"மரபுக்கு நவீனத்துக்கும்
பெரிய வித்தியாசம்
கிடையாது"- ஓவியர்.மு.நடேஷ் பேட்டி தொடர்ச்சி...
சனி, 18 ஜுன் 2016 minnambalam.com
ராஜநாயஹம்: மரபு ஓவியத்துக்கும் நவீன ஓவியத்துக்கும் உள்ள வித்தியாசம் பற்றி
கொஞ்சம் சொல்லுங்கள்?
நடேஷ்: பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது. மரபுக்கும் சரி, நவீனத்துக்கும் எல்லாமே அளவுதான். அந்த அளவை நீங்கள் சரியாக வைக்கவில்லை என்றால் அதற்கு வடிவமே வராது. அதாவது, நீங்கள் கண்ணால் பார்க்கும்போது தெரிந்த அதே வடிவத்தை ஓவியத்துக்குள்ளும் கண்டுபிடிக்க முடியணும்.
அப்போதுதான் ஓவியத்துக்கு வெற்றி. இந்திய மரபில் பார்த்ததை பார்த்தபடியே வரையும் வழக்கம் இல்லை. அதற்கு ஒரு அழகியல் கொடுத்து அதற்கென்று ஒரு
ஸ்டைலை (பாணி) சோழா ஸ்டைல், பல்லவா ஸ்டைல், அஜந்தா, எல்லோரா இந்தமாதிரி ஸ்டைல்களை உண்டாக்கி.... அது ஒரு ஸ்சோல் ஒf தொஉக்க்ட், ஒரு சிந்தனை ஓட்டம். ஒரு 400, 500 வருஷம் அந்த சிந்தனை ஓட்டம் இருந்திருக்கிறது. சோழ சிந்தனை ஓட்டத்தைப் பார்த்தீர்கள் என்றால்,
800 முதல் 1200 வரைக்கும் கிட்டத்தட்ட 500 வருஷம் அது ஓடிக்கொண்டிருந்தது.
800க்கே பல்லவ சிந்தனை
முடிவுற்று விட்டது. பல்லவ சிந்தனையில் காணக்கிடைப்பதில் மகாபலிபுரத்தையும், சோழ சிந்தனையில் கங்கைகொண்ட சோழபுரத்தையும் பிரகதீஸ்வரர் ஆலயத்தையும் முக்கியமாகச் சொல்லலாம். சித்தன்னவாசல், எல்லோரான்னு சின்னச் சின்னதா நிறைய இருக்கு. இதோட அழகியல் மிகவும் நெகிழ்ச்சி கொடுக்கக்கூடிய தன்மை கொண்டது. அது ஒரு
School of thought.
அதேமாதிரி, மேற்கத்திய மரபைப் பார்த்தீர்கள் என்றால், முழுக்க முழுக்க கிறிஸ்தவ மதத்தினுடைய தாக்கம் கொண்டது.
Renaissance காலத்திலிருந்து நவீன ஓவியம் வரும்வரைக்கும் அது வேறு ஒருவிதமான அழகியல்தன்மையில் இருந்தது. அதாவது, பார்த்தது பார்த்தது மாதிரியே. விரல் ஒன்றை வரைந்தால்கூட அது நிஜத்தில் பார்த்த ஒரு விரலைப்போலவே இருக்கும். ஆனால் இங்கோ (இந்திய மரபில்) விரலை மெல்லிசான ஒரு கோடால் வரைந்துவிடுவான்.
Non representation. இந்தியக் கலை மரபை பொறுத்தவரைக்கும் பார்த்ததை பார்த்த மாதிரியோ, கேமரால படம் பிடிச்ச மாதிரியோ வரையறது இல்லை. ஆனா, வெள்ளக்காரன் அப்படி போடுவான். அவனோட ஓவியங்களுக்குள்ள பைபிளோட கதைகள் இருக்கும். நவீன ஓவியத்தைப் பொறுத்த வரைக்கும், நான் வரைவதை கேமராவே படம் பிடித்துக் காட்டுகிறது. அதையே நான் எதுக்கு வரையணும்னு கேள்விகேட்டு, தான் பார்ப்பதில் இருந்து கிடைக்கும் சாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு வேறுவிதமாக வரைகிறார்கள். ஆனால், அதிலும் இஷ்டத்துக்கு வண்ணத்தைப் பூசுகிறார்கள். இயற்கை எல்லாவற்றுக்குமே ஒரு அளவை நிர்ணயித்திருக்கிறது. அந்த அளவுகோலுக்கு உட்பட்டுத்தான் இயற்கை இயங்குகிறது. அந்த அளவுகோலுக்கு உள்ளேதான் உங்களின் நவீன ஓவியச் செயல்பாடும் நடக்கிறது. நவீன ஓவியமும் அந்த அளவுகோலுக்குள்தான் விழும்.
10வது மாடியில் இருந்து தண்ணியை தூக்கி ஊற்றி, அதில் தெறிப்பதுதான் ஓவியம் என்றுகூடச் சொல்லலாம். ஆனால், இயற்கைக்கு என்று ஒரு கட்டுமானம் இருக்கிறது. இயற்கையின் அளவைமீறி உங்களால் எதுவும் செய்யமுடியாது.
ராஜநாயஹம்: கடவுள், மதம் எல்லாம் ஓவியத்துடன் இணைகிறதா? அதேமாதிரி தமிழ்ஓவியம்னு வகைப்படுத்த முடியுமா?
நடேஷ்: முன்பே சொன்னேனே. பல்லவ, சோழ, விஜயநகர என்று இரண்டு மூன்று கோட்பாடுகள், சிந்தனை ஓட்டம் இருந்திருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். பல்லவ சிந்தனையும் சோழ சிந்தனையும் வேறுமாதிரி இருக்கும். விஜயநகரத்தை எடுத்துக்கொண்டால் வடிவம், அளவு, கதை எல்லாம் வேறுமாதிரி இருக்கும். பைபிள் மாதிரி நம்மிடமும் நிறைய புராணங்கள் இருக்கிறதே. அப்போ, அந்தமாதிரி நம்பிக்கைகள் சார்ந்துதான் கதை சொல்ல முடியும். அரூப ஓவியங்கள், நவீனத்துவம், பின் நவீனத்துவத்துக்குப் பிறகுதான் வந்திருக்கிறது. அதுவரைக்கும் உங்களுக்கு கதைகள் சொல்லித்தான் ஆகணும்.நான் ஒரு கோட்டை வைத்து ஒரு படம் போடுகிறேன் என்றால், ஒரு கதையைசொல்லித்தான் படம்போட முடியும். அதிலும் ஒரு கதை வந்துவிடும்.
ராஜநாயஹம்: கருத்து சுதந்திரம்?
நடேஷ்: கூவம். கடந்த சில நாட்களாக கூவத்தை நான் வினைச்சொல்லா பார்க்க ஆரம்பித்துவிட்டேன். “இப்படி கூவமா இருக்கியே, இப்படிக் கூவம் பண்றியே, ரொம்ப கூவம் பண்ணாதடா” இப்படி எல்லாம் சொல்லலாம் என்று தோன்றியது. அந்த அளவுக்கு நான் பிறந்ததில் இருந்தே அதுக்காக பணத்தை ஒதுக்குறாங்க. ஆனாலும், அது அப்டியேத்தான் இருக்கு. உலகத்திலேயே ஒரே ஒரு மூத்திர நதி என்றால் அது கூவம்தான். இல்லையா? இப்போது ஜுன் மாதம் ஆட்சி மாறிவிட்டது. இன்னும் 5 மாதம் இருக்கிறது. நவம்பர் மாதக் கடைசியில் திரும்பவும் வெள்ளம் வந்தால் என்ன ஆகும்? அதுக்கான முன்னேற்பாடா கூவத்த தூர்வாரும் வேலையை ஆரம்பிச்சுட்டாங்களா. தூர்வாறலைன்னா திரும்ப எல்லாரும் செத்துடுவாங்க. காசு பணம் இருக்கிறவன் தப்பிச்சு ஓடிடுவான். மத்தவங்கதான் மாட்டிப்பாங்க. நீருக்கு ஒரு கணக்கு இருக்கு. சமீபத்தில், நான் என்ன நினைத்தேன் தெரியுமா? இத்தனை வருஷமா என்னை அவமானப்படுத்திட்டீங்க. அதனால விட்டேனா பார்னு, அது இப்படி செஞ்சிடுச்சுன்னு தோணுது. கூவம் இருக்குற இடத்துலதான் மோசமான மழையும்வெள்ளமும் வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டுப் போச்சு. அது ஒருகான்செப்ட். இந்த இடத்தில் நீர் அப்டிங்குறது ஒரு கான்செப்ட்டா மாறிடுது. அது நல்ல கான்செப்ட்டாவும் இருக்கும். கெட்ட கான்செப்ட்டாவும் இருக்கும். அதை வைத்துக்கொண்டு சில வேலைகள் பண்ணலாம். உருவத்த மாத்தி, அதுக்குள்ள கதைகளைச் செருகி, லாஜிக்கை செருகி, ஆர்கியூமெண்டைச் செருகி நீங்க வேலைகளைச் செய்யலாம்.
ராஜநாயஹம்: உங்களோட பிரபலமான ஐன்ஸ்டீன் சுவர் ஓவியம் பற்றி?
நடேஷ்: அதுல ஒரு கதையம்சம் என்னன்னா, அது சுத்திச்சுத்தி வரும். அந்த காலத்துல ஹவர் கிளாஸ் (மணல் கடிகாரம்) என்று ஒன்று இருக்கும். அதில் உள்ள மணல் மேலிருந்து கீழே வருவதற்குள் ஒரு மணி நேரம் முடிந்திருக்கும். ஒரு மணி நேரத்தில் ஒரு பக்கத்தில் இருந்து, இன்னொரு பக்கத்துக்கு வரும் அந்த ஹவர் கிளாசை நான் கையில் வைத்துக் காட்டுகிறேன். பல ஹவர் கிளாசை வரைந்து, நேரம் ஓடிவிட்டதையும் ஓடிக்கொண்டிருப்பதையும்
(Time is Running Out) சொல்கிறேன். யாருக்குப் படம் வரைஞ்சு கொடுக்கிறோம் என்பதும் முக்கியம். அது ஒரு பல்கலைக்கழகத்தின் சயின்ஸ் பிளாக். ஐன்ஸ்டீனை பறவை மாதிரி வரைந்திருக்கிறேன். அவர் காலில் வந்து ஒரு கடிகாரத்தைப்பிடித்துக் கொண்டிருக்கிறார். கடிகாரத்தின் இரண்டு கையும் கடிகாரத்த விட்டு வெளியே போகுது. நேரம் போகுது என்பதை எப்படிக் காட்டுவது? காலால் போட்டுக் காட்டமுடியுமா? ஒரு கான்செப்ட்டை எப்படி படம்போட்டுக் காட்டுவது.அந்த கடிகாரத்தோட சின்னக் கையும் பெரிய கையும் வெளியே ஓடுவதுமாதிரி போட்டிருக்கிறேன். ஐன்ஸ்டீன் ஒரு பறவையைப்போல் ஏர சுமந்துக்கிட்டு அப்படியே ஆந்திராவோட விவசாயிகளை எல்லாம் காப்பாத்த, வந்து இறங்குறாரு.ரெண்டு மூணு ஐன்ஸ்டீன் போட்ருக்கேன். ஒரு ஐன்ஸ்டீன் கையக் கட்டிக்கிட்டு
007 மாதிரி இருக்காரு. இன்னொரு ஐன்ஸ்டீனின் தலையில் ஒரு வெள்ளை எலி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. அதிலேயே ஒரு பெண் மைக்ரோஸ்கோப் வழியாக எட்டுக்கால்பூச்சியை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். இதுமாதிரி பலimages அதில் இருக்கிறது.
ராஜநாயஹம்: அந்த எட்டுக்கால்பூச்சிகூட கலவியைப் பற்றியது என்று?
நடேஷ்: ஆமா. அது சம்மந்தப்பட்டதுதான். பெண்கள் ஆண்களைத் தின்று விடுவார்கள். நீ (ஆண்) இப்படியே இருந்தால், பெண்கள் ஆண்களைத் தின்றால்தான் வேலையே நடக்கும். இவங்களிடம் விட்டீர்கள் என்றால் உலகம் உருப்படாது.பெண்களிடம் விட்டால்தான் உலகம் தப்பிக்கும் என்று சொல்கிறேன். ஏன் எட்டுக்கால்பூச்சி என்றால் கலவிக்குப் பிறகு பெண் எட்டுக்கால்பூச்சி ஆண் எட்டுக்கால்பூச்சியைத் தின்றுவிடும் என்று சொல்வார்கள். எல்லா எட்டுக்கால்பூச்சியும் அப்படிப் பண்ணுதா? இல்லை ஒன்னு ரெண்டு மட்டும் பண்ணுதா? எல்லாம் பண்ற மாதிரி எனக்குத் தெரியலை. ஏன்னா, ஏகப்பட்ட எட்டுக்கால்பூச்சி இருக்கே. அவ்ளோ கதையும் அதுல இருக்கு, நீங்க அதைப் படிக்கணும். நான் ஒண்ணு வரைஞ்சு வச்சுருக்க, அதப் படிக்கிறவன் வந்து “ஏதோ பண்ணிருக்காம்பா. ஏதோ இருக்குப்பா’’ன்னு சொல்வான். சிலபேருக்கு ஒண்ணுமே புரியல. “என்னமோ போட்டு வச்சுருக்கான், பசு மாடும் காணோம், எருமை மாடும் காணோம், மூஞ்சியப் பாத்தா ஐன்ஸ்டீன் மாதிரி இருக்கு”ன்னு சொல்லிட்டுப் போய்டுவான். அவனுக்கு நேரம் இல்லை. அவனுக்கு நேரடியா கதை சொல்லணும். அப்படியே பழகியாச்சு. பொறுமை இருக்கிறவன் பச்ச நல்லாருக்கு, சிவப்பு நல்லாருக்குன்னு வேடிக்கை பார்த்துட்டு அதில் இருக்கிற கதையைப் படிச்சு சிந்தனைக்கு வேலை கொடுத்துட்டுப் போய்டுவான்.
ராஜநாயஹம்: 1984ல் ‘நீர்மை’ தொகுப்பின் அட்டைப்படத்தில் அப்பாவைவரைஞ்சிருப்பீங்க. கே.எம்.ஆதிமூலத்திடம் பின்னாலதா அந்தமாதிரி பாணியை பாத்ததா ஒரு பிரமை. ஆனந்த விகடன் கரிசல்காட்டு கடிதாசில கி.ராஜநாராயணனை அவர் வரையிறப்போ, எனக்கு இது நீர்மைல நடேஷ் வரைஞ்ச பாணிதானே! என்றுதான் நினைத்தேன்.
நடேஷ்: அப்படிச் சொல்ல முடியாது. ஒரு காலத்தில் cross hatching எனப்படும் பக்கத்து பக்கத்தில் அதிக கோடுகளைப் போடும் வேலைகளை அவரைப் பார்த்துதான் நான் பண்ணினேன். வேறு ஒருத்தரிடமிருந்து அவருக்கு வருவதில் எந்தத் தப்பும் இல்லை. சமுதாயத்துக்குள் அப்படி நடப்பது இயல்புதான்.
****************************************************************************************