Share

Mar 13, 2019

’சிடுமூஞ்சி’ சீதாலட்சுமி



எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீரை எல்லோருக்கும் தெரியும். எம்.ஆர்.ஆர் வாசு, ராதாரவி இருவரும் ரத்தக்கண்ணீர் நாடகத்தில் எம்.ஆர்.ராதா பாத்திரத்தை நடித்து மேடையேற்றியிருக்கிறார்கள்.
ரத்தக்கண்ணீர் நாடகம் முழுக்க முழுக்க பெண்கள் நடித்து மேடையேற்றப்பட்டிருக்கிறது. 
ராதா நடித்த வேடத்தில் பி.எஸ் சீதாலட்சுமி நடித்திருந்திருக்கிறார். அவர் நடிப்பை பார்த்த ராதா பிரமித்துப்போய் சீதாலட்சுமியிடம் சொல்லியிருக்கிறார்
 “ சீதா, என்னையே நான் இந்த நாடகத்தில் பார்த்தேன்.”


எம்.ஜி.ஆர் நாடகங்களிலும் நடித்தவர். சிவாஜி நாடகங்களிலும் நடித்தவர்.

வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் சீதாலட்சுமி “வெள்ளையம்மா” ரோலில் நடித்தவர். படத்தில் பத்மினி வெள்ளையம்மாவாக நடித்தார். 'வெள்ளையம்மா, வந்துதுடியம்மா ஒன் காளைக்கு ஆபத்து.'

உதயசூரியன் நாடகத்தில் மு.கருணாநிதியுடன் நடித்திருக்கிறார்.

அவர் பழம்பெரும் நடிகை பி.எஸ். சீதாலட்சுமியென்றாலும் 1960களில் தான் மிகவும் பிரபலம். 
தனுஷ் நடித்த ’சீடன்’ வரை நடித்திருக்கிறார்.

அப்போது சுந்தரிபாய், சி.கே.சரஸ்வதி போன்றவர்கள் போல வில்லி நடிப்பில் தனித்துவம் காட்டியவர். அவருடைய நடிப்பு காரணமாக ‘சிடு மூஞ்சி சீதாலட்சுமி’ என்று இவரை திரையில் பார்த்தவுடன் ரசிகர்கள் கத்துவார்கள். வெடு, வெடு என்று வசனம் பேசுவார்.
பாசமலரில் பி.எஸ்.ஞானத்தை பார்த்தவுடன் பெண்கள் திட்டுவார்கள். அது போல பி.எஸ்.சீதாலட்சுமியும் சினிமா தியேட்டரில் படம் ஓடும்போது திட்டு வாங்குவார். சீதாலட்சுமி சாயல் எஸ்.என்.லட்சுமிக்கு சகோதரியா என்று பலரை குழம்ப வைத்திருக்கிறது.
நவராத்திரியில் சாவித்திரி சந்திக்கும் பல பாத்திரங்களில் சீதாலட்சுமியும் ஒருவர்.

எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் நம்பியாருக்கு அக்காவாக வருபவர் சீதாலட்சுமி தான். அதே வருடம் ’அன்புக்கரங்கள்’ படத்தில் சிவாஜிக்கு அம்மாவாக படு சீரியஸ் ரோல் செய்தார். “காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓடவிட்டேன். மணலெடுத்து வீடு கட்டி மழை நீரில் நனைய விட்டேன்… அம்மா நீ கொடுத்த நிழலை விட்டு யார் நிழலில் போய் இருப்பேன்.” – உருக்கமான பாடல் காட்சியில் சிவாஜி நெகிழ்த்துவார்.
பணம் படைத்தவன் படத்தில் டி.எஸ்.பாலையாவுக்கு மனைவியாக, எம்.ஜி.ஆரின் அம்மாவாக சீதாலட்சுமி.
உயர்ந்த மனிதனில் சிவகுமாரிடம் சிடுமூஞ்சியை காட்டினாலும் அன்பை பாந்தமாக வெளிப்படுத்துவார். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பதை நடிப்பில் இயல்பாக காட்டியவர்.


இவருடைய கணவர் பிரபல எடிட்டர் கே.பெருமாள். இயக்குனர் ஏ.காசிலிங்கத்தை குருவாக சொல்வார்.
எம்.ஜி.ஆர் படங்களில் எடிட்டராக இருந்தவர் கே.பெருமாள். நாடோடி மன்னனுக்கே இவர் தான் எடிட்டர்.

சீதாலட்சுமியம்மாளுக்கு குழந்தைகள் இல்லை. இவர் ஒரு ஆலமரம். டி.ஆர்.ராஜகுமாரி போல சொந்தங்களுக்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர். தம்பி, தங்கை பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவர்.

இவருடைய தங்கை மகள் டான்ஸ் மாஸ்டர் ராதிகா. இவர் மூத்த சகோதரர் டான்ஸர் கார்த்திக். சீதாலட்சுமியை அம்மாவாக பார்த்தவர்கள். ஹேர் டிரஸ்ஸர் புஷ்பா இவருடைய இன்னொரு தங்கை மகள்.
மிஸ்கினின் முகமூடியில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்திருக்கிறார். மரியான், 555, சிகரம் தொடு, ரோமியோ ஜூலியட்,  தாரை தப்பட்டை, விஷாலின் கத்திச்சண்டை, விஜய் சேதுபதியின் தர்மதுரை, உதயநிதியின் கண்ணே கலைமானே போன்ற படங்களிலும் டான்ஸ் மாஸ்டர் ராதிகா தான். ராதிகாவின் கணவர் இளையராஜா இசைக்குழுவில் இருப்பவர். வயலினிஸ்ட் பழனியப்பன்.

இதை ஏன் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால் ஒரு கலைப்பரம்பரை இவரில் தொடர்கிறது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.