Share

Apr 19, 2020

தஞ்சை ப்ரகாஷ் பதிப்புரை

கிரா கன்னிமை, அம்பை சிறகுகள் முறியும் போன்றவை தஞ்சை ப்ரகாஷ் பதிப்பித்தவை.

ப்ரகாஷ் பிரசுரித்த க. நா. சு. வின் 'பித்தப்பூ'
நாவலுக்கு ஒரு பதிப்புரை எழுதியிருந்தார்.
 இதில் அவர் வாசகனை மிரட்டுகிறார் என்று அந்த காலத்தில் கிண்டலும் ஏளனமுமாக இலக்கிய பத்திரிக்கையிலேயே எழுதப்பட்டிருக்கிறது.

ப்ரகாஷ் பதிப்புரையை படித்துப் பார்த்தால் அவருடைய பரிதவிப்பு, ஆதங்கம், உன்னத நோக்கம் சார்ந்த துயரம் தான் காணக்கிடைக்கும்.

நேரில் அவர் வாய் விட்டு சொல்லாத தன் போராட்டமான முன்னெடுப்புகளைப் பற்றிய Tormentation.

" நல்ல ஒரு வாசகனைத் தேடியடையும் இன்பத்துக்காகவே நான் பதிப்பாளனானேன்.

மனிதர்களிடம் மனிதனைத் தேடுவது அத்தனை சுலபமாயில்லை.

நல்ல புஸ்தகங்களை வாசகர்களுக்குத் தேடித்தர பல ஆண்டுகளாய் முயன்று வருகிறேன். ஆனால் உருப்படியான தொழிலாய் வெற்றியாய் இதுவரை வாழ முடியவில்லை என்பது தான் கண்ட பலன்.

நல்ல பதிப்பாளர்கள் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம். (என்னையும் சேர்த்து தான்.)
நல்ல படைப்பாளிகள் இனியும் படைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இருப்பார்கள்.
நீங்கள் யாருமே ஆதரிக்காவிட்டாலும் கூட
இவை நிகழ்ந்து எரிந்து கொண்டே தானிருக்கும்.

விமர்சகராகிய க. நா. சு. வுக்கு விமர்சகரில்லை.

புதுமைப்பித்தன் எழுதினார் - ' தமிழ் இலக்கிய உலகம் பாரிச வாதமும், பக்க வாதமும் போட்டலையும் அவதி'

விற்பனை சாத்தியமற்ற சூழலில் வியாபாரம் தொடங்கியிருக்கிறேன்.

சொந்தமாய்ப் பணம் கொடுத்து வாங்க தமிழில் இருநூறு பேர் கூட இல்லை.

க. நா. சு வின் இந்த புதிய நாவல் 'பித்தப்பூ' வை நீங்கள் ரசித்து படிக்க வேண்டும். நிறைய சிந்தித்து நாலுபேருக்கும் சொல்ல வேண்டும்.
நான் வெளியிட்ட வெளியீடு வெற்றி பெற வேண்டும்.

மேலும் நல்ல புது இலக்கியங்களை வாழும் காலத்தில் தமிழுக்கு அறிமுகம் செய்ய எனக்கு வாசகரின் துணை வேண்டும்.

பதிப்பாளன் என்கிற என் வாழ்வின் தளம் அத்தனை சுகமானதோ, சுலபமானதோ அல்ல. "

ப்ரகாஷின் மேற்கண்ட பதிப்புரை மற்றுமொருமுறை இப்போது படித்த
என்னை வெகு நேரம்
 செயலோயச் செய்து விட்டது.

....

1990ல் நான் புதுவையில் இருந்த போது
பல்கலைக்கழக துணைவேந்தர் வேங்கட சுப்ரமணியம் 'பித்தப்பூ' நாவலை படிக்க எண்ணி முயன்றிருக்கிறார். கிடைக்கவில்லை. 1987ல் வெளிவந்த நாவல்.
இந்திரா பார்த்தசாரதி வீட்டிற்கே போய் உரிமையுடன் "பித்தப்பூ நாவல எடுங்க" என்று வலது கையை நீட்டியிருக்கிறார்.
இ.பா சொன்னாராம் " பித்தப்பூ என்னிடம் இல்லையே..
உங்க எதிர் விட்டில தான் ராஜநாயஹம் இருக்கிறாரே.
கையில வெண்ணெயை வச்சிக்கிட்டு நெய்க்கு அலையிறீங்களே."

வீட்டிற்கு வந்தவுடன் துணை வேந்தர்
எனக்கு
ஒரு கடிதம், பித்தப்பூ கேட்டு

'அன்பு மிக்க அறிஞர் ராஜநாயஹம் ' என்று விளித்து

நான் வந்த அட்டெண்டரிடம் பித்தப்பூவோடு
 ஒரு பதில் கடிதம் ரெண்டு பேரா எழுதி கொடுத்தனுப்பினேன்.
' என்னைப் போய் அறிஞர் என்கிறீர்களே '

இன்னொரு கடிதம் சுடச்சுட எழுதி கொடுத்தனுப்பினார்.

"ராஜநாயஹம், அறிந்தவர் அறிஞர். நீங்கள் அறிஞர் என்பதற்கு உங்கள் கடிதமே சாட்சி.
சரி, துணை வேந்தர் தானே பட்டம் கொடுக்க முடியும்? "

அவர் படித்து விட்டு திருப்பித் தந்த பித்தப்பூ
 என் கையில் இதோ இருக்கிறது.

முன்னாள் துணை வேந்தர் வேங்கடசுப்ரமணியனும் இப்போது இல்லை.
பதிப்பித்த ப்ரகாஷும் இல்லை.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.