அதிகாலையில் எழுந்து ஐந்து மணி போல தி.நகர் மீராசாஹிப் சாம்பரில் நான் தங்கியிருந்த அறையிலிருந்து வாக்கிங் கிளம்புகிறேன்.
கமல் ஸ்ரீதேவி படம் போஸ்டர்! ஓஹோ!கே.பாலச்சந்தரின் 'வறுமையின் நிறம் சிவப்பு' ரிலீஸ்! கட்டாயம் பாக்கனுமே...
பனகல் பார்க் தாண்டி பாண்டிபஜார் ராஜகுமாரி தியேட்டர் தாண்டி திரும்பி சாலையை க்ராஸ் செய்து பாண்டி பஜார் சாந்தாபவன் வரும்போது ஆறு.
பெருமாள் நாயுடு, சுப்பிரமணிய ஐயர் இருவரும்
"ராஜநாயஹம்! "
அவர்களையும் அழைத்துக்கொண்டு சாந்தாபவன் காபி சாப்பிட உள்ளே நுழையுமுன் ஒரு சின்ன பரபரப்பு.
சாந்தாபவனிலிருந்து தலையில் துண்டால் தலைப்பா கட்டிக்கொண்டு வேட்டியை மடித்துக்கட்டி ஒருவர் வெளியே வருகிறார்.எவ்வளவு பெரிய மூக்கு!
அவர் தன் அடையாளத்தை கொஞ்சம் மறைக்க விரும்பித்தான் தலைப்பா கட்டியிருந்தார்.
ஆனால் இந்த தலைப்பா கூட மெட்ராஸில் தேவையில்லை.
பெருமாள் நாயுடு சொல்கிறார்: "கன்னட நடிகர் ராஜ்குமார்! பெங்களுரில் இவர் இப்படி நடந்து போகமுடியுமா!அங்க இவரை தெய்வமா கொண்டாடுற கன்னடர்கள் மத்தியில சுதந்திரமா ஒரு ஓட்டல்ல காபி சாப்பிட்டுட்டு போகறதை நினைச்சுப்பாக்க முடியுமா!"
சுப்பிரமணிய ஐயர்: " அடிக்கடி அதிகாலை இப்படி சாந்தா பவன் வந்து காபி சாப்பிட்டு விட்டுப் போவார்.''
மெட்ராஸ் கோடம்பாக்கம் ட்ரஸ்ட் புரத்தில் தான் ஆயிரத்துத்தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் சொந்த வீடு வாங்கி வாழ்ந்து வந்தவர் ராஜ்குமார்.அப்போது பெங்களூரில் முதல் முதலாக அவர் வாங்கிய சொத்து ஏ.வி.எம்.செட்டியாரின் 'பேலஸ் அப்பர் ஆர்கேட் ' பங்களா.
நடிகர் என்.டி ராமாராவ் கூட அப்போது மெட்ராஸில் தான் ஜாகை.
கொல்ட்டிகள் ஆந்திராவில் இருந்து மெட்ராஸ் வந்தால் ராமாராவ் வீட்டு வாசலில் நின்று ஒரு கும்பிடு (தேவுடு!) போட்டு விட்டுத்தான் போவார்கள்.
-----------------