Share

Feb 26, 2019

பிடில் வாத்தியார் -2


பிடில் வாத்தியார் நல்ல நீலவான நிறத்தில் பளிச்சென்று சட்டை அயர்ன் செய்து அணிந்திருப்பார். கறுப்பு ஃப்ரேம் சின்ன வட்ட சைசில் மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பார். தோளில் ரெண்டாக மடித்த துண்டு ஒரு பகுதியை கழுத்துக்கு அந்தப்புறம் முதுகில் தொங்கும்படி விட்டிருப்பார். தினமும் ஷேவ் செய்திருப்பார். ஒல்லியான உடல் வாகு. நல்ல உயரம். அமிதாப் பச்சனை பற்றி அறிந்திருந்தால் ஒரு வேளை “டேய் உங்க அமிதாப்பை விட நான் ஹைட்டுடா” என்று கட்டை தொண்டையில் சொல்லியிருப்பார். அவருடைய குரல் நிச்சயம் எம்.ஆர் ராதா குரலல்ல என்றாலும் அது விசேஷமான கரகரத்த கணீர் குரல். ரிட்டயர்ட் ஆன பிறகும் பள்ளியில் சில ஆசிரியர்களுக்கு நிர்வாகம் தொடர்ந்து வேலை தருவதுண்டு. அப்படி ஒருவர் தான் பிடிலும்.
’பிடில் மாமா, பிடில் மாமா, பிடில் வாசிங்க,
உங்க பிடில் கம்பி அந்து போனா என்ன பண்ணுவீங்க.’
தமிழ் வாத்தியார் ஒருவர் ரொம்ப அள்ளி விடுவார். அவர் பெயர் அல்ப்பி.
திருச்சியில் ரீல் ஓட்டுனா வட்டார வழக்கு ’அல்ப்பி.’ மதுரையில் கதை விட்டா ’குதாம் குல்ஃபி’.
அல்ப்பி குட்டையாக இருப்பார்.
அல்ப்பியும் பிடிலும் ஒரு வகையான love and hate relationshipபில் எப்போதும் இருப்பார்கள். குட்டையான அல்ப்பியின் தோளில் பிரியத்துடன் கையை போட்டுக்கொண்டு படியில் ஏறி பிடில் வரும் காட்சி கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.
அல்ப்பி வகுப்பு நடத்தும்போதே அவருடைய நண்பர்கள் அவரை காண வருவதுண்டு. மாணவர்களும் ரசிக்கட்டும் என்று அவர்களிடம் பேசும் போதே ’கவனிங்கடா’ என்று முகத்தை திருப்பி மாணவர்களை பார்த்து சிரிப்பார். வந்த நண்பர்கள் கிளம்பும் போது “ நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வளர்க” என்று நாடகத்தனத்துடன் பாடுவார். நான் இது தான் சாக்கு என்று வகுப்பின் முன் வந்து அந்த பாட்டிற்கு டான்ஸ் ஆடுவேன். வந்தவர்கள் எப்போதும் வெட்கப்பட்டு, முகமெல்லாம் சிவந்து தான் பிரியா விடை பெறும்படி இருக்கும்.
”ஐயா, மல வேதனை, பிரசவ வேதனை, மரண வேதனை இம்மூன்றும் அடக்கவே முடியாது. தாங்க முடியாதது” என்பார். அதனால் அவரிடம் பையன்கள் எப்போதும் வகுப்பில் பாடம் நடத்தும் போது ”ரெண்டுக்கு வருதுய்யா” என்று சொல்லி வெளியேறி சுற்றுவார்கள். வகுப்பு முடியும் வரை வரவே மாட்டார்கள்.
பிடிலுக்கும் அல்ப்பிக்கும் அடிக்கடி மனஸ்தாபம் வந்து விடும். அல்ப்பி தமிழ் வகுப்பில் “ பனை மரம் மாதிரி வளந்தவனுக்கு உடம்பெல்லாம் விஷம். விஷப்பய. அயோக்கிய பயல நம்புனேன். கழுத்தறுத்துட்டான்.”
பிடில் “ டேய் கள்ளன நம்பலாம். ஆனா குள்ளன நம்பக்கூடாது. வாயில வர்றதெல்லாம் பொய் தான்டா. அவன் புழுத்துத்தான் சாவான்.”
இந்த அரசியல் பற்றி விளக்க எந்த கழுகாரும் தேவையேயில்லை.
பசங்க இடைவேளையில் பேசிக்கொள்வோம். “டேய் பிடிலுக்கும் அல்ப்பிக்கும் சண்டடா. அதான் இப்படி திட்டிக்குதுங்க.”
அடுத்த மாதம் பிடில் அல்ப்பியின் தோளிலும், அல்ப்பி அதே சமயம் பிடிலின் இடுப்பிலும் கை போட்டுக்கொண்டு சிரித்து பேசிக்கொண்டே ஃபேகல்ட்டி ரூமில் இருந்து வெளி வருவார்கள்.
பசங்க”டேய், பிடிலும் அல்ப்பியும் மறுபடியும் சேந்துடுச்சிங்கடா”
பள்ளிக்கு இன்ஸ்பெக்ஷன் என்றால் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். ஒரு மாதத்திற்கு முன்னிருந்து ஆசிரியர்கள் படு சீரியஸ் ஆகி விடுவார்கள். இன்ஸ்பெக்டர் வருகிற தேதியில் இன்று இல்லை. இன்னும் நான்கு நாள் கழித்து வருகிறார் என்று தகவல் வரும். டிரஸ் கோட். வெள்ளை சட்டை, மெரூன் ட்ரவுசர் அயர்ன் செய்து போட்டுக்கொண்டு வரவேண்டும். காலுக்கு ஷாக்ஸ் போட்டு வெள்ளை கான்வாஸ் ஷூ படு சுத்தமாக இருக்க வேண்டும். ப்ளே க்ரவுண்ட்டுக்கு போகிற P.T க்ளாஸ் கூட கேன்சல் ஆகி விடும். இன்ஸ்பெக்டர் வகுப்பறைக்கு தான் வருவார் என்பது வழக்கமாய் இருந்ததாம்.
ஒவ்வொரு சப்ஜெக்ட் டீச்சரும் ரெடிமேடாக சில கேள்வி பதில்களை முதல் தர மாணவர்களை வைத்து தயார் படுத்துவார்கள். இன்ஸ்பெக்டர் வரும்போது வகுப்பறைகளுக்கு வெள்ளையடிக்கப்பட்டு ப்ளாக் போர்ட் கறுப்பு சேர்க்கப்பட்டு பிரமாதமாய் இருக்கும். இன்ஸ்பெக்டர் வந்தால் நடக்க வேண்டிய விதம் பற்றி ரிகர்சல் கூட நடத்தப்படும். தலைமையாசிரியர் ஒவ்வொரு வகுப்பாக வந்து ஆசிரியர்களை எச்சரித்துக்கொண்டே இருப்பார். மாணவர்களிடம் கேள்விகள் கேட்பார். இத்தனைக்கும் பள்ளி மிகவும் பெயர் போன பள்ளி. ஒவ்வொரு வருடமும் பொதுத்தேர்வில் நல்ல ரிசல்ட் தரும் பள்ளி.
சரியாக எட்டாம் வகுப்புக்கு பிடில் வாத்தியார் க்ளாசில் தான் இன்ஸ்பெக்டர் வகுப்பறையில் அன்று நுழைந்தார். அவருடன் தலைமையாசிரியர் கூடவே. பையன்கள் அனைவரும் மரியாதையாக எழுந்து நின்றார்கள். நான்காவது வரிசையில் ஒரு மாணவன் டெஸ்க்கில் தலை வைத்துப் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தான்.
எல்லோரும் எழுந்து நிற்கும்போது ஒருவன் மட்டும் எழுந்து நிற்கவில்லை. அதோடு தூங்கிக்கொண்டும் இருக்கிறான்.
இன்ஸ்பெக்டர் அவனை கவனித்து விட்டார். தலைமையாசிரியர் அவமானத்துடன் பிடிலை கோபப்பார்வை பார்த்தார். அர்த்தம்: ‘யோவ், என்னய்யா க்ளாஸ் நடத்துற.’
அதற்குள் பல மாணவர்கள் தூங்கிக்கொண்டிருந்தவனை பெயர் சொல்லி ”எழுந்திருடா டேய்” என்கிறார்கள். இரு பக்கத்தில் இருந்த இரு பையன்கள் அவனை தட்டி எழுப்புகிறார்கள். அவன் பதறிப்போய் எழுகிறான்.
பிடில் ஒரு வினாடி கூட தாமதிக்காமல் “ டேய் நீ படு, படுறா” என்கிறார். ”பேசாம படு”
பக்கத்தில் நின்று கொண்டிருந்த தலைமையாசிரியர் மெச்சாடோ திகைப்புடன் பிடிலை பார்க்கிறார். “ஃபாதர், அவனுக்கு ஃபீவர். ஹை ஃபீவர். சூசையிடம் ஒரு ரிக்ஷா கொண்டு வரச்சொல்லியிருக்கிறேன். அவன வீட்டுக்கு அனுப்பனும். இன்ஸ்பெக்ஷன் என்பதால் காய்ச்சலோட ஸ்கூலுக்கு வந்துட்டான் முட்டாப்பய. ஒடம்பு ரொம்ப முடியலன்னா லீவு போட வேண்டியது தானே. இன்ஸ்பெக்ஷன் அன்னக்கி லீவு போடக்கூடாதேன்னு பொறுப்பா வந்திருக்கான். பாவம்”
தலைமையாசிரியர் ஃபாதர் மச்சோடாவுக்கு ஆசுவாசம். பிடில் சமாளிப்பு அவருக்கும் புரிந்தது.
இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்டார். சில பையன்கள் பதில் சொன்னார்கள். வெரி குட் சொல்லி விட்டு அடுத்த வகுப்பிற்கு கிளம்பினார். தலைமையாசிரியர் ஃபாதர் மெச்சாடோ கிளம்பு முன் தலையை ஆட்டி பிடில் கண்களைப்பார்த்து தன் கண்ணாலேயே நன்றி சொன்னார். நான் நன்றி சொல்வேன் உன் கண்களுக்கு.
தலைமையாசிரியருடன் இன்ஸ்பெக்டர் கிளம்பியவுடன் மாணவர்கள் ஆசுவாசமாக ஆகும்போது பிடிலின் திறனை உணர்ந்து சந்தோசமாக சிரித்தார்கள். பிடில் தன் வலது பக்க நெற்றிப் பொட்டில் கை வைத்து சொன்னார் “ Presence of Mind!”
எல்லா பையன்களும் சிரித்து ரிலாக்ஸ் ஆனோம். நாங்கள் தூங்கிக்கொண்டிருந்த அந்த பால் மோகனைப் பார்த்து சிரித்தோம். அவனும் சிரித்தான். ’நான் தான் இன்னக்கி இங்க ஹீரோ’ என்ற தோரணையில் பெருமையாக சிரித்தான். பிடிலைப் பார்த்தும் சிரித்தான். பிடில் “ இங்க வா”. பால் மோகன் தலையை குனிய வைத்து முதுகில் பலமாக சட,சட என அடித்தார். ”நீயுமா சிரிக்கற. நீயும் சிரிக்கற.கொழுப்பு.”  விடவில்லை. அடி வெளுத்து விட்டார்.

Feb 22, 2019

பிடில் வாத்தியார்


எட்டாங்கிளாஸ் ஃபிடில் வாத்தியார். வயலின் வாசிப்பவர் அல்ல. உடம்பை அடிக்கடி சொறிவார். அதனால் பிடில் என்று பெயர். இந்தப்பெயர் அவருக்கு எந்தக்காலத்தில் பள்ளி மாணவர்களால் வழங்கப்பட்டதோ?
Conjugation. See verb.
I see என்று present tenseல் ஆரம்பித்து future perfect continous tense வரை மாணவர்கள் எழுத வேண்டும்.
ப்ளாக் போர்டில் பிடில் To see எழுதி விட்டு கட்டை தொண்டையில் சொல்வார். “எழுது. Conjugation. ”I’க்கும் ’We’க்கும் ’Shall’. மத்ததுக்கெல்லாம் ’Will’, ம்.. ம்... எழுது” என்று future tense பற்றி மட்டுமே சொல்வார். திரும்ப திரும்ப I’க்கும் ’We’க்கும் ’Shall’. மத்ததுக்கெல்லாம் ’Will’ சொல்லி குறுக்கும் நெடுக்குமாக நடப்பார்.
அடக்க முடியாமல் சிரித்து விட்டேன். குனிய வைத்து முதுகில் பட,படவென்று பிடில் கையால் அடித்து ”முன்னால போய் முழங்கால் போடு”
நான் முழங்கால் போட்டவாறே காஞ்சுகேசன் எழுதும்போது ஒரு பையன் எழுந்து சந்தேகம் கேட்க ஆரம்பித்தான்.“ சார். இந்த ப்ரசண்ட் பெர்ஃபெக்ட் கண்ட்டினுவஸ் டென்ஸ்ல..”
அவன் வார்த்தையை முடிக்கு முன்னரே “ அதத் தான் நான் சொல்லிக்கிட்டிருக்கேன்…இவனுக்கு சிரிப்பு வருது” என் முதுகில் மீண்டும் நான்கைந்து அடி. ”எழுது. ”I’க்கும் ’We’க்கும் ’Shall’. மத்ததுக்கெல்லாம் ’Will’ எழுது”. கட்டைத் தொண்டையில் கத்தினார். உடம்பில் விலா பகுதியில் சொறிந்து விட்டு ”I’க்கும் ’We’க்கும் ’Shall’. மத்ததுக்கெல்லாம் ’Will’“ என் முதுகில் மீண்டும் ரெண்டு அடி. ’ஐ’க்குக்கும் ’வி’க்கும் ஷால். மத்ததுக்கெல்லாம் வில்.
வகுப்பில் முதல் வரிசை பெஞ்சில் இரண்டு குட்டை பையன்கள். இருவருக்குமே Funny face. ஒவ்வொரு வாரமும் ஒரு க்ளாஸ் Non – detailed. சிலபஸில் ராபின்சன் குருசோ நாவல். அந்த இரண்டு பையன்களில் ஒருவனுக்கு குருசோ என்றும் இன்னொருவனுக்கு ஃப்ரைடே என்றும் பிடில் பெயர் வைத்தார். ராபின்சன் குருசோ பாட வகுப்பு என்றால் அந்தப் பையன்கள் இருவர் முகமும் அன்று முந்திய வகுப்புகளிலேயே பதட்டமாகி இருளடைந்து விடும்.
கதையில் ஃப்ரைடே செய்யும் முட்டாள் தனங்களுக்கு வகுப்பில் உள்ள ஃப்ரைடே முதுகில் அடி விழும். இப்படி முட்டாப்பயல கூடவே வைத்திருக்கானே குருசோ என்று பிடில் கோபப்பட்டு புத்தகத்தை கீழே வைத்து விட்டு வகுப்பில் உள்ள குருசோ முதுகிலும் நாலு சாத்து சாத்துவார். “மூள கெட்ட பயல கூடவே ஏன் வச்சிக்கிட்டுருக்கற நீ? இடியட், ஃபூல், ராஸ்கல்.”
‘Presence of Mind’ வார்த்தையை பிடில் சொல்லி தான் முதலில் கேள்விப்பட்டோம். திருச்சியில் இருந்து பிடில் சென்னை போய் இருக்கிறார். பாரீஸ் கார்னர். ஹை கோர்ட் எதிரில் பிடில் போகும் போது எதிர் ப்ளாட்ஃபார்மில் ஒருவர் தெரிந்த ஆள் போல இருந்திருக்கிறார். நின்று, அவரைப்பார்த்து இங்கிருந்து கை தட்டியிருக்கிறார்.
கை தட்டல். எல்லோரும் திரும்பி பார்த்திருக்கிறார்கள். எதிர் ப்ளாட் ஃபார்மில் போய்க்கொண்டிருந்தவர்கள் மட்டுமில்லாமல் ரோட்டை க்ராஸ் செய்து கொண்டிருந்தவர்கள், மற்றும் இவர் நின்ற ப்ளாட்ஃபார்மின் பாதசாரிகளும் நின்று பார்த்திருக்கிறார்கள்.
(ந.முத்துசாமி சொல்வார் “ கைதட்டலுக்கு ராணுவ கட்டளைக்குள்ள பலம் இருக்கு.”)
மீண்டும் எதிர் ப்ளாட்ஃபார்மை பார்த்து பிடில் கை தட்டியிருக்கிறார். எதிர் ப்ளாட்ஃபார்மில் போய்க்கொண்டிருந்த ஒவ்வொருவரும் நின்று நானா? நானா? என்று கைச்சைகையால் கேட்டிருக்கிறார்கள். இவர்
‘அந்த குடைக்காரர்’ என்று சைகைகளால் சொல்லியிருக்கிறார். குடைக்காரரும் ’நானா’ கேட்டுக்கொண்டிருந்தவர், மற்றவர்களால் “ உங்களைத்தான்” என்று அறிவுறுத்தப்பட்டு சிரமப்பட்டு வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்த அந்த பெரிய ரோட்டை க்ராஸ் செய்து இவரை நோக்கி வர ஆரம்பித்திருக்கிறார். அவர் பாதி ரோட்டை க்ராஸ் செய்யும் போது பிடில் வாத்தியாருக்கு பகீர் என்று ஆகி விட்டது. அவர் தெரிந்த மனிதர் அல்ல. வேறு யாரோ? உடனே பிடில் ‘Presence of Mind’ வேலை செய்ய ஆரம்பித்தது. கையில் சுளுக்கு போல நடிக்க ஆரம்பித்திருக்கிறார். முக பாவத்தில் வேதனை வரவைத்து அவரை நோக்கியே கை தட்டி, மேல் நோக்கி குடை போல் நீட்டி, கை விரல்களை மடக்கி கையை நீவி, நீவி விட்டிருக்கிறார். திரும்ப, திரும்ப கை தட்டி, மேல் நோக்கி நீட்டி, கை தட்டி கையின் முன் பகுதியை நீவி, நீவி விட்டு..
குடைக்காரர் பக்கத்தில் வந்து உற்று பார்த்து விட்டு, மீண்டும் ரோட்டை க்ராஸ் செய்து கொண்டே முனகியிருக்கிறார். “ பாவம் கையில சுளுக்கு. அங்க இருந்து பாக்க கூப்பிடுவது போல தெரிஞ்சிருக்கு “
வகுப்பில் பிடில் தலைப்பொட்டில் தட்டிக்காண்பித்து ”ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட் வேணும்டா”
ஸ்கூல் பிக்னிக் ஒன்றிற்காக அதிகாலை ஆறரை மணிக்கு திருச்சி டவுன் ஸ்டேசனில் ரயிலில் ஏறி ஒரு நூறு பேர் உட்கார்ந்திருக்கிறோம். ஒருத்தன் “ டேய் பிடில் பார்றா. வெளிக்கி இருக்குதுடா”
எட்டிப்பார்த்தால் ஸ்டேசனை ஒட்டிய முள் காட்டில் பிடில் வாத்தியார் ‘Nationalize’ பண்ணிக்கொண்டிருந்தார்.
”பிடில் மாமா, பிடில் மாமா இங்க பாருங்க,
உங்க பிடில் கம்பி அந்து போனா என்ன பண்ணுவீங்க” என்று கோரஸாக பாடும் போது தான் கவனித்து எழுந்து ஒரு முள் மரத்தின் பின் ஒளிந்து மறைந்து கொண்டு ரயிலில் எவனெல்லாம் பாடுறான், சிரிக்கிறான்னு நோட்டம் விட்டார்.
எனக்கு என் அப்பாவிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் மணியார்டர் வருவதுண்டு. பாக்கெட் மணி. பிடில் பீரியடில் மணியார்டர் வந்தால் தொலைந்தேன். பீரியட் முடிந்ததும் முழங்கைகளை சொறிந்து கொண்டே பிடில் “ சம்பளம் வாங்க கையெழுத்து போடணும். பணம் தேவை”
கணிசமாக என்னிடம் இருந்து பணம் கறந்து விடுவார். இவர் சம்பளம் வாங்க கையெழுத்து போட பணம் தர வேண்டுமா? அதற்கு நான் ஏன் தர வேண்டும்? இப்படி ஒரு எச்சிக்களைத்தனம் பிடிலுக்கு உண்டு. பணத்தை திருப்பி தரவே மாட்டார்.
கோபமாய் அடிக்க வரும்போது அவருடைய சட்டை பாக்கெட்டில் ஒரு எட்டணா போட்டு விட்டால் அடிக்க மாட்டார்.
நீதி போதனை வகுப்பில் ஜெரால்ட் ஒரு பேனாக்கத்தி வைத்திருப்பதை கண்டு பிடித்த ஆசிரியர் ஒருவர் அதை பிடுங்கி மேஜையின் டிராயரை திறந்து உள்ளே வைத்து விட்டார். அடுத்த வகுப்பில் உள்ளே வந்த பிடில் டிராயரை திறந்தவர், கத்தியை நைசாக இடுப்பில் வேட்டியில் செருகிக்கொண்டார். இதை எல்லோருமே பார்த்து விட்டார்கள்.
ஜெரால்ட்டை அடுத்த வகுப்பில் மன்னித்த நீதி போதனை ஆசிரியர் கத்தியை திருப்பி தர ட்ராயரை திறந்தால் கத்தியில்லை. அவர் க்ளாஸ் டீச்சரிடம் கம்ப்ளெயின்ட் செய்ய வலியுறுத்தி விட்டு சென்றார். பிடில் வந்ததும் க்ளாஸ் லீடர் சொன்னான். “ சார் எவனோ ட்ராயர்ல இருந்த கத்திய தேட்டா போட்டுட்டான் சார்”
பிடில் நீளமாக அட்வைஸ். கையையும் காலையும் சொறிந்து கொண்டே ”டேய் இந்த வயசில தேட்டைய போடுற புத்தி இருந்தா உருப்பட மாட்ட. மரியாதயா உண்மைய சொல்லு”
குண்டு நஸீருதின் எழுந்து “ அத தேட்டா போட்டவன் கை குஷ்டம் பிடிச்சிடும் சார். அழுகிப்போயிடும்.”
பிடிலுக்கு ஜிவ்வென்று கோபம். ”இங்க வா” மலை போல எழுந்து ஆடி ஆடி முன்னால் வந்த நஸீருதினை அடி வெளுத்து விட்டார். “உன்ன கேட்டனா நான்? அதிக ப்ரசங்கி”
மூக்கு கண்ணாடியை கீழிறக்கி, பிடில் ஒவ்வொருவர் பெயராக சொல்லி அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது “ப்ரசண்ட் சார்” சொல்வதற்கு பதிலாக “ போட்டுக்க சார்” வேகமாக பையன்கள் சொன்னால் என்ன சொல்கிறான் என்பதெல்லாம் அவருக்கு புரியாது. ப்ரசண்ட் தான் சொல்கிறான் என்று நினைத்து அட்டென்டண்ஸ் ரிஜிஸ்டரில் மெக்கானிக்கலாக ’டிக்’ அடிப்பார். பேனாக்கத்தி தொலைந்த நிகழ்வுக்கு பிறகு ஊட்டி குண்ணூர் சிரில் வின்சண்ட் “ தேட்டா போடாத சார்” என்று படுவேகமாக சொல்வான். அதற்கும் ‘டிக்’ அடித்துக்கொண்டிருந்தார். எல்லோரும் சிரிப்பதை கண்டு பிடித்து விட்டார். சிரில் வின்சண்ட் பெயரை சொல்லி விட்டு காதை தீட்டி ஒரு நாள் கவனம் செலுத்தினார். இது எங்க கண்டு பிடிக்கப்போகுது என அன்று சிரில் வின்சண்ட் ரொம்ப அழுத்தம் கொடுத்து ஒவ்வொரு வார்த்தையாக, நிதானமாக கொஞ்சம் ராகம் போட்டுசொன்னான் “ தேட்டா.. போடாத.. சார்..”
பிடில் அட்டண்டன்ஸ் ரிஜிஸ்டரை கீழே வைத்து விட்டு மூக்கு கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு “ இங்க வா.” அழைத்தவர் குரலுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் சிரில் வின்சண்ட்டுக்கு. பிடில் அடி வெளுத்து விரிய கட்டி விட்டது.

English Hand writing note bookல் என்ன எழுதப்பட்டுள்ளது என்று வாசிக்காமல் கையெழுத்து போடுவார். ’பிடில் மாமா பிடில் மாமா எங்க போறீங்க, உங்க பிடில் கம்பி அந்து போனா என்ன பண்ணுவீங்க’ என்பதை  இங்க்ளீஷில் அப்படியே fiddle mama fiddle mama enga poreengaன்னு எழுதி நான் கையெழுத்து வாங்கி எல்லோருக்கும் காட்டியிருக்கிறேன்.
மறக்க முடியாத ஆளுமை பிடில் வாத்தியார். நகைச்சுவை உணர்வு மிக அதிகம். வயதானவர் தான். ஆனாலும் பெருமையோடு சொல்வார்.”டேய். உங்க எம்.ஜி.ஆர் என்ன விட வயசானவன்டா.”

http://rprajanayahem.blogspot.com/…/01/a-blundering-boy.html


Feb 18, 2019

சின்னத்தம்பி சாமான் மரம்


ஊரப்பாக்கத்தில் இருந்து ஆலப்பாக்கம் வரும்போது பெருங்களத்தூரில் சாலையோர மரங்கள் கண்பார்வையில் விழுந்தவாறு இருந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட மரம் கவனத்தைக் கவர்ந்தது. காய்கள் நீளமாக பெரிதாக தொங்கின. இந்த மரத்தை நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்திருக்கிறேன். அதன் பின் பார்த்த ஞாபகமெல்லாம் இல்லை. இதன் வட்டார வழக்கு பெயர்? ஆழ்மனத்தில் இருந்து அதன் பெயர் மேலெழும்பி வந்தது. யானபுடுக்கு மரம். சின்னத்தம்பி சக்கர போல அதன் காய்கள் இருப்பதால் யானப்புடுக்குமரம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.




https://rprajanayahem.blogspot.com/…/carnal-thoughts-40.html

https://rprajanayahem.blogspot.com/2016/09/blog-post_16.html

Feb 17, 2019

அரசியல் பிழைத்தோர்

நாற்பது விலையுயர்ந்த உயிர்கள் பறி போயிருக்கின்றன.
மதுரை பக்கம் இளைஞன் ஒருவன் துர்மரணம் அடைந்தால் பெண்கள் பதறி பொங்கி நெஞ்சில் அடித்துக்கொண்டு, கண்ணீர் வழிய கதறுவார்கள். 
“ஆத்தி, அழகொட்ட ஆம்பிளப்பிள்ள போயிடுச்சே.”
நாப்பது அழகொட்ட ஆம்பிள பிள்ளங்க கருக திருவுளம்.
’வலுவான பதிலடி’ என்பது தான் பெருந்தீர்வா?
Tit for tat. பயங்கரவாதிகளை வேட்டையாடும் எதிர் வேகம் எத்தனை அப்பாவிகளை அழித்தொழிக்கும். நாம தான் வசதியா பக்குவப்பட்டுக்குவமே. ’களையெடுக்கும்போது பயிரும் தான் அடி வாங்கும்’னு.
பயங்கரவாதிகள் அனைவரும் அருவருக்கத்தக்க ஜென்மங்கள் என்பதில் என்ன கருத்து வேறுபாடு இருக்க முடியும்? வலுவான பதிலடியில் நூறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டால் பயங்கரவாதியின் அடுத்த ’வலுவான திட்டம்’ இருநூறு ராணுவ வீரர்கள். அதற்கு நம் அரசாங்கத்தின் வலுவான பதிலடி நானூறு தீவிரவாதிகளை பழி தீர்க்கும்.
தீவிரவாதிகளுக்கு பக்கத்து தேசம் முழு ஆதரவெனும் போது வலுவான பதிலடி என்ற வார்த்தையே வலுவிழந்த அபத்தம்.
பயங்கரவாதிகளின் அதற்கடுத்த வலுவான பதிலடி சிவிலியன்களையும், ராணுவ வீரர்களோடு சேர்த்துக்கொல்லும் கொடூர திட்டமாகத்தான் இருக்கும். வலுவான பதிலடி ஒரு சங்கிலித்தொடர் என்பதே நிதர்சன உண்மை.
காஷ்மீர் பிரச்னை நிரந்தர துயரம். காஷ்மீரில் இரு தேசிய கட்சிகளுக்கும் எந்த செல்வாக்கும் இல்லை என்னும் யதார்த்தம் சொல்லும் செய்திக்கு என்ன பதில்? அதுவே தானே இங்கே தமிழகத்திலும், மற்ற சில மாநிலங்களிலும் கூட என்ற உளறல் விதண்டாவாதம் அற்பத்தனமானது.
ஷேக் அப்துல்லா காலத்தில் இருந்தே தொடரும் தீர்வற்ற நாசகார அரசியலின் தீவிரவாத வேலைகள். ஷேக் அப்துல்லாவை ஏன் இங்கே கொடைக்கானலில் சிறை வைக்க வேண்டியிருந்தது?
ஒவ்வொரு தீவிரவாத கொடூரத்தின் போதும் இந்திய முஸ்லீம் சமூகம் எதிர்கொள்ளும் பாதுகாப்பின்மை, அவமானம், சிறுமை, புறக்கணிப்பு.
’உழைக்கும் தொண்டர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும். தேவைகள் பூர்த்தி செய்யப்படும்’
மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த விசித்திர அறிவிப்பின் தன்மை பற்றி மீடியா உரையாடல் நிகழ்த்திப்பார்க்கலாம்.
ஆட்சிக்கட்டிலில் ஏறப்போவது தி.மு.க தான் என்கிற உறுதிப்பாட்டில் நின்று இவ்வாறு சொல்லப்படுகிறது. தேவைகள் பூர்த்தி! என்ன ஒரு அடர்த்தியான வாக்குறுதி. அதில் உள்ளடங்கிய விஷயங்கள் தி.மு.க தொண்டனுக்கு ஆறுதல் என்பது ஒரு பக்கமிருந்தாலும் உசுப்பேற்றும் தன்மையை உள்ளடக்கியது. எல்லா டெண்டர், காண்ட்ராக்ட் பற்றிய எம்.எல்.ஏ., கவுன்சிலர் உரிமையில் தனக்கும் உரிமைக்குரல் பங்கு எனும் ’கனவு மெய்ப்படும் நம்பிக்கை’ கூடலாம். ’ஆட்சி எங்கள் கையில்’ தொண்டன் என்பவன் காவல் துறைக்கு எப்போதுமே தலைவலியான சிக்கலான சண்டியர் அவதாரம் தான்.
காலாகாலமாக தொண்டனுக்கு தி.மு.க வாயிலயே லட்டு சுட்டுக்கொடுத்துக்கொண்டே தான் இருந்திருக்கிறது. ’உடன் பிறப்புக்கு இதயத்தில் இடம்’ என்ற தத்துவ நிலைப்பாடு நிரந்தரமானது என்பதை மறக்க முடியாது.
பா.ம.க., தே.மு.தி.க குடும்பக்கட்சிகளின் அதிமுக கூட்டணி சார்பு நிலைப்பாடு பற்றிய செவிவழி செய்தி கவுண்டமணியின் “இங்கே சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தானே” டயலாக்கை நினைவு படுத்துகிறது.
கவுண்டமணி பரவாயில்ல. ஒரு மானஸ்தன தான் தேட வேண்டியிருந்தது.
தேர்தலின் போது பணப்பட்டுவாடா நடைபெற உறுதியாக அனுமதிக்கப் போவதில்லை என்ற தேர்தல் கமிஷனின் வைராக்கிய கெடுபிடி கிடுக்கிப்பிடியால் டி.டி.வி தினகரனின் இருபது ரூபா நோட்டு பத்து ரூபா நோட்டாக மாறலாம்.
கடுமுடுக்கி பயில்வான் பீ முடுக்கி செத்தானாம்.

Feb 9, 2019

Inter personal relationship


’உரை நடையென்பது திமிங்கலத்தின் முதுகில் பயணிப்பது போன்றது.’
- யவனிகா ஸ்ரீராம்
என்னுடைய பதிவு “ புகழ் பூட்டு” படித்து விட்டு ஃபேஸ்புக்கில் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் போட்டிருந்த கமெண்ட் “ க்ளாசிக்”.
வெற்றிகரமாக திமிங்கலத்தின் முதுகில் நான் பயணிக்கிறேன் என்பது சந்தோஷமாயிருக்கிறது.
அறுபது வருடங்களுக்கு முன் பல திரை பிரபலங்கள் கூடியிருந்த நிலையில், ஏ.பி.நாகராஜன்   தனியறைக்கு வரும்படி எம்.ஆர்.ராதாவை அழைத்தாராம்.
ராதா அவருடன் அறையில் நுழைந்திருக்கிறார். தடால் என்று சாஸ்டாங்கமாக ராதா காலில் ஏ.பி.என் விழுந்திருக்கிறார்.
ராதா வெளியே வந்தவுடன் மற்றவர்களிடம் வெளிப்படையாக உடைத்துச் சொன்னாராம். “அயோக்கிய பய. பிச்சக்காரப்பய. என் கால்ல இவன் விழுகிறத மத்தவங்க பாக்கக்கூடாதுன்னு நினக்கிறான். தனியா அறைக்கு கூட்டிட்டு போய் ரகசியமா கால்ல விழுறான்.”
எனக்கு தெரிந்த மனிதரின் மகன் வெளி நாட்டில் படித்தவன். தன்னுடன் படித்த வெளி நாட்டு வெள்ளைக்கார நண்பர்களுக்கு கல்யாண நிச்சயத்தின் போது ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ஒரு பார்ட்டி கொடுத்திருக்கிறான். அதில் இங்கே உள்ள அவனுடைய நண்பன் தன் மனைவியுடன் கலந்து கொண்டிருக்கிறான். வெளி நாட்டில் படித்த அந்த மாப்பிள்ளை கல்யாணமான தன் பால்ய நண்பனை அறிமுகப்படுத்தியிருக்கிறான். பெண்ணும் ஆணுமான அந்த வெளி நாட்டு இளைஞர்கள் இந்த தம்பதியரை பார்த்திருக்கிறார்கள் “So you are already married” பரவசமாய் கண்களை விரித்திருக்கிறார்கள்.
அவனுடைய கல்யாணம் ஆறு மாதத்திற்கு பின்னால் நடந்த போது வெள்ளைக்கார வகுப்பு தோழர்கள் வருவார்கள் தானே? வந்தார்கள். பெண்கள் நம் கலாச்சாரப்படி சேலை. ஆண்கள் வேட்டி சட்டையில். மாப்பிள்ளை உபயம். கல்யாண மாப்பிள்ளையின் பால்ய நண்பன் தன் மனைவியோடு அவர்களை வரவேற்றிருக்கிறான். ஒரு வெள்ளைக்காரன் வரவேற்றவனைப்பார்த்து ஆச்சரியமாக கூவியிருக்கிறான் – “ Are you still married?!”
செய்திகள் பற்றி அன்றாடம் எந்த கவலையும் கிடையாத ஒரு அஞ்ஞானி – டி.வி., செய்தித்தாள் எதுவும் பார்க்கும் வழக்கமில்லாதவர் - செவி வழி செய்தியொன்றை அரைகுறையாக கேட்டு விட்டு ரோட்டில் அன்றைக்கு சத்தமாக அரசியல் பேசினார் “எப்படியோ இன்னைக்கு எவ்வளவு பெரிய தேசிய கட்சிக்கு அழகிரி தலைவராயிட்டாரே. என்னமா தம்பி முகத்தில மாவீரன் கரிய பூசிட்டாரு.”
பிசியான ஒரு பெட்ரோல் பங்க் அருகில் இருந்த ஒரு கடை முன் ஒரு Used condom அழுக்காக கிடந்தது. ராத்திரி பரபரப்பு அடங்கியவுடன் சாலையில் எக்ஸ்ப்ரஸ் வேக சரச சல்லாப நிகழ்வு சர்க்கஸ் போல. Rooster Fuck? விடிய, விடிய வாகனங்கள் போய் வருகிற பகுதி.
ஒரு அரசாங்க ஆஃபிஸ் போக வேண்டியிருந்தது. வாசலில் இருந்த ஒரு செக்யூரிட்டியிடம் பேச்சு கொடுத்தேன். இறுக்கமாய் இருந்த அவர் சகஜமானவுடன் என்னிடம் சொன்னார் “நான் ராத்திரி ஷிப்ட் பார்க்கறப்ப இங்க அஞ்சாறு ஆட்டோ ஆஃபிஸ் முன்னாடி நிக்கும். ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வருவார். ஒவ்வொரு ஆட்டோ டிரைவர் கிட்டயும் பேசுவார். அவங்க பணம் கொடுப்பாங்க. சரி தான். பவர காட்டி ’பவுசு’ வாங்கிக்கறார்னு நெனச்சேன். ஒரு நாள் ஆட்டோக்காரர்ட்ட கேட்டேன். அப்ப தான் தெரிஞ்சது. எஸ்.ஐ தான் அந்த ஆட்டோக்களின் ஓனராம். தினம் கலக்சன் பணம் வாங்கத்தான் வர்றாராம்.”
……………

Feb 8, 2019

Boys are boys


சாலிகிராமம் அருணாசலம் ரோட்டில் ஒரு ஸ்கூல் பாய் நான் ஸ்கூட்டரில் வரும்போது லிஃப்ட் கேட்டான். ‘சிக்னல் கிட்ட இறக்கி விட்டுடுங்க அங்க்கிள்.’
இவனிடம் பெயர், படிக்கும் வகுப்பு விபரம் கேட்ட பின் ஒரு கொக்கிய போட்டேன் ‘ It seems you are a fan of Ajit’.
’ ஆமா..எப்படி கண்டு பிடிச்சீங்க’
’நீ லிஃப்ட் கேட்ட ஸ்டைல் அஜித் ஸ்டைல். You know I have met your Ajit.
’நான் கூட தான் அஜித்த மீட் பண்ணியிருக்கேன். வேதாளம் ஷூட்டிங்ல. என் ’பெரியம்மா அம்முலு அந்த படத்தில நடிச்சிருக்காங்க. எங்க பெரியப்பா முன்னாலயே செத்துப்போயிட்டாங்க. பெரியம்மா நிறைய படங்கள்ள நடிச்சிருக்காங்க.’ படங்கள் பெயரை சொன்னான்.
’அங்க்கிள், நான் அடுத்த சிக்னல்ல இறங்கிக்கிறேன்.’
ஆற்காட் ரோட்டில் அடுத்த சிக்னலில் இறங்கிக்கொண்டான்.
அங்கிருந்து மெகா மார்ட்டை ஒட்டிய ரோட்டில் போகும்போது சூடான கடலை விற்றுக்கொண்டு சுரேஷ் வண்டி தள்ளிக்கொண்டு, சட்டியில் கரண்டியால் தட்டிக்கொண்டு போய்க்கொண்டிருந்தான். அவனிடம் நிலக்கடலை பாக்கெட் வாங்கிக்கொண்டேன்.பொதுவாக சூடான கடலை வண்டிக்காரர்கள் திருவண்ணாமலை தடாகம், போத்துவா என்ற ஊர்க்காரர்களாய் தான் இருப்பார்கள். ஆனால் இவன் ஏதோ வேறு ஊர். சுரேஷ் சொன்னான். ‘அடுத்த கட்டில போனா விஜய் சேதுபதி ஆஃபிஸ். அத தாண்டி போனா ஆற்காட் ரோட் போய்டுவீங்க.’
விஜய் சேதுபதி கூத்துப்பட்டறைக்கு மூன்று தடவை சென்ற வருடங்களில் வந்ததுண்டு. ஆனால் நான் பார்த்ததில்லை. சரி. இங்கே தான் விஜய் சேதுபதி ஆஃபிஸ்னா ஆஃபிஸ பாத்துக்கிட்டே போய் ஆற்காடு ரோட்டுக்கு போயிடலாம்னு அடுத்த சந்தில் திரும்பினேன்.
திரும்பும் போது ஒரு குண்டு பையன் நின்று கொண்டிருந்தான்.
‘ Do you know..Vijay Sethupathy’s office.’
‘Go straight ‘
‘ You are a vijay fan.’ அரிவாள போட்டேன்.
அவன் முகம் பிரகாசமாகி “How did you find it Uncle?”
“Your Posture clearly indicates that you are a vijay fan. You turn your head exactly like Vijay.”
நான் சொன்னேன். “But I’m a Vijay Sethupathy fan.”
அங்கே நின்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் இந்த உரையாடலால் ஈர்க்கப்பட்டு சிரித்தார்கள். ஒருவர் அவனுடைய அம்மாவாக இருக்கலாம்.
இன்னொருவர் அத்தையாக கூட இருக்கலாம்.
நான் ‘I’m a great admirer of Vijay Sethupathy’
சாம் அவன் பெயர். ஏழாம் வகுப்பு படிக்கிறான். சாம் அழுத்தமாக ‘I’m a Vijay fan.’
“ I tell you, When you become a man, You will be a Vijay Sethupathy fan.”
சாம் பதற்றத்துடன் “ No,  I will be a Vijay fan for ever. I won’t change.”
‘Ok, I’m going to see Vijay Sethupathy now. ஹைய்யா ஜாலி. Bye.’
விஜய் சேதுபதி ஆஃபிஸ் முன் ஒரு சிறிய கூட்டம். இளம் வாலிபர்கள்.
விஜய் சேதுபதி ஆஃபிஸ் இது தானா?
அவர் இருக்கிறாரோ இல்லையோ தெரியவில்லை. அவருடன் செல்ஃபி எடுக்கமுடியுமா என்ற தவிப்பில் ரசிகர்கள்.
அந்த ஆஃபிஸை தாண்டி ரைட்டில் திரும்பி மீண்டும் ஆற்காட் ரோட் வந்தேன்.

Little girls are wiser than men. ஆனா boys are boys.

ஆண் குழந்தைங்க துறு துறுன்னு இருப்பாங்க. mischievous ஆக தான் இருப்பாங்க. Power. ஒரு வினாடி கூட உடம்பும் மனமும் சலனமில்லாம இருக்க முடியாது. ரஜினி ரசிகரா, விஜய் ரசிகரா, அஜீத் ரசிகரா தான் இருப்பாங்க.
நான் Spoken English teacher ஆக இருந்த போது ஒரு விஷயம் கவனித்திருக்கிறேன். பெண் குழந்தைகளுக்கு பெரும்பாலும் சூரியா தான் பிடித்த நடிகர். ஜெமினி கணேசன், சிவகுமார், கமல்ஹாசன், அரவிந்த் சாமி, அப்பாஸ் ஆகியோருக்கு பெண் ரசிகர்கள் அந்தந்த காலங்களில் இருந்திருக்கிறார்கள்.
……………

Feb 5, 2019

Carnal Thoughts - 45


புகழ் பூட்டு

மதுரை சென்ட்ரல் தியேட்டரை ஒட்டியுள்ள சந்தில் Sex work கொடி கட்டி பறந்து கொண்டிருந்தது. போலீஸுக்கு ’தன்னை’ய கட்டிட்டு Ex- sex worker கிழவி ஒருத்தி, அவள் பெயர் பாப்பு – தேன் சிட்டு, மான் கொம்பு, கன்னிப்பொண்ணு என்று சில குமரிகளை வைத்து தொழில் நடத்திக்கொண்டிருந்தாள். செங்கோடன் என்று ஒரு ஒரு செக்யூரிட்டி அந்த சந்து வீட்டில் வாசலில் அமர்ந்திருப்பான். சலம்பல் வந்தா சமாளிக்க.
பாப்பு கிழவியுடன் அளவளாவுவது அவளுடைய விடன், விடலை கஸ்டமர்களுக்கு சுவையான அனுபவம்.
தான் குமரியாய் இருந்த காலத்தில் மதுரைக்கு வந்த சில புகழ் பெற்ற பிரபலங்கள் தன்னை அணைஞ்சிருக்காங்கெ, பூட்டியிருக்காங்கெ என்று அவர்கள் பெயரையெல்லாம் சொல்வாள்.
ஏன் இப்போது ப்ரமோசனின் பாப்பு மாமாக்காரியாய் (Pimp) இருக்கும்போதும் இங்கே அவளுடைய Employeeகளை தேடி வரும், லாட்ஜுக்கு அழைத்துக்கொண்டு போகும் மதுரை, தமிழக பிரபலங்கள் பட்டியலையெல்லாம் கொடுப்பாள். ஒரு பழைய பிரபல நடிகை அந்தக்காலத்தில் தன்னுடைய ’கலீக்’ என்று சொல்வாள். அந்த பிரபல நடிகையை அணைஞ்சி பூட்டியிருக்கிற லோக்கல் சாமானிய சல்லிகளைப்பற்றி சொல்வாள்.
’யார் கண்டா? நாளைக்கே தேன் சிட்டு, மான் கொம்பு, கன்னிப்பொண்ணு கூட பிரபலமாகலாம். இதுக எல்லாமே சினிமா ஆசையில் தான் இருக்கு. மெட்ராஸ் போக காசு சேத்துக்கிட்டு இருக்குதுக.’
’புகழ் பூட்டு’ என்று ஒரு வெக்காபுலரியை இதை வைத்தே சப்பைக்காலன் உண்டாக்கியிருந்தான். ’நாளை தேன் சிட்டு பெரும் புகழ் எய்தி சினிமாபோஸ்டரில் வந்து சென்ட்ரல் தியேட்டரில் அவள் படம் ஓடும்போது நான் என் ’புகழ் பூட்டு’ பற்றி எல்லோரிடமும் பகர்வேன்.நான் பூட்டுன தாட்டி.’ என்று உருண்டை விழியன், குருவி மண்டையன் மார் தட்டி இரும்பூதெய்துவார்கள்.
இடியட் தாஸ், மண்டை மூக்கன், ஒத்த காதன் மூவரும் சென்ட்ரல் தியேட்டர் சந்துக்கு விஜயம் செய்த போது ஆளுக்கொரு ‘தாட்டி’ய Choose செய்யும் வேளையில் இடியட் தாஸ் Choice கிழவி பாப்பு. பாப்புவுக்கு வெட்கத்தால் முகம் சிவந்து விட்டது. “டேய், என்னடா முட்டாப்பயலே..நானாடா” நாணத்தோடு தவித்துப்போய் விட்டாள்.
இடியட் தாஸ் அவளை பூட்டிய அனுபவத்தை பின்னர் ஏ.ஏ. ரோட்டில் விவரித்தான். “ டேய், பாப்பு என் கிட்ட ’ஏ அய்யா, மாரப்புடி, என் மாரப்புடி, முலைய பிடிச்சி கசக்கு மாமு’ன்னு விரகதாபத்தில கத்தி தவிச்சாடா.. இது ஒரு ’புகழ் பூட்டு’டா. புகழ் பெற்ற மறைந்த மாமணிகள் பூட்டிய ஆரணங்கு பாப்புவை நான் அணைஞ்சது கூட ஒரு ’புகழ் பூட்டு’ தானேடா”
ஆரப்பாளையம் ரிக்ஷாக்காரன் ஆலமரத்தான் ஒல்லியாய் இருந்தாலும் பெயருக்கேற்ற உயரமானவன். ஆறடிக்கு மேல் உயரம். ஆம்புலஸ் என்று நினைத்து ஒரு போலீஸ் வேனை மறித்து நைஃப்பை ஓங்கி குத்தியவன். (’ரிக்ஷாவில் அவன் உட்கார்ந்து ஓட்டும்போது ரிக்ஷாவை ஒரு டைனோசர் இயக்குவது போலவே இருக்கும்’ என்று ரொம்ப பின்னால் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படம் பார்த்தவுடன் மொட்டையன் டைனோசரை ஆலமரத்தானுடன் கனக்ட் செய்து நினைவு கூர்ந்திருக்கிறான்.)
ரிக்ஷாக்காரன் ஆலமரத்தான் தனித்தமிழில் பேச முயற்சிகள் மேற்கொள்பவன். ஆலமரத்தான் என்ன, அனைத்து சல்லிகளுமே தூய தமிழ் பிரயாசையில் இருப்பவர்கள் தான்.
ஆலமரத்தான் ஆரப்பாளையம் பார்க்கிற்குள் நுழைந்து கஞ்சா போதையில் மிதந்து கொண்டிருந்த தன் சக சல்லிகளை பார்த்து உருக்கத்துடன் அந்த திடுக்கிடும் தகவலை சொன்னான். “ நம்மையெல்லாம் இன்பத்தில் ஆழ்த்தி இமயத்தின் உச்சிக்கே கொண்டுக்குப்போன (கொண்டு போன என்ற வார்த்தையின் வட்டார வழக்கு. தூய தமிழில் இயல்பாக வட்டார வழக்கு வந்து விட்டது)  அருமை அம்மணி, மறைந்த மாமணிகளை பூட்டி மகிழ்ந்த கண்மணி, ’சென்ட்ரல் தியேட்டர்’ சந்து( சென்ட்ரல் தியேட்டர் என்ற மணிப்பிரவாளத்தில் தனித்தமிழ் முயற்சி வியர்த்தமாகி விட்டதே) சரித்திர புகழ் பெற்ற பொந்து ’பாப்பு’ அமரராகி விட்டார்.”
உடனே, உடனே அந்த இடத்திலேயே இடியட் தாஸ் தலைமையில் அமரர் பாப்பு விற்கு ஒரு இரங்கல் கூட்டம் நடந்தது.

குருவி மண்டையன் பாப்புவின் கோட்டையில் தான் மான் கொம்புவுக்கு நெம்புகோலின் தத்துவத்தை விளக்கி விட்டு எழுந்து அறை நீங்கி, பின்னர் செக்யூரிட்டி செங்கோடன் தன் சட்டையைப் பிடித்து இழுத்த போதும் வீட்டை விட்டு எப்படி எஸ்கேப் ஆக முடிந்தது? என்று விவரித்தான்.

 ஒச்சு தான் ஒரு குமருவுடன் அணைஞ்சி சோலிய முடித்து விட்டு காசு இல்லை என்று உதட்டை பிதுக்கிய போது, தன்னை தமிழ் மரபுடன், பரந்த மார்புடன்  பாப்பு மன்னித்து அருளிய சம்பவத்தை குரல் தளுதளுக்க சொன்னான்.’ங்கொம்மாள இங்க கொண்டு வந்து விடுடா..ங்கொக்காள இங்க கொண்டு வந்து விடுடா’ன்னு அமரர் பாப்பு அப்போது கடுமையாக முதலில் திட்டி விட்டு, அப்புறம் தான் மன்னித்தாள் என்பதை மட்டும் ஒச்சு மறைக்கத்தான் வேண்டியிருந்தது. சபை நாகரீகம். இரங்கல் கூட்டத்தில் இறந்தவர் பற்றி தப்பாக பேசக்கூடாது.

ஒத்த காதன் சோழவந்தான், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் என்றெல்லாம் தாட்டி தேடி வேண்டி  சென்றவன், சென்ட்ரல் தியேட்டர் சந்து கஸ்டமராக இல்லாத போதும்  உச்சக்குரலில் பாடினான். “ என் தங்கமே, உனது மேனி தாங்கி நான் சுமந்து செல்ல எனக்கொரு பந்தமில்லை”
 சற்று நிறுத்தி அடுத்தவரி உச்சரித்த ஒத்தக்காதன் குரலில்
துல்லியமாக பொறாமை தொனித்தது- “ எவருக்கோ இறைவன் தந்தான்” 

Feb 2, 2019

நுரை குமிழி


தி.மு.க பத்திரிக்கையில் ஒரு காலத்தில் தனித்தமிழ் அக்கறையிருந்திருக்கிறது. சம்கிருத வார்த்தைகளை போடக்கூடாது என்ற வைராக்கியம் இருந்தது. ராஜாஜி பெயரை ’ராசாசி’ என்று அச்சிட்டவர்கள் எம்.ஜி.ஆர் என்ற பெயரில் திருத்தம் எதுவும் எம்சியார் என செய்யவில்லை. எஸ்.எஸ்.ஆர் பெயரும் அப்படியே.
இப்போது ’ஆஹ’ என்ற வார்த்தையை எப்போதும் உச்சரிக்கும் தி.மு.க. தலைவர் பெயரை பழ.கருப்பையா தனித்தமிழில் ’இசுடாலின்’ என்று குறிப்பிடுகிறார். நக்கீரனில் பார்த்தேன். தனித்தமிழ் வைராக்கியம் இப்படி இருப்பது பற்றி நான் 2008 ஸ்டாலினை இவர்கள் சுடாலின் என்று குறிப்பிடுவார்களா என்று கேட்டிருந்தேன். ’சுடாலின்’ என்பதே தப்பு. அடடா ’இசுடாலின்’ என்பது இன்றல்லவோ புரிகிறது.
இந்திரா பார்த்தசாரதி பேட்டி பிப்ரவரி விகடன் தடத்தில். இந்திரா பார்த்தசாரதியை முழுமையாக படித்தவன் நான். “எந்த தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்” என்பதை ’ஆஹ’ என்ற வார்த்தையை தி.மு.க தலைவர் ஸ்டாலின் எத்தனை தடவை உச்சரித்தாரோ அத்தனை தடவை இ.பா இந்த ஸ்தாபனமாகும் தத்துவ விஷயத்தை உச்சாடனம் செய்து வந்திருக்கிறார். அவருடைய எழுத்தின் ஆதாரக்கவலை இதுவென்றே குறிப்பிடலாம். இதை நான் என்னுடைய “ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை” கட்டுரையில் (2002ல்) கூட குறிப்பிட்டேன்.

இந்திரா பார்த்தசாரதிக்கு சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்ட போது திருச்சி வானொலி நிலையத்தில் “ராமானுஜர்” நாடகம் பற்றி நான் உரை நிகழ்த்தியிருக்கிறேன்.
அவருடைய ’கிருஷ்ணா கிருஷ்ணா’ நாவலுக்கு நான் எழுதிய விமர்சனம் எம்.ஜி.சுரேஷின் பன்முகம் பத்திரிக்கையில் விமர்சனம் வந்ததுண்டு.
இந்திரா பார்த்தசாரதி புதுவை பல்கலைக்கழகத்தில் பணி புரிந்த காலத்திலும் அதன் பின் இந்திரா மாமி மறைவுக்குப் பின் நான் பார்த்த போதும் அவரிடம் ஒரு விஷயம் கவனித்திருக்கிறேன்.
அவருடைய மூக்கிற்கு வெளியே ஒரு வெள்ளை முடி எப்போதும் நீட்டிக்கொண்டிருக்கும். அதை சின்ன சிசரால் கட் செய்ய முடியும் என்பது ஏன் அவருக்கு தோன்றவில்லை.
இப்போது தள்ளாத வயதாகி விட்ட அவர் புகைப்படத்தை விகடன் தடம் பத்திரிக்கையில் பார்த்த போது அந்த வெள்ளை முடி மூக்கிற்கு வெளியே நீட்டிக்கொண்டு தெரிகிறதா என்பதை செக் செய்தேன். அட்டையில் உள்ள புகைப்படத்திலும் உள்ளே பேட்டியின் முதல், இரண்டாவது புகைப்படத்திலும் வெள்ளை முடி காணப்படவில்லை. ஒரு ஆசுவாசம் எனக்கு ஏற்பட்டது. அந்தோ. நான்காவது புகைப்படத்தில் ஒரு வெள்ளை முடி அவருடைய இடது நாசித்துவாரத்தில் நீட்டிக்கொண்டிருக்கிறது..


விகடன் தடத்தில் கவிதையின் கையசைப்பு கட்டுரையில் வாஸ்கோ போபோ என்ற ஒரு செர்பியர் எழுதிய கவிதை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. ’ஆங்கில மூலத்தால்’ இருந்து தானே?

மௌனியின் ’சாவில் பிறந்த சிருஷ்டி’ எப்போதோ எழுதப்பட்டு விட்டது. அதை படித்து விட்டவர்கள் நாம். இந்த சிறுகதையை பெங்க்வின் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலக சிறுகதைகளில் சேர்த்திருக்கிறது.
இந்த கவிதையில் பிரமிக்க என்ன இருக்கிறது?

’முன்னொரு காலத்தில் ஒரு கதை இருந்தது
அதன் முடிவு, கதை
தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டது.
அதன் தொடக்கம் கதையின் முடிவுக்குப்
பின்பே வந்தது.
தங்கள் சாவிற்குப் பிறகு
கதையின் நாயகர்கள்
கதைக்குள் வந்தார்கள்
தங்கள் பிறப்பிற்குப்
பிறகு வெளியேறிப்போய் விட்டார்கள்.”
இதே முறையில் பல கவிதைகள் எழுதலாம். சலிப்பான கவிதை முறைமை.
’முன்னொரு காலத்தில் ஒரு ஓவியம் இருந்தது
அதன் கடைசி தீற்றல், ஓவியம் தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டது.
அதன் முதல் வரி வடிவம் ஓவியம் முடிக்கப்படுவதற்கு
பின்பே வந்தது.
தாங்கள் அழிக்கப்பட்டதற்கு பிறகு
ஓவியத்தின் நிழல் பிம்பங்கள்
ஓவியத்திற்குள் வந்தன.
பிம்பங்கள் வண்ணத்தில் பிறப்பிக்கப்பட்ட
பிறகு வெளியேறிப் போய் விட்டன.’
இதை இசை, சிற்பம் இவற்றை வைத்தும் எழுதிப்பார்க்கலாம். ஏன் சினிமா பற்றி கூட.

’அந்த திரைப்படம் கடைசி சீனில் கடைசி ஷாட்டுக்கு முன்னரே
தொடங்கி விட்டது.
முதல் ஷாட் ஷுட் பண்ணும்போதே முடிந்து விட்டது’
மண்டையில் மரம் முளைக்காத வரை எழுதிப்பார்க்கலாம். அல்லது மண்டையில் மரம் முளைத்தபின்னும் பிடிவாதமாக எழுதிப்பார்க்கலாம்.
பெண்கள் ஐஸ்கிரீமை நாக்கால் நக்கி சாப்பிடக்கூடாது என்று துருக்கி நாட்டில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக காதில் சேதி விழுந்தது. இந்த காரசார செய்தி பெண்ணிய கவிதைகளுக்கு வழி வகுக்கலாம்.



Feb 1, 2019

மேடையில்




தோழர் ஜீவா அறுபது வருடங்களுக்கு முன் அமெரிக்கன் கல்லூரி மேடையில் பேசும்போது குறிப்பிட்டாராம். “ பாரதி அமுத இலக்கியம். பாரதி தாசன் நச்சு இலக்கியம்.”

அருணாச்சலம் ரோட்டில் முருகாலயா ஸ்டுடியோவில் சினிமா ஷூட்டிங் நடக்கும். இப்போது இந்த ஸ்டுடியோ இருந்த இடத்தில் தான் சூரியா ஹாஸ்பிட்டல் இருக்கிறதா? உறுதியாக தெரியவில்லை.


இந்த முருகாலயா ஸ்டுடியோவில் கவிஞர் கே.டி.சந்தானத்தோடு நான் பேசிக்கொண்டிருந்த போது அவர் ஒரு விஷயம் சொன்னார். “ தோழர் ஜீவா மேடையில் உணர்ச்சி வேகமாகப் பேசும் போது மைக்கை விட்டு பக்கவாட்டில் நகர்ந்து ஓரமாக போய் விடுவார். மீண்டும் மைக்கிற்கு வந்து பேசுவார். திரும்பவும் மைக்கை விட்டு ரொம்ப விலகி நகர்ந்து விடுவார்.”


தோழர் ஜீவா பற்றி நினைத்தாலே சுந்தர ராமசாமி எழுதிய “ காற்றில் கலந்த பேரோசை “ ஞாபகம் வரும். “இப்படி மண்ணாந்தையா போயிட்டோமே”

தோன்றிற் புகழோடு தோன்றுக. எனக்கு பிறக்கும் போதே ஒரு பெருமை கிடைத்தது. தோழர் ஜீவா பிறந்த ஆகஸ்ட் 21ம் தேதி தான் நானும் பிறந்தேன்.
தொடர்ந்த ஏழ்மைக்கு நேர்மை தான் காரணம்.

எம்.ஆர் ராதா சிறையிலிருந்து வந்த பின் மதுரை  மேல மாசி வீதியில் நாடகம் போட்டார். சரியான கூட்டம். ஆனாலும் அவருடைய முகபாவங்கள் தூரத்தில் இருந்து பார்க்கும் போது தெளிவாக ஏதோ க்ளோசப் போல தெரிந்தது.

மேடையில் ராதாவை பார்ப்பது ஒரு வித்தியாசமான ஒன்று. “டேய், நடிப்ப பாருங்க. ரசிங்க. ஆனா ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிடாதிங்கடா பாவிங்களா”

மேல மாசி வீதியில் மேடையில் நடித்துக்கொண்டிருக்கும்போதே முகம் சுண்டி முன் பகுதியை பார்த்து “அங்க யார்ரா அவன்? கஜகஜன்னு பேசிக்கிட்டு.. அவன அடிச்சி தூக்கி வெளிய போடு. நான் இங்க கத்திக்கிட்டிருக்கேன். அவன் அங்க கத்திக்கிட்டிருக்கான். கச,கசன்னு. போலீஸ் என்ன பண்றான். அவன அடிச்சி தூக்கி வெளிய போடு.” இப்படி சொல்லி முடித்து விட்டு ஒரு இரண்டு செகண்ட் விட்டு “அடி காந்தா.. தேவடியாள் பெற்ற திருமகளே” என்று கதாபாத்திரமாக பேச ஆரம்பித்தார்.

ஒரு ஐந்து வருடத்திற்கு பின் பெரியகுளம் எக்ஸிபிசனில் எம்.ஆர்.ராதாவின் அதே ’ரத்தக்கண்ணீர்’ நாடகம் பார்த்தேன். கூட்டமே இல்லை. சொற்பமாக ஜனங்கள். அப்போதும் ராதா மேடையில் நடித்துக்கொண்டிருக்கும்போதே  “ அங்க யார்ரா அவன்? கஜகஜன்னு பேசிக்கிட்டு.. அவன அடிச்சி தூக்கி வெளிய போடு. நான் இங்க கத்திக்கிட்டிருக்கேன். அவன் அங்க கத்திக்கிட்டிருக்கான். கச,கசன்னு. போலீஸ் என்ன பண்றான். அவன அடிச்சி தூக்கி வெளிய போடு.” என்று சத்தமாக கத்தினார்.

https://www.youtube.com/watch?v=vSdeFZb52Lg&t=116s