Share

Nov 6, 2012

நடிகர் ரவிச்சந்திரன்

அவர் காலத்தில் வந்த மற்ற நடிகர்கள் மிகுந்த சிரமப்பட்டுத்தான் சினிமாவில் கதாநாயகனாக ஆக முடிந்தது.ஆனால் ரவிச்சந்திரன் மட்டும் முழுக்க அதிர்ஷ்டம் காரணமாக காதலிக்க நேரமில்லை(1964) படத்தில் அறிமுகமானார்.
 
காதலிக்க நேரமில்லையை அடுத்து இதயக்கமலம்(1965)அதேகண்கள்(1967), நான்(1967), மூன்றெழுத்து(1968) போன்ற கலர்ப்படங்களில் நடித்து கலர் கதாநாயகன் என்று கிராமத்தார் மத்தியில் பிரபலம்.
நடிகை காஞ்சனா ரசிகர்களால்  கலர் காஞ்சனா என்றே  அழைக்கப்பட்டார்.

ஜெய்சங்கர்-ரவிச்சந்திரன் இரண்டு பேரும் அன்றைக்கு இருமை எதிர்வுகள்!

ஜெய்சங்கருக்கு  நடிக்க வந்து  இரண்டு வருடத்தில் ஒரே ஒரு படம்  ‘பட்டணத்தில் பூதம்’(1967) தான் அப்போது கலர் படம்.
அன்று வண்ணப்படம் என்பது கொஞ்சம் அபூர்வம்!

காதலிக்க நேரமில்லை, இதயக்கமலம் படங்களுக்குப் பிறகு இவரை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி ஒரு குழப்பம் இயக்குனர்களுக்கு நிச்சயம் இருந்திருக்கும்.ராமண்ணாவின் படம் குமரிப்பெண்(1966) ரிலீஸ். ராணி பத்திரிக்கை ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு ”ரவிச்சந்திரனா? ராமச்சந்திரனா?” என்று எம்.ஜி.ஆர் படம் பார்த்த பரவசம் ஏற்பட்டதாக எழுதி விட்டது!
அப்புறம் என்ன?

காதலிக்க நேரமில்லை, இதயக்கமலம், அதே கண்கள், நான் ஆகிய படங்கள் எப்போது பார்த்தாலும் சலிக்காதவை.
இதயக்கமலம் சீரியஸ் படம் தான்.
ஆனால் பி.பி.ஸ்ரீநிவாஸின்
 “ நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ”
தோள் கண்டேன், தோளே கண்டேன்”
பி.சுசிலாவின் மோகன ராக “ மலர்கள் நனைந்தன பனியாலே” போன்ற அற்புதமான பாடல்கள். எல்.வி.பிரசாத் இயக்கம். கே.ஆர்.விஜயா தான் நடித்த படங்களில் பிடித்த படமாக இதயக்கமலத்தை தான் சொல்வது வழக்கம்.


மதராஸ் டூ பாண்டிச்சேரி(1966),நினைவில் நின்றவள்(1967), உத்தரவின்றி உள்ளே வா (1971)முழு நீள நகைச்சுவைப் படங்கள்.
1971 வருடம் தான் ஜெய்சங்கருக்கு இரண்டாவது வண்ணப்படம் ரவிச்சந்திரனுடன் நடித்த ’நான்கு சுவர்கள்’, மூன்றாவது வண்ணப்படம் ’வீட்டுக்கு ஒரு பிள்ளை’! ஆனால் பட வாய்ப்புகள், வருமானம்,அந்தஸ்து போன்ற விஷ்யங்களில் ஜெய்சங்கர் தான் கிங். ரவிச்சந்திரன் அறிமுகமாகி ஒரு வருடம் கழித்து 1965ல் இரவும் பகலும் மூலம் நடிக்க வந்தவர் ஜெய் என்றாலும் இவர்கள் சேர்ந்து நடித்த நாம் மூவர், கௌரி கல்யாணம்,காதல் ஜோதி, நான்கு சுவர்கள்,அக்கரைப்பச்சை போன்ற படங்களில் முதல் கதாநாயகன் ஜெய்சங்கர் தான்.டைட்டிலில் முதல் பெயர் ஜெய்சங்கர் தான்.

அதே போல ஜெய்சங்கர் வில்லன் ரோல் செய்து முரட்டுக்காளை யிலிருந்து வேறு நடிகர் ஆன பின்னும் ரவிச்சந்திரன் அதே பாணியில் மாறிய போதும் ஜெய்சங்கருக்கு தான் அதிக வாய்ப்புகள் வாய்த்தன.
வில்லனாக ரவிச்சந்திரன் ஊமை விழிகளில் நடித்ததை மறக்கமுடியாது.அதே படத்தில் ஜெய்சங்கருக்கு குணச்சித்திர வேடம்- பி.பி.எஸ் பாடல் “தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வை நினைக்கலாமா?”


காதலிக்க நேரமில்லை படத்தை 100 தடவை சித்ராலயா கோபுவும்,ரவிச்சந்திரனும் பார்த்தார்களாம்.
முத்துராமன்,ஏ.வி.எம்.ராஜன் போல கடுமையாய் போராடாமல், ஜெய்சங்கர் போல சிரமப்படாமல் ஒவர் நைட் ஹீரோ வான பிரமிப்பு ரவிச்சந்திரனை விட்டு கடைசி வரை நீங்கவில்லை.



சிவாஜியுடன் மோட்டார் சுந்தரம் பிள்ளை,கவரிமான்
ஜெமினி கணேசனுடன் காவியத்தலைவி,மாலதி,சினேகிதி, ரங்கராட்டினம்,
ஏ.வி.எம் ராஜனுடன் ’ஏன்’ ’ஜீவநாடி’, ’புகுந்த வீடு’.

நடன அசைவுகள் ரவிச்சந்திரன் நன்றாகச் செய்வார்.

’கண்ணிரெண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா’

‘பூவைப்போலே சூடவா போர்வையாலே மூடவா
காதல் என்றால் என்னவென்று கண்ணை மூடி காணவா.....
ஆசை வெள்ளம் போகும்போது ஓசை கொஞ்சம் கேட்குமோ’

டப்பாங்குத்து,குத்தாட்டம்

’கண்ணுக்கு தெரியாதா நெஞ்சுக்குப் புரியாதா’

’பொம்பள ஒருத்தி இருந்தாளாம் பூதத்தை பாத்து பயந்தாளாம்.’

’ராஜா கண்ணு போகாதடி நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி’


சண்டைக் காட்சிகளில் உணர்ச்சி வசப்பட்டு அடித்தே விடுவார் என்று ஸ்டண்ட் நடிகர்கள் சொல்வார்கள்.



இவருடைய ஸ்டைல் ரசிகர்களுக்கு சலித்த போது ‘பொட்ட ஸ்டைல்’ என்று கிண்டல் செய்யப்பட்டது.

ரவிச்சந்திரன் நடித்த படங்கள் இந்தியில் ரீமேக் ஆகியிருக்கின்றன்.
காதலிக்க நேரமில்லை இந்தியில்’ப்யார் கி ஜா’ -சசிகபூர், (முத்துராமன் ரோலில் கிஷோர்குமார்)
 ’நான்’ இந்தியில் ’வாரிஸ்’-ஜிதேந்திரா,
மதராஸ் டூ பாண்டிச்சேரி இந்தியில் ’பாம்பே டூ கோவா’-அமிதாப் பச்சன்!


ரவிச்சந்திரன்முதல் மனைவி விமலாவுக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள்.
ஷீலா இரண்டாவது மனைவியான பின் ’மஞ்சள் குங்குமம்’(1973) ரவிச்சந்திரன் அவர் டைரக்‌ஷனில் நடித்தார். எஸ்.பி.பி யின் ‘என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ சொல்ல நாணம் வந்ததோ சொல்லாமல் மறைத்தாளோராதா ராதா ராதா’ பாடல் இந்தப்படத்தில்.
ஷீலாவுக்கு ஒரு மகன்.ஜார்ஜ்.இந்த உறவு நீடிக்கவில்லை.
ஷீலாவின் உறவு காரணமாக ரவிச்சந்திரன் அன்று சில மலையாளப்படங்களில் கதாநாயகனாக நடிக்க முடிந்தது. முத்துராமனுக்கோ,ஜெய்சங்கருக்கோ,ஏவிஎம் ராஜனுக்கோ மலையாளப்பட கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்ததில்லை.


 ரவிச்சந்திரனின் வாரிசுகள் ஜார்ஜும்,ஹம்ஸவர்த்தனும் சினிமாவில்  முயற்சி செய்தும் நிலைத்து நிற்க முடியவில்லை.
ஹம்ஸவர்த்தனை திரையில் நிறுத்த பெரு முயற்சி ரவிச்சந்திரன் செய்தார். இவரே மகனுக்காக படம் தயாரித்தது சரி.ஆனால் இவரே அந்தப்படத்தை பிடிவாதமாக இயக்கியது தான் மிகப்பெரிய தவறு.


........

October 10, 2008 

ரவிச்சந்திரன்

 

 

திருச்சி பீமநகர் ராஜா காலனி வீடு .

இங்கே நான் குடியிருந்த போது ( இந்த வீடு தான் சிலவருடம் கழித்து கார்கில் தியாகி மேஜர் சரவணன் குடும்பம் குடியேறி தேசியகல்லூரியில் படித்து பின்னால் அவர் மேஜர் ஆகி உயிர் துறந்த போது பிரபலமானது ) எதிரே கணபதி புரத்தின் பின் பகுதி . 

அங்கே குடியிருந்த மாமிக்கு என் ஒரு வயது மகன் கீர்த்தியின் மீது மிகவும் பிரியம் . எந்நேரமும் குழந்தை அவர் வீட்டில் தான் . 

 

குழந்தை கீர்த்தியை அவர் சீராட்டினார் . அப்போது அங்கே உள்ளவர்கள் சொல்வார்கள் . சென்ற வருடம் வரை அந்த மாமி அந்த தெருவில் குடியிருந்த நடிகர் ரவிச்சந்திரன் ( காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன்தான் ) அவர்களின் இரண்டாவது மகன் ஹம்சவர்த்தனை தான் கொஞ்சி சீராட்டிகொண்டிருந்தார் . ரவிச்சந்திரன் குடும்பம் எதிரே யானை கட்டி மைதானம் தெருவில் குடி புகுந்தது . 

அதன் பின் அந்த மாமிக்கு சீராட்டி பாராட்ட கிடைத்த குழந்தை தான் கீர்த்தி . மாமியும் 'எப்படியோ ரவிச்சந்திரன் குடும்பம் எதிர் தெரு போன பின் குழந்தை ஹம்சவர்தன் போய்விட்டானே என தவித்து போய் இருந்த போது ராஜநாயஹம் மகன் கீர்த்தி வந்து கவலையை தீர்த்து விட்டான் 'என சொல்வார்கள்.


பீம நகரில் கிருஷ்ணன் கோவிலுக்கு போனால் 'இப்போ தான் ரவிச்சந்திரன் வந்து பகவானை சேவிச்சிட்டு போறார் .' என அய்யர் சொல்வார் . மெயின் கார்ட் கெட் போனால் பர்மா பஜாரில்' இப்போ தான் நடிகர் ரவிச்சந்திரன் வந்துட்டு போனார் 'என்பார்கள் . நான் பார்த்ததில்லை.



ஆனால் நான் சிறுவனாய் இருக்கும்போது( 14 வயது )

கரூரில் ஒரு நாடகமொன்றிற்கு தலைமை தாங்கினார் நடிகர் ரவிச்சந்திரன் . 
சரியான கூட்டம். 
அந்த நாடகம் பார்க்க ரவிச்சந்திரன் உட்கார்ந்த போது அவருக்கு பக்கத்தில் நான் தான் உட்கார்ந்தேன் .உட்கார வைக்கப்பட்டேன்.
ஒரு இரண்டு மணி நேரம் அவர் பக்கத்தில் நான் அமர்ந்திருந்தும் நடிகர் ரவிச்சந்திரன் என்னிடம் திரும்பி ஒரு வார்த்தை கூட பேசவில்லை .
 ' 'என்ன தம்பி , என்ன படிக்கிறே, உன் பேர் என்ன '-இப்படி கேட்பார் என சிறுவனாய் இருந்த நான் ரொம்ப ஏங்கினேன் . 
ஆனால் ரவிச்சந்திரன் நிறைய சிகரெட் பிடித்துகொண்டே இருந்தார் .என்னிடம் பேசவே இல்லை!



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.