Share

Jul 8, 2019

விழுதுகள் போல உறவு


டி.எஸ்.பாலையாவின் கையொப்பமிடப்பட்ட ஒரு புத்தகத்தை கிருஷ்ணன் வெங்கடாசலம் ( கிருஷ்ணன் நம்பியின் தம்பி) காட்டினார். அது பாலையாவின் சொந்த புத்தகம்.
நடிகை சந்திரகாந்தாவின் அக்காள் ஒருவரையும் டி.எஸ்.பாலையா மணந்தார். அவருடைய மகள் தான் நடிகை மனோசித்ரா.
சந்திரகாந்தாவின் இன்னொரு அக்கா மாப்பிள்ளை எஸ்.எஸ்.பி லிங்கம். இவர் தி.மு.கவின் ஸ்தாபக தலைவர் சி.என்.அண்ணாத்துரைக்கு நெருக்கமான நண்பராய் இருந்தவர்.
அதாவது எஸ்.எஸ்.பி லிங்கத்தின் மனைவியின் இன்னொரு சகோதரி தான் டி.எஸ்.பாலையா மனைவி.
பின்னணி பாடகர் சாய்பாபா, (’மலர்களில் படுத்தவள் சகுந்தலை அந்நாளில்’, ’ஹலோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு’ போன்ற பாடல்களை நாகேஷுக்காக பாடியவர்) ஜூனியர் பாலையாவின் தாயார் டி.எஸ்.பாலையாவின் மூத்த மனைவி.
கரகாட்டக்காரன் புகழ் சண்முகசுந்தரம் (’அக்கா, வயசாயிருச்சில்ல, அக்கா’) சந்திரகாந்தாவின் சகோதரர்.
இவருடைய மனைவியாய் இருந்தவர் தான் ரமா பிரபா. இந்த ரமாப்ரபா தான் சரத்பாபுவுடன் வாழ்ந்தவர். சரத்பாபு பின்னால் நம்பியாருக்கு மருமகனாகி அதுவும் இல்லையென்றானது.
When it comes to a family tree, one should be willing to go where the fact may lead.
சண்முகசுந்தரம் பற்றி பலரும் அறியாத ஒரு விஷயம் உண்டு.
இந்த அபூர்வ செய்தியை சொன்னவர் கிருஷ்ணன் வெங்கடாசலம்.
நம்பியின் தம்பி எப்பேர்ப்பட்ட புதையலையெல்லாம் பேச்சில் கூட காட்டுகிறார்.
ரமா ப்ரபா போல இன்னொரு பெண் கூட சண்முகசுந்தரத்தின் மனைவியானார். அவர் பெயர் அம்புஜம். இவர் டி.எஸ். பாலையாவின் மகள்! (சண்முக சுந்தரத்தின் அக்காள் மகள் அல்ல இவர்.) ஜூனியர் பாலையா ரகுவின் சகோதரி. ஆக டி.எஸ் பாலையாவின் மருமகன் சண்முகசுந்தரம். அம்புஜம் திடீரென்று சண்முகசுந்தரத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். She also had  eloped.
சண்முகசுந்தரம் இறக்கும்போது அவர் மனைவி சுந்தரி. மூன்றாவது மனைவி. இவர்களுக்கு மகள்கள் கீதா, பவித்ரா. மகன் பாலாஜி என்று செய்தித்தாளில் படிக்க கிடைத்தது.
சண்முகசுந்தரம் டி.எஸ்.பாலையாவுக்கு மருமகனானதும், சரத்பாபு நம்பியாருக்கு மருமகனானதும் காலம் காட்டிய மின்னல். சொற்ப கால நிகழ்வு.
சண்முகசுந்தரத்தின் மூத்த சகோதரர் டி.கே.மணியன். அதாவது நடிகை சந்திரகாந்தாவின் அண்ணன். (இவரும் கிருஷ்ணன் நம்பியின் தம்பியும் ஐம்பத்தாண்டு கால நண்பர்களாய் இருந்தவர்கள்.)
இவர் திரைப்பட இயக்குனர். சுரேஷ், பானுப்ரியா நடித்த ஏதோ மோகம், எஸ்.வி.சேகர் நடித்த பொண்டாட்டி பொண்டாட்டி தான் என்ற படங்களை இயக்கியவர்.
கங்கை அமரன் படங்களிலும் பணி புரிந்திருக்கிறார். கங்கை அமரன் சந்திரகாந்தாவின் அக்கா மகளை தான் மணந்தவர். அதாவது முன்னர் குறிப்பிட்ட எஸ்.எஸ்.பி.லிங்கம் தான் கங்கை அமரன மாமனார். கங்கை அமரனின் மகன்கள் இன்று பிரபலமானவர்கள். இயக்குனர் வெங்கட், நடிகர் ப்ரேம்ஜி.
A family tree’s roots run deep.
கங்கை அமரன் சம்பந்த வழியில் பார்த்தால் டி.எஸ்.பாலையாவுக்கு இளையராஜா கூட சொந்தக்காரர்.
”சொந்தம் எப்போதும் தொடர்கதை தான். முடிவே இல்லாதது” கண்ணதாசன் பாடல். மெல்லிசை மன்னர் இசை. சிவாஜி, சாவித்திரிக்கு பிராப்தம் படத்தில்.
”சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும். அது எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்.” கண்ணதாசன் எழுதி, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல். நான் உதவி இயக்குனராக இருந்த ஹிண்டு ரங்கராஜன் தயாரித்த ’அழைத்தால் வருவேன்’.

’விழுதுகள் போல உறவு’ கண்ணதாசனின் வரி தானே.

டி.கே. மணியன் மனைவி யார் தெரியுமா? பூரணி. இவர் மிக பிரபலமான ஸ்பெஷல் நாடக ஜாம்பவான், தேவகானக்குரலுக்கு சொந்தக்காரர் எஸ்.ஜி.கிட்டப்பாவின் உடன் பிறந்த சகோதரர் செங்கோட்டை செல்லப்பாவின் மகள். டி.கே மணியன் எஸ்.ஜி.கிட்டப்பாவுக்கு சொந்தக்காரர் ஆனார்.
அற்பாயிசில் இறந்த கிட்டப்பாவின் இரண்டாவது மனைவி கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் என்பது அனைவரும் அறிந்ததே.
எப்படியெல்லாம் கனெக்ட் ஆகிறது பாருங்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.