Share

Jun 3, 2023

பெங்களூர் இரவிச்சந்திரன் எழுத்து

கனகராஜ் தான் "இந்திய பாஸ்போர்ட்" கொடுத்து படிக்க சொன்னார்.
அவருடைய அபிப்ராயப்படி சுஜாதாவை விட  இரவிச்சந்திரன் பிரமாதமான எழுத்தாளர்.

"இந்த புத்தகம் மட்டுமல்ல இனி வெளி வரும் என் எல்லா புத்தகங்களும் சுஜாதாவுக்கு தான் சமர்ப்பணம்" என்று எழுதியிருந்தார்.

இந்திய பாஸ்போர்ட்டுக்கு சுஜாதா பிரமாத முன்னுரை எழுதியிருந்தார்.
'பெண்கள் அழகாக இருக்கிறார்கள்.ஆனால் சிலாக்கியமானவர்களாக இல்லை'

முன்னதாக ஏதோ இதழில் வெளி வந்த போதே துக்ளக்கில் பாராட்டி எழுதியிருந்தார்கள் 

இரண்டாவது சிறுகதை தொகுப்பு 'சிந்து வெளி நாகரீகம்'  நானே அவரிடம் கேட்டு வாங்கிப் படித்தேன்.

இங்கே கனகராஜிடம் வாங்கி படித்த அதே பிரதியின் படம் காணலாம்.


இரவிச்சந்திரனின் கையெழுத்து அழகாக இருக்கும். அவர் அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார்.

இந்த புத்தகங்கள் பிரதிகள் அப்போது கிடைத்தன. விலைக்கு வாங்கி விட்டேன்.

'இந்திராகாந்தியின் இரண்டாவது முகம்' தொகுப்பை பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களுக்கு 
இரவிச்சந்திரன் சமர்ப்பணம் செய்திருந்தார்.

நான்காவது தொகுப்பு 'இனி ஒரு சதி செய்வோம்' வந்த போது அதனையும் விலைக்கு வாங்கினேன்.

1986ம் ஆண்டு கனகராஜுடன் பெங்களூரில் இரவிச்சந்திரனை பார்க்க மல்லேஸ்வரம் போயிருந்த போது இரவிச்சந்திரன் அங்கு இல்லை. இது தான் இரவிச்சந்திரன் அறை என்று கனகராஜ் காட்டினார்.

இரவிச்சந்திரனின் நூல் பிரதிகள் எதுவுமே இப்போது என்னிடம் இல்லை.
 

சாய் ரமணா வெளியிட்டிருக்கும் பெங்களூர் இரவிச்சந்திரன் நூலில் 'கோதை பிறந்த ஊர்' சிறுகதை இரவிச்சந்திரனின் 'இந்திரா காந்தி யின் இரண்டாவது முகம்' மூன்றாவது தொகுப்பில்  இடம் பெற்றிருந்தது.
சாய் ரமணா சிந்துவெளி நாகரிகம், இந்திராகாந்தியின் இரண்டாவது முகம் இரண்டு தொகுப்புகளை இப்போது நூலாக கொண்டு வந்திருக்கிறார். இந்திய பாஸ்போர்ட் கூட மறு பதிப்பாக வர இருக்கிறது.

'கோதை பிறந்த ஊர்' எழுதி அமுதசுரபிக்கு இரவிச்சந்திரன் அனுப்பியிருக்கிறார். அப்போது ஆசிரியர் விக்ரமன். அவர் இந்த கதையை தன் பெயரில் போட்டுக் கொண்டார் என்று இரவிச்சந்திரன் தன் ரசிகர் ஸ்ரீவில்லிபுத்தூர்  கனகராஜிடம் சொல்லியிருக்கிறார்.
அந்த கதையில் 'கனகராஜன் விலாஸ் ஆனந்தா பேக்கரி' என ஒரு வரி வரும்.
அது தான் இந்த கதை இவரே எழுதியதற்கான ஆதாரம்.

பின்னாளில் ஸ்ரீ வில்லிபுத்தூர் பார்க்க வந்த போது ஆண்டாளை சேவித்த  பரவச பக்தி நேர்த்தி பற்றி கனகராஜ் பல முறை பேசியதுண்டு.
ஆண்டாள் திருப்பாவை விளக்க உரையுடன் விளக்கவுரையுடன் இரவிச்சந்திரன் பரிசளித்திருக்கிறார்.
'கறவைகள் பின் சென்று கானகம்..' வரிகளை தன் கதைகளில் பயன்படுத்தியுள்ளதை பேசியுள்ளார்.


மாட வீதி சுற்றி வரும் போது மாடப்புறாக்கள் காணக்கிடைக்கவில்லை. கோதை பிறந்த ஊர் எழுதும் போது மாடவீதிகளில் மாடப்புறாக்கள் என தவறுதலாக தான் குறிப்பிட்டு விட்டதாக சொன்ன இரவிச்சந்திரன் 
"சுஜாதா 'எழுதும் போது பார்க்காமல் எதைப்பற்றியும் குறிப்பிடக்கூடாது' என்று  சொல்வார்" என  கனகராஜிடம் சொன்னாராம்.

இரவிச்சந்திரனின் ஆதாரக்கவலை பெண்கள் தான்.

"கனகராஜ், 
மூணு சித்தி, நாலு அத்தையுடன் பொறந்தவன். வெஷம்"

" கனகராஜ், 
என்னோட முதல் ரசிகர் நீங்க"

இரவிச்சந்திரனுக்கு  இறந்த குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்தது. பார்சல் செய்து மருத்துவமனையில் கொடுத்திருக்கிறார்கள்.
அது இவர் 'பார்சல்' சிறுகதையானது.
அதனை ஒரு பிரபல பத்திரிக்கைக்கு அனுப்பினார். அங்கிருந்து பிரசுரம் பற்றி பதில் இல்லாததால் இன்னொரு  பிரபலமில்லாத பத்திரிக்கைக்கு அனுப்பி அங்கே பிரசுரமான பின்னர்
பிரபல பத்திரிக்கையிலும் பிரசுரமாகி விட்டது.

இரண்டு பத்திரிக்கையிலும் கெட்ட பெயர்.

பிரபல பத்திரிக்கை ' இனி இரவிச்சந்திரனின் எழுத்தை பிரசுரிக்கவே மாட்டோம் ' எனும் பகிரங்க அறிவிப்பு செய்தது.


...

http://rprajanayahem.blogspot.com/2008/10/blog-post_7731.html?m=1

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.