கரூரில் அப்பா சென்ட்ரல் எக்ஸைஸ் ஆஃபிசராக இருந்த போது நான்கு வருடம் பால்ய கால பள்ளி பருவம். திருச்சியில் செயின்ட் ஜோசப்ஸ்சில் படித்தாலும் விடுமுறை நாட்களெல்லாம் கரூரில் தான்.
பக்கத்து வீட்டில் உடல் வளர்ச்சி குன்றிய 'கொண்ட' என்று அனைவரும் புகல்ந்த இருபது வயது தாழன் வேலைக்கு இருந்தான். கொண்டயன்.
கரூர் லைட் ஹவுஸ் தியேட்டரில் இங்க்ளீஷ் படம் காலைக்காட்சி பார்க்க வாரா வாரம் ஆஜராகி விடுவான்.
'The square peg',
Hell and the high water,
Jack of the diamonds
சிறுவனாக அவனோடு 'அண்ணே'ன்னு ஒட்டிக் கிட்டு போவேன்.
போகிற வழியிலே பெட்டிக்கடை பார்த்ததும்
'தொர, ஹிண்டு இங்க்ளீஷ் பேப்பர் வாங்க காசு கொடு'
பேப்பரை வாங்கி கையில் வைத்துக் கொண்டு தியேட்டர் வந்ததும் வாசலில் பேப்பரை விரித்து வாசிப்பதான பாவனை.
டிக்கெட் எடுத்து உள்ளே படம் ஆரம்பிக்கும் வரை ஹிண்டு பேப்பரை விரித்து பக்கம் பக்கமாக மேய்ந்து கொண்டிருப்பான். பக்கத்துல ஒக்கார்ற ஆட்கள் சரியான கொத்தனுங்க. 'படம் புரியலைன்னா எடவேளையில கேளு. படம் ஓடுறப்ப எங்கிட்ட கேட்டு தொந்தரவு பண்ணக்கூடாது' படம் பார்க்க வந்தவனுக பத்து பதினஞ்சு பேருட்ட எழுந்து போய் இவனே வாலண்ட்டியரா சொல்வான்.
எடைவேளெயில கொண்டையன சுத்தி கும்பல். நடுவுல நின்னு படத்தப் பத்தி 'புதுக்கத' மனோதர்மப்படி சொல்வான்.
மீண்டும் தியேட்டர்ல நொழஞ்சதும் சுற்றியுள்ளவர்களிடம் திரும்ப விரல் நீட்டி எச்சரிக்கை
' படம் பாக்கும்போது புரியலைன்னா தொந்தரவு பண்ணக்கூடாது'
படம் முடிஞ்சவுடனே அவனை சுற்றி கூட்டம்.
மீதி படத்த பத்தியும் இவனே கத விடுவான். வாசலில் நின்னு ஹிண்டு பேப்பர பொரட்டுவான்.
விடுமுறை முடிந்து திருச்சி ஸ்கூலுக்கு போகிற போது ட்ரெய்னில் சில தடவை கொண்டையன் வந்திருக்கிறான். கையில் ஹிண்டு பேப்பரை பக்கம் பக்கமாக விரித்து உற்று உற்று பார்த்துக் கொண்டே.. ரயில் ஜன்னல்ல வேடிக்கை பார்க்க மாட்டான். யாராவது பேப்பர் கேட்டால் பெருமையா கொடுப்பான். படித்து விட்டு திரும்ப கொடுத்தால் அடுத்த விநாடியே பேப்பரை தொடர்ந்து பக்கம் பக்கமாக உற்றுப் பார்க்க ஆரம்பித்து விடுவான்.
கரூரில் எப்போதும் பல நேரங்களில் பலரிடமும் இங்க்ளீஷ் பேசியது பற்றி தமிழ்ல சொல்லிக் கொண்டே இருப்பான்.
'தொர, ஜவஹர் பஜார்ல வந்துகிட்டிருக்கேன், பெரியார் லாட்ஜ் கிட்ட ஒங்க அப்பா மாதிரி ஆஃபிசர்
ஜீப்ப நிறுத்தி எங்கிட்ட ' காய்கறி மார்க்கெட் ஏதோ டாக்கி டாக்கி தேட்டர் பக்கம் இருக்காமே. இங்கருந்து எப்படி போகனும்?' னு இங்க்ளீஷ் ல கேட்டாரு. நானும் இங்க்ளீஷ்லயே அவருக்கு
வழி சொன்னேன்'
'தொர, நேத்து திண்ணப்பா தேட்டர்ல படம் பாக்றப்ப காலேஜ் படிக்கிற பசங்க கத்தி கூப்பாடு போட்டுட்டே இருந்தாங்க. நான் இங்க்ளீஷ் ல சொன்னேன்
' ஏன்டா இப்படி படம் பாக்க விடாம கத்றீங்க. ஒழுங்கா அமைதியா ஒக்காறனும் '
அவனுங்க ஒடனே இங்க்ளீஷ் ல சொன்னாங்க
' நாங்க அப்டித்தான்டா சத்தமா கத்திக்கிட்டே தான் படம் பாப்போம். அதக் கேக்க நீ யார்றா? போடா'
நான் இங்க்ளீஷ்ல 'டேய் எனக்கு கோபம் வந்தா நடக்றதே வேற'
காலேஜ் பசங்க இங்க்ளீஷ் ல ' மெரட்ற வேலயெல்லாம் எங்க கிட்ட வச்சிக்காத. வேற ஆளப்பாரு' ன்னானுங்க. பயங்கர கோபமாகி நான் இங்க்ளீஷ்ல அவங்கள திட்டிக்கிட்டே அடி வெளுத்து பந்தாடிட்டேன். படம் பாக்காம தேட்டர விட்டு ஓடியேப் போயிட்டானுங்க.. தொர, எங்கிட்ட எவனுமே வாலாட்ட முடியாது.'
'தொர, வெள்ளக்காரன் குஷியாயிட்டான்னா VERY GOOD தான் சொல்வான். கோபமாயிட்டான்னா பூட்ஸ் காலால ஒதப்பான். வெள்ளக்காரன்ட்ட நான் வேல பாத்திருக்கேன்.'
'கொண்ட' அடிக்கடி கலைஞரையும்
எம்.ஆர். ராதாவையும் mimicry செய்வான்.
ஆனால் வித்தியாசம் இராமல் இருவருக்குமே கட்டைத்தொண்டையில் ஒரே மாதிரி தான்.
'அடியே காந்தா' வசனத்திற்கும்
'நடிகரென்பார் நாடக மேதையென்பார்' என்பதற்கும் ஒரே பாணி குரல் தான்.
'நடிகர் என்பார் நாடக மேதை என்பார் தத்துவ ஞானி என்பார் ' தோரணையாக புன்னகை காட்டி அவன் திரும்ப திரும்ப சொல்லும் போது
சலிப்பு தாங்காது
அதே தொணியில்
குரல் கொடுப்பேன்
"கொண்டையென்பார்"
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.