Share

Nov 18, 2012

சிவாஜி கணேசன்

             
திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை, மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை, ’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை. ’ செல்வம்’ படத்தில் ’காற்றிலே நீந்தும் கொடியிடை என் கைகளில் தவழட்டுமே’ என்ற வரி முடிந்ததும் ஒரு நடை.
’யாருக்கு மாப்பிள்ளை யாரோ!அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!’பாடலை ரசித்துக்கொண்டே ஊனமுற்ற காலோடு ஒரு அழகு நடை.
நடப்பதில் கூட இவ்வளவு வெரைட்டி காட்டி விட முடியுமா!!

பராசக்தி மூலம் புயலாக வீசி,
மனோகராவில்கொந்தளித்து ’குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே’ என்று சீறிய, சீரிய கலைஞன்.
உத்தம புத்திரனில் விந்தையான வேந்தனாக காட்டிய ஸ்டைல்!

 ’ராஜா ராணி’ படத்தில் சேரன் செங்குட்டுவனாக ஒரு lengthy single shot ல் மடை திறந்த வெள்ளம் போல  பேசிய  அடுக்கு மொழி வசனங்கள்.
 ”காவிரி கண்ட தமிழகத்துப் புதுமணலில் களம் அமைத்து சேர,சோழ பாண்டி மன்னர், கோபுரத்து கலசத்திலே யார் கொடி தான் பறப்பது என்று இன்று போல் அன்றும் போர் தொடுத்துக்கொண்டிருந்த காலமது!”

எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’
என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்.

குறவஞ்சி படத்தில் “ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள்” என்ற குமுறல்.

வணங்காமுடி படத்தில் ’பாடுடா’ என்று நம்பியார் அதிகாரமாக தங்கவேலுவிடம் வற்புறுத்துவார்.தங்கவேலு திகைத்து தவிக்கும்போது நம்பியார் ஒரு அடி பலமாக  கன்னத்தில் அறைவார். அடுத்த நொடியில் சிவாஜி பாடுவதாக  ” பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் பயன் தருமா- ஓங்காரமாய் விளங்கும் நாதம்” இதில் சிவாஜி கணேசனின் தொண்டை நரம்பு புடைக்கும். எந்த பாடலாயிருந்தாலும் தானே பாடுவதான பிரமையை உண்டாக்கிய நடிகர்.


தமிழர்கள் பாக்கியசாலிகளல்லவா! தமிழ் திரை கண்ட அசுர நடிகன் எங்கள் சிவாஜி கணேசன்.

கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய
“அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நாம் ஆடி வரும் ஓரங்கம்
உடல் நான் அதில் உரம் நீ
என உறவு கண்டோம் நேர்மையாய்
பகல் இரவாய் வானத்திலே கலந்து நின்றோம் பிரேமையால்.............
 ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ  வா என் பக்கம்” ஆஅ ஆஅ ஆ...

இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.

”அன்பாலே தேடிய ” என்று அடி வயிற்றில் இருந்து குரல் எடுப்பது போல் பாவனை செய்வார்.

சபாஷ் மீனா ”காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலம் தானோ”

”மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையின் பொன்வண்ணம் கண்டான்”
இந்தப் பாடல் காட்சியை பார்க்கும்போது,அவர் வாயசைக்கும் நேர்த்தி பற்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது.
கைத்துப்பாக்கியை சுடுவதற்குத் தானே யாரும் பயன்படுத்த முடியும். எந்த நடிகனும் எத்தனை ஸ்டைலாக துப்பாக்கியைப்பிடித்தாலும் நோக்கம் சுடுவதாகத்தானே இருக்கும்.ஆனால் ஆவேசமாக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்து,பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டு,சுட வந்த கைத்துப்பாக்கி கொண்டு,கண்ணீரை துடைக்க முற்பட்ட ஒரே நடிகன் இந்த உலகத்திலேயே சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே! என்ன ஒரு கவிதாப்பூர்வம்!


”காதலிக்கிறேன் என்றாள். பின் கல்யாண தேதி நிர்ணயித்தாள்.அதன் பின் காத்திருக்கிறேன் உங்களுக்காக என்று கை தேர்ந்த நாடகமாடினாள்.முடிவில் வாக்குத்தவறி விட்டாள்.வந்த வழியே செல்லுங்கள் என்றாள்.நடக்காது நம் கல்யாணம் என்று கூறி விட்டாள். கடைசியாகச் சென்று பார்த்தால் கல்நெஞ்சக்காரி கண்ணுறங்குகிறாள்!நம்பிக்கைக்கு துரோகமா? கல்யாணம் என்று மோசமா? கடைசியில் கண்ணுறக்கமா? ”ஆவேசமான கணேசனின் கணீர் என்ற குரல்...
 இடி.. ..மின்னல்! இடி.. மின்னல்!
’ ராதா!ராதா!ராதா’என்ற கதறல்!
தொடர்ந்து டி.எம்.எஸ் பாடல்
’உன்னைச்சொல்லி குற்றமில்லை
என்னைச்சொல்லி குற்றமில்லை!
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
மயங்கவைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி’

இன்றைக்கு அடிடா அவளை!ஒதடா அவளை!...
why this கொலவெறி..... என்று  வந்த காட்சிகளுக்கெல்லாம் மூலம் இந்த ’குலமகள் ராதை’ தானே! 

ஒரே நேரத்தில் உடலின் அத்தனை அங்கங்களையும் இயக்கி நடிக்கவைத்த கலைக்குரிசில் கணேசன்!

’ஐயா பாரதி... போய்விட்டாயா’ என்று  கலங்கிய கப்பலோட்டிய தமிழன்.

’நான் எங்க போவேன்..எனக்கு யாரைத்தெரியும்..மாமா நிசமாவே போவச்சொல்றீங்களா மாமா!’ என்று தேம்பிய வெகுளி ரங்கன்.


’கண்ணில் தெரியும் வண்ணப்பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’ - தவித்த பலே பாண்டியா

’சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்’ என்ற வரிகளுக்கு முகத்தின் குளோஸ் அப் மூலம் அர்த்தம் சொன்ன கலை மேதை.

’நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா!
சட்டி சுட்டதடா கை விட்டதடா’

’நவராத்திரி’ நவரச நாயகன்.
’புதிய பறவை’ ஜென்டில்மேன்.

ஸ்டைலாக சிகரெட் குடிப்பதில் எவ்வளவு வகைபாடு காட்டலாம்?’சாந்தி’ படத்தில் -”யார் அந்த நிலவு!ஏனிந்த கனவு!”

சிவாஜி மட்டும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் திருவிளையாடல் தருமி பாத்திரத்தில் நாகேஷ் தூள் கிளப்பி கலக்கியிருக்கமுடிந்திருக்குமா??

’நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் அரிதாரம் பூசாமலே ‘முத்துக்களோ கண்கள்!தித்திப்பதோ நெஞ்சம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை’ என்ற நெகிழ்ச்சி!

ரிலாக்ஸ்டாக கலாய்த்த ’கலாட்டா கல்யாணம்’

’மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்’

உயர்ந்த மனிதன் அவருக்கு 125 வது படம். 124 படங்களுக்குப்பிறகு புதிதான ஒரு பாத்திரத்தை எப்படி சித்தரிக்க முடிந்தது என்பதில் இருக்கிறது கணேசனின் சாதனை வீச்சு.

சுருக்கமாக ’செல்லும்’ இந்த வார்த்தைகளோடு கணேசன் நடித்த படங்களின் அத்தனைக்காட்சிகளும்  முழுமையாக விரிகிற அதிசயம் நிகழ்கிறது.

கிருஷ்ணன் பஞ்சு, எல்.வி.பிரசாத், பி.ஆர்.பந்துலு, பீம்சிங், ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், கே.எஸ்.ஜி, ஏ.சி.திருலோக்சந்தர் போன்ற இயக்குனர்களின் படைப்புகளில் விதவிதமான அவதாரங்கள் எடுத்த மகத்தான கலைஞன்!


1960களில் மேக்கப் இல்லாமல் வேட்டி சட்டை போட்டு நெற்றியில் விபூதி குங்குமம் இட்டு பொது நிகழ்வுக்கு வரும்போது முகவசீகரம்.
அந்த ஸ்பெஷல் கண்கள்! அந்த ஸ்பெஷல் மூக்கு!
அந்த அடர்ந்த இயற்கையான கேசம்! 70 வயதில் கொஞ்ச காலம் குடுமி கூட வைத்துக்கொண்டிருந்தார்!
ஃபுல் சூட் கனகச்சிதமாக பொருந்திய கணவான் கணேசன்.

ஒரு கதாநாயகன் அந்தக்காலத்தில் நினைத்தே பார்க்க விரும்பாத ‘அந்த நாள்’தேசத்துரோகி.
’பார் மகளே பார்’ வரட்டு கௌரவ,அகங்கார, பணத்திமிர்.
நண்பனையே கொல்லத்துணியும் ’ஆலயமணி’ பொறாமை.
 இமேஜ் பற்றிய பிரக்ஞை கிஞ்சித்தும் இல்லாதஒரே ஹீரோ நடிகர்.
ராமன் எத்தனை ராமனடி படத்தில் மாஸ்டர் பிரபாகர் நடிகர் திலகத்தைப் பார்த்து ’டே சாப்பாட்டுராமா’ என்பான்!


ராஜராஜ சோழன் படத்தை விட்டுத்தள்ளிவிடலாம்.ஆனால் அப்படத்தில் டி.ஆர் மகாலிங்கம் இவர் வீசும் வார்த்தைகளை எடுத்துப்பாடும் காட்சி.

’தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்
அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள்.
தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள்
தரணியெல்லாம் புகழ் மணக்க தாயென வந்தாள்

மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும்
திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்
அணிமுத்து மாலை எட்டுத்தொகையாகும்
அவன் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும்

புலவரெல்லாம் எழுதி வைத்த இலக்கியங்கள்
பொன்மேனி அலங்கார சீதனங்கள்...........’

’ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல’ தங்கபதக்கம் சௌத்ரி.

அவருடைய 24 வயதில் ஆரம்பித்து கடைசி வரை, முதுமை வியாதிகள் அவரை சித்திரவதை செய்த போதும் சிவாஜி கணேசன் ஷூட்டிங் என்றால் சம்பந்தப்பட்ட யூனிட் ஆட்கள் பதறி அடித்துக்கொண்டு காலை ஆறு மணிக்கே தயாராக வேண்டும்.முழு மேக்கப்புடன் ரெடியாக ஸ்பாட்டில் ‘என்னடா ! உங்களுக்கு இன்னும் விடியலயா?’ என்று குறும்பு பேசும் சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்.

நேரில் சந்திக்கிற மனிதர்களை தன் கதாபாத்திரங்களுக்கு பிரதிபலிப்பார்.

’ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு பாடலில் கடைசி ஸ்டான்சாவில் கிருபானந்த வாரியார் (இந்தப் பாடலில் அவருடைய நடை மற்றொரு விஷேசம்) ..கடலை சாப்பிடுகிற அழகு.

திருவருட்செல்வர் ‘அப்பர்’ பாத்திரத்திற்கு காஞ்சி பரமாச்சாரியாள்

காவல் தெய்வம் பட கௌரவ வேடத்திற்கு மதுரை செண்ட்ரல் தியேட்டர் கண்ணாயிரம்

 தங்கப்பதக்கம் சௌத்ரி பாத்திரத்திற்கு வால்டர் தேவாரம்

வியட்நாம் வீடு சுந்தரம் சொல்கிறார்:’பிரிஸ்டிஜ் பத்பனாய்யர் பாத்திரத்திற்கு இந்தியா சிமெண்ட் நாராயணசாமி.
’கௌரவம்’பாரிஸ்டர் ரஜினிகாந்த் தோற்றத்திற்கு டி.எஸ் கிருஷ்ணா( டி.வி.எஸ்).
பாரிஸ்டர் பேசும் பாணி பிரபல வக்கீல் கோவிந்த் சுவாமிநாதன்’

1994ல் ஜெமினியோடு நான் ஒரு சில மணி நேரம் இருந்த போது- 
டி.வி யில் ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் பென்சில் சீவும் காட்சி-அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன் என்னை விட எட்டு வயசு இளையவன் தான்...ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”

சிவாஜி கணேசன் மரணம் நிகழ்ந்த போது செத்த உடலைப் பார்த்த பிரபலங்கள்,பொதுமக்கள் பெரும்பாலும் வாய் விட்டுப் பேசினார்கள்.
“ அய்யா நீ தானே பிறவிக்கலைஞன்!” ”உனக்குமா சாவு” “உன் சாதனை இனி எவனாலும் முடியாது”
 உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்போது கூட மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகன் ஆவேசத்துடன் ”இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!” என்று ரஜினிகாந்த், வடிவேலுவைப் பார்த்து கத்தினானே!

........


http://rprajanayahem.blogspot.in/2008/08/ok-young-man-i-am-leaving.html








15 comments:

  1. ஈடு இணை இல்லாத நடிகர்...

    எத்தனை எத்தனை ரசிக்க வைக்கும் பாடல்கள்...

    ரசிக்க வைக்கும் பகிர்வு... நன்றி...

    ReplyDelete
  2. தலைமுறை தவறி பிறந்ததால் செவாலியேவை நான் அறிந்ததில்லை.ஆனால் என் தகப்பனார் அவரின் ஆழ்ந்த ரசிகன் திரையில் அவர் அழுதால் இவர் முகத்தை மறைக்கும் அளவுக்கு.என் தகப்பனார் இவ்வளவு பொருத்தமான வார்த்தைகளை உபயோகிக்காதாலோ என்னவோ நான் அவரையும் அவர் போற்றும் உன்னத கலைஞனையும் பரிகாசித்தரிக்கறேன்.உங்கள் எழுத்து எனக்கு குற்ற உணர்வை துாண்டிவிட்டது.உண்மை கலைஞனை இனி தேடி அறியப்போகிறேன் நன்றிகள் பல

    ReplyDelete
  3. எம்.ஜி.ஆரைப் பற்றி நீங்கள் எழுதிய பதிவுக்கு உவந்து பின்னூட்டம் இட்டேன் என்று ஞாபகம். சிறுவயதில் அவருக்கு நான் ரசிகன். உவந்ததில் வியப்பேதும் இல்லை. இப்போது நீங்கள் சிவாஜி கணேசனுக்கு, எம்.ஜி.ஆருக்கு எழுதியதை விட இரண்டு மடங்கு நீஇளமா எழுதி இருக்கிறீர்கள்! நான் என்ன சொல்லட்டும்?

    இதற்கும் இதற்குமேலும் தகுதியானவர்தான் 'நடிகர் திலகம்'! வாழ்க!

    ReplyDelete
  4. அவரின் ஒரு எளிய ரசிகன் என்ற வகையில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.தமிழ்சினிமாவிற்கு பெருமை சேர்த்த மேதை அவர்.என்னைப்போன்ற பலரின் ரசனையை உயர்த்தியவர்.அவர் இங்கு பிறந்தது நம் பேரதிர்ஷ்டம்;அவருடைய துரதிருஷ்டம்.

    ReplyDelete
  5. Tamil Nadu mattumalla, India yavey perumai padavendum. Sivaji pondra kalaignai peruvatharkku.

    ReplyDelete
  6. a wonderful tribute. i could not wait to hear அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம். truly the chemistry between sivaji and padmini is bursting to firecrackers and spinwheels. here is for the whole world to share...
    https://www.youtube.com/watch?v=rO0uDgO2gz0

    ReplyDelete
  7. ராஜநாயகம் சார்,
    நீங்கள் genuine என்று சொன்னதை நிரூபித்து விட்டீர்கள். அந்த பிறவி மேதை, கடவுளே பூமிக்கு வந்து நம்மிடையே வாழ்ந்தது போல் வாழ்ந்து நம்மை பெருமை படுத்தி சென்று விட்டார். அத்தனை உலக படங்களையும் பார்த்தும், அத்தனை இலக்கியங்களையும் கரைத்து குடித்தும்,என்னை இன்றும் அதிசய படுத்தி கொண்டிருக்கும் ,தமிழனின் பெருமையை , எங்களுக்கு தெரிந்ததையும், நாங்களே ரசிக்குமாறு வடித்ததற்கு நன்றி.நன்றி.நன்றி.
    எனக்கும் ஞான தந்தை அசோக மித்திரன் தான்.

    ReplyDelete
  8. பொதுவாகவே தமிழ்நாட்டில் அறிவிஜீவிகள் என்று காட்டிக்கொள்வதற்காகவே சிவாஜி என்னும் மேதையை குறை சொல்லி , கிண்டல் செய்து எழுதுவது வழக்கம் .. எத்தனை பெரிய மேதையாக இருந்தாலும் வெகுஜன மக்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட எதையும் மறுத்துப் பேசினால் தான் தன்னை தனித்துவ அறிவிஜீவியாக காட்டிக்கொள்ள முடியும் என்ற போக்கு தான் இதற்கு காரணம் ..அதில் தாங்களும் விழாமல் தனித்துவம் காத்ததற்கு நன்றி.

    ReplyDelete


  9. நடிகர் திலகத்தின் விருந்தோம்பல் - மோகன்லால் உணர்ச்சிப் பேட்டி

    http://cdjm.blogspot.in/2007/11/blog-post.html

    ReplyDelete
  10. நடிப்புன்னா சிவாஜி. சிவாஜின்னா நடிப்பு. பெரியார் வெச்சார்யா அவருக்கு சிவாஜிங்குற பேர. அதக் கடைசி வரைக்கும் காப்பாத்துனாரே. அவரச் சொல்லனும்.

    ஏதோ மிகை நடிப்பாம். அத அவர் நடிக்கிறார்னு சொல்றவனுகளுக்குத் தெரியாது நடிப்புன்னாலே மிகைன்னு.

    எத்தன நடிகர்கள் சிவனா நடிச்சாங்க. வேற யாரையாச்சும் மக்கள் ஏத்துக்கிட்டாங்களா? இல்லையே. சிவாஜி மாதிரி இல்லைன்னு ஒதுக்கிட்டாங்களே.

    வ.உ.சியின் மகன் கப்பலோட்டிய தமிழன் படம் பாக்குறப்போ “ஐயோ அப்பா”ன்னு கதறுனாராம். இதை விட என்னய்யா பெருசா வேணும்.

    தேசிய விருதாம் தேசிய விருது. மானங்கெட்ட விருது. தில்லானா மோகனாம்பாளுக்குப் பதிலா ரிச்சாக்காரனை அனுப்புன அரசியல்வாதிகள் கொடுக்குற விருது. எம்.எஸ்.விக்கும் கொடுத்ததில்லை. சிவாஜிக்கும் கொடுத்ததில்லை. உண்மைக் கலைஞனுக்கு ரசிகன் தான் விருது.

    பெரிய அரசியல் நடிகர் இறந்தப்போ சென்னைக்கு ஒரு கூட்டம் வந்தது. அப்போ நடந்தது ஊருக்கே தெரியும். அதையும் இதையும் ஒடச்சி.. கட்டுக்கடங்காம இருந்தது. ஆனா அந்த அளவு கூட்டம் இவருக்கும் வந்ததுய்யா. கட்சிக்காரனா? அவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொழச்சவனா? காக்கா பிடிக்க வந்தவனா? இல்ல... ரசிகர்கள். எவ்வளவு அமைதியா.. ஊர்வலம் போனாங்க. அங்க இருக்குய்யா சிவாஜியின் பெரும.

    இன்னும் ஆயிரம் சொல்வேன். இந்தப் பதிவை எழுதுன ஒங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றி. வாழ்க. வாழ்க.

    ReplyDelete

  11. ராகவன்!
    தில்லானா மோகனாம்பாள் 1968ல் வந்த படம். ரிக்‌ஷாக்காரன் 1971ல் வந்த படம்.

    ReplyDelete
  12. ஆமா சார். ரெண்டும் வெவ்வேற வருசம். தேசிய விருதுக்கு அனுப்புற படங்களை மாநில அரசு (நியமிக்கும்) குழு செய்யுதுன்னு கேள்விப்பட்டேன். ரிக்‌ஷாக்காரனுக்கு எம்.ஜி.ஆர் தேசிய விருது வாங்குனாரே சார். தில்லானா மோகனாம்பாளை அனுப்புறதுக்கு என்ன வந்தது சார்? எல்லா வகையிலும் நம்ம உள்ளூர் படம். :( என் புரிதலில் எதுவும் தப்பு இருந்தா சொல்லுங்க. தெரிஞ்சிக்கிறேன். :)

    ReplyDelete
  13. உங்கள் உணர்வு நியாயமானது தான்.

    ReplyDelete
  14. இதுவரையில் நான் படித்ததில் பிடித்தது .... வாழ்க ஐயா

    ReplyDelete
  15. காலம் கடந்து படித்த பதிவு ..இப்பொழுதாவது படித்தேனே...அருமை அருமை ..

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.