Share

Jan 30, 2017

’காலத்தைக் கடந்த கதாநாயகி’ தேவிகா



கமல் ரஜினி காலம் ஆரம்பித்து பிரமாதமாக இருவரும் கொடி கட்டிவிட்ட காலம். வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, எங்கேயோ கேட்ட குரல்,
மூன்று முகம்......
மதுரை தேவி தியேட்டரில் பழைய படம் “பாவ மன்னிப்பு” பார்க்க என் நண்பன் சரவணனுடன் போயிருந்தேன்.
தேவிகா படத்தில் வந்தவுடன் கை தட்டல். பால்கனியில் கூட கை தட்டி ரசிக சுள்ளான்கள் ஆர்ப்பரித்தார்கள்.தேவிகா வருகிற காட்சிகளிலெல்லாம் பலமான வரவேற்பு. இப்படிதத்தனேரி,விளாங்குடிடூரிங் டாக்கீஸ்களிலும் பார்த்ததுண்டு.
கமல் ”இந்தியன்” ரஜினி ”படையப்பா” காலத்திலும் இளைஞர்கள் தேவிகாவை திரையில் பார்த்து விட்டு பரவசமாகி பிரமாதமான நடிகை என்று சொன்னதைக்கேட்டிருக்கிறேன்.


அவர் காலத்துக்கு சம்பந்தமேயில்லாத புதிய இளைய தலைமுறை அடுத்தடுத்த பத்தாண்டு காலங்களில் அவருக்கு தீவிர ரசிகர்கள் எப்போதும் தொடந்து இருந்து கொண்டே இருக்கிறார்கள் எனும்போது தேவிகா ’காலத்தைக் கடந்த கதாநாயகி’ தானே!

தேவிகா யாரோ ஒரு ரொம்ப பழைய மெட்ராஸ் மேயர்- பாசுதேவ் நாயுடு வின் நெருங்கிய உறவுக்காரப்பெண் என்று புதுமுகமாக அறிமுகமான காலத்தில் அடையாளம். ஊமைப்படக்காலத்து சினிமாக்காரர் ரகுபதி வெங்கையா நாயுடுவின் பேத்தியாம். ரொம்பப்பாரம்பரியமான குடும்பம்.
இயற்பெயர் பிரமீளா!

சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா மூவரின் பங்களிப்பு தமிழ்ப்பட கறுப்பு வெள்ளை காலத்துக்கு அதிகம்.
அழகு நளினம் என்று தேவிகாவை சொல்லவேண்டும்.

பானுமதி, அஞ்சலி தேவி, பத்மினி, சாவித்திரி, சரோஜா தேவி, தேவிகா, சௌகார் ஜானகி, ஜெயந்தி ஆகியோர் தமிழ் சினிமா சூழல், கதையம்சம், பாத்திர வார்ப்பு இவற்றிலிருந்த அபத்தங்களையும் மீறி தங்கள் நடிப்பில் ஒரு கண்ணியத்தை நேர்த்தியான நளினத்துடன் வெளிப்படுத்தினார்கள். இவர்களுடைய கதாநாயகர்களிடம் கூடக் காணக்கிடைக்காத மனமுதிர்ச்சியை திரையில் நிறுவியவர்கள்!


“நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா பழகத்தெரிந்த உயிரே உனக்கு விலகத்தெரியாதா உயிரே விலகத்தெரியாதா” மாஸ்டர் பீஸ்!

“சொன்னது நீ தானா? சொல்,சொல் என்னுயிரே”

“பாலிருக்கும், பழமிருக்கும், பசியிருக்காது”

“உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும். காதல் என்றொரு கதையிருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும்.”

“ராமனுக்கே சீதை என்று வாழ்வது தான் பெண்மை, சீதை வழி நான் தொடர ஆசை வைத்தேன் உண்மை”

“ஆயிரம் பெண்மை மலரட்டுமே, ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே”

சுசிலாவின் இந்தப்பாடல்களெல்லாம் தேவிகாவால் காட்சியாகின.


ஆண்டவன் கட்டளை படத்தில் தேவிகா நீராடிக்கொண்டே பாடும் பாடல் ”அழகே வா அருகே வா”
” ஆலயக்கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே” என்றவாறு தன் ’முலைகள்’ மீது சட்டென்று பெருமிதமாக பார்வையை ஓட்டுவார்.
என்னா பெருமை!

பின்னால் பிரபலமான கே.ஆர்.விஜயா நாடகத்தனமான நடிகை.
“தூக்கணாங்குருவிக்கூடு, தூங்கக்கண்டா” என்ற தேவிகாவின் பாடலைப்பார்த்து விட்டு கே.ஆர்.விஜயாவின் “ தமிழுக்கும் அமுதென்று பேர்” பாட்டைப் பார்த்தால் தேவிகாவின் அருமைபுரியும். கே.ஆர்.விஜயா பாரதி தாசனின் பாடலில் செய்யும் கொனஸ்டைகள் சகிக்காது.

கதாநாயகியாக இவருடைய முதல் படம் எஸ்.எஸ்.ஆருடன் நடித்த ’முதலாளி’
ஸ்ரீதர் இயக்கத்தில் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை கல்யாண் குமாருடன் இணைந்து நடித்தார். இரண்டும் மாஸ்டர் பீஸ்!

பாவ மன்னிப்பு, பந்த பாசம், கர்ணன், அன்னை இல்லம், அன்புக்கரங்கள், சாந்தி, நீலவானம் என சிவாஜியுடன் தேவிகாவுக்கு முக்கிய படங்கள்.
தேவிகா சிவாஜியுடன் ஒரு காலத்தில் ஒரே நேரத்தில் 13 படங்களில் கமிட் ஆகியிருந்தார். இது ஒரு அபூர்வ நிகழ்வு.

பந்த பாசத்தில் சிவாஜியை காதலோடு ஒரு பார்வை பார்ப்பார். ஆஹா.. ஒரு பெண்ணின் காதல் பார்வை என்றால் அதற்கு ஈடு தேவிகாவின் கனிவான அந்த பார்வை தான். ஒரு பெண் எப்படி ’சைட்’ அடிப்பாள் என்பதற்கு அது தான் கால காலத்திற்கும் உதாரணம்.

களத்தூர் கண்ணம்மா, ஆடி பெருக்கு முதலிய படங்களில் தேவிகா நடித்திருந்தாலும் ஜெமினி கணேசனுக்கு கதாநாயகியாக இதயத்தில் நீ, சுமைதாங்கி, வாழ்க்கைப் படகு.

எம்.ஜி.ஆரோடு ஒரே படம்.’ஆனந்த ஜோதி’!

ஜெய்சங்கருடன் “ தெய்வீக உறவு”

தேவிகாவுக்கு மார்க்கெட் சரியில்லாத நேரம்.
ஜெய்சஙகர் ஒரு நாளில் மூன்று கால்ஷீட் நடித்த பிஸியான கதாநாயகன். தேவிகாவுடன் ஜோடி சேர்ந்த போது ரொம்ப பரவசப்பட்டார் : “ நான் சைக்கிளில் போகிற காலத்தில் என் எதிரில் காரில் வரும் நடிகை தேவிகாவை எப்போதும் பார்த்திருக்கிறேன். அப்போது இவருடன் ஜோடியாக நடிப்பேன் என்று கனவு கூட கண்டதில்லை.”


ராணி பத்திரிக்கையில் அந்த 1960களின் பின்பகுதியில் ஒரு சுவாரசியமான பகுதி. ஒவ்வொரு வாரமும் ஒரு அழகி தனக்குப்பிடித்த மற்றொரு அழகி பற்றி சொல்லவேண்டும்! அந்த அழகிமறுவாரம் தனக்குப்பிடித்த மற்றொரு அழகியைக்குறிப்பிடவேண்டும். இதில் சுலபமாக தேவிகா இடம்பிடித்தபோது தனக்குப்பிடித்த அழகியாக திருவிளையாடலில் முருகனாக நடித்தசிறுமியைக்குறிப்பிட்டார். அந்த சிறுமி சினிமாவில் பிரபலமாகவேயில்லை.

சினிமா பார்க்க தேவிகா தியேட்டருக்குப் போனால் முந்திரிப்பருப்பு சாப்பிட்டுக்கொண்டே படம் பார்ப்பார்.

சௌராஷ்ட்ராவான தேவதாஸ் அப்போது பீம்சிங்கிடம் உதவி இயக்குனர். அவரை தேவிகா திருமணம் செய்துகொண்டார்.
கண்ணதாசன் மதித்த நடிகைகளில் தேவிகா முக்கியமானவர். வாழ்க்கைத்துணையைத்தேர்ந்தெடுப்பதில் தேவிகா பெரிய தவறு செய்து விட்டதாக கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.கண்ணதாசன் ஆனந்த ஜோதியில் தேவிகாவுக்காக எழுதிய பாடல் “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே”. கண்ணதாசனை கிண்டல் செய்து இந்தப்பாடலை அவரை பார்க்கும்போதெல்லாம் தேவிகா பாடுவாராம்.

தேவதாஸ் இயக்கிய “வெகுளிப்பெண்” தேவிகா,வெண்ணிற ஆடை நிர்மலா நடித்து வெளி வந்தது.

பாலாஜிக்கு ஜோடியாக (எங்கிருந்தோ வந்தாள்), சுந்தர்ராஜனுக்கு ஜோடியாக (அன்புச்சகோதரர்கள்), இப்படி திரையில் கதாநாயகனுக்கு அண்ணியாக நடிக்க வேண்டி நேர்ந்திருக்கிறது.

கமல்ஹாசனுக்கு அம்மாவாக ஸ்ரீதரின் ’நானும் ஒரு தொழிலாளி’யில்.

தேவிகா தேவதாஸ் பிரிந்த பின்னால் ஒரு குடியரசு தினத்தில் தேவதாஸ் வாழ்ந்த வீட்டிற்கு அப்துல்லாவோடு போயிருந்தேன்.அப்துல்லாவின்
உறவினர் சுல்தானும் தேவதாஸோடு பீம்சிங்கிடம் இருந்தவர்.
நான் பங்களாவிற்குள் நுழைந்தபோது தேவதாஸ் அரிசியில் கல் பொறுக்கிக்கொண்டிருந்தார். சுல்தான் கத்திரிக்காயில் காம்பு கிள்ளியெடுத்துக்
கொண்டிருந்தார்.

டிரான்ஸிஸ்டர் சைசில் ஒரு போர்ட்டபிள் டி.வி.யில் டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நேரடியாய் ஒளிபரப்பு. குத்துச்சண்டை வீரர் முகமது அலி அந்த குடியரசு தினத்தில் முக்கியவிருந்தினர்.

தேவிகாவிற்கு காலங்கடந்தும் நிறைய ரசிகர்கள் இருப்பதை நான் குறிப்பிட்ட போது தேவதாஸ் அது பற்றி மிகுந்த பெருமைப்பட்டார்.


கனகா நடிகையானவுடன் தேவிகா ரொம்ப ஜபர்தஸ்து. அம்மாவை சமாளிக்க முடியாமல் சினிமாவுலகம் திணறியதாகச் சொல்வார்கள்.
தலைசிறந்த கதாநாயகியாக தேவிகாவை அறிந்தவர்களுக்கு கனகாவின் அம்மாவாக வித்தியாசமாக ஒரு பிம்பம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் என் மாமனாரின் அண்ணன் வீட்டில் உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அதிசயப்பிறவி படம் டி.வியில்.
"மருமகனே! இவ யாரு!"
"கனகா. தேவிகா மக!"
உடனே என் பெரிய மாமனார் எங்களுடன் அமர்ந்திருந்த அவருடைய அக்கா மாப்பிள்ளையிடம் பதறிப்போய் சொன்னார்.
" அத்தான்! தேவிகா மக நடிக்க வந்துட்டான்னா நமக்கெல்லாம் வயசாயிடுச்சின்னுல்ல அர்த்தம்!?"
......................

தேவிகாவின் குடும்ப நண்பர் ஒருவரிடம் நடிகையாக அவரின் விஷேச அம்சங்கள் பற்றி விலாவரியாக பேசிவிட்டு “ தேவிகாவின் ரசிகன் நான்.” என்றேன். அவர் “இதையெல்லாம் நான்தேவிகாவிடம் சொன்னால் அவர் பதில் என்ன தெரியுமா! ‘அவன் எந்த பய. காட்டுப்பய’ என்பது தான்!”
தேவிகாவை மென்மையும் பெண்மையுமாக திரையில் கண்டிருந்த எனக்கு இந்த உண்மை பெரும் முரணாகத் தெரிந்தது!

...............

சென்ற வருடம் தினமணி.காம் வெளியிட்ட தேவிகா பற்றிய கட்டுரையொன்றில் என்  புகைப்படத்தைப் போட்டு தேவிகாவின் புருஷன் தேவதாஸ் ஆக காட்டியிருந்தார்கள். பெரும் அபத்தம்!
Confusion's Masterpiece!
.............................................................

http://rprajanayahem.blogspot.in/…/10/untoward-incident.html

http://rprajanayahem.blogspot.in/…/11/gossip-and-rumors.html

http://rprajanayahem.blogspot.in/2008/…/carnal-thoughts.html

http://rprajanayahem.blogspot.in/2014/03/blog-post_18.html




Jan 26, 2017

நாட்டிய பேரொளி பத்மினி


திருவிதாங்கூர் சகோதரிகள் லலிதா-பத்மினி-ராகினி.
திருவிதாங்கூர் சகோதரிகள் நாட்டிய நடிகைகள்.

லலிதாவும் ராகினியும் சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும்
லலிதா வில்லியாகவும் ராகினி சிரிப்பு நடிகையாகவும் தான் பிற்காலத்தில் அறியப்பட்டார்கள்.
பத்மினி கதாநாயகியாக கொடி கட்டினார்.


பரதநாட்டியக்கலைஞர் என்பதால் அதன் சாதக பாதகங்கள் தூக்கலாக அவருடைய நடிப்பில் தெரிந்தது. மிகை நடிப்பில் ஒரு தேர்ந்த நளினம் கூடவே இசைந்திருந்தது.

எம்.ஜி.ஆருக்கு சரோஜா தேவி, ஜெமினி கணேசனுக்கு சாவித்திரி என்பது போல சிவாஜிக்கு மிகவும் பொருந்திய ஜோடி பத்மினி. ரசிகர்களை அந்தக்காலத்தில் கவர்ந்த ஜோடி சிவாஜி- பத்மினி.

பராசக்தி வந்த அதே வருடம் என்.எஸ்.கே இயக்கிய ’பணம்’ வெளியானது. அதிலேயே சிவாஜிக்கு ஜோடி பத்மினி!
”குடும்பத்தின் விளக்கு, நல்ல குடும்பத்தின் விளக்கு” உடுமலை நாராயண கவி பாடலை பாடும் பத்மினி சிவாஜியுடன்.
கிட்டத்தட்ட சிவாஜியின் திரையுலக துவக்க காலமே பத்மினியுடன் தான் ஆரம்பித்திருக்கிறது. பராசக்தி கதாநாயகி பண்டரிபாயை சிவாஜிக்கு பொருத்தம் என்று எப்படி சொல்ல முடியும்.



தொடர்ந்து பத்மினி திருமணத்திற்கு முன் இல்லற ஜோதி, எதிர்பாராதது, அமரதீபம், தெய்வப்பிறவி, புனர்ஜென்மம் ஆகிய படங்கள் சிவாஜியுடன்.
கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய
“அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நாம் ஆடி வரும் ஓரங்கம்” ஆஅ ஆஅ ஆ...
இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.

எம்.ஜி.ஆருடன் மதுரை வீரன், மன்னாதி மன்னன், ராணி சம்யுக்தா
ராஜா தேசிங்கு எம்.ஜி.ஆர் தான் என்றாலும் பத்மினிக்கு ஜோடி எஸ்.எஸ்.ஆர்.
என்.டி.ஆர் இணையாக ‘சம்பூர்ண ராமாயணம்’
ஜெமினியுடன் வஞ்சிக்கோட்டை வாலிபன், வீர பாண்டிய கட்டபொம்மன், மீண்ட சொர்க்கம்
வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினி - வைஜயந்தி மாலா போட்டி நடனம்!

எல்லா நடிகைகளையும் போல திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு டாக்டர் ராமச்சந்திரனுடன் அமெரிக்கா போய் விட்டு, சுவற்றில் அடித்த பந்து போல சினிமாவுக்கு திரும்பி வந்தார்.
’காட்டுரோஜா’ பாடல் பத்மினிக்கு “ ஏனடி ரோஜா, என்னடி சிரிப்பு, எதனைக் கண்டாளோ? அன்று போனவள் இன்று வந்து விட்டாள் என்று புன்னகை செய்தாளோ?”

திருமணத்திற்கு பின் நடித்த முக்கியமானவை ’சித்தி’, ’பேசும் தெய்வம்’, ’இருமலர்கள்’, திருவருட்செல்வர் ’தில்லானா மோகனாம்பாள்’, வியட்னாம் வீடு.

’மன்னவன் வந்தானடி’, ’மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன’ ’நலம் தானா உடலும் உள்ளமும் நலந்தானா’ பாடல்கள் அவரை மிகவும் கனப்படுத்தின.


’வியட்னாம் வீடு’ படத்தில் முதிய பெண்ணாக நடித்த பத்மினி ராஜ்கபூரின் ’மேரா நாம் ஜோக்கர்’ படத்தில் செக்ஸியாக நடித்தார். ஒரு நடிகை அன்று தன் கொங்கைகளை காட்டுவது அசாதாரண நிகழ்வு.

எம்.ஜி.ஆர் வெளியேற்றம் காரணமாக தி.மு.க உடைந்து அ.தி.மு.க தோன்றிய போது அப்போது தி.மு.கவிலிருந்த
எஸ் எஸ் ஆர் ஒரு அறிக்கை விட்டார்.
" அன்றைய தினம் 'ராஜா தேசிங்கு' படத்தில் என்னுடன் திருமதி பத்மினி அவர்கள் நெருங்கி நடிக்கக்கூடாது என்பதற்காக எம்ஜியார் செய்த சூழ்ச்சிகளை நாடு மறக்குமா?"

துக்ளக் சோ ராமசாமிக்கு இந்த மாதிரி விஷயம் கிடைத்தால் நையாண்டிக்கு கேட்க வேண்டுமா ?
" எஸ் எஸ் ஆர் சார் ! கேட்கவே பதறுகிறதே.நெஞ்சு கொதிக்கிறது. இப்படியெல்லாம் அநியாயமா ? எப்பேர்ப்பட்ட அநீதி இது? இதையெல்லாம் இந்த நாடு மறந்தால் இந்த நாட்டிற்கு விமோசனம் ஏது? இந்த நாடு நன்றி கொன்ற நாடு ஆகிவிடாதா ?" என்று செமையாக கலாய்த்திருந்தார்.



சிவாஜி ஏன் பத்மினியை திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்வி இன்றும் திரை ரசிகர்களால் கேட்கப்படுகிறது.

அ.முத்துலிங்கமும் அபத்தமாக இந்த கேள்வியை பத்மினியிடமே கேட்டிருக்கிறார். ’சிவாஜி கள்ளர் நான் நாயர். எப்படி கல்யாணம் செய்து கொள்ள முடியும்?’ என்று பத்மினி பதில் சொன்னாராம்.

சிவாஜி வேற ஜாதி, பத்மினி வேற ஜாதி என்பதெல்லாம் ஒரு காரணமா?
சுலபமாக அ.முத்துலிங்கம் உட்பட எல்லோரும் மறக்கிற விஷயம்.

பத்மினியோடு நடிக்க ஆரம்பிக்கும் போதே சிவாஜி திருமணமானவர். பராசக்தி ரிலீஸாவதற்கு முன்னரே சிவாஜி-கமலா திருமணம் சுவாமி மலையில் நடந்து விட்டது.

ரசிகப் பெருமக்களின் பொதுப்புத்தி - கமலாம்மாவுக்கு எப்படியாவது பத்மினியை சக்களத்தியாக்கி விட துடித்தார்கள்.

ரத்னமாலா கணேசன்?
 சினிமாவில் திருமணமானவர்கள் புதுக்கல்யாணம் செய்து கொள்வதேயில்லையா?
 எம்,ஜி.ஆர் – பத்மினி பற்றிய எஸ்.எஸ்.ஆர் முக்கோண Crush கமெண்ட்?
’ஜிஸ் தேஷ் மென் கங்கா பெஹ்த்தி ஹை’ராஜ்கபூர்?

................................



அசோகமித்திரன் எழுதிய சிறுகதை “ போட்டியாளர்கள்”

‘போட்டியாளர்கள்’ - ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் கதாநாயகிகளாக நடித்த வைஜயந்தி மாலா,
( அழகான இளவரசி)
பத்மினி ( அழகான பிரஜை) இருவரை வைத்து எழுதப்பட்டது.

பத்மினி வீட்டில் படத்திற்கான டான்ஸ் ரிகர்சல்.ஹிந்தி நடிகர் ராஜ்கபூர் கூட இந்தக் கதையில் வருகிறார். ( ’ஜிஸ் தேஷ் மென் கங்கா பெஹ்த்தி ஹை’ படத்தில் இருவரும் அந்த கால கட்டத்தில் நடித்துக்கொண்டிருந்தனர்!)

டான்ஸ் ரிகர்சலின் போது Sound Assistant ஆக வரும் இளைஞனின் விரசமான நடவடிக்கை அதிர்ச்சியேற்படுத்துகிறது.
ஒரு நடிகை என்றில்லை.எந்தப்பெண்ணுமே ஒருவன் பார்க்கின்ற பார்வையின் நோக்கத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.அந்நியனின் பார்வையில் விரசமும் வேட்கையும் பெண்ணை அவமானப்படுத்துகிற விஷயம்.
  அந்த சௌண்ட் அசிஸ்டண்ட் பலர் முன்னிலையில் நடிகையின் குடும்பத்தார் கூட இருக்கின்ற நிலையில் Masturbation என்கிற அளவிற்கு மிகவும் ரசாபாசமாக நடந்துகொள்கிறார்.

ஒரு திரைப்பட நடிகை இளமையழகை மூலதனமாக்கி தன்னுடைய ‘நிழல்பிம்பம்’பலரையும் தவிதவிக்கச் செய்வதில் தான் தொழில் வெற்றி அடங்கியுள்ளது என்பதை நன்கறிந்தவள் தான் என்றாலும் கூட, பகிரங்கமாக தன் நிஜ உடல் விரச வேட்கை,பார்வை நடவடிக்கைகளால் காயப்படும்போது இவளுடைய பெண்மைக்கு ஏற்படும் மன உளைச்சல்,வேதனையின் நுட்பமான துயர பரிமாணம் பரிபூர்ணமாக பதிவாகியுள்ள கதை தான் ‘போட்டியாளர்கள்’.

..................................................

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_04.html

http://rprajanayahem.blogspot.in/.../carnal-thoughts-5.html

  

Jan 24, 2017

சௌகார் ஜானகி.



ஒரு சினிமாப்பத்திரிக்கையின் ஆசிரியர் சௌகார் ஜானகியைப் பார்க்க அவருடைய பங்களாவுக்கு போயிருக்கிறார். நடிகை மாடியில் நின்றவாறு கேட் முன்னால் நின்ற ஒரு ஆளிடம் பேசுவது தெரிந்திருக்கிறது. திட்டிக்கொண்டிருக்கிறார் என்பது சில நொடியில் புரிந்தது.
“ Idiot, I don’t have any sympathy for you. You are a hypocrite.”
கீழே இருக்கிற ஆள் பிச்சையெடுக்கிற பாணியில் இறைஞ்சுகிறார்.

சௌகார் “ Scoundrel, Get away, Don’t get on my nerves.. I don’t want to see your face again. I wont give you a single paisa hereafter. என் முகத்தில இனி முழிக்காதே. ஓடிடு”
சகட்டுமேனிக்கு கோபத்தோடு திட்டும் சௌகார் வீட்டை விட்டு மெதுவாக அகன்று விடுகிறார் அந்த பரிதாபத்தோற்றம் கொண்ட நபர்.
சினிமா பத்திரிக்கை ஆசிரியர் மாடிக்கு போனவுடன் கேட்கிறார் “ அந்த ஆள் யாரம்மா”
சௌகார் பதில் “ He is my husband!”
.........

ஜெமினி கணேசன் தன்னுடன் ஜோடியாய் நடித்தவர்கள் பற்றி ஒரு பேட்டியில் சுவாரசியமாக சொல்லியிருந்தார்.
சௌகார் ஜானகி பற்றி: ’எனக்கும் சௌகார் ஜானகிக்கும் ஒரு ஒற்றுமை. இருவர் வாழ்விலும் ரகசியங்கள் என்பதே கிடையாது.’
ஜெமினி ஆண். ஆனால் மற்ற நடிகைகள் போல் இல்லாமல் சௌகார் ஜானகி வெளிப்படையாக இருந்தவர் என்பது அந்தக் காலத்தில் மிகவும் அபூர்வமான விஷயமல்லவா?

பொம்மை என்ற சினிமாப்பத்திரிக்கையில் இவர் சுய சரிதை தொடராக வெளி வந்திருக்கிறது.



1949ல் ஜானகி தன் மூன்று மாத கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து ’சௌகார்’ தெலுங்கு படத்தில் நடிக்க வர நேர்ந்ததும் அபூர்வமான நிகழ்வு தான்.



இந்தியத்திரையில் 67 வருடங்கள் தாண்டி தொடர்ந்து நடித்தவர் சௌகார் ஜானகி.

சென்ற வருடம் கூட ஒரு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார்.
மூன்று வருடம் முன் ஒரு தமிழ் படத்தில்
(வானவராயன் வல்லவராயன்) நடித்திருக்கிறார். அதற்குப்பின் நான்கு தெலுங்குப் படங்கள்.


இப்படி ஒரு 65 வருடங்கள் நடித்தவர் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மட்டும் தானாம். அவர் ஆண். சௌகார் ஜானகியால் இப்படியும் அவரை மிஞ்சி பெரும் சாதனை செய்ய முடிகிறது. இனி இந்த சாதனை செய்ய வாய்ப்புள்ளவர் கமல் ஹாசன். ஆனால் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக வந்தவர்.



தமிழ் படங்களில் சுசிலா பாடிய பாடல்களில் மாஸ்டர் பீஸ் என்றால் பாக்யலக்‌ஷ்மி(1961) படத்தில் செளகார் ஜானகிக்காக பாடிய “ மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி!” தான்.

பானுமதிக்கு தங்கையாக ஏவிஎம்மின் “ அன்னை”

சிவாஜி கணேசனுடன் பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பார் மகளே பார், புதிய பறவை, பச்சை விளக்கு,மோட்டார் சுந்தரம் பிள்ளை, உயர்ந்த மனிதன்
உயர்ந்த மனிதனில் சௌகார் ஜானகி - A very possessive wife. பணக்கார சீமாட்டி.
இப்போது ஒரு ஓடோனில் விளம்பரம் ஒன்று டி.வியில் காட்டப்படுகிறது.
“ அவங்க பாத் ரூம் பாத்தேன். நோ ஓடோனில்! ஹும்”
அந்தப்பெண் ’உயர்ந்த மனிதன்’ பட சௌகார் ஜானகி பாணியில் அப்படியே நடித்திருக்கிறார்!


புதிய பறவை “ பார்த்த ஞாபகம் இல்லையோ?” அவருடைய பேட்டி டி.வி.யில் எப்போது காட்டப்பட்டாலும் முதலில் இந்தப்பாடல் தான் காட்டுவார்கள்! அவருக்கு மிகவும் பெயர் வாங்கித்தந்த படம்.

எம்.ஜி.ஆருடன் பணம் படைத்தவன், பெற்றால் தான் பிள்ளையா, ஒளி விளக்கு
ஒளி விளக்கில் “ இறைவா! உன் மாளிகையில் எத்தனையோ ஒளி விளக்கு”

எஸ்.எஸ்.ஆருடன் குமுதம்

“ மியா மியா பூனக்குட்டி”


ஜெமினி கணேசனுடன் பாலச்சந்தர் இயக்கத்தில் நடித்த இரு கோடுகள், காவியத்தலைவி இரண்டும் சிறந்த படங்கள்.




கே.பாலச்சந்தரின் ’நீர்க்குமிழி’, ’நாணல்’ படங்களின் முக்கிய நடிகை.

சீரியஸ் நடிகை, பிழியப்பிழிய அழுது நடிப்பவர் என்ற இமேஜ் பாலச்சந்தரின் “ எதிர் நீச்சல்” படத்தில் உடைந்தே போனது. மனோரமாவுக்கு ஈடாக காமெடி தூள் கிளப்பினார்.
”அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா?”

காவியத்தலைவி, ரங்கராட்டினம் இரண்டும் சௌகாரின் சொந்தப்படங்கள். இரண்டிலும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

அதிக உயரமில்லாத நடிகையால் மிடுக்கு, கம்பீரம் காட்டி நடிக்கமுடியுமா? ”இரு கோடுகள்” படத்தில் கலெக்டர்.

”புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் இருவருக்காக” என்று திருத்திப் பாடி அசத்தினார்.

ஏவிஎம் ராஜனுடன் “ துணைவன்”

ரவிச்சந்திரனுடன் கூட ஜோடியாக நடித்தார் ஜானகி.
ஜெய் சங்கருடன் தான் ஜோடியாக நடித்ததில்லை.
முத்துராமனுடனும் கூட சௌகார் ஜோடியாக நடித்ததாகத் தெரியவில்லை.

அன்று நடிகைகளில் ஆங்கிலம் மிக அழகாக பேசும் திறம் பெற்றவர் சௌகார் ஜானகி.

சுய கௌரவம் மிகுதி. ’ஒளி விளக்கு’ படத்தில் டைட்டில் விஷயத்தில் தான் சீனியர் என்பதால் தன்னுடைய பெயர் தான் ஜெயலலிதா பெயருக்கு முன்னால் போடப்படவேண்டும் என பிரச்னை கிளப்பியவர்.
கமலின் ”ஹே ராம்” படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல தன்னை காட்டிய போது கொதித்துப்போனார்.
கறாரானவர்.
ராமண்ணாவின் ’குலக்கொழுந்து’ ஷூட்டிங் போது ஒரு வெளிப்புற படப்பிடிப்பு சம்பந்தமாக தன்னை வாஹினியில் சந்திக்க வந்த ஒரு தயாரிப்பாளரிடம் ஆணித்தரமாக சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்:” You cannot take me for granted. No Hogenekkal business. இங்கே பக்கத்தில எங்காயாவது ஷூட்டிங் வச்சிக்கங்க. I will never come to Hogenekkal. “
.........................................................

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_16.html

 

Jan 19, 2017

பிரபஞ்சன்


பிரபஞ்சனின் ‘ ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்’ தொகுப்பை எத்தனையோ தடவை வாசித்தவன் நான். ’ஆண்களும் பெண்களும்’ தொகுப்பு, ‘முட்டை’ நாடகம்….

’இயல்பான கதியிலிருந்து பிறழ்ந்து விட்ட இன்றைய வாழ்க்கையில் மகா உன்னதங்களான பொறிகளை காண்கிறேன். அதனை பதிவதே என் எழுத்து’ என்பதே இவரது பிரகடனம்.

புதுவையில் நான் இருந்த போது பிரபஞ்சனுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.
தி.ஜானகிராமனுக்கு நினைவு மதிப்பீட்டு மடல் நான் வெளியிட்டிருந்தேன். புதுவை பல்கலைக்கழகத்தில் இதன் காரணமாகவே ஒரு தி.ஜா கருத்தரங்கம் நடந்திருந்தது.
தி.ஜா எழுதி என்னிடமிருந்த அத்தனை புத்தகங்களும் கருத்தரங்க அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.


அப்போது சென்னை வாழ்வுக்கு ஒரு சின்ன ப்ரேக் விட்டு புதுவையில் பிரபஞ்சன் இருந்தார். புதுவை பல்கலைக் கழகத்தில் நாடகத்துறையில் அவருக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் வேலை போட்டுக் கொடுத்திருந்தார்.

அன்று நாடகத்துறைக்கு தலைவர் இந்திரா பார்த்தசாரதி. கே.ஏ.குணசேகரன், அ.ராமசாமியும் நாடகத்துறை ஆசிரியர்களாக இருந்தார்கள்.
முன்னதாக 1989 துவக்கத்தில் நக்கீரனில் “ தி.ஜா. ஆபாச எழுத்தாளர். இன்று தமிழில் இருக்கிற ஆபாச வக்கிரத்திற்கெல்லாம் ஜானகிராமன் தான் காரணம். ஆல் இந்தியா ரேடியோவில் உயர் பதவி வகித்தவர் என்பதால் மேட்டுக்குடி மனோபாவம் கொண்டவர். அவருக்குபல பெண்களோடு படுக்க ஆசை. அதனால் தான் ‘மரப்பசு’ நாவல் எழுதினார்” – இப்படி கடுமையாக சாடி எழுதியிருந்தார்.

நாடகத்துறைக்கு இ.பாவை நான் பார்க்க போயிருந்த போது ”இப்ப பிரபஞ்சன் வந்திருந்தார். ’ராஜநாயஹத்துக்கு என் மேல் கோபம் இருக்கும்’னு சொன்னாரே’ன்னு சொன்னார். அ.ராமசாமியும் அப்போது அங்கிருந்தார்.
அப்போது நான் பிரபஞ்சனை சந்தித்திருக்கவேயில்லை.
அடுத்த நாளே புதுவை நாடகத்துறையிலேயே பிரபஞ்சனை பார்த்தேன். அதன் காரணமாக ஒரு Instant,temporary friendship.

ஜானகிராமன் பற்றிய அவதூறு பற்றி பிரபஞ்சனிடம் நான் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவர் சொன்ன ஒரு விஷயம். “ ராஜநாயஹம், எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படும் போது நான் எப்போதும் இரவில் தி.ஜாவின் மோகமுள் நாவலை எடுத்து படிக்க ஆரம்பிப்பேன். தூங்காமல் முழு இரவும் விடிய,விடிய முழு நாவலை படித்து முடித்து விடுவேன்.”
மேலும் சொன்னார்: என்னுடைய எழுத்தில் நிறைய ஜானகிராமனின் வார்த்தைகளை பயன்படுத்துவேன். உதாரணத்திற்கு “ எட்டுக்கண்ணும் விட்டெறியாப்ல”
எனக்குள் நான் மனதிற்குள் கேட்டுக்கொண்டேன் “இவ்வளவு சொல்லும் இவர் ஏன் ஜானகிராமனை அப்படி கடுமையாக நக்கீரனில் தாக்கி எழுதினார்?’’

ஒரு மாலையில் என் வீட்டிற்கு பிரபஞ்சன் வந்திருக்கிறார். அன்று என் வீட்டில் பூரி சாப்பிட்டார். கிளம்பும்போது அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா அரை கிலோ பாக்கெட் கொடுத்தேன்.

ஒரு தேர்ந்த எழுத்தாளன் பத்திரிக்கையில் வேலை செய்யும்போது –
முப்பது வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் பிரபஞ்சன் மூன்று வாரப்பத்திரிக்கைகளில் வேலை பார்த்த போது காண நேர்ந்தவை.

’குங்குமம்’ பத்திரிக்கையில் பிரபஞ்சன் வேலை பார்த்த காலத்தில் அந்தப் பத்திரிக்கை அவருக்கு அதில் கதை எழுத வாய்ப்பே தரவில்லையாம்.

’குமுதம்’ பத்திரிக்கையில் தான் தினமும் காண நேர்ந்த விஷயமாக ஒன்றை குறிப்பிட்டு சொன்னார்.
எஸ்.ஏ.பி. காரை விட்டு இறங்கும்போதும், காரில் கிளம்பும் போதும் கார் கதவை திறப்பதற்கு ரா.கி.ரங்கராஜனுக்கும் ஜ.ரா.சுந்தரேசனுக்கும் தினமும் போட்டி நடக்கும். சில நாட்களில் எப்படியும் ரா.கி.ரங்கராஜன் கார் கதவை திறந்து விடுவதில் ஜெயிப்பார். மற்ற நாட்களில் ஜ.ரா.சுந்தரேசன் ஜெயித்து விடுவார்.

அன்றைய ’ஆனந்த விகடன்’ பற்றிய பிரபஞ்சனின் தவிர்க்க முடியாத ஒரு வரி : ’பிராமண – அ பிராமண அரசியல்’


தினமும் புதுவை நாடகத்துறைக்கு செல்வேன். பிரபஞ்சனுக்கு வேலை அங்கு முடிந்தவுடன் கிளம்பி நேரே நேரு ஸ்ட்ரீட்.
அவர் அடிக்கடி டீ சாப்பிடுவார். சிகரெட் நிறைய பிடிப்பார். நான் இருக்கும்போது அவரை செலவழிக்க விட்டதில்லை.

ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய இரண்டு வரி, நான்கு வரி கடிதங்கள் அவ்வப்போது வரும். தன் மன உளைச்சல், சோகங்கள் பற்றி கவிதை போல அதில் இருக்கும். அந்த கடிதங்களை ஏனோ எனக்கு காட்டியிருக்கிறார்.
அங்கிருந்த லோக்கல் எழுத்தாளன் ஒருவர், இன்று பெயர் கூட நினைவில்லை - எனக்கு பெரிய அறிமுகம் இல்லாத நிலையிலும், பிரபஞ்சனும் அந்த பெண் எழுத்தாளரும் ஆரோவில் போயிருந்தார்கள் என்பதை gossip ஆக என்னிடம் சொன்னார். நான் அதை பிரபஞ்சனிடம் சொன்னேன். பதிலாக பிரபஞ்சன்“பாருங்கள்! ஒரு எழுத்தாளரே இப்படி பேசுகிறார்.”

நக்கீரனில் அந்த நேரத்தில் “ திராவிட இயக்க மாயை” பற்றி தொடர் எழுதிக்கொண்டிருருந்தார். புதுச்சேரி தி.மு.க காரர்களுக்கு இதனால் பிரபஞ்சன் மீது அதிருப்தி.
புதுவை திமுக மேலிடத்திலிருந்து ஆள் மூலம் சொல்லியனுப்பினார்கள். “கொஞ்சம் பாத்து எழுதச்சொல்லுங்க”

லா.ச.ராவுக்கு சாஹித்ய அகாதெமி விருது கிடைத்த போது(1990) பிரபஞ்சன் என்னிடம் சொன்னார்: ’’இந்த வருடமே எனக்கு சாஹித்ய அகாதெமி விருது கிடைத்திருக்க வேண்டியது தான். ஆனால் லா.ச.ராவுக்கு வயசாயிடுச்சி. சீக்கிரம் செத்துடுவார். உயிரோட இருக்கும்போதே கொடுக்கணுமே.அதனால அவருக்கு கொடுக்கிறோம்னு சொன்னாங்க”
லாசராவுக்கு கொடுத்த பின் ரொம்ப சீக்கிரமே இவருக்கும் கூட அந்தக்காலத்திலேயே சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது.


பிரபஞ்சனுக்கும் அவருடைய அப்பாவுக்கும் பேச்சு வார்த்தை அப்போது கிடையாது. பாண்டிச்சேரியில் பழைய காலங்களில் சாராயக்கடை, கள்ளுக்கடை நடத்தியவர்கள் எல்லோருக்கும் அபிமான தாரங்கள் இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் பிரபஞ்சனின் அப்பா செய்யவில்லை. இந்த விஷயம் இவரை மிகவும் பாதித்திருக்கிறது. அதனால் அப்பா பற்றி ‘ மகாநதி’ என்று ஒரு நாவல் அப்போது எழுதிக்கொண்டிருந்தார்.


1980களில் தமிழ் சிறுகதைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டியிருப்பதால் என்னிடம் இருந்து பத்து வருடங்களில் முதல் சிறுகதைகள் தொகுப்புகள் பன்னிரெண்டு சிறுகதை தொகுப்புகள் கேட்டு வாங்கினார். புதுவையை விட்டு நான் நிரந்தரமாக கிளம்பிய போது அந்த புத்தகங்களை திருப்பித் தருவார் என நம்பினேன். ஆனால் அவர் தரவில்லை. தான் திருச்சிக்கு வந்து அந்த புத்தகங்களை தந்து விடுவதாகவும், இப்போது அவற்றை படித்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார்.
தன் மனைவி வீட்டிற்கு என்னை சாப்பிட அழைத்து வரச்சொன்னதாக சொன்னார். எனக்கு விருந்து சாப்பிடும் மன நிலை இல்லை. மறுத்து விட்டேன். பிரபஞ்சன் மனைவி இன்று மறைந்து விட்டார். நான் பார்த்ததேயில்லை. அவர் மறைந்து விட்டார் என்பதை அறிய வந்த போது பிரபஞ்சன் தன் வீட்டுக்கு அழைத்த விஷயம் நினைவுக்கு வந்தது.

என்றென்றைக்குமாக அந்த புத்தகங்களை நான் இழக்கும்படியாகிவிட்டது. திருப்பித்தரவேயில்லை.அந்த காலம் இது பற்றி பிரபஞ்சன் மீது கோபம் இருந்தது. ந.முத்துசாமியின் “ நீர்மை” சிறுகதைகளும் அவற்றில் ஒரு புத்தகம்.


புதுவையிலிருந்து திருச்சி போன பிறகு கணையாழியில் இவர் கொடுத்த பேட்டிக்கு எதிர்வினையாக நான் எழுதியதில் “ இந்த வித்துவச் செருக்கு, கற்றோர் காய்ச்சல் எல்லாம் புலவர் பிரபஞ்சனிடமும் இருக்கிறது” என்று முடித்திருந்தேன். அதை பிரசுரித்த போது அதற்கு தலைப்பு “ புலவர் பிரபஞ்சன்” என்றே கொடுத்து கணையாழியில் பிரசுரித்திருந்தார்கள்!


’ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை’ காலச்சுவடில் பிரசுரமாக இருந்த நிலையில் ஜெயமோகனுக்கு ஆதரவாக அதை எதிர்த்தவர்களில் பிரபஞ்சனும் ஒருவர்.
என் மீது பிரபஞ்சனுக்கு கோபமும் அதிருப்தியும் என்பதை காலச்சுவடு கண்ணன் தெரிவித்திருந்தார்.
அப்போது ஜெயமோகன் கடந்த ஏதோ ஒரு வருடத்தில் ’பிரபஞ்சன் படைப்புகள்’ பற்றிக்கூட ஒரு கருத்தரங்கம் நடத்தியிருந்த நிலை. பிறகு?


தீராநதி முதல் இதழில் ” தமிழில் தி.ஜானகிராமனை மிஞ்ச ஆளேயில்லை” என்று பிரபஞ்சன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
இது பற்றி சுந்தர ராமசாமியிடமும் நான் போனில் பேசியிருக்கிறேன்.
அவரும் பிரபஞ்சன் “ தி.ஜானகிராமனை மிஞ்ச யாருமே இல்லை” என்று சொல்வதை உறுதிப்படுத்தி சொன்னார்.
 தி.ஜா பற்றிய இந்த அபிப்ராய மாற்றம் எனக்கு  சந்தோஷத்தை தந்தது.


திருப்பூரில் குமாரசுவாமி கல்யாண மண்டபத்தில் ஒரு இலக்கியக்கூட்டம். அதில் கலந்து கொள்ள பிரபஞ்சன் வந்திருந்தார். நான் இலக்கியக்கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்த்திருந்தேன். பிரபஞ்சனை நீண்ட காலத்திற்கு பின் சந்திக்கவும் அப்போது விருப்பமுமில்லை.

இப்போது விகடன் தடத்தில் ஜெயமோகன் சிறுகதை எழுத்தாளர்கள் பட்டியல் கட்டுரையில் பிரபஞ்சனின் பெயர் விடுபட்டிருந்தது. தெளிவான நிராகரிப்பு! சரி. சுந்தர ராமசாமி சொன்னதைப்போல் இலக்கிய உலகில் நேற்றைய நண்பன் தானே இன்றைய பிரதம விரோதி. இரண்டு பேருக்கும் முட்டிக்கொண்டது போலிருக்கிறது.


சென்னைக்கு நான் வந்த பிறகு சென்ற வருடம் அடையாறில் நடந்த ஒரு நாடகத்திற்கு ந.முத்துசாமியுடன் சென்றிருந்தேன். அங்கே பிரபஞ்சனை பார்க்க வாய்த்தது. 26 வருடத்திற்குப் பிறகு தற்செயல் சந்திப்பு. நானே வலிய சென்று அறிமுகம் செய்து கொண்டு கேட்டேன் “ தெரிகிறதா என்னை!” பிரபஞ்சன் “தெரிகிறது. புத்தகமெல்லாம் எனக்கு கொடுத்தீர்களே” ஒரு இரண்டு நிமிடங்களுக்கு மேல் என்னிடம் பேச அவருக்கு விஷயமில்லை. மற்றவர்களை நோக்கி நகர்ந்தார்.
நாடகம் முடிந்த பின் மீண்டும் போய் விடைபெறும் முகமாக “ நான் ராஜநாயஹம்” என்றேன். ”தெரியுமே” என்றார் அந்த எழுத்தாளர்.

......................................................................

http://rprajanayahem.blogspot.in/2015/12/blog-post_20.html

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_3967.html

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_04.html

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_04.html

http://rprajanayahem.blogspot.in/2016/06/blog-post.html

Jan 15, 2017

தி தினத்தந்தி - தி இந்து


 ’தினத்தந்தி’ P.வாசு

P.வாசு இப்ப கூட ஒரு படம் டைரக்ட் பண்ணியிருக்கார் போல இருக்கு. சிவலிங்கா. இது ஏதோ அந்தப் படத்துக்கான inner promoன்னு நினச்சிடாதீங்க.
 வாசுவை stylish director ன்னு
ஒரு நடிகர் புகழ்ந்ததை டி.வியில் இன்று பார்த்தேன்.


இவர் அப்பா பீதாம்பரம். வாசுவுக்கு தமிழில் இனிசியல் போட்டால் அவ்வளவு நல்லாயிருக்காது. வாசு தன் பெயரை P.வாசு என்று டைட்டிலில் போஸ்டரில் போடுவது தப்பே இல்லை. அப்பா பெயர் பீட்டர், பீர் முகமது, பீதாம்பரம் என்றிருந்தால் ஆங்கிலத்தில் இனிசியல் இருப்பது தான் நல்லது. தனித்தமிழ் வெறியர்களுக்கு இதெல்லாம் புரியாது. அப்பா பெயர் பீ என்று பிடிவாதமாக பீ.வாசு என்று எழுத வேண்டுமா? தமிழில் பி.வாசு என்று எழுதினால் அப்பா பெயர் பிரபாகரா, பிச்சைமுத்துவா,பிள்ளையாரா ஆங்கில இனிசியல் P என்பதை எதற்காக ’பி’ என்று ஏன் எழுதுகிறான்கள்? இங்கிலீஷ்ல இனிசியல் போடுகிற சுதந்திரம் பிறப்புரிமைடா.
ஒரு தனித்தமிழ் வெறியன் ‘ இங்கிலீஷ்ல இனிசியல் போடுறவனெல்லாம் இங்கிலீஷ்காரனுக்கு பொறந்தவனுங்க’ என்று அபத்தமாக மைக்ல கூப்பாடு போட்டான்.
’தி இந்து’ என்று தமிழில் பத்திரிக்கை பெயர். பத்திரிக்கை பெயரிலேயே தமிழ் கிடையாது. என் பெயரை என் விருப்பப் படி R.P.ராஜநாயஹம் என போட மறுத்து இனிசியலை தமிழில் தான் போடமுடியும் என்று ’தி இந்து’ தமிழ் பிடிவாதம் பிடித்தது. நான் எழுதிய கட்டுரைகளில் என் பெயர் ஆர்.பி.ராஜநாயஹம் என்று தான் பிரசுரிக்கப்பட்டது.

’குமுதம்’ வாரப்பத்திரிக்கை என் பெயரை என் விருப்பப்படி என் கட்டுரைகளில் ’R.P.ராஜநாயஹம்’ என அச்சிட்டிருந்தது. அருண் சுவாமிநாதனுக்கு நன்றி.


கோவை ஞானி பலவருடங்களுக்கு முன் இந்திரா பார்த்தசாரதியின் ‘ கிருஷ்ணா, கிருஷ்ணா’ நாவலுக்கு ஒரு விமர்சனம் கேட்டார். நான் ‘லீலார்த்தம்’ தலைப்பிட்டு அனுப்பி வைத்தேன்.
கோவை ஞானி ’ராஜநாயஹம் என உங்கள் பெயரை பிரசுரிக்க மாட்டேன். ராஜநாயகம் தான். ’ஹ’ போட மாட்டேன்..’

நான் ‘ ராஜநாயஹம் என்று என்னை சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், பிரமிள் ஆகியோர் கூட குறிப்பிட்டிருக்கிறார்களே’

கோவை ஞானி ‘ அவங்க எல்லாம் மனுசங்க தானா? எனக்கு சந்தேகமாயிருக்கு. நான் ராஜநாயகம்னு தான் அச்சிடுவேன்.’

நான் ‘ நீங்க என் லீலார்த்தத்தை பிரசுரிக்க வேண்டாம். கிழிச்சிப்போட்டுடுங்க’
பிறகு எம்.ஜி.சுரேஷின் பன்முகம் பத்திரிக்கையில் ’லீலார்த்தம்’ பிரசுரமானது.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன் பி.வாசுவுக்கு சினிமாவில ரொம்ப நல்ல செல்வாக்கு. பாக்யராஜ் சொந்தப்படம் ‘அம்மா வந்தாச்சு’ படத்திற்கு இயக்குனர் வாசு தான்.
டைரக்டர் P.வாசு சித்தப்பா கேமராமேன் M.C.சேகர்.  'ராசுக்குட்டி' படத்தில் இவர் கேமராமேனாக இருந்த போது சேகர் சொன்ன விஷயம்.
“ வாசு அந்த காலத்தில தினத்தந்தி படிக்கிறதத்தான் நான் எப்போதும் பாத்திருக்கேன். தினத்தந்திய வாசிப்பான்.உருப்படியா புத்தகம் எதுவும் அவன் வாசிச்சதேயில்லை.”
வாசுவிடம் பெரிதாய் நல்ல வாசிப்பு எல்லாம் இருந்ததில்லை என்பதை சுட்டிக்காட்டும்போது இதனை குறிப்பிட்டுச் சொன்னார்.
.....................................

வர்ஜனம் = புறக்கணிப்பு

”அன்று (28-08-2016) மியூசியம் அரங்கில் கூத்துப்பட்டறையின் வண்டிச்சோடை நாடகமேடையேற்றத்தின் இறுதியில் கூத்துப்பட்டறையின் நடிகர் பிரசன்னா பங்கேற்பாளர்கள் பற்றிய அறிமுகம் செய்த பிறகு அன்று நாடகம் பார்க்க வந்திருந்த நாடகாசிரியர் கூத்துப்பட்டறை நிறுவன இயக்குநர்
ந.முத்துசாமி, நாடகத்தை இயக்கிய R.P.ராஜநாயஹம் முதலானவர்களுக்கு ஒரு மரியாதை நிமித்தமாக ஒரு மலர்ச்செண்டாவது கொடுத்து கௌரவித்திருக்கலாம். அந்த சுரணையெல்லாம் தி இந்து நாடகவிழா அமைப்பாளர்களுக்குக்
கிடையாது என்பதைச் சொல்ல வேண்டும்.”
- பேராசிரியர் டாக்டர் செ.ரவீந்திரன்
” நாடகவரங்கில் ஓர் ஒளியமைப்பாளனின் நினைவுக்குறிப்புகள்” மணல் வீடு 27வது இதழ்.
................................

http://rprajanayahem.blogspot.in/2016/08/blog-post_5.html

http://rprajanayahem.blogspot.in/…/the-hindu-subha-intervie…

http://rprajanayahem.blogspot.in/…/an-email-interview-by-hi…


http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_03.html

http://rprajanayahem.blogspot.in/2008/06/blog-post_23.html

http://rprajanayahem.blogspot.in/2008/07/blog-post_06.html

Jan 14, 2017

கறுத்தடையான் கவிதையும் சிறுகதையும்


”பழையன கழிதலும், புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே”
நன்னூலின் கடைசி ஸ்லோகம்!

நன்னூலை இயற்றியவர் பவனந்தி முனிவர். ஜைன மதத்தை சார்ந்தவர்.
நன்னூல் விளக்க நூல்கள் இரண்டு உண்டு. 1. நன்னூல் காண்டிகை. 2. நன்னூல் விருத்தி
…………..

இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது தேவையில்லாமல் யாராவது மூக்கை நுழைத்தால் சொல்லுவதற்கு ஒரு சொலவடை. ’நானும் தான் இருக்கேன் நண்டுவளையிலே’ன்னு குறுக்க வர்றியே.
Poking one’s nose!

’மணல் வீடு’ பத்திரிக்கையில் கறுத்தடையான் கவிதை ’அறுதலி’யில்  சொலவடைகள் சில இடம் பெற்றிருக்கின்றன.
அறுதலி என்றால் கைம்பெண்.


“ அறுதலி பிள்ளை விருதாப் போகும்
நொய்யரிசி குழஞ்சு வேகும்
ஓடத்தண்ணி நெளிஞ்சோடும்
சீத்துவமற்ற நாய் கொலச்சுச் சாகும்
பனங்காட்டு பிஞ்ச மத்துவமாய் வெளயும்..
குஞ்சு நோயை கோழி அறிஞ்சிடும்
சின்னச் செம்புகள் சீக்கிரம் நெறஞ்சிரும்..
வங்கோடையிலும் கல்லுக்கிடங்கில் தண்ணியீடு..”
இப்படி சொலவடைகள்!

சில கனமான வரிகள் கறுத்தடையானிடமிருந்து பீறிடுகின்றன.

‘வேமா சாவதை விடவும் கடினமானது பைய்ய வாழ்வது’ ’நீடித்த துயரம் அதிகமும் நீண்டதாகவும் இருக்கிறது’ போன்ற வரி சாமுவெல் பெக்கட்டின் “ Death is a long tiresome business” சம்பந்தப்பட்டது. நகுலன் “ Death also waits. Death has infinite patience” என்பார்.

”உலைக்கு பயந்து தெவசங்கள் தீயில் வீழ்கிறது.
புண்ணை மலத்தும் ஈக்கள் துளையிட்டும் ஈரமேயில்லை..
வியர்வையாய் பெருகும் வீராப்புகள் விரைவில் உலர்ந்தும் விடும்
அழுகையில் வழியும் ஊளமூக்கு துடைத்தாலும் தடம் தெரியும்
சந்தனத்தீற்றல்கள் சரியாய் மறைக்கும் கண்ணவிஞ்ச சாமிகளை..
அறுதலி – ’கருக்கல் கலைகையில் இருட்டுகிறது இன்னும் வேகமாய் அவளுக்கு’
………………..

’தொக்கம்’ என்கிற இலக்கியச் சுண்ணாம்பிதழ்!
இதில் கறுத்தடையான் எழுதியுள்ள ஒரு சிறுகதை
“ சீயக்காயும், வீச்சுப்புரோட்டாவும்”.

’ஒரு தடவையாவது சீயக்காயில் குளித்து வீச்சுபுரோட்டா தின்றவன், அது உடலுறவின் ஓரங்கமாய் மாறி விடுவதை அவதானிப்பான்…………
வீச்சுப்புரோட்டாவின் வீச்சில், மூட்டில் ஓயாது தனப்பொலி..............’

சீயக்காய், வீச்சுப்புரோட்டா இரண்டுமே metaphor!
கதையின் கடைசி வரி –
’முக்கியமற்ற குறிப்புகள் :
சீயக்காய் = கஞ்சா
வீச்சுப்புரோட்டா = கர போகம்.’

…………………………………


http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_20.html

http://rprajanayahem.blogspot.in/2016/06/blog-post_9.html

http://rprajanayahem.blogspot.in/2017/01/blog-post_8.html

http://rprajanayahem.blogspot.in/2014/06/blog-post.html

Jan 8, 2017

அம்மாபேட்டை கணேசன்


கணேசன் தோற்பாவை, தெருக்கூத்துக்கலைஞர். ஏட்டு கல்வி கிடைக்கப் பெறாதவர். ராவணன், துரியோதனன், கீசகன், வாலி என்று கூத்தில் நடிப்பவர்.

மணல் வீடு 27வது இதழில் இவருடைய பழைய பேட்டி ஒன்றை மறு பிரசுரம் செய்திருக்கிறார் ஹரி கிருஷ்ணன்.
அற்புதமான வட்டார வழக்கில் பதிவு செய்திருக்கிறார்கள்.


கணேசன் பேசுவதை நேரடியாக கேட்பது போல இருக்கிறது.

அவருடைய இயல்பான சொலவடைகள்.
-“ மேட்டு மேல நின்னுக்கிட்டு நொட்ட சொல்லிக்கிட்டிருக்கக்கூடாது.”
-“அன்ன நடை கத்துக்கப் போயி தன் நடையும் மறந்தாப்ல”
-”கரும்பு கட்டோடயிருந்தா எறும்பு என்னா செய்யும்.”
- “விருப்பத்துலவொரு காரியஞ்செஞ்சா விருத்தம் பாரம் தெரியாது”
- “ ஆட்டக்காரனுக்கு வவுத்துக்கு கஞ்சியில்லயின்னாலும் வாயி உபச்சாரம் தேவையாயிருக்குதே.”
- ”சாப்பாட்டுக்கு ஆறு ருசி! சதுருக்கு ஒம்போது ருசி”
- ”வித்தைக்கு சத்துரு வெசனம், ஆயிரம் வறும, சிறுமையிருக்கட்டும், வருத்தம் வாட்டமிருக்கட்டும். வெந்து நொந்து வேதனப்பட்டா சுண்டு வெரலு கட்ட வெரலு ஆவுமா? ”


”கண்ணுக்கு வெளிச்சமா வேசங்கட்டி தாளம், காலம், சுதி எசவோட பாட்டுப்பாடி, ஆட்டமாடி, புத்திக்கு ஒறைக்கிற கத சொல்றது தான் கூத்து.”

சினிமா நடிப்புக்கும் கூத்துல நடிக்கிற நடிப்புக்கும் வித்தியாசம் சொல்கிறார் : ”இவுத்த அம்மா பேட்ட ஆத்துல பொம்பளயொருத்தி பரிச தாட்டி படி ஏர்றத அம்பது தக்கம் எடுத்தாங்க. சினிமாக்காரனுங்க நடிப்பு திண்ணப் பள்ளியோடத்துல மணல்ல எழுதறமே அந்த மாதர அழிச்சி அழிச்சி எழுதறது, சிலேட்டம். குறி வெச்சி அம்பெய்யற மாதர கூத்துல நடிக்கறது சில மேல எழுத்து! சுத்திய நோங்கி தட்டனா மொண முறிஞ்சி மொக்கையாகிப் போவும். பொசான தட்டுனா அச்சுப் பதியாது. நேந்து நெரவி விசுவாசத்தோட பணிக்கச் செஞ்சா செல கண் தெறந்த சில்பமாவும்.”
பொம்மலாட்டக் கலைஞராகவும் இருந்தவராதலால் அனுபவமாக பேச்சில் வைராக்கியமாக “ நம்பள ஆட்டி வெக்கிறானே ஆண்டவன் அவங் கவுத்த கீழ போடாம இருந்தான்னா, என்னு ரத்தஞ் சுண்டற வரைக்கும் இந்த சூர வேசமாடுவன்.”

விருத்தம் – ஒவ்வொரு வேசத்துக்கும் உள்ள ஐதீகமான வரலாறு.
கந்தார்த்தம் – கத காரணமிங்கிறது முத்திப் பழுத்த கனியின்னா அதும்பட சாறுதான் கந்தார்த்தம்.
விடிய விடிய நடிக்கிற உங்களுக்கு அந்த வேசம் பற்றிய நெனப்பு மறந்து போவுமா? இல்ல கனவில, நடப்புல வந்து தொந்தரவு கொடுக்குமா?

கணேசன் பதில் : "எல்லா வேசத்துக்கும் அந்த சத்தி கிடையாது. ‘வாலி சுக்ரீவன் சண்ட’, அலங்காரம். வாலி உசுருடுற கட்டம். ராமன் கேக்கறாப்பல ‘வாலி! இப்பவொண்ணுங்கெட்டுப் போவல. ‘ம்’முன்னு ஒரு வார்த்த சொல்லு. உசுர குடுத்து உன்ன எழுப்பறன்’னு. அதுக்கு வாலி சொல்றான்,’ராமா நீ நாயம் அநியாயந்தெரியாதவன். எனக்குப் பொறன பொறந்த சின்ன பையன்! இத்தன நாளா வாலி! வாலி! வீர வாலின்னு பேரெடுத்தவன் உங்கிட்ட உசுரு பிச்ச வாங்கி குத்து பட்ட வாலின்னு சாவ எனக்கு பிரியமில்ல. எனக்கொரு யாசகம் கொடுக்கற யோக்கிதி உனக்கில்ல.ஓடிப்போயிரு தூர'ன்னு சொல்லிப்புட்டு தம்பிய கூப்புட்டு 'அவெனென்றா மனுச பூண்டு! உனக்கிந்த கிஷ்கிந்தாபுரிய மீட்டுகுடுக்கறது, மனசார நாங்குடுக்கறண்டா'ன்னு சுக்ரீவங்கையில நாட்ட ஒப்படைச்சிட்டு மண்ணு மேல சாயுது அந்த புண்ணியாத்துமா! நானு வாலி வேசங்கட்டிப்புட்டன்னா மாத்ரம் அவஞ்சாவ நெனச்சி, நெனச்சி மனசு மருவிக்கிட்டே கெடக்கும்."





’நீங்க பல வித்த கத்த வாத்தியாரு, தான் என்கிற மண்டகனம் உங்களுக்கில்லையா?’
வித்துவச் செருக்கு தனக்கு கிடையாது என்பதை கணேசன் சொல்லும் அழகு!
“ சேடக்கட்டி வயலடிச்சி, நாத்து நட்டு, பசுரு பச்சைக்கி பாதுகாப்பு பண்டி, வெளஞ்சத ராசிப்பண்டி பத்துசுரு பொழைக்கும்படி வெள்ளாம பண்டறானே அவங்கிட்ட இல்லாத வித்தையா?
அடுக்குல இருக்கறது அரிசியோ, ஆரியமோ உள்ளத கொண்டு பக்குவமா சாதங்கறி வெச்சி பசியாத்தறாங்களே பொண்டுங்க, அவிங்களுக்கு தெரியாத வித்தையா?
சொப்பு மொத! சூட்டடுப்பு கட!
எத்தன ஆயிரம் பண்டஞ் செய்யறாங்க செட்டிமாருங்க! அவிங்களுக்கு தெரியாத வித்தையா?
இதெல்லாம் நெனச்சிப்பாத்தா நம்ப கையி வெறுங்கையி.”


.............................................

http://rprajanayahem.blogspot.in/2016/08/blog-post_5.html

Jan 6, 2017

ஸ்தல புராணம்


உ.வே.சுவாமிநாதய்யரின் குருநாதர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்பது தெரிந்ததே. ஸ்தலபுராணம் பற்றிய விஷயம் தான் பலருக்கும் தெரியாததே.

ஸ்தல புராணம் இல்லாத பல பழம்பெரும் கோயில்கள் இருந்திருக்கிறது. அந்தக்கோவில்கள் உள்ள ஊர்களிலிருந்து முக்யஸ்தர்கள் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களை வந்து சந்தித்து விண்ணப்பம் செய்வார்கள் -’எங்க ஊர் கோவிலுக்கு ஸ்தல புராணம் இல்லை. நீங்கள் தான் எழுதித் தரவேண்டும்’
இப்படி எவ்வளவோ பல கோவில்களுக்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தன் பாண்டித்ய திறமையால் தன் சொந்தக் கற்பனையில் ஸ்தல புராணம் எழுதிக்கொடுத்திருக்கிறார்!
திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆஸ்தான வித்வானாக மீனாட்சி சுந்தரம்பிள்ளை இருந்தார்.

உ.வே.சுவாமிநாதய்யரின் “ என் சரித்திரம்” நூலில் திருவாவடுதுறை ஆதீனம் பற்றி தகவல்கள் சொல்லியிருக்கிறார்.

மதுரை ஆதீனத்தை விட திருவாவடுதுறை ஆதீனமும், தர்மபுர ஆதீனமும் பெரியவை.

கோயில் கட்டளைகளை நிர்வகிப்பவர் கட்டளை தம்பிரான்.
ஒரு ஆதீனத்தில் பல கட்டளை தம்பிரான்கள் இருப்பார்கள்.
ஆதீனத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு கட்டளை தம்பிரான் இருப்பார்.
இந்த கட்டளை தம்பிரான்களில் ஒருவர் தான் அடுத்த ஆதீனகர்த்தாவாக வர வாய்ப்பு உள்ளவர்.
கட்டளை தம்பிரான் கை மேலே காவித்துணி. ஆதீன மஹா சன்னிதானம் அதில் கை வைத்துக்கொண்டு வருவார்.
இது தான் ’கைலாகு’!
மாயூர நாத சுவாமி கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆளுகை. அதிலேயே குமார கட்டளையாகிய முருகன் சன்னதி தர்ம புர ஆதீனத்திற்கு பாத்தியப்பட்டது.
கோயில் விசேஷ பண்டிகை நாட்களில் இரு ஆதீன சார்பிலும் போட்டி போட்டுக்கொண்டு நாதசுரக்கச்சேரி நடக்கும்.
ஆதீனத்திற்கு பள்ளிக்கூடங்கள் உண்டு. அந்த பள்ளிக்கூடங்களில் வேலை பார்க்கும் ஆசிரியைகளுடன் மஹா சன்னிதானம் ’சரீர இச்சை’யை பூர்த்தி செய்து கொள்வதெல்லாம் உண்டு தான். அந்தக்காலத்தில் ஒரு ஆசிரியையின் முலையை கடித்த பண்டார சன்னதி உண்டும்.உண்டும்.

கட்டளை தம்பிரானாக இருக்கிற பிரகிருதி, உச்ச பதவியை கைப்பற்றும் முயற்சியில், கொட்டைப்பாக்கை பண்டார சன்னதியின் தொண்டைக்குழியில் வைத்து அழுத்தி ஆதினகர்த்தாவை கொன்று விடுவதும் நடந்திருக்கிறது.
......................................

http://rprajanayahem.blogspot.in/2016/11/22_22.html

……………….

Jan 1, 2017

Cakewalk?


அண்ணா திமுக என்ற கட்சிக்கு புதிய பொதுச்செயலாளர் பதவிக்கு நியமனம் பற்றி அறிவு ஜீவிகள், மற்றும் தங்களை கொஞ்சம் விவரமான ஆளாக நினைக்கும் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட என்ன இருக்கிறது? இந்த கட்சி எந்த நடைமுறை நியாயத்திற்கும் கட்டுப்படாத கட்சி என்பது ஊரறியத் தெரியக்கிடக்கிறது.
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலிருந்து இந்த கட்சி இப்படித்தான் இருந்திருக்கிறது. ஜெயலலிதா அரசியலுக்கு வந்த காலத்தில் தான் வெண்ணிற ஆடை நிர்மலா காரணமாக மேல் சபையே கலைக்கப்பட்டது.
கட்சியில் எம்.ஜி.ஆருக்கு பிறகு முன்னிறுத்த எந்த ஆண் தான் அப்போது இருந்தார்?
இன்று மட்டும் அந்த அதிமுகவிற்கு திடீரென்று ரட்சகர் எங்கிருந்து வந்து குதிக்க முடியும்?
தமிழகத்தில் ஜெயலலிதாவுடன் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறதே என்று சங்கடப்பட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிக்காரர்கள் வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள்.
திராவிட இயக்கம் பெரியாரில் ஆரம்பித்து பாப்பாத்தி ஜெயலலிதாவில் வந்து நிற்கிறதே என்று திகைத்து அங்கலாய்த்தவர்கள் எவ்வளவோ பேர்.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே ’மன்னார்குடிகள்’ கையில் தானே கட்சி இருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், பழ.கருப்பையா உள்பட மன்னார்குடி கும்பல் அட்டகாசம், ஆர்ப்பாட்டம் பற்றி பிலாக்கணம் வைக்கத்தானே செய்தார்கள்.
இன்று சசிகலா பொதுச் செயலாளர் என்பதில் என்ன பெரிய ஆச்சரியம்,திகைப்பு, அங்கலாய்ப்பு வேண்டியிருக்கிறது?
கருணாநிதியை எதிர்ப்பவர்கள் எல்லோருக்குமே, ஜெயலலிதாவை ஆதரிப்பவர்கள் அனைவருக்குமே, துக்ளக் சோ உள்பட மன்னார்குடி கூட்டத்தார் பற்றி ஒரு Wilful blindness இருக்கத்தானே செய்தது.

What areas of the skull must be traumatized to cause Selective Amnesia?!
ஜெயலலிதாவுடன் அவ்வப்போது கூட்டணி வைத்த காங்கிரஸ், பா.ஜ.க., நல்லகண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட்கள், ராமதாஸ், திருமாவளவன், வைகோ, விஜயகாந்த் போன்றவர்களுக்கும் மன்னார்குடி சசிகலா பற்றி ஒரு Selective Amnesia இல்லாமலா இருந்தது?

"O wonder !
How many goodly creatures are there here!
How beauteous Mankind is!
O brave new world!
That has such people in it!"

-Shakespeare in ‘ Tempest’

2011 டிசம்பரில் சசிகலா போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட போது இதற்கு காரணம் சோ ராமசாமி தான் என்றார் சசிகலா. ஜெயலலிதா திட்டி வெளியே போகச் சொன்ன போது அங்கே சிரித்துக்கொண்டு சோ நின்றிருந்தாராம். மீண்டும் ’ஜெயலலிதா- சசிகலா உத்தர ராமாயணம்’ 2012 மார்ச்சில் முடிவுக்கு வந்த போது அதை சோ எதிர்த்து விட்டாரா என்ன?
ஹெலி காப்டரை பார்த்து சாஸ்டாங்க நமஸ்காரம் செய்யும் போது அதிமுக மந்திரிகளும், எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலாவுக்கும் தான் மரியாதை செய்திருக்கிறார்கள்.

அதிமுக என்ற ஒரு கட்சி அகில இந்தியாவைப் பொருத்தவரை மிகவும் ஒரு விசித்திரமான அமைப்பு.
காமராஜர் உயிருடன் இருந்த போது ஸ்தாபன காங்கிரஸ் தான் எதிர்கட்சி என்றிருந்த போது, அடுத்த பொதுத் தேர்தலில் எப்படியும் காமராஜர் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருந்த நிலையில் எம்.ஜி.ஆர் அண்ணா தி.மு.க ஆரம்பித்து அமோகமாக கட்சி எழுந்தது.
கூத்தாடி கையில், தமிழன் அல்லாத ஆள் கையில் தமிழ் நாடு போகிறதே என்ற பதைப்பு, அங்கலாய்ப்பு, புலம்பல் தி.மு.கவுக்கு மட்டுமின்றி ஸ்தாபன காங்கிரசுக்கும் தான் அன்று இருந்தது. வலது கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம் மட்டும் எம்.ஜி.ஆருக்கு பக்கவாத்தியம்.
திட்ட திட்ட திண்டுக்கல், வைய,வைய வைரக்கல். திண்டுக்கல் இடைத்தேர்தலில் அண்ணா திமுகவின் விஸ்வரூபம் காண முடிந்தது. திண்டுக்கல் பெருவெற்றி என்பது நுட்பமானது. மக்கள் செல்வாக்கை அன்று சுத்தமாக இழந்திருந்த கருணாநிதியை அல்ல, நல்ல செல்வாக்கு பெற்றிருந்த காமராஜரையே பின்னுக்கு தள்ளி விட்டு எம்.ஜி.ஆர் எழுந்து நின்றார். காமராஜரின் அரசியல் வாழ்வை இல்லாமலாக்கியதில் பெரும்பங்கு அதிமுகவிற்கு தான்.
தீப்பொறி ஆறுமுகமும், வெற்றி கொண்டானும், சாதாரண லோக்கல் பேச்சாளனும் கூட கருணாநிதி ஆசியுடன் படு ஆபாச அர்ச்சனை செய்தது ஒரு பக்கம்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த பின் துக்ளக் சோ ராமசாமியால் எம்.ஜி.ஆர் எப்படியெல்லாம் நையாண்டி அர்ச்சனை செய்யப்பட்டார்.’எம்.ஜி.ஆர் ஒரு சரியான காமெடியன்!’
அன்று படிக்காத பாமரனும், கிராமத்துப்பெண்களும் மட்டுமே எம்.ஜி.ஆரை கொண்டாடி அதிமுகவை மனையில் தூக்கி வைத்து விட்டார்கள்.
எம்.ஜி.ஆர் காலத்தில் அவருடைய மந்திரிசபையிலிருந்த க.ராஜா முகமது முன்னாள் மந்திரியான பின் “வண்ண மயில்” என்று ஒரு பத்திரிக்கை நடத்தியதுண்டு. பல இலக்கியத்தரமான விஷயங்கள் அதில் பிரசுரமாகியிருக்கின்றன.
ஜி. நாகராஜனின் “ ஓடிய கால்கள்” கதை அதில் வெளியிட்டிருந்தார்கள்.

ஜெயலலிதா காலத்தில் நடராஜன் ( சசிகலாவின் கணவர்) ’புதிய பார்வை’ என்ற தரமான பத்திரிக்கை நடத்தியிருக்கிறார். நிறைய எழுத்தாளர்கள் இதிலும் எழுதியிருக்கிறார்கள்.
புதிய பார்வை இன்னும் வருகிறதோ என்னவோ? அவரை ’புதியபார்வை’ ஆசிரியர்  நடராஜன் என்று தான் இப்போதும் குறிப்பிடுகிறார்கள்.


ஜெயலலிதா போல் போராட வேண்டிய அவசியமே இல்லாமல் இன்று சசிகலா கையில் கட்சி.
Cake walk! It happened to be an easy accomplishment for her to become a leader of the biggest party! Very Strange! முதலமைச்சராகவும் வரவேண்டும் என்று முழு கட்சியும் மன்றாடுகிறது. மன்றாடாத யாரும் கட்சியில் இருக்கவே முடியாதே!
சசிகலாவான்னு முகம் சுளிக்கிறவனெல்லாம் அதிமுகவுக்கு வெளியே இருக்கறவனும், கட்சியை விட்டு வெளியேற வேண்டியவனும் தான்.
கருணாநிதி திமுக தலைவரானப்ப கூட முகம் சுளித்தவர்கள் இல்லையா என்ன? சோனியா காங்கிரஸ் தலைவர் ஆனப்ப வெளி நாட்டுக்காரியா தலைவி என்ற முக சுளிப்பும் அருவருப்பும். பிஜேபிக்கு மோடி தலைவரானப்ப முக சுளிப்பு இல்லையா?( பிஜேபிக்கு பிரசிடெண்ட் யாராயிருந்தாலும் பிரதமர் மோடிக்கு கீழே தானே? தலைமைப்பதவி மோடிக்குத்தானே?) எந்த கட்சியில் தான் தலைமைப் பதவி
ஆயாசமின்றி, சலிப்பின்றி நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
’சசிகலா குரல் கூட கேட்க கிடைத்ததே இல்லை. இவர் பேட்டி கொடுப்பாரா?கட்சி கூட்டத்தில் பிரசங்கம் செய்வாரா’ என்றெல்லாம் வியாக்னங்கள்…
பொதுச் செயலாளர் நியமனத்திற்குப் பின் மேடைப்பேச்சு. கன்னிப்பேச்சு. குரல் சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது!
அண்ணா திமுக ஒரு வினோத உலகம். கட்சியின் இரண்டாவது தலைவரும் பெண். இன்று மூன்றாவது தலைவரும் பெண்.
இன்றைய தமிழக முதல்வர் உட்பட கட்சியின் பிற இரண்டாம், மூன்றாம் மட்டத்தலைவர்கள் தரை மட்டமானவர்கள்.
கீழ் படிதல் என்பது இவர்களை பொருத்தவரை ”தலை” கீழ் படிதல். விசுவாசத்தின் விரிவான தன்மையை மட்டுமே போட்டி போட்டுக்கொண்டு வெளிப்படுத்தக்கூடியவர்கள். ஒருத்தன் தும்பிக்கய தரையில ஊனி நாலு காலையும் தூக்கி சங்கு சக்கரமா சுத்தினா, இன்னொருத்தன் மரத்தில வால தொங்கப் போட்டு ஊஞ்சலாடுவான்.
எதிர் நிலை எடுக்கவே மாட்டார்கள். புளி மூட்டைகள்.
Consistency is the hallmark of Mediocrity.

வைகோ தீவிரமாக அதிமுக ஏஜண்ட் ஆக செயல் படுவதால் தான் நாஞ்சில் சம்பத் வெளியேறும் நிலை! இது தான் உண்மை. ரோஷம், தன்மானம் எல்லாம் கிடையாது! ஏற்கனவே கட்சியில் ஜெயலலிதாவால் தலையில் குட்டுப்பட்டு இருந்தவர் தான் Innocent Innova!

பா.ம.க, மதி.மு.க, தே.மு.தி.க, போல Booth, Stall, kiosk என்றால் ரோஷப்பட்டு பெரும், கடும் அறிக்கை விட்டு மயிரே போச்சுன்னு வெளியேறலாம்.
(தமிழக) காங்கிரஸ், (தமிழக) பா.ஜ.க போல அதிமுக என்ன ஓட்டை வண்டியா?
துபாய் போல கொழிக்க வழி வகையுடைய ரெட்டை இலையை விட்டு வெளியேற பைத்தியமா பிடித்திருக்கிறது? என்ன வேண்டுமானாலும் எவன் வேண்டுமானாலும் “ அடிமை” என்று ஏசிக்கொள்ளட்டும்.
உண்மையில் அதிமுகவில் சுகம் அனுபவிக்கும் மந்திரிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களா அடிமைகள்? அவர்களால் ஆளப்படும் இழி நிலையிலிருக்கும் இந்த ’எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்’ அல்லவோ அடிமைகள்!
’சோரம் செய்திடாமே, தீமை செய்திடாமே ஊரை ஆளும் முறைமை ஓர் புரத்திலும் இல்லை’ பாரதி சொல்லியிருக்கிறானே?
சசிகலா ஒரு Soft Target. ஒரு வகையில் எவ்வளவு ஆண்டுகளாக மிகக் கடும் விமர்சனங்கள். இன்று அதன் உச்சம். எல்லார் வாயிலும் விழுந்து கொண்டு…
முதல்வர் ஓ.பி.எஸ் மற்றொரு soft target. ஆனாலும் பதிலுக்கு சவாலாக, கோபமாக ஒரு வார்த்தை பேசி இன்று வரை பார்த்ததில்லை. ’பவ்யம் பாவ்லா’ பன்னீர் செல்வம்!
வெட்டிபயலெல்லாம் என்னமா சவடால் விடுறான்.’ரத்த ஆறு ஓடும்’ சவால் வைகோவின் ஆவேசத்தையும் பார்க்கத்தானே செய்கிறோம்.
பன்னீர் எப்போதும் சித்தர் போல ஒரு பார்வை.
எப்போதும் VRS மன நிலையில்!
கருணாநிதி சகாப்தம் ஏறத்தாழ முடிவுக்கு வந்து விட்டது.
இனி தி.மு.க.வில் ஸ்டாலின் தான் ’இன்றைய நிலை’யில் சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்யப்போகிறவர். “ஆக, சசிகலா அம்மையார் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்றால்…………ஆக….ஆக….ஆக..”
ஆகாககாக!

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு –இது ஒரு cliché.
இந்த வாக்கியம் படு அபத்தமானது. இலவசங்கள் வாங்க தவித்து தக்காளி வித்து, தேர்தல் நேரத்தில் பணமும் வாங்கும் மக்களை மகேசனோடு ஏன் ஒப்பிட வேண்டும்.
ருக்மணி கிருஷ்ணன் – இந்தப்பெயர் யாருக்காவது இருக்கிறதா? அன்றைய ஜனாதிபதி முதல் இன்றைய ஆஃபீஸ் பாய் வரை ’ராதாகிருஷ்ணன்’ தானே!
 



“LIVE IN SECLUSION. SHOW NO INTEREST IN POLITICS AND THE COMMUNITY.”
- EPICURUS

...........................................................





http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_09.html

.................