Share

Nov 2, 2012

M.சரவணனுக்கு எழுதிய கடிதம்

பழைய கடிதங்களை புரட்டிப்பார்த்துக்கொண்டிருந்த போது 23 வருடங்களுக்கு முன் என் நண்பன் M.சரவணனுக்கு எழுதிய கடிதம் பார்க்க கிடைத்தது. அந்த கடிதத்தில் சாரு நிவேதிதா,அவர் எழுதிய முதல் நாவல், காட்டுமன்னார் கோவில் முன்னாள் எம்.எல்.ஏ ரவிக்குமார், பிரேம்-ரமேஷ், கவிஞர் மாலதி மைத்ரி பற்றியெல்லாம் குறிப்பிட்டிருக்கிறேன்.
கடிதத்தை இந்தப் பதிவில் தருகிறேன்.
நீங்க எழுதின கடிதம் உங்க கிட்டயே எப்படி சார் இருக்கு..போஸ்ட் பண்ணவே இல்லையா என்று கேட்கலாம். நான் எழுதும் முக்கிய கடிதங்களை நான் அப்போதெல்லாம் ஜெராக்ஸ் செய்து வைத்துக்கொள்வதுண்டு.அப்படி க.நா.சு இறப்பதற்கு பதினைந்து நாட்களுக்கு முன் நான் எழுதிய கடிதம் கூட என்னிடம் இருக்கிறது!
M.சரவணன் இப்போது பெங்களூரு வாசி. நானும் சரவணனும் 32 வருடமாக நண்பர்கள்.  கொஞ்சம் கூட பிசிறு தட்டாத சீரான நட்பு!

..........................

பாண்டிச்சேரி,

12-12-1989

அன்பு மிக்க சரவணனுக்கு,

ராஜநாயஹம் எழுதும் கடிதம். வணக்கம். நலம் நலமே விளைக.

‘அறிவு ஜீவிகள் அந்தந்த நேரத்தில் நாகரீகமாக,அதிகச்செலாவணி உள்ளதாக உள்ள சிலச்சார்புகளை அபிநயித்துக்கொண்டு,சில ’தியரிகளை’ உச்சாடனம் செய்து கொண்டு  உஞ்சவிருத்தி செய்கிற பிராமண பிம்பத்தின் கைதிகள்’
- ஆதவன்.


பிரேதா என்பது முக்கியமாக பிரேமானந்தன் கிரணம் இரண்டாம் இதழில் ரமேஷ் பிரேதன் என்ற பெயரிலும் உள்ள பகுதி அவருடைய நண்பர் ரமேஷ்.
சாரு நிவேதிதா கிரணத்தை பிரேதாவுக்காகவே நான்கு இதழ்கள் நடத்தியிருக்கிறார்.நான் முன்னர் பழனியிலிருக்கும்போது உனக்கு அனுப்பிய கவிதைப் பகுதிகள் ரமேஷ் பிரேதனுடையவை.இருவர் எழுத்துக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது.இது குறித்து இந்த இருவருக்குமே பெருமிதம் தான்.

பிரேதாவுக்கும் ரமேஷுக்கும் 25 வயது தான். பால்ய காலத்திலிருந்தே நண்பர்கள்.எல்லா அறிவு ஜீவிகளுக்கும் உள்ள சகல கல்யாண குணங்களும் இவர்களிடமும் கண்டேன்.’இந்த உலகத்தில எதுவுமே சரியில்ல.தமிழிலக்கியம் குப்பை. அதில என்ன இருக்கு. பேசாம குமுதம் படிக்கலாம்’ என்றே பிரேமும் ரமேஷும் அபிப்ராயப் படுகிறார்கள்.
எனக்கு வியாபார எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய வரிகள் நினைவுக்கு வந்து விட்டது! ‘இந்த உலகத்திலுள்ள சூட்சுமமான வேதனைகளையெல்லாம் அனுபவித்தவன் பாரதி. இந்த உலகத்தில எதுவுமே சரியில்ல என்று நினைக்கிறவனெல்லாம் பாரதியை நினச்சா அழத்தான் முடியும்’ இதைச்சொல்லி, இங்க எதுவுமே சரியில்லங்கற கவலை பாரதியிடமே துவங்கி விட்டதே என்றேன்.

தீவிரமான தேடலுக்கு முன்னுதாரணமாக காலத்துக்கு முந்தியே பிறந்து காலத்துக்கு முந்தியே செத்துப் போவான் சிரஞ்சீவிக்கலைஞன் ஜி.நாகராஜன்’ என்று விக்ரமாதித்யன் விம்மியதை சுட்டினேன். ஜி.நாகராஜன் கவனிக்கப்படவேண்டிய கலைஞன் என்று பிரேமின் தலையாட்டல்..

எனக்கு திலீப்குமாரின் ‘ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும்’ கதை நினைவுக்கு வந்து விட்டது.  ‘ வாழ்க்கைக்கு முற்றிலும் புதிதான ஒரு ஒழுங்கை வழங்கி விட நாம் எப்போதும் துடித்துக்கொண்டே இருக்கிறோம்.அதற்காக கோபப்படுகிறோம்,போராடுகிறோம்...நமக்கு பாதையை விட இலக்கே முக்கியமாக இருக்கிறது. பாதையின் பயங்கரமான நீளத்தை நாம் அறிய மாட்டோம். நம்மில் முட்டாள்கள் பாதையில் மடிந்து இல்லாத இலக்குக்கு இரையாகிப் போவார்கள். புத்திசாலிகள் பாதையின் ஒரு அசிங்கமான மூலையில் நின்று அதையே இலக்கு என்று ஆர்ப்பரித்து ஏமாற்றுவார்கள்.மீண்டும் புதிதான கோபங்கள்,புதிதான போராட்டங்கள்.’
இருவரும் அமைதியாக எந்த Expressionம் முகத்தில் காட்டாமல் உற்றுப்பார்த்தார்கள்.

 பிரமிள் திசை நான்கு பத்திரிக்கையில் பிரேதா கவிதைகளை கடுமையாக தாக்கி எழுதியிருந்தார். இது குறித்து பிரேம் ‘ நான் இதையெல்லாம் பொருட்டாக எண்ணவில்லை.லத்தீன் அமெரிக்காவிலே பட்டினியால செத்துக்கிட்டிருக்காங்க.அதைப் பத்தி கவலைப் பட்டுக்கொண்டிருக்கிறேன் நான். மதுரையில் என் நண்பன் வீட்டில் போலீஸ் புகுந்து அடிச்சிருக்காங்க.அது தான் இப்ப என் பிரச்னை. பிரமிள் ஒரு Moralist.நான் ஒரு Immoralist.'

நேரு ஸ்ட்ரீட் டில் ஒரு நாள் என் மனைவிக்கு சேலை எடுக்க Ram Silks என்ற கடைக்குப் போனபோது அங்கே வேலை செய்து கொண்டிருந்த மாலதியை சந்தித்தேன். ப்ரேம் ரமேஷின் தோழி மாலதி.

சிண்டிகேட் பேங்க் வேலையில் இருக்கும் ரவிக்குமார் இவர்களின் நல்ல நண்பர்.அவர் மீது மிகுந்த அபிமானம்.

எப்போதும் சிரித்த முகத்துடன் ரவிக்குமார்!கையில்  Michel Foucault 's The History of Sexuality!

ரவிக்குமார்,ப்ரேம்,ரமேஷ், மாலதி- இவர்கள் மிகுந்த மதிப்பு வைத்துள்ள ஒருவர் உண்டென்றால் அவர் சாரு நிவேதிதா.
சாரு நிவேதிதா இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ‘எக்ஸிஸ்டென்சியலிசமும், ஃபேன்ஸி பனியனும்’ என்ற Meta fiction novel விரைவில் வெளிவர இருப்பதாக சொல்கிறார்கள்.ஆபுதின் எழுதிய நாவல்கள் கையெழுத்துப் பிரதியிலேயே இருக்கின்றன. பிரேதா :ரமேஷ் பிரேதன் எழுதிக்கொண்டிருப்பதும் கதையை  உடைக்கும் வகையைச் சார்ந்தது தான்.

இந்த நேரத்தில் ’திரைகளுக்கப்பால்’ என்ற இந்திரா பார்த்தசாரதியின் நாவலைப் படிக்கும் போது ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது. இன்றைய இலக்கியவாதிகளின் current topics - லத்தீன் அமெரிக்க கலாச்சார மூவ்மெண்ட்ஸ்- நடுத்தர வர்க்க அபாயங்கள்- ஹென்றி மில்லர் என்றெல்லாம் இ.பா 1972லேயே எழுதியிருக்கிறார். அவரோடு அவருடைய ஏ.சி.அறையில் நேற்று காலையில் பேசிக் கொண்டிருக்கும்போது ‘ஃப்ரான்சில் இப்போது Meta Fiction அலுத்துப்போய் மீண்டும் Straight ஆக கதை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்’ என்று சொன்னார்.

நேற்று மாலை Chamber of Commerce ல் பாரதி முதலான கவிதை என்பதாக கருத்தரங்கு. சிறப்பு  விருந்தினராக கி.ராஜநாராயணன் கலந்து கொண்டு நடத்தினார்.

கி.ரா., இ.பா. போன்ற இலக்கியவாதிகளுடனான என் அனுபவங்கள் எழுத எழுத விரியும். (அருவியின் அருகில் நிற்பதாக உணர்கிறேன்.)

அன்புடன்

R.P.ராஜநாயஹம்

........

http://rprajanayahem.blogspot.in/2008/09/g.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_7302.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_25.html

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post.html


1 comment:

  1. RPR the new look of the blog is great and why the "categories" appearing both sides of the page. history takes too long to open. just fyi.
    rgds/Surya

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.