Share

Sep 22, 2019

யுக சந்தியில் நீங்காத நினைவு


இன்று திரும்பிப்பார்க்கும்போது உன்னை விட உற்சாகமான ஒரு பெண்ணை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை.
அந்த ஊரில் நான் உன்னை பள்ளி சீருடையில் சந்தித்த அந்த நாட்களில் நான் ஒரு வாலிபனாக, அரசு உத்யோகஸ்தன்.
உன்னை பார்த்த போது நீ என்னை ’சைட்’ அடித்தாய். கண்ணில் இதயத்தை வைத்து பார்த்தாய்.
என்னுடைய மனைவியை விட என் காதலிகள் யாரும் அழகியில்லை. என் மனைவியின் கால் தூசிக்கு கூட என் காதலிகள் சமமாக மாட்டார்கள். எனினும் என் காதலிகள் அனைவரிலும் நீ தான் பேரழகி.
நான் அலுவலகம் செல்லும்போது அக்ரஹாரத்தில் உன் வீட்டில் இருந்து என் கூடவே தற்செயல் போல் அருகில் சற்று பின் தங்கி, அல்லது முன்னாலே நடந்து வருவாய்.
நான் சாப்பிட்ட மாமி மெஸ்ஸிற்கு அடுத்த வீடு உன் வீடு.
மாமி மெஸ் மாமா இரு முடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு கிளம்பிய அன்று என் அருகில் நின்று அந்த சடங்குகளை ஆர்வமாக நான் பார்ப்பதை கவனித்து “ மாமி, இவர் உன்னிப்பா இத கவனிச்சிண்டு இருக்கார் பாருங்க” என சொல்லி அந்த பூஜை சடங்குகளை விளக்கி சொன்னாய்.
அக்ரஹாரத்தின் பின் பகுதி ஆள் அரவமற்ற சந்தில் இருவரும் மெய் மறந்து நின்றிருக்கிறோம். எவ்வளவு நேர தனிமை. பயமாகவும் இருக்கும். யாராவது கவனித்து விட்டால் என்று எனக்கு கலவரம்.
காதலிக்கிற காலங்களில் நான் கவனித்த ஒன்று. கலவரமெல்லாம் எனக்கு தான். காதலிக்கிற பெண்களிடம் பயமிருந்ததாக நான் உணர முடிந்ததில்லை. ’இப்ப என்ன’ என்பதான நிதானமும் தோரணையும், மிடுக்கும் தான். காதலிக்கிற பையன், பஞ்சாயத்து வர நேர்ந்தால் என்ன பாடு படுவான் என்று காதலி யோசித்ததாக தெரிந்ததில்லை.
என்னுடைய அலுவலகத்தில் பொது மக்கள் பயன் படுத்த வெளி பகுதியிலேயே பசை உண்டு. என்றாலும் நீ என் கவுண்ட்டரில் வந்து நின்று “கொஞ்சம் gum தர்றீங்களா?” என்று கேட்பதும் நான் பசை தரும்போதே உன் கையை ரகசியமாக ஆனால் நறுக் என்று பலமாக கிள்ளுவதும். வலியை நீ காட்டாமல் சிரிப்பதும்.
அலுவலகத்தில் நம்முடைய இந்த இளமையான நுட்ப தொடர்பு அனைவரும் பரவலாக கவனிக்கும்படியாக ஆகி என்னை விட இருபது வருடம் சீனியரான என் கல்லீக் சத்தமாக போட்டு உடைத்தார். “ உங்கள பாக்க தான அந்த பொண்ணு வருதுன்னு ஆஃபீஸில் உள்ள எல்லாருக்கும் தெரியும்”
எத்தனையோ சினிமா அந்த சின்ன ஊரில் வெவ்வேறு இடத்தில் உட்கார்ந்தாலும் இருட்டில் கூட நாம் இருவரும் முகம் பார்த்துக்கொண்டு.
சைட் அடிப்பது என்பது தான் எத்தனை அழகான விஷயம்.
ஒருவர் சாயல் என்பது ஒவ்வொருவர் பார்வைக்கும் ஒவ்வொரு விதமாய் தெரியும். அதற்கு அர்த்தம் கிடையாது. சாயல் விஷயத்தில் இருவருக்கு ஒரே நிலைப்பாடு இருப்பதில்லை. ஆனாலும் இவர பாத்தா அவர மாதிரியிருக்கு. ச்சேசே. இவனுக்கும் அவனுக்கும் சாயல்ல ஒரு சம்பந்தமும் இருப்பதில்லை.

எப்படியோ ஒருவர் அலுவலகத்திலேயே ஒருவர் என்னை பார்த்து ’ஒரு படத்துக்கு போனேன். அந்த படத்தில ஒரு நடிகர் பாத்தா ராஜநாயஹம் மாதிரியே இருக்கார்.’
ஒருவர் என்றில்லை. பலரும். ஒரு கட்டத்தில் அந்த ஊரும். பள்ளி குழந்தைகள் கூட என்னைப்பார்த்தால் “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா” என்று கோரஸாக பாட ஆரம்பித்து விட்டன.
நான் உன் வீட்டை விட்டு தாண்டும்போது உன் தம்பியை என்னை பார்த்து கத்த சொல்வாய். அவன் கூப்பாடு “ சரத் பாபு”
நீ கள்ளத்தனமாக ஒளிந்து கொண்டு அதே நேரம் தலையை நீட்டி என்னை குறும்பாக பார்த்து ‘எனக்குத்தான் என் தம்பி டப்பிங் கொடுக்கிறான்.நான் கத்த முடியாது.அதனால் அவனை கத்த சொல்கிறேன்.’ என்பது போல சிரிப்பாய்.
சரத்பாபு என்னை விட இரண்டு அங்குலம் உயரம். ரொம்ப சிவப்பு. Very handsome person.
நான் அப்போது ஓரளவு நல்ல நிறம். ( Now, I have lost my complexion.)
சரத் பாபுவிடம் உள்ள கண்ணியம் என்னிடம் கிஞ்சித்தும் கிடையாது. அந்த வாஞ்சையான குரல்  கிடையாது. எனக்கு வேறுபட்ட powerful voice. அந்த வயதில் முரட்டுத்தனம் கொண்டவன். அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள சம்பந்தம் தான்.
அப்போதைய என் இயல்பான ஹேர் ஸ்டைல், மூக்கு கண்ணாடி இந்த பட்ட பெயருக்கு வலு சேர்த்திருக்கிறது.

இப்போது நினைக்கும் போது சரத்பாபுவுக்கும் எனக்கும் உள்ள முக்கிய வேறுபாடு. எனக்கு என் நீண்ட வாழ்வில் ஒரே மனைவி தான். ஒரே திருமணம்.
சரத் பாபுவுக்கு எப்போதும் விதிவசமாக second hand தான் மனைவிகள்.
(அப்போது இன்னொரு வேடிக்கையான விந்தை. அந்த ஊரில் ரஜினி காந்த் சாயலில் ஒரு மனிதர் அரசு வேலையில். அவர் மதுரையில் என் கல்லூரி கால காதலியின் சகோதரர்.
முள்ளும் மலரும் படம் அந்த சின்ன ஊருக்கு வந்த பின் அவரை பார்த்து ‘ரஜினி காந்த்’ என்றும் என்னை ‘சரத் பாபு’ என்றும் அடையாளமிட்டார்கள் என்பது Irony.)
நீ பள்ளியிறுதி மாணவி. என்னை பார்த்து பரவசமடைவதை பார்த்து விட்டு பாங்க்கில் பணி புரிந்த என் ரூம் மேட் ‘ மிஸ்டர், இந்த பெண்ணுக்கு நீங்க நெம்புகோலின் தத்துவத்த விளக்கினா தான் அடங்கும்’
நான் “Nature of work does’nt suit my temporament” என என் அரசு வேலையை உதறி விட்டு சினி ஃபீல்ட்டுக்கு வந்தேன்.
அதன் பின் உன்னை நான் இன்று வரை சந்தித்ததேயில்லை.
நான் சினிமாவுக்கு வந்த ஒரே வருடத்தில் நீ அடையாறு ஃபில்ம் இன்ஸ்ட்டிட்யூட்டில் படிக்க வந்ததெல்லாம் பின்னர் தான் எனக்கு தெரியும். நீ கோர்ஸ் முடிக்கும்போது தான் தெரிய வந்தது.
அடையார் ஃபில்ம் இன்ஸ்ட்டிட்யூட்டில் கூட பின்னால் திரை நடிகனாக ஆன ஒருவனுடன் உனக்கு காதல் அனுபவம் உண்டு என்பதையும் தெரிய வந்தேன்.
நான் உதவி இயக்குனராக வேலை பார்த்த படத்தின் தயாரிப்பாளர் ரொம்ப பெரிய அந்தஸ்தான செல்வந்தர். அப்போது நடுத்தர வயதை தாண்டி விட்டவர். மனைவி தவிர பெரிய நடிகையையெல்லாம் எப்போதோ திருமணம் செய்து விட்டு ஒதுங்கியவர். சினிமா நடிகைகள் சங்காத்தத்திற்காகவே படங்கள் தயாரிக்கிறாரோ என்று திரையுலகை எண்ண வைத்தவர். அரசனைப்போன்ற தோரணை கொண்டவர்.
நான் சினிமாவுலகை விட்டு வந்த பின் உன்னை ஒரு பாலச்சந்தர் படத்தில் பார்த்தேன்.
சரத் பாபுவுடன் கூட ஒரு டப்பா படத்தில் நீ ஜோடியாக நடித்ததை பார்த்தேன். என்னை சரத் பாபு என்று கிண்டல் செய்தவள் சரத் பாபுவுக்கே ஜோடியாக படத்தில்.
நான் அஸிஸ்டண்ட் டைரக்டராக வேலை பார்த்த படத்தின் அந்த அந்தஸ்தான, செல்வாக்கு மிகுந்த செல்வந்த தயாரிப்பாளர் சில வருடங்களில் உன்னை அபிமான தாரமாக்கிக்கொண்டார். உனக்கும் அவருக்கும் முப்பத்தைந்து  வயது வித்தியாசம்.

இன்று நீ எங்கிருக்கிறாய்? என்ன செய்கிறாய்? உயிருடன் இருக்கிறாயா என்று கூட தெரியவில்லையே.


Memory is my fate.





...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.