Share

Jul 5, 2019

வன்மம்


சென்ற மாதம் விஜய் ஃபொரம் மால் வாசலில் பார்த்த ஒரு காட்சி தினமும் நினைவில் நிழலாடுகிறது.
மாலில் இருந்து வெளியே ஒரு குடும்பம் வருகிறது. ஒரு பெரிய மனிதர் ஒரு ஸ்பெஷல் சைல்டை கைப்பிடித்து உள்ளிருந்து வெளியே அழைத்து வருகிறார். அந்த ஸ்பெஷல் சைல்ட் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன். அவனால் நடக்கவே முடியவில்லை. சிரமப்பட்டு அழைத்து வருகிறார். ஒரு பேரிளம் பெண். கூடவே யுவதிகள் இருவரும் ஒரு நல்ல ஆரோக்கியமான சிறுவனும். சிறுவனுக்கு பத்து வயது இருக்கலாம்.

Mentally retarded person ஐ கவனத்துடன் அழைத்து வரும் அந்த பெரியவர் அவனுடைய அப்பாவாக இருக்கலாம். பேரிளம் பெண்ணும் அவர் சகோதரியோ எனும்படி இருக்கலாம். யுவதிகள் அவர்களின் உறவு பெண்கள். சிறுவனின் பெற்றோர் வரவில்லை என தெளிவாக தெரியும்படி ஒரு சம்பவம் நடந்தது. சிறுவன் அந்த பெரியவரின் தம்பி, தங்கை யாராவது ஒருவருடைய குழந்தையாக இருக்கலாம்.
அந்த இருபது வயது இளைஞனை பொறுப்பாக அந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர் அழைத்து வருவது என்பது பார்ப்பவர்களை இளக வைக்கும் காட்சி தான். பச்சாத்தாபம் மனதில் எழுப்பக்கூடிய காட்சி. 

அந்த பத்து வயது சிறுவன் ஆண் குழந்தைகளுக்கேயான இயல்பான துறுதுறுப்புடன் இருக்கிறான். எதனாலோ அவன் மீது அந்த ஐம்பது வயதுக்காரருக்கு கோபம் வந்து விட்டது. குழந்தை கால்களுக்கு இடையில் ஏதும் நடக்கும்படியாகி விட்டதோ என்னவோ? அல்லது ஆண்குழந்தைகளின் இயல்பான குறும்பு ஏதோ? அல்லது அவனுடைய பெற்றோர் மீது அந்த பெரியவருக்கு எதாவது வர்மம்? அந்த பெரியவர் ஒரு கையால் இளைஞனை பிடித்து கொண்டிருந்தவர் அந்த சிறுவனை மறு கையால் தாக்க முனைந்தார். அடிக்கிற வேகத்தில் அந்த அடி சிறுவன் மேல் பட்டால் நிச்சயம் குழந்தை துடித்து போய் விடுவான். ஆனால் சின்ன பையன் லாகவமாக விலகி தப்பிக்கிறான். அந்த பெரியவரோ மீண்டும் நான்கு முறை அதே மூர்க்கத்துடன் அடிக்கப்பாய்கிறார். சிறுவன் அந்த தாக்குதலில் இருந்து கவனமாக தப்பித்து விடுகிறான்.
A child’s instinct is almost perfect in the matter of defence.
அந்த மெண்டல் ரிட்டார்டட் வாலிபனின் தகப்பனார் சலித்துப் போய் சிறு பையனான குழந்தையை கடுமையாக திட்டுகிறார். சிறுவன் விக்கித்து நிற்கிறான்.


அடுத்த அரை நிமிடத்தில் அவர்கள் அனைவரும் ஒரு டாக்ஸியில் ஏறி விட்டார்கள். விஜய் ஃபொரம் மாலில் இருந்து டாக்ஸி மறைகிறது.

குழந்தைக்கு டாக்ஸியில் அடி விழுமோ? வீட்டிற்கு போன பின்னால் வீட்டில் வைத்து அடிப்பார்களோ? அவன் அக்கம்பக்கத்து வீட்டு பையனாய் இருந்தால் டாக்ஸியில் இருந்து இறங்கியவுடன் தன் வீட்டிற்கு ஓடி விடலாம். இவர்களுடைய விருந்தாளிப்பையன் என்றால் நிச்சயம் பெரியவர் அடிக்காமல் விடவே மாட்டார். என்னுள் பதற்றம். அவ்வளவு வன்மம் குழந்தையை தாக்க முனைந்ததில் அவரிடம் வெளிப்பட்டது.


வன்மம் என்னும் கற்கள்
உங்களிடம் வன்மங்கள் இருக்கின்றன
என்னிடம் ஒரு வாழ்க்கை இருக்கிறது
நீங்கள் அந்தக் கற்களை எறியுங்கள்
வாழ்ந்து பார்க்கிறேன் நான்
- குட்டி ரேவதி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.