Share

Nov 28, 2014

எரனூறு படம் பாத்திருக்கேன்



சென்னை எக்மோர் பாந்தியன் ரோட்டில் ஒரு மாடியில் ‘வேடனைத் தேடிய மான்’ அவினாசி மணி இயக்கத்தில் ஜெய் கணேஷ் தீபா நடித்த படம் புரொஜக்சன். வினியோகஸ்தர்களுக்காக.

இடைவேளையில் அவினாசி மணி ( பின்னாளில் பாண்டியராஜனின் மாமனார் ) பேசும்போது சொன்னார் : முந்தா நாள் ஒரு பையன் வந்தான். ‘அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை’ன்னு ஒரு பட பூஜைன்னு சொல்லி இன்விடேசன் கொடுத்தான்.  நான் தான் டைரக்டர்னான். நீ யாருப்பா. ஒன்ன நான் பாத்ததேயில்லையே. யாருட்ட அஸிஸ்டண்ட்டா இருந்தே’ன்னு கேட்டேன்.
‘ நான் யாருட்டயும் அஸிஸ்டண்டாயிருந்த்தில்ல சார். ஆனா நான் ஒரு எரனூறு படம் பாத்திருக்கேன். அதனால எப்படி ஒரு படம் எடுக்கனும்னு எனக்கு நல்லாத்தெரியும்’னு சொன்னான்.
பாருங்க! நாங்கல்லாம் இருபத்தஞ்சு வருடமா சினிமாவில பழம் தின்னு கொட்டை போட்டுக்கிட்டு இருக்கோம். இப்படி 200 படம் பாத்ததல்லாம் ஒரு குவாலிஃபிகேசன்னு சொல்லிக்கிட்டு எவனெல்லாமோ படம் எடுக்க வரான்.ஒரு பத்து படமாவது அஸிஸ்டண்ட்டா ஒர்க் பண்ணவேண்டாமா?” அவினாசி மணி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
....
பல மாதங்களுக்குப்பின் கிருஷ்ணவேணி தியேட்டரில் ரொம்ப பழைய படம் ‘பாசமலர்’ செகண்ட் ஷோ பார்க்கப்போயிருந்தேன். என்னுடன் ட்ராட்ஸ்கி மருதுவின் தம்பி திலகர் மருதுவும், இன்னொரு கவிஞரும் வந்திருந்தனர். திலகர் மருது அப்போது பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் திரை இயக்குனர் கோர்ஸ் படித்துக்கொண்டிருந்தான்.
கூட வந்திருந்த கவிஞர் அப்போது காரைக்குடி நாராயணனின் ஒரு தேங்காமூடி (!) படத்தில் உதவி இயக்குனர்.
(பின்னால் திலகர் மருதுவும் அந்த கவிஞரும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றினார்கள்!)
கிருஷ்ணவேணியில் மூன்று டிக்கட் ( நான் தான்!) எடுத்து விட்டு  பால்கனிக்கு ஏறப்போகும் நேரம் கவிஞர் “ ராஜநாயஹம்! உங்களுக்கு ஒரு இண்ட்ரஸ்டிங்க் கேரக்டரை இன்ட்ரட்யூஸ் செய்யப்போறேன்!சுந்தர்ராஜன்!சுந்தர்ராஜன்!” 
‘வாய்பொளந்தான்’ என்ற பட்டப்பெயருக்குப் பொருத்தமாக ஒரு ஆள் பேண்ட், முழங்கைக்கு மேல் மடித்து விடப்பட்ட முழுக்கை சர்ட்டுடன் எங்களை நோக்கி நடந்து வந்தார்.
“ராஜநாயஹம்,இவர் சுந்தர்ராஜன்! ‘அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை’ன்னு ஒரு படம் டைரக்ட் பண்றார். 
எனக்கு அவினாசி மணி சொன்ன விஷயம் உடனே ஞாபகம் வந்தது!

கவிஞர் “படம் எந்த அளவுக்கு வந்திருக்கு சார்?”
சுந்தர்ராஜன் “ஷூட்டிங் போகனும்... ஃபைனான்ஸ் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன்.”
அவரும் பால்கனியில் எங்களுக்கு பின் வரிசையில் அமர்ந்தார்.
கவிஞர் என்னிடம் “ சும்மா பூஜைய போட்டுட்டு டைரக்டர்னு சொல்லிக்கிட்டு திரியிறாரு. பாக்யராஜோட ஃப்ரண்டுன்னு எல்லாருட்டயும் சொல்றாரு. பாக்யராஜ் கோபமாகி ‘ என்ன அவன் என் பேரை ஃபீல்டில எல்லார் கிட்டயும் சொல்லிட்டுத் திரியுறானாம்.’ ன்னு எரிச்சல் பட்டு சொல்லிக்கொண்டிருக்கிறார்”

திரும்பி மீண்டும் சுந்தர்ராஜனைப் பார்த்தேன். எனக்கு எப்படியோ இருந்தது. சினிஃபீல்டில இப்படி இளக்காரமாக கெட்டபெயர் வாங்கிவிட்டவர் எப்படி சாதிக்கப்போகிறார்?

இரண்டே வருடத்தில் ‘பயணங்கள் முடிவதில்லை’ சூப்பர் ஹிட் படம் கொடுத்தார் R.சுந்தர்ராஜன்!
 
அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை படத்தை அப்புறம் கே.ஆர்.ஜி தயாரித்தார்.

நான்கு வெள்ளி விழா படங்களை ( பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், நான் பாடும் பாடல், ராஜாதி ராஜா )குறுகிய காலத்தில்
கொடுத்து தன் பட பாடல்களுக்காகவும் பிரபலமானார் R.சுந்தர்ராஜன்!

 இனி டைரக்டர் பருப்புல்லாம் வேகாதுன்னு தெரிந்தவுடன் பின்னால் கௌரவமே பார்க்காமல் நடிகராகி விட்டார்!

1 comment:

Note: Only a member of this blog may post a comment.