Share

Jun 29, 2016

தேரோட்டம்


ந.முத்துசாமியின் ”வண்டிச் சோடை”

வண்டி சென்ற பாதை தான் வண்டிச் சோடை.
இந்த நாடகத்தில் தேரோட்டம்
”தேர் இழுத்த பரம்பரை நாங்க……… மண்ணில் மறையும் வடம் சக்தியாய்ச் சுடரும் தேர் இழுக்கும் பேர்வழி நாங்க… இம் இழு..இழுத்து இழுத்து முறைத்த பார்வையில் முகத்தசை நார்கள் ஒரே விதமாய் விறைத்து ஒரு மூஞ்சியைப் பலர் அணிந்து கொண்டோம். முகமூடிகள் என்று முகத்தைப் பிய்த்துக் கொள்ளாமல் தப்பித்தோம். இழு.”
கோவிந்தா…ஏலி…கந்தையா…ஏலி…ராமையா…ஏலி..
”தேர் நிலை சேர நாளானால் அத்தனை நாளும் திருவிழா நாட்கள்!”
”நமக்குச் சலுகையில்லே. இழு..”
இம்..இழு..கோவிந்தா…ஏலி…கந்தையா..ஏலி..ராமையா..ஏலி…
(சக்கரம் நகரவில்லை)
”ஆள் சக்தி பத்தாது – நெம்புகோல் வேணும்.”
”ஏய் கட்டை கடப்பாறை கொண்டாங்க டோய்…”
“மல்லாரியில் நகராத தேருக்கு பறை கொட்டும் வேணும்”
”பறை கொட்டும் பத்தாது. சாட்டை சொடுக்க வேணும்.”
“ பாட்டன்மார் புண்ணியம் உன் வியர்வையில் வடிய இழு..”
”நம் செய்கையில் பல சக்கரங்கள் உருளும் இழு..”
”நம் செய்கை இருளில் சுடர் விடும் இழு..”
“ நம் செய்கையில் சக்தியிருக்குது இழு…”
” நம் செய்கையில் கவனக்குறைவானவனைத் தாக்கும் சாரம் இருக்குது. இழு…”
“ நம் செய்கையில் அறியாமல் நேரும் விபத்துகளும் உண்டு. இழு…”
கோவிந்தா..ஏலி.. நாராயணா..ஏலி…கந்தையா..ஏலி.. கிட்ணய்யா..ஏலி..
(சக்கரம் உருளத்தொடங்குகிறது)


…………………………………………..
மாயவரம் பள்ளியில் ந.முத்துசாமியுடன் படித்தவர்
கவிஞர் ஞானக்கூத்தன். 

அவர் எழுதியுள்ள கவிதை கீழே.
தேரோட்டம்
காடெ கோழி வெச்சுக்
கணக்காக் கள்ளும் வெச்சு
சூடம் கொளுத்தி வெச்சு
சூரன் சாமி கிட்ட
வரங்கேட்டு வாரீங்களா
ஆரோ வடம் புடிச்சி
அய்யன் தேரு நின்னுடுச்சி
கற்கண்டு வாழெ வெச்சு
விருட்சீப் பூவ வெச்சுப்
பொங்கல் மணக்க வெச்சு
வடக்கன் சாமி கிட்ட
வரங்கேட்டு வாரீங்களா
ஆரோ வடம் புடிச்சி
அய்யன் தேரு நின்னுடுச்சி
இளநீ சீவி வெச்சு
இரும்பாக் கரும்ப வெச்சுக்
குளிராப் பால வெச்சுக்
குமரன் சாமி கிட்ட
வரங்கேட்டு வாரீங்களா
தெரு ஓடும் தூரமின்னும்
வடமோடிப் போகலியே
வடம்போன தூரமின்னும்
தேரோடிப் போகலியே
காலோயும் அந்தியிலே
கண் தோற்றம் மாறையிலே
ஆரோ வடம் புடிச்சி
அய்யன் தேரு நின்னுடுச்சி
………………………………………………………………………………..
தேர் இழுக்க ஜேசிபி பொக்லைன் பயன் படுத்துகிற காலமிது!
………………………………………….


Jun 27, 2016

வலையில் இன்று உதிர்ந்த நினைவுகள்


ஒன்பது வருட திலீப்குமாருடனான (living legend) affair ஐ ஒரே நிமிடத்தில் மதுபாலா உதறி விட்டு கிஷோர் குமாரை திருமணம் செய்து தன் வாழ்வின் கடைசி ஒன்பது வருடங்களை முடித்தார்.
Madhubala - The beauty with tragedy and The Venus of Indian Cinema!

அசோக் குமாரின் தம்பி கிஷோருக்கு இது இரண்டாவது திருமணம். 1969ல் முற்றிய இதய நோய், நுரையீரல் பிரச்னைகள்  காரணமாக மதுபாலாவின் அகால மரணம் நடந்த அதே வருடம் Pyar ka mousam, Aradhana, அடுத்த வருடம் Sharmilee ஆகிய படங்களில் கிஷோர் குமார் பின்னணி பாடகராக மாபெரும் சாதனை செய்தார். அதன் பிறகு he neverlooked back.

கிஷோர் குமாரின் மூன்றாவது மனைவி யோகிதா பாலி தான் பின்னர் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவியானார்.
கிஷோரின் நான்காவது மனைவி லீனா சந்தாவர்க்கருக்கு அது இரண்டாவது திருமணம்.

ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போன்ஸ்லே.
ஆர்.டி பர்மன் இந்தி இசையமைப்பாளர் எஸ்.டி.பர்மன்
பெற்ற பிள்ளை.
ஆர்.டி.பர்மன் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். ஆஷா போன்ஸ்லே இந்த பையன் பர்மன் படிப்பில் அக்கறையில்லாமல் இருப்பது குறித்து கண்டித்திருக்கிறார். பத்தாவது படித்துக்கொண்டிருந்த பர்மன் தன் மனைவியை அப்போது தான் முதன் முதலாக சந்தித்திருக்கிறார். அந்த நேரத்திலே ஆஷா இரண்டு குழந்தைகளுக்குத் தாய்!

இவர் தான் தன் வாழ்க்கைத்துணைவி என்பது அப்போது பர்மனுக்குத்தெரிந்திருக்கவில்லை. பத்தொன்பது வயதில் ஆர்.டி.பர்மன் இந்தி சினிமாவுலகில் ’Raaz’ படத்தின் இசையமைப்பாளராகி விட்டார்! படிப்பில் எல்லாம் கவனம் சென்றிருக்கவில்லை என்று தெரிகிறது. பின்னால் காலம் ஆஷாவையும் ஆர்.டி. பர்மனையும் தம்பதிகளாக இணைத்து விட்டது! இன்று இருபது வருடங்களாக ஆஷா விதவை.
இந்த ஆஷா போன்ஸ்லேயுடன் தான் தன் கடைசி பாடலை கிஷோர் குமார் சாவதற்கு முந்தைய தினம் (12-10-1987) பாடினார். மறு நாள் செத்துப்போனார். மிதுன் சக்ரவர்த்தி, ஸ்ரீதேவி இருவருக்காக ‘Waqt ki Aawaz’ல் ’Guru O Guru…Guru Guru aajao’ என்ற பாடல் அது.

ஒரு விஷயம். இந்த மிதுன் சக்ரவர்த்தி தான் கிஷோர் குமாரின் மூன்றாவது மனைவி யோகிதா பாலியை தன் மனைவியாக்கி குழந்தைகள் பெற்றுக்கொண்டவர். ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டார் என்று அவர் மீது பலத்த வதந்தி இணைந்து நடித்த போது இருந்ததுண்டு.

கிஷோர் ஒரு multi faceted personality. நடிகர், பாடகர், பின்னணி பாடகர் என்று அவருடைய வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. முகமது ரஃபி முழுக்க,முழுக்க ஒரு பின்னணி பாடகர்.

முகமது ரஃபியின் கடைசி பாடல் எது என்பதில் இன்னும் சர்ச்சை நீடிக்கிறது. தர்மேந்திரா நடித்த Aaa Paas. இதில் இரட்டையர் லட்சுமிகாந்த் – பியாரிலால் இசையமைத்த ‘Tu kahim aas paas hai dost’ பாடலா? அல்லது ’Shehar mein charcha hai’ பாட்டா? அன்று இரவே மறைந்து விட்டார் ரஃபி.


முகேஷ் கடைசியாக சத்யம் சிவம் சுந்தரம் படத்திற்காக “Chanchal Sheetal Nirmal Komal” பாடி விட்டு வெளி நாடு போனவர் கொஞ்ச நாட்களில் பிணமாக பெட்டியில் வந்தார்.

………………………

நான் வீட்டில் இருக்கும் போது டி.வியில் ஏதாவது சானலில் கர்னாடக சங்கீத கச்சேரி என்றால் நான் கவனிக்கு முன் அவசரமாக என் மகன்கள் கீர்த்தி, அஷ்வத் இருவரும் எப்போதும் வேறு சானல் மாற்றி விடுவார்கள் ”டேய் டேய் சானலை மாத்தாதீங்கடா” என நான் சொல்லும்போது பதில் “ போப்பா! “
அப்படி இதோ டி.வியில் என் இளைய மகன் அஷ்வத் பதற்றத்துடன் அவசரமாக சானலை மாற்றும்போது என் காதில் தேனாக தெளித்த ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் பாடல் வரிகள்
”நிறைந்த மயிலொன்று தாளங்கள் பாட
கன்றொன்று வாலினால் சாமரம் போட”
உருகி பாடும் அருணா சாய்ராம்!

……………………………………………………………..


Jun 22, 2016

நடேஷிடம் ராஜநாயஹம் நடத்திய நேர்காணல் - 3

"எல்லாவற்றையுமே அழகியலாகவே பார்த்துவிட முடியுமா என்ன?" - ஓவியர்.மு.நடேஷ் பேட்டி

ஞாயிறு, 19 ஜுன் 2016

ராஜநாயஹம் : கருத்தை பயன்படுத்தி அரூபமான ஓவியம் (Conceptual Abstraction) வரைவது மற்றும் ஓவியத்தில் உருக்குலைவு (deformity) பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.


நடேஷ்: உருக்குலைவு என்றால் அதிலும் கதைதான் வருகிறது. ஏன் உருக்குலைக்கிறோம் என்றால் சரியான உருவத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லமுடியாத போதுதான். உதாரணமாக, சல்வடோர் டாலியின் ஓவியங்களைப் பார்த்தீர்கள் என்றால் முழுக்க கனவுத்தன்மையான ஓவியங்களாக இருக்கும். கனவில், என்னுடைய கை நீண்டு அந்தக் கோடியில் இருக்கும் ஒரு ஆளைப் பிடித்து தூக்கிவர முடியும். அது கனவில்தான் நடக்கும். டாலி ஒரு கடிகாரத்தை தூக்கி, அதை ஒரு கோட்ஸ்டாண்டில் வைத்து, அதை உருக விட்டதைப்போல, போரைப் பற்றிய பிகாசோவின் பயங்கரமான ஓவியமான குவர்னிகாவைப்போல, அதை அவர் ஜாலியாகத்தான் செய்திருக்கார். அதில் எல்லாவற்றையுமே உருக்குலைத்துப்போட்டிருக்கிறார். போர் புகைப்படங்களை எடுத்துப் பார்த்தால் அதில் எல்லாம் உருக்குலைந்துதான் இருக்கும். அதை சீரமைப்பதுதான் வேலையாக இருக்கும். அதேமாதிரி குவர்னிகா ஓவியத்திலும் போரின் உருக்குலைவை அதில் பிகாசோ செய்து வைத்திருக்கிறார். எல்லாவற்றையுமே அழகியலாகவே பார்த்துவிட முடியுமா என்ன? அப்படிப் பார்ப்பது வேறுமாதிரியான அழகியல்.

ராஜநாயஹம்: இன்ஸ்டாலேஷன் ஆர்ட் பற்றி?

நடேஷ்: நிர்மாணக் கலை என்று அதற்குப் பெயர். ஒரு நாடகத்துக்கோ ஒரு சினிமாவுக்கோ செட் போட்டால் செட்டைக் கலைத்துவிடுகிறோம். அதேபோல், ஒரு இடத்தில் ஒரு மாதத்துக்கான வடிவத்தை நிர்மாணம் செய்து கழட்டி மாட்டுகிறோம். அது கொஞ்சநாள் இருக்கும். அப்போது நீங்கள் பார்க்கலாம். அதற்குள் ஒரு கருத்து இருக்கும். தூக்கி எறியக்கூடிய, பயன்படாத பொருட்களை வைத்து அதில் கதையை உருவாக்கி நிர்மாணிப்பது. நான் அப்படி 47 அடி உயரத்தில் ஒரு கோபுரம் கட்டி, அதில் கண்ணாடி உட்பட பல பொருட்களைப் பொருத்தி பிறகு, தொட்டி ஒன்றைக்கட்டி அதற்குள் ஒரு படகை மிதக்கவிட்டு, கிட்டத்தட்ட ஒரு 10 வருடம் 20 முதல் 25 வரையிலான நிர்மாணக் கலைகளை நான் பண்ணியிருக்கிறேன். ஆனால், அது நம் கையில் இருக்கும் பணத்தைப் பிடுங்கிவிடும். ஏற்கனவே, ஓவியத்தில் பெரிதாக வருமானம் ஒன்றும் கிடையாது. மேலும், குறிப்பிட்ட காலத்துக்குப்பிறகு, அதை காட்டவும் முடியாது. ஒருவேளை நல்ல புகைப்படங்கள் இருந்தால் வேண்டுமானால் அதைக் காட்டலாம்.

ராஜநாயஹம்: இருமை எதிர்வுகளை ஒன்றாகப் பார்ப்பதற்கான பக்குவம் வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதுதான் ஞானம் என்றும், அப்படி இல்லாமல் இயற்கையை விட்டுவிட்டு கலாச்சாரத்தில் மனிதன் இறங்கும்போதுதான் தகராறு, முரண்பாடு எல்லாம் ஏற்படுகிறது என்றும் சொல்லியிருக்கிறீர்கள். என்னளவில் இந்தச்
சிந்தனை பெரும் பாய்ச்சலானது. அதுபற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?

நடேஷ்: ஆனால், அதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது. அதை தெரிந்து வைத்துக் கொள்ளலாமே தவிர, அது உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்குமே தவிர, அதை வைத்துக்கொண்டு நீங்க போர்தான் புரியலாம். தப்பானதை சரி என்றுசொல்லி எல்லாரையும் கொள்ளையடிப்பதை என்ன சொல்லமுடியும்? தெருவில் இறங்கி கூச்சல்போட முடியும். அதிகமாகப் போனால் கல்லெடுத்து அடிக்க முடியும். கூட்டமாகச் சேர்ந்து ஏற்கனவே இருப்பவனை கீழே இறக்கிவிட்டு நீங்க மேலே ஏறி உட்கார்ந்துகொள்ள முடியும். நான் சின்ன வயதில் இப்படிச் சொல்லியிருந்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனை கத்தியெடுத்து குத்துகிறேன். எல்லாவற்றையும் சரி பண்ணிடுவேன். மாவோயிஸ்ட்டாக ஆயிடுவேன். நக்சலைட்டா ஆகிடுவேன்னு சொல்லி, அப்படித்தான் ஆகியிருப்பேன். உலகம் இருமையில்தான் இருக்கிறது என்பது புரிகிறது. உலகம் இருமையில் சுழல்கிறது என்பதை ஞானம் சம்மந்தமான புரிதலாக வைத்திருக்கலாமே தவிர, அதை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. ஜனநாயகத்தில் நல்ல விஷயம் என்னவென்றால், என்னை பிடிக்கவில்லையென்றால் மோடி என்னை கத்தியால் குத்த முடியாது. தூக்கி ஜெயிலில் போட்டுவிடுவார்கள். மானை பசிக்கு புலி சாப்பிடுகிறது. எவ்வளவு மான் இருக்கிறது, எவ்வளவு புலி இருக்கிறது? லட்சக்கணக்கில் மான் இருக்கிறது. ஆனால், புலியோ முப்பது நாற்பதுதான் இருக்கிறது. நிறைய புலி இருந்தபோதுகூட மானின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததுதான். அதை விடுங்க. கோடிக்கணக்கில் கொசு இருக்கிறது. அதை என்ன செய்யமுடியும். உயிரை முழுதாகப் பிடிப்பது கொஞ்சமாகத்தான் இருக்கிறது. உயிரைச் சாப்பிடும் உயிர்தான் அதிகமாக இருக்கிறது. உயிர்னா கத்தரிக்கா, வெண்டைக்காய், வெங்காயத்துக்கெல்லாம் உயிர் இல்லையா? இருக்கு. ஒரு உயிர் இன்னொரு உயிரை உண்டுதான் உயிர் வாழ்கிறது. சரி, தப்பு என்பதில்தான் உலகமே சுற்றிச்சுற்றி வருகிறது. அதை எதுவும் செய்ய முடியாது.

ராஜநாயஹம்: நீங்கள் உபயோகிக்கும் வண்ணங்கள் (பச்சை, நீலம்) குறித்து எம்.டி.முத்துக்குமாரசாமி ஒரு குழந்தை தன்னை யாருமே கவனிக்கவில்லை என்ற ஏக்கம்தான் உங்கள் ஓவியத்தில் வெளிப்படுகிறது என்கிறாரே?

நடேஷ்: அது அவருடைய பார்வை. தமிழ்நாட்டில் இருக்கிற ஒரு கலர் இங்கிலாந்தில் இல்லை. இங்கிலாந்தில் உள்ள கலர் தமிழ்நாட்டில் இல்லை.ஆனால், டியூபில் அந்தக் கலர் கிடைக்கிறது. ultra marine blue என்று ஒரு கலர் இருக்கு. அதை நீங்கள் தமிழ்நாட்டில் பார்க்கவோ, பயன்படுத்தவோ முடியாது. வருடத்தில் 8 மாதம் வெயிலாக இருக்கும் ஒரு ஊரில் நான் வாழ்கிறேன். நான் பார்ப்பதைத்தான் என்னால் வரைய முடியும். அப்படி அழகாக இருக்கிறது என்பதற்காக, ஒரு வண்ணத்தை வைக்கிறேன் என்றால் அதை வைக்கக்கூடாது என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் போய்ச் சேராது. பச்சையாக ஒரு வண்ணத்தை வைத்து பக்கத்தில் பிங்க், சிவப்பு போன்ற வண்ணங்களை வைக்க முடியுமா? ஆனால், ஊட்டியில் மலர்கள் அந்த வண்ணத்தில்தான் இருக்கிறது. வெளிநாடுகளில் வருடத்தில் பாதி பனிபடர்ந்து வெள்ளையாகத்தான் இருக்கும். ஆகாசம்கூட வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். என்ன நிறத்தைப் பார்க்கிறோமோ அதுதான் ஓவியத்தில் இருக்கும்.

ராஜநாயஹம்: பச்சை வண்ணம்?

நடேஷ்: பச்சை வண்ணத்தை பாதிப்பேர் பயன்படுத்தவே மாட்டார்கள். பச்சைவண்ணம் பக்கமே பலர் போகமாட்டார்கள். காரணம், பச்சையை வைத்தால் பக்கத்தில் எந்தக் கலரை வைத்தாலும் கண்ணில் டமால் டமால் என்று அடிக்கும். தெருவில் போகும்போது கண்ணைத் திறந்து பார்க்கிறாயா? எவ்ளோ பிரமாதமா பச்சைபசேல்னு இருக்கிறது. என் நிலப்பரப்பு பசுமையா இருக்கு, 2 நாள் மழை பெய்ஞ்சாகூட பசுமையா ஆகிடுது. சுற்றிலும் இவ்ளோ பச்சையை வைத்துக்கொண்டு நான் ஓவியத்தில் பச்சையைக் கொண்டுவந்தால் மட்டும் ஏன் தப்பு சொல்கிறார்கள். அதை எல்லாம் வெட்டிப் போட்டுவிட்டு பாலைவனமாகவா மாற்ற முடியும். இல்லை பிரௌன் கலர் நன்றாக இருக்கிறது என்பதற்காக அதை வைக்கமுடியுமா? லைட்டான கலராக வெள்ளையா இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அதற்காக பனியையா கொண்டுவந்து கொட்ட முடியும். வெறும் சிவப்பு வண்ணத்தில் மட்டுமே வரைய முடியும். முப்பட்டக்கல்லில் பிரிக்கிறார்களே, அதில் சிவப்பு அலைக்கற்றையை மட்டும் எடுத்துக்கொண்டால் இந்தப் பக்கம் ஊதாவில் இருந்து அந்தப் பக்கம் ஆரஞ்சு வரை ஒரு பெரிய அலைக்கற்றை இருக்கிறது. வாழ்நாள் முழுக்க வெறும் சிவப்பு வண்ணத்தில் மட்டுமே வரைய முடியும். நமக்கு பிடித்திருப்பதால்தான் எல்லா வண்ணங்களையும் பயன்படுத்துகிறோம்.
ராஜநாயஹம்: ஒரே ராகத்தை மூன்று நாள் பாடுவது மாதிரியா?
நடேஷ்: சரியாகச் சொன்னீங்க. காவேரிக்கரையில் மிகப் பெரும் இசை விரும்பியான ஜி.கே.மூப்பனார், உமையாள்புரம் சிவராமன் இருக்கிறார் அல்லவா! அவரை இரவு 12 மணிக்கு தொடங்கச் சொல்கிறார் என்றால் காலை 6 மணி வரை ஒரே ராகமாக போய்க்கொண்டிருக்கும். ஒரு வடிவத்தில் இருக்கக்கூடிய ஒரு சப்தம்தானே ராகம், இன்னொரு வடிவத்தில் இருக்கக்கூடிய இன்னொரு சப்தம் வேற ராகம். வண்ணம் மாதிரிதான் ராகம். அது கண்ணால் பார்ப்பது இது காதால் கேட்பது.
ராஜநாயஹம்: என் ஓவியத்துக்குள் பேரின்பம் பொழிய கடைந்தெடுத்த வெறுப்பு, நீலகண்ட விஷம் போன்றதையும் அனுபவித்தே ஆக வேண்டும் என்ற உங்கள் கூற்று இருக்கிறதே அது முக்தியா, விரக்தியா?
நடேஷ்: பாற்கடலைக் கடையும்போது அமுதமும் வந்தது. ஆலகால விஷமும் வந்தது. சிவபெருமான் கழுத்தை அவர் மனைவி பார்வதி பிடித்த கதை நமக்குத் தெரியும். இரண்டுமே இருக்கிறது. என்னுடைய ஓவியத்தைப் பார்த்து உங்களுக்கு பேரானந்தமும் வரவேண்டுமென்றால் கடுமையான துக்கமும் விஷத்தன்மையும் எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதை நான் அனுபவித்தே இருக்கவேண்டும். அதுதானே வாழ்க்கைக்கு தூக்கிக் கொண்டுபோய் விடும்.
அண்மையில், என் நண்பர் கேசி இறந்துபோனார். (கேசி ஒரு மலையாளி. சமிக்ஷா எம்.கோவிந்தன் என்ற பிரபல மலையாள எழுத்தாளரின் மகன். கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். கூத்துப்பட்டறை ஆரம்பிப்பதற்கு முன்பே ந.முத்துசாமி சாரின் ‘நாற்காலிக்காரர்’ நாடகத்தை 1975ம் ஆண்டிலேயே
மேடையேற்றியவர். கூத்துப்பட்டறையின் பிரதான குருமார்களில் ஒருவர். பரம்பரையாக கூத்துக் கலையில் ஈடுபட்டுவரும் கண்ணப்ப தம்பிரானின் மகன்களுக்கு பயிற்சி கொடுத்தவர். இட்டு நிரப்பமுடியாத இடம் அவருடையது.) படு பயங்கரமான சோகம் அது. அந்தச் சோகம் என்னை அழத்தான் வைக்கும். உலகத்துக்கே தெரியாத ஆளு. அவனைப்பற்றி ஃபேஸ்புக்கில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் நிறைய எழுத வேண்டும். அப்போது பேரின்பம், கடும் துயரம் இரண்டுமே அனுபவம்தான். சில சமயம் அதை தேடியே நீங்கள் போவீர்கள்.
1983 காலகட்டத்தில் பெல்லியப்பா என்று ஒரு நண்பர். உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பில்லை கட்டாமல் வேண்டுமென்றே போலீஸ்காரர்கூட போய், ஜெயிலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துவிட்டு வருவார். பணக்கார வீட்டுப் பிள்ளை இப்படி ஒரு அட்டகாசம் செய்யும். அதுவும் ஒரு இருமைதான். கோடிக்கணக்கில் பணம் இருந்தால் போன விமானத்திலேயே அமெரிக்காவிலிருந்து திரும்பி வரலாம். நல்ல அற்புதமான ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடலாம். அளவுக்குமீறி பணம் இருந்தாலும் அதை உட்கொள்ள முடியாது. அதைத்தானே பழமொழியில் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்று சொன்னார்கள். எல்லாம் அனுபவத்தில் சொல்லப்பட்டுவிட்டது. அடுத்த குழந்தை அதை திரும்பவும் தொட்டு அனுபவிக்கும். அனுபவித்துவிட்டு செத்துப் போய்விடும் அவ்வளவுதான். நன்றி.


................................................................................................................


.....................................

Jun 21, 2016

மின்னம்பலத்துக்காக ஓவியர் நடேஷிடம் ராஜநாயஹம் நடத்திய நேர்காணல் - 2


"மரபுக்கு நவீனத்துக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது"- ஓவியர்.மு.நடேஷ் பேட்டி தொடர்ச்சி...
சனி, 18 ஜுன் 2016 minnambalam.com



ராஜநாயஹம்: மரபு ஓவியத்துக்கும் நவீன ஓவியத்துக்கும் உள்ள வித்தியாசம் பற்றி
கொஞ்சம் சொல்லுங்கள்?
நடேஷ்: பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது. மரபுக்கும் சரி, நவீனத்துக்கும் எல்லாமே அளவுதான். அந்த அளவை நீங்கள் சரியாக வைக்கவில்லை என்றால் அதற்கு வடிவமே வராது. அதாவது, நீங்கள் கண்ணால் பார்க்கும்போது தெரிந்த அதே வடிவத்தை ஓவியத்துக்குள்ளும் கண்டுபிடிக்க முடியணும்.
அப்போதுதான் ஓவியத்துக்கு வெற்றி. இந்திய மரபில் பார்த்ததை பார்த்தபடியே வரையும் வழக்கம் இல்லை. அதற்கு ஒரு அழகியல் கொடுத்து அதற்கென்று ஒரு
ஸ்டைலை (பாணி) சோழா ஸ்டைல், பல்லவா ஸ்டைல், அஜந்தா, எல்லோரா இந்தமாதிரி ஸ்டைல்களை உண்டாக்கி.... அது ஒரு ஸ்சோல் f தொஉக்க்ட், ஒரு சிந்தனை ஓட்டம். ஒரு 400, 500 வருஷம் அந்த சிந்தனை ஓட்டம் இருந்திருக்கிறது. சோழ சிந்தனை ஓட்டத்தைப் பார்த்தீர்கள் என்றால், 800 முதல் 1200 வரைக்கும் கிட்டத்தட்ட 500 வருஷம் அது ஓடிக்கொண்டிருந்தது. 800க்கே பல்லவ சிந்தனை
முடிவுற்று விட்டது. பல்லவ சிந்தனையில் காணக்கிடைப்பதில் மகாபலிபுரத்தையும், சோழ சிந்தனையில் கங்கைகொண்ட சோழபுரத்தையும் பிரகதீஸ்வரர் ஆலயத்தையும் முக்கியமாகச் சொல்லலாம். சித்தன்னவாசல், எல்லோரான்னு சின்னச் சின்னதா நிறைய இருக்கு. இதோட அழகியல் மிகவும் நெகிழ்ச்சி கொடுக்கக்கூடிய தன்மை கொண்டது. அது ஒரு School of thought.
அதேமாதிரி, மேற்கத்திய மரபைப் பார்த்தீர்கள் என்றால், முழுக்க முழுக்க கிறிஸ்தவ மதத்தினுடைய தாக்கம் கொண்டது. Renaissance காலத்திலிருந்து நவீன ஓவியம் வரும்வரைக்கும் அது வேறு ஒருவிதமான அழகியல்தன்மையில் இருந்தது. அதாவது, பார்த்தது பார்த்தது மாதிரியே. விரல் ஒன்றை வரைந்தால்கூட அது நிஜத்தில் பார்த்த ஒரு விரலைப்போலவே இருக்கும். ஆனால் இங்கோ (இந்திய மரபில்) விரலை மெல்லிசான ஒரு கோடால் வரைந்துவிடுவான். Non representation. இந்தியக் கலை மரபை பொறுத்தவரைக்கும் பார்த்ததை பார்த்த மாதிரியோ, கேமரால படம் பிடிச்ச மாதிரியோ வரையறது இல்லை. ஆனா, வெள்ளக்காரன் அப்படி போடுவான். அவனோட ஓவியங்களுக்குள்ள பைபிளோட கதைகள் இருக்கும். நவீன ஓவியத்தைப் பொறுத்த வரைக்கும், நான் வரைவதை கேமராவே படம் பிடித்துக் காட்டுகிறது. அதையே நான் எதுக்கு வரையணும்னு கேள்விகேட்டு, தான் பார்ப்பதில் இருந்து கிடைக்கும் சாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு வேறுவிதமாக வரைகிறார்கள். ஆனால், அதிலும் இஷ்டத்துக்கு வண்ணத்தைப் பூசுகிறார்கள். இயற்கை எல்லாவற்றுக்குமே ஒரு அளவை நிர்ணயித்திருக்கிறது. அந்த அளவுகோலுக்கு உட்பட்டுத்தான் இயற்கை இயங்குகிறது. அந்த அளவுகோலுக்கு உள்ளேதான் உங்களின் நவீன ஓவியச் செயல்பாடும் நடக்கிறது. நவீன ஓவியமும் அந்த அளவுகோலுக்குள்தான் விழும். 10வது மாடியில் இருந்து தண்ணியை தூக்கி ஊற்றி, அதில் தெறிப்பதுதான் ஓவியம் என்றுகூடச் சொல்லலாம். ஆனால், இயற்கைக்கு என்று ஒரு கட்டுமானம் இருக்கிறது. இயற்கையின் அளவைமீறி உங்களால் எதுவும் செய்யமுடியாது.
ராஜநாயஹம்: கடவுள், மதம் எல்லாம் ஓவியத்துடன் இணைகிறதா? அதேமாதிரி தமிழ்ஓவியம்னு வகைப்படுத்த முடியுமா?
நடேஷ்: முன்பே சொன்னேனே. பல்லவ, சோழ, விஜயநகர என்று இரண்டு மூன்று கோட்பாடுகள், சிந்தனை ஓட்டம் இருந்திருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். பல்லவ சிந்தனையும் சோழ சிந்தனையும் வேறுமாதிரி இருக்கும். விஜயநகரத்தை எடுத்துக்கொண்டால் வடிவம், அளவு, கதை எல்லாம் வேறுமாதிரி இருக்கும். பைபிள் மாதிரி நம்மிடமும் நிறைய புராணங்கள் இருக்கிறதே. அப்போ, அந்தமாதிரி நம்பிக்கைகள் சார்ந்துதான் கதை சொல்ல முடியும். அரூப ஓவியங்கள், நவீனத்துவம், பின் நவீனத்துவத்துக்குப் பிறகுதான் வந்திருக்கிறது. அதுவரைக்கும் உங்களுக்கு கதைகள் சொல்லித்தான் ஆகணும்.நான் ஒரு கோட்டை வைத்து ஒரு படம் போடுகிறேன் என்றால், ஒரு கதையைசொல்லித்தான் படம்போட முடியும். அதிலும் ஒரு கதை வந்துவிடும்.
ராஜநாயஹம்: கருத்து சுதந்திரம்?
நடேஷ்: கூவம். கடந்த சில நாட்களாக கூவத்தை நான் வினைச்சொல்லா பார்க்க ஆரம்பித்துவிட்டேன். “இப்படி கூவமா இருக்கியே, இப்படிக் கூவம் பண்றியே, ரொம்ப கூவம் பண்ணாதடாஇப்படி எல்லாம் சொல்லலாம் என்று தோன்றியது. அந்த அளவுக்கு நான் பிறந்ததில் இருந்தே அதுக்காக பணத்தை ஒதுக்குறாங்க. ஆனாலும், அது அப்டியேத்தான் இருக்கு. உலகத்திலேயே ஒரே ஒரு மூத்திர நதி என்றால் அது கூவம்தான். இல்லையா? இப்போது ஜுன் மாதம் ஆட்சி மாறிவிட்டது. இன்னும் 5 மாதம் இருக்கிறது. நவம்பர் மாதக் கடைசியில் திரும்பவும் வெள்ளம் வந்தால் என்ன ஆகும்? அதுக்கான முன்னேற்பாடா கூவத்த தூர்வாரும் வேலையை ஆரம்பிச்சுட்டாங்களா. தூர்வாறலைன்னா திரும்ப எல்லாரும் செத்துடுவாங்க. காசு பணம் இருக்கிறவன் தப்பிச்சு ஓடிடுவான். மத்தவங்கதான் மாட்டிப்பாங்க. நீருக்கு ஒரு கணக்கு இருக்கு. சமீபத்தில், நான் என்ன நினைத்தேன் தெரியுமா? இத்தனை வருஷமா என்னை அவமானப்படுத்திட்டீங்க. அதனால விட்டேனா பார்னு, அது இப்படி செஞ்சிடுச்சுன்னு தோணுது. கூவம் இருக்குற இடத்துலதான் மோசமான மழையும்வெள்ளமும் வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டுப் போச்சு. அது ஒருகான்செப்ட். இந்த இடத்தில் நீர் அப்டிங்குறது ஒரு கான்செப்ட்டா மாறிடுது. அது நல்ல கான்செப்ட்டாவும் இருக்கும். கெட்ட கான்செப்ட்டாவும் இருக்கும். அதை வைத்துக்கொண்டு சில வேலைகள் பண்ணலாம். உருவத்த மாத்தி, அதுக்குள்ள கதைகளைச் செருகி, லாஜிக்கை செருகி, ஆர்கியூமெண்டைச் செருகி நீங்க வேலைகளைச் செய்யலாம்.
ராஜநாயஹம்: உங்களோட பிரபலமான ஐன்ஸ்டீன் சுவர் ஓவியம் பற்றி?

நடேஷ்: அதுல ஒரு கதையம்சம் என்னன்னா, அது சுத்திச்சுத்தி வரும். அந்த காலத்துல ஹவர் கிளாஸ் (மணல் கடிகாரம்) என்று ஒன்று இருக்கும். அதில் உள்ள மணல் மேலிருந்து கீழே வருவதற்குள் ஒரு மணி நேரம் முடிந்திருக்கும். ஒரு மணி நேரத்தில் ஒரு பக்கத்தில் இருந்து, இன்னொரு பக்கத்துக்கு வரும் அந்த ஹவர் கிளாசை நான் கையில் வைத்துக் காட்டுகிறேன். பல ஹவர் கிளாசை வரைந்துநேரம் ஓடிவிட்டதையும் ஓடிக்கொண்டிருப்பதையும் (Time is Running Out) சொல்கிறேன். யாருக்குப் படம் வரைஞ்சு கொடுக்கிறோம் என்பதும் முக்கியம். அது ஒரு பல்கலைக்கழகத்தின் சயின்ஸ் பிளாக். ஐன்ஸ்டீனை பறவை மாதிரி வரைந்திருக்கிறேன். அவர் காலில் வந்து ஒரு கடிகாரத்தைப்பிடித்துக் கொண்டிருக்கிறார். கடிகாரத்தின் இரண்டு கையும் கடிகாரத்த விட்டு வெளியே போகுது. நேரம் போகுது என்பதை எப்படிக் காட்டுவது? காலால் போட்டுக் காட்டமுடியுமா? ஒரு கான்செப்ட்டை எப்படி படம்போட்டுக் காட்டுவது.அந்த கடிகாரத்தோட சின்னக் கையும் பெரிய கையும் வெளியே ஓடுவதுமாதிரி போட்டிருக்கிறேன். ஐன்ஸ்டீன் ஒரு பறவையைப்போல் ஏர சுமந்துக்கிட்டு அப்படியே ஆந்திராவோட விவசாயிகளை எல்லாம் காப்பாத்த, வந்து இறங்குறாரு.ரெண்டு மூணு ஐன்ஸ்டீன் போட்ருக்கேன். ஒரு ஐன்ஸ்டீன் கையக் கட்டிக்கிட்டு 007 மாதிரி இருக்காரு. இன்னொரு ஐன்ஸ்டீனின் தலையில் ஒரு வெள்ளை எலி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. அதிலேயே ஒரு பெண் மைக்ரோஸ்கோப் வழியாக எட்டுக்கால்பூச்சியை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். இதுமாதிரி பலimages அதில் இருக்கிறது.

ராஜநாயஹம்: அந்த எட்டுக்கால்பூச்சிகூட கலவியைப் பற்றியது என்று

நடேஷ்: ஆமா. அது சம்மந்தப்பட்டதுதான். பெண்கள் ஆண்களைத் தின்று விடுவார்கள். நீ (ஆண்) இப்படியே இருந்தால், பெண்கள் ஆண்களைத் தின்றால்தான் வேலையே நடக்கும். இவங்களிடம் விட்டீர்கள் என்றால் உலகம் உருப்படாது.பெண்களிடம் விட்டால்தான் உலகம் தப்பிக்கும் என்று சொல்கிறேன். ஏன் எட்டுக்கால்பூச்சி என்றால் கலவிக்குப் பிறகு பெண் எட்டுக்கால்பூச்சி ஆண் எட்டுக்கால்பூச்சியைத் தின்றுவிடும் என்று சொல்வார்கள். எல்லா எட்டுக்கால்பூச்சியும் அப்படிப் பண்ணுதா? இல்லை ஒன்னு ரெண்டு மட்டும் பண்ணுதா? எல்லாம் பண்ற மாதிரி எனக்குத் தெரியலை. ஏன்னா, ஏகப்பட்ட எட்டுக்கால்பூச்சி இருக்கே. அவ்ளோ கதையும் அதுல இருக்கு, நீங்க அதைப் படிக்கணும். நான் ஒண்ணு வரைஞ்சு வச்சுருக்க, அதப் படிக்கிறவன் வந்துஏதோ பண்ணிருக்காம்பா. ஏதோ இருக்குப்பா’’ன்னு சொல்வான். சிலபேருக்கு ஒண்ணுமே புரியல. “என்னமோ போட்டு வச்சுருக்கான், பசு மாடும் காணோம், எருமை மாடும் காணோம், மூஞ்சியப் பாத்தா ஐன்ஸ்டீன் மாதிரி இருக்குன்னு சொல்லிட்டுப் போய்டுவான். அவனுக்கு நேரம் இல்லை. அவனுக்கு நேரடியா கதை சொல்லணும்அப்படியே பழகியாச்சு. பொறுமை இருக்கிறவன் பச்ச நல்லாருக்கு, சிவப்பு நல்லாருக்குன்னு வேடிக்கை பார்த்துட்டு அதில் இருக்கிற கதையைப் படிச்சு சிந்தனைக்கு வேலை கொடுத்துட்டுப் போய்டுவான்.
ராஜநாயஹம்: 1984ல்நீர்மைதொகுப்பின் அட்டைப்படத்தில் அப்பாவைவரைஞ்சிருப்பீங்க. கே.எம்.ஆதிமூலத்திடம் பின்னாலதா அந்தமாதிரி பாணியை பாத்ததா ஒரு பிரமை. ஆனந்த விகடன் கரிசல்காட்டு கடிதாசில கி.ராஜநாராயணனை அவர் வரையிறப்போ, எனக்கு இது நீர்மைல நடேஷ் வரைஞ்ச பாணிதானே! என்றுதான் நினைத்தேன்.


நடேஷ்: அப்படிச் சொல்ல முடியாது. ஒரு காலத்தில் cross hatching எனப்படும் பக்கத்து பக்கத்தில் அதிக கோடுகளைப் போடும் வேலைகளை அவரைப் பார்த்துதான் நான் பண்ணினேன். வேறு ஒருத்தரிடமிருந்து அவருக்கு வருவதில் எந்தத் தப்பும் இல்லை. சமுதாயத்துக்குள் அப்படி நடப்பது இயல்புதான்.

****************************************************************************************