்த ஞாபகம் இன்னக்கிம் இருக்கு.

வரட்டி தான் அடுப்பெரிக்க, விறகு தவிர.

சட்டி பற்றி தெனம் ஏதேனும் ஊர் பேசும். துறுதுறுப்பான பையன்.
பீடி குடிக்கிறான். 
வாயில சாராய வாட.
வெத்தல பாக்கு போட்றான்.

"என்னா சேட்ட பண்ணுதான்."

ஊர் பெருசு சலிப்பு ''எங்கிட்ட வந்து போயில (புகையிலை) கேக்கான். திமிர பாத்தியளா''

வேலக்கி தேடுற நேரம் கெடக்க மாட்டங்கான், செத்த மூதி.

டூரிங் கொட்டாய்ல எம். ஜி. ஆர் பழய படம் போட்டா போயிடுவான்.

உண்மை என்னவோ..
ஊக்க முழுங்கி சட்டி செத்துட்டான்னு தான் பேச்சு. வயித்த கிழிச்சிடுச்சு..பாவம் சட்டி.

குழந்தை பருவத்தில் மனதில் பதிந்த, இன்று வரை நினைவில் நிற்கும்
துர் மரணம். சட்டி சாவு.

ஊக்கு பாத்தாலே 'தொர'க்கி வயிறு கலங்கும்.

அம்ம தாலியில எப்பவும் ரெண்டு ஊக்கு. 
பொம்பளன்னாலே தாலியில ரெண்டு ஊக்கு தொங்கும்.

பயன்பாடு மிக்க ஊக்கு.

http://rprajanayahem.blogspot.com/2023/05/blog-post.html?m=0

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.