Share

Mar 27, 2019

மாஸ்டர் ராஜ்குமார்


ஏ.வி.எம் நிறுவனம் எடுத்த அந்த படத்திற்காக நூறு குழந்தைகளை பார்க்க வேண்டியிருந்தது. அவர்களில் மாஸ்டர் ராஜ்குமாரைத் தான் தேர்ந்தெடுத்தார்கள். அந்தப்படம் ’ராமு’. எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் பாடல்கள் காலத்தால் அழியாதவை.

எஸ்.வி.சுப்பையா குழந்தை ராமுவின் அன்பில் நெகிழ்ந்து
சொல்லும் பிரபல வசனம் “ தெய்வத்துக்கு ஆயிரம் கை. அதில் ஒரு கை கூட என் கண்ணீரை துடைத்து விட்டதில்லை.”
ராமுவாக டைட்டில் ரோலில் நடித்த ராஜ்குமார் ‘எனக்கு சாகத்தெரியலயே அப்பா’ என்று மணலில் எழுதிக்காட்டும் போது தியேட்டரில் கண் கலங்கி கண்ணீர் விட்டவர்கள் அனேகர்.

ஜனாதிபதி ஜாகிர் உசேன் கையால் அகில இந்தியாவிலும் சிறந்த குழந்தை நட்சத்திரம் தேசிய விருது பெற்றார். ராமுவில் நடிக்கும்போது சிறுவனுக்கு எட்டு வயது.
தமிழில் நூறு நாள் ஓடிய படம். தமிழில் ஜெமினி கணேசன் கதாநாயகன். தெலுங்கில் என்.டி.ராமராவ். ராமுவாக தெலுங்கிலும் மாஸ்டர் ராஜ்குமார் தான் நடித்தார். ஆந்திராவில் முப்பத்தைந்து வாரங்கள் ஓடியது. தெலுங்கில் கோவர்த்தனம் இசையமைத்தார்.
எம்.ஜி.ஆருடன் பெற்றால் தான் பிள்ளையா? ’நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி’ பாடலில் ஆட்டம் போட்ட சிறுவன்.
ராஜ்குமார் ’சபாஷ் தம்பி’ படத்திலும் டைட்டில் ரோல் செய்தார்.
பாலிஷ் பூட் பாலிஷ் பாடல்.
ஜெய்சங்கர் இவரை புகழ்ந்து பாடுவது “ சபாஷ் தம்பி, உன் செய்கையை போற்றுகிறேன்.நீ ஒருவன் மட்டும் துணையாய் இருந்தால் உலகை மாற்றிடுவேன்.”

’அதேகண்கள்’ காஞ்சனாவுடன் ”பூம்பூம்பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி”
இருமலர்களில் நாகேஷின் மகனாக.
தெய்வமகன் படத்தில் ஜுனியர் சிவாஜியாக கலக்கியவர்.
தனிப்பட்ட முறையில் எனக்கு பால்யத்தில் ராஜ்குமாரை வைத்து சில மறக்கமுடியாத நினைவுகள் உண்டு.
அப்பா முதல் முறையாக டேப் ரிக்கார்டர் வாங்கி வந்திருந்த போது அதில் நான் பாடிய பாடல் “பச்சை மரம் ஒன்று, இச்சைக்கிளி ரெண்டு, பாட்டு சொல்லி தூங்கச்செய்வேன் ஆரிராரோ,” ஒரு பாடலில் என் குரல் முதல் முறையாக கேட்ட த்ரில்.
பள்ளியில் நான் குட்டி பத்மினியின் பாடல்கள் பாடியிருக்கிறேன். “குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று,”
“கோழி ஒரு கூட்டிலே, சேவல் ஒரு கூட்டிலே.” பாடிய போது அரங்கமே கை தட்டி அதிர்ந்திருக்கிறது.
பாட்டுப்போட்டியில் நான் பரிசு வாங்கிய பாடல் எம்.ஜி.ஆருடன் ராஜ்குமார் ஆடிய “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி”
சென்னைக்கு சிறுவனாக நான் முதல் முறை வந்திருந்த போது ஒரு வீட்டில் எனக்கு விருந்து. அங்கே இருந்த கிராம போன் ரிக்கார்ட் ப்ளேயரில் நான் கேட்ட பாடல் “ பாலீஷ், பூட் பாலீஷ்”

சாயல் என்பது ஒவ்வொருவர் கண்ணுக்கும் எப்போதும் ஒவ்வொரு மாதிரி தெரியும். பால்யத்தில் என் சாயலில் ராமு முகம் தெரிகிறது என்று சொன்னவர்கள் உண்டு.
அதிகம் பேசாத என் மூத்த மகன் கீர்த்தியின் இயல்பில் ராமுவையே நான் பார்த்திருக்கிறேன்.
ராஜ்குமார் அப்போது நடித்த பிற படங்கள் - ரவிச்சந்திரன், காஞ்சனா நடித்த நாலும் தெரிந்தவன்,
ரவிச்சந்திரன், விஜயகுமாரி ( அபூர்வமான ஜோடி) இணைந்த “செல்வியின் செல்வன்”.
ஏ.வி.எம் ராஜன் நடித்த ’பிரார்த்தனை’ தான் ராஜ்குமார் நடித்த கடைசிப்படம்.

தமிழ் தெலுங்கு படங்கள் மட்டுமின்றி, தாய்மொழி கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.
மொத்தம் ஐம்பது படங்கள்.

இயக்குனர் ஏ.சி.திருலோக்சந்தர் தான் நம்பும் நம்பிக்கை நட்சத்திரங்களாக 
கேப்டன் சசிகுமார், அதே கண்கள் வசந்தகுமார், மாஸ்டர் ராஜ்குமார் ஆகியோரை குறிப்பிட்டதுண்டு.
கேப்டன் சசிகுமார் தன் மனைவி நெருப்பில் சிக்கிய போது அவரை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்தார்.
அதே கண்கள் பட வில்லன் வசந்தகுமார் துபாய் பயணம் செய்த போது விமான விபத்தில் மறைந்து விட்டார்.

காலம் காட்டும் விசித்திரம். மாஸ்டர் ராஜ்குமார் இசைக்கருவி வாசிக்கும் கலைஞராக மாறி விட்டார்.
இவருடைய அப்பா ஹனுமந்தாச்சார் ஒரு இசைக்கலைஞர். சிந்தஸைசர் எனப்படும் கீ போர்ட் வாசிப்பவர்.
கோவர்த்தனம் மூலமாக ரீரிக்கார்டிங்கில் வாசிக்க இளைஞன் ராஜ்குமாருக்கு வாய்ப்பு கிடைத்த போது நல்ல எக்ஸ்போசர். அதன் பின் திரையுலக இசைக்கலைஞராக பரிமாணமே மாறியிருக்கிறது.
Life is a walking shadow – Shakespeare in Macbeth.

(மௌனியின் பிரபலமான வரிகள் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” பற்றி நிறைய பேசி எழுதுகிறீர்கள். ’இது கவிதையா? உரை நடையா? கவிதையும் தான் உரை நடையும் தான்’ என்றெல்லாம் தவித்து தக்காளி விற்கிறீர்கள்.சரி. 
அந்த வரிகள் ஷேக்ஸ்பியரின் மேக்பத் சொல்கிற “Life is but a walking shadow" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.)


அக்கார்டியன் பிரமாதமாக ராஜ்குமார் வாசிப்பார்.
அந்த நேர நெருக்கடி பற்றியும் வெள்ளந்தியாக சொல்கிறார். “அப்பாவுக்கு வேலையில்லை. நான் எனக்கு வந்த இசைத்துறை வாய்ப்புகளை கட்டாயமாக பயன்படுத்த வேண்டிய சூழ் நிலை. மீண்டும் நடிக்க போக பயம். அரசனை நம்பி புருஷனை கை விட்டு விடக்கூடாதே”


விட்டோரியா டெசிக்காவின் பைசைக்கிள் தீவ்ஸ் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் பின்னாளில் பள்ளிக்கூட வாத்தியாராகிப்போனார் என்பது நினைவுக்கு வருகிறது.

Fickle and Elusive Popularity.

விந்தை என்னவென்றால் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த அதே ஏ.வி.எம். ஸ்டுடியோ விஜயா வாஹினி, பிரசாத் ஸ்டுடியோவில் தான் ராஜ்குமாரின் பிற்கால வாழ்க்கையும் என்றாகிப்போனது என்பது தான்.
எம்.எஸ்.வி, கே.வி. மஹாதேவன் பாடல்களில் அக்கார்டியன் வாசித்திருக்கிறார்.
இளையராஜாவிடம் 1977 முதல் 1990 வரை பாடல் பதிவில் அக்கார்டியன் இசைக்கலைஞர் ராஜ்குமார் பணி புரிந்திருக்கிறார்.
அன்று ஆரம்பித்த திரை இசைக்கலைஞர் பணி ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்காக “மாற்றான்” படத்தில் கூட அக்கார்டியன் வாசித்தார்.
தேவி பிரசாத் பாடல் “ என்றென்றும் புன்னகை”
’பத்மினியும் பண்ணையாரும்’ படத்தில் ’உனக்காக, உனக்காக’ பாடல்.
ராஜ்குமாருக்கு இரண்டு மகன்கள்.
சமீபத்தில் சென்ற அக்டோபர் மாதம் அவருக்கும் அவர் மனைவிக்கும் மிகப்பெரிய மீளமுடியாத துயரம். மூத்த மகனின் திடீர் மறைவு.
புத்திரசோகம் தான் எத்தகைய கொடியது.
இளைய மகன் பவன் குமார் தான் இன்று அவர்களுக்கு ஆறுதல்.
ராஜ்குமார் முழுமையாக நொறுங்கிப்போய் இருக்கும் நிலையில் தான் அவரை நான் நேரில் சந்திக்க வாய்த்திருக்கிறது.

(இந்த மாஸ்டர் ராஜ்குமார் பதிவை படித்து தெரிந்து கொண்டு குங்குமம் பத்திரிக்கையில் இருந்து என்னை தொடர்பு கொண்ட கதிர்வேலன் ஒரு பேட்டி எடுக்க வேண்டி ராஜ்குமார் மொபைல் எண் கேட்டார். நானும் கொடுத்திருக்கிறேன். குங்குமத்தில் பேட்டி வெளியாக இருக்கிறது.)

........






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.