Share

Jul 26, 2019

வேண்டியதை வாரிக்கொள்ள வாருங்க


சூலமங்கலம் சகோதரிகள் பக்தி பாடல்கள் பிரபலம்.
கந்தசஷ்டி கவசம் பாடியவர்கள்.
பெரியப்பா எங்கள் குடும்ப நிகழ்வுகளில் கலகலப்பாக கிண்டல் செய்து அடிக்கும் Wit. ”டேய் தொர, சூலமங்கலம் சகோதரிகள் யார் தெரியுமாடா? உங்க பெரியம்மாவும் அம்மாவும் தான்டா.”
குழந்தைகள் எல்லோரும் பெரியம்மாவையும் அம்மாவையும் பார்த்து பீறிட்டு சிரிப்போம். பெரியம்மாவும் அம்மாவும் வெட்கப்பட்டுக்கொண்டு இந்த ஜோக்கிற்கு சிரிப்பார்கள். சூலமங்கலத்திற்கும் எங்களுக்கும் ஸ்னானப்ராப்தி கூட கிடையாது.
அப்பா,பெரியப்பா இருவரும் சுங்க இலாகா அதிகாரிகள்.

’எதையும் தாங்கும் இதயம்’ எஸ்.எஸ்.ஆர் விஜயகுமாரி நடிப்பில். சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடல்களில் மாஸ்டர் பீஸ் “ உனக்கும் எனக்கும் வெகு தூரமில்லை,நான் நினைக்காத நேரம் இல்லை” கவிஞர் எம்.கே ஆத்மநாதன் எழுதி டி.ஆர் பாப்பா இசை.

சௌந்தர்ராஜனுடம் இணைந்து சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடிய கே.வி.மஹாதேவன் இசையில் கண்ணதாசனின் “ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா, ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி”
”திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் திருத்தணி மலை மேலே எதிரொலிக்கும்” என்று சுசிலாவுடன் ராஜலக்ஷ்மி பாடியது பூவை செங்குட்டுவன் எழுதியது. குன்னக்குடி வைத்தியநாதன் இசை.

எப்பேர்ப்பட்டவர்களையும் தூக்கி குப்பையில் போட்டு விடும் குருவி மண்டையன் ராஜலக்ஷ்மி குரலின் தனித்துவம் பற்றி “ இந்த பொம்பள குண்டியால பாடுது” என்பான். மதுரை வக்கிரம்.

ஒரு வேடிக்கை. மகிழம்பூவில் (1969) எல்.ஆர். ஈஸ்வரிக்கு பாடக்கொடுத்திருக்க வேண்டிய (வித்வான் வே.லட்சுமணன் எழுதிய) பாடலொன்றை சூலமங்கம் ராஜலக்ஷ்மி பாடியிருந்தார்.
D.B.ராமச்சந்திரன் இசை.
“வேண்டியதை வாரிக்கொள்ள வாருங்க
அன்பு வெள்ளம் பாயும் ஓடையில நீந்துங்க
எட்ட எட்ட போனா என்ன சுகம் கிடைக்கும்
கிட்ட வந்து தொடுங்க
மொத்தமாக கிடைக்கும்

பள்ளம் பார்த்து பாயும் வெள்ளம் போலவே
பாவை என்னை பார்த்து இன்பம் காணுங்க
கண்ண வச்சு பாத்து புண்ணியப்படாது
என்ன வச்சு பாத்தா கசங்கி விடாது.”

மைனராக நடித்த ஆர்.எஸ்.மனோகருக்காக Vamp roleல் குமாரி பத்மினி குலுக்கி, மினுக்கி, முலை பிதுக்கி, ஆடி பாடி நடித்த பாடல்.

 சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இப்படி பாடியதன் அபத்தம் அன்று கவனத்திற்கு வந்திருக்குமா என்று தெரியவில்லை.


http://rprajanayahem.blogspot.com/2019/07/blog-post_12.html




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.