Share

Jan 31, 2018

ஜோதிடம்


இலக்கிய வாசிப்பு மட்டும் என்றில்லை.
எண்பது ஜோதிட நூல்கள் படித்திருந்தேன். நியூமராலஜி பற்றியும் சீரோ, பண்டிட் சேதுராமன் துவங்கி நிறைய புத்தகங்கள் படித்திருந்தேன்.
ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இதனால் மிகுந்த சிரமங்கள் எனக்கு ஏற்பட்டது.
பலருக்கும் நான் ஜோதிடம் பார்க்க வேண்டியிருந்தது.
வசதியான ஒரு உறவினர் தன் மகளுக்கு வந்த வரன் ஜாதகங்கள் என் கவனத்திற்கு வாராவாரம் கொண்டு வருவார். நான் பொருத்தம் பார்த்து எழுதி தருவேன். இலவசமாக. நான் பார்த்த ஜாதகங்களில் இறையன்பு ஐ.ஏ.எஸ். ஜாதகமும் ஒன்று.
“ இவன் ஐ.ஏ.எஸ். சரி தான். ஆனா வயசு ரொம்ப அதிகமாயிருக்கு” என்பார்.
ஐ.பி.எஸ்., டாக்டர் ஜாதகங்கள் நிறைய தருவார்.
பொருத்தங்கள் முழுமையாக இருந்தாலும் ஜாதகங்களை கழிக்க பல காரணங்கள் சொல்வார்.
” இவன் ஐ.பி.எஸ்.. சரி.. ஆனா இவன் அப்பன் சாதாரண ஆளாயிருக்கான். என் சம்பந்தின்னா எனக்கு சமமா அந்தஸ்து, செல்வாக்குள்ளவனா இருக்க வேண்டாமா? தொர.. என்ன நான் சொல்றது?”
வாரத்திற்கு பத்து ஜாதகத்திற்கு குறையாது.
அவருடைய ஜபர்தஸ்து பிரகாசமானது. Subtext கீழ்கண்டவாறு இப்படித்தான் இருக்கும்.
“இவன் கலெக்டர்.. சரி… சரி தான். ஆனா இவன் அப்பன்..? இந்தியாவில இருபத்தேழு ஸ்டேட் இருக்காது? ஒரு ஸ்டேட்டுக்கு கூட இவன் அப்பன் கவர்னரா இல்லயே? அட ஒரு முன்னாள் கவர்னரா இருந்தா கூட சரி தான்.”
ஜாதகம், நியூமராலஜி தொரக்கி தெரியும் என்ற செய்தி ரொம்ப வேகமாக உற்றார், சுற்றம், அறிந்தார் அனைவருக்கும் பரவியதால் நான் பெருந்தொல்லை சந்திக்க நேர்ந்தது.
ஒரு கல்யாண வீட்டிற்கு போனால் அங்கே சிலர் என்னிடம் ஜோதிடம் கேட்க ஆரம்பித்தார்கள். எழவு வீட்டுக்கு போனால் என்னை சுற்றி எதிர்காலம் பற்றி விசாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஓசி என்பதால் எனக்கு ஒன்னு, எங்கப்பனுக்கு ரெண்டு.

பஜாருக்கு போனால் நகைக்கடை முதலாளி ஜோசியம் கேட்பார்.
“மைனர்! இவரு ஒங்க கிட்ட ஜாதகம் பாக்கனும்னு ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருக்காரு. கொஞ்சம் இங்கயே பாத்து சொல்லுங்க.” என்று கடையில் அமர்ந்திருக்கும் தன் நண்பருக்கு சிபாரிசு செய்வார்.
முகமறியா அந்த நபர் ஜாதகத்தை கொடுப்பார். விபரம் கேட்டுக்கொள்வார்.
மறு நாள் அவர் மீண்டும் என்னைப் பார்த்து தலையை சொறிவார்.
” என்னுடைய அம்மாவும் மனைவியும் உங்கள வீட்டுக்கு அழைத்து வரச்சொன்னார்கள். இன்னும் சில விபரங்கள் கேட்க வேண்டியிருக்கு. சிரமம்னு நினைக்காம வாங்க சார்..”
வீட்டுக்கு என்னை வற்புறுத்தி அழைத்துச் செல்வார். நாலு ஜாதகம் பார்ப்பதென்றால் ரெண்டு மணி நேரமாவது ஆகும்.
அதே நபர் ஒரு ரெண்டு மாதத்தில் மீண்டும் என்னிடம் பவ்யமாக கெஞ்சுவார். ”கோயம்புத்தூருல இருந்து என்னோட அக்காவும் அக்கா மாப்பிள்ளையும் வந்திருக்காங்க. மச்சானுக்கு கொஞ்சம் சிக்கல். ஒங்க கிட்ட ஜாதகத்த காண்பிக்கணும்னு சொல்றார்.”
பேரு மாத்தணும்.. நியூமராலஜி பாக்கணும்… நான் கார் வாங்கணும்..எஸ்டேட் வாங்கணும்னு என் உயிர எடுத்திட்டானுங்க.

ஓசின்னா தான தொந்தரவுன்னு ‘துரை சஹா ஜோதிட சாஸ்த்ரம்’னு சின்னக்கடை வீதியில போர்டு போட்டு ஒக்காந்தேன். ஃபைனான்ஸ் தொழில் செய்து கொண்டிருந்த எனக்கு ஒரு ஆஃபிஸ்.
அப்பவும் கூட பெருங்கோடிஸ்வரன் எல்லாம் என் கிட்ட ஓசியில தான் ஜோசியம் கேட்டானுங்க.
பரிகாரம் சொன்னா தான் ஜோசியருக்கு மரியாதை. பரிகாரம் சொல்லலேன்னா வர்ற ஆளுக்கு சலிப்பு. நான் பரிகாரமெல்லாம் சொல்லவே மாட்டேன்.
ஒருவர் தன் ஒரே மகனுக்கு வரன் பார்த்துக்கொண்டிருந்தார்.
என் ’ட்ரஸ் சென்ஸ்’ பற்றி இவருக்கு ரொம்ப அபிப்ராயம். “ தம்பி மாதிரி ட்ரஸ் பண்ண ஊர்ல ஆளே கிடையாது. ” என்பார்.
(அப்போதெல்லாம் மும்பை கொலாபாவிலிருந்து சராக்தின் ரெடி மேட் ட்ரெஸ் தான் எனக்கு.)

அவர் கொடுத்த ஒரு ஜாதகம் நல்ல இடமாம். ஒரே பெண். பத்துக்கு ஒன்பது பொருத்தங்கள் இருப்பதாக எழுதிக்கொடுத்தேன்.
குடும்பத்தோடு அந்த பெண்ணின் ஊருக்கு போயிருக்கிறார்.
பெண்ணின் அப்பா அந்த நகரத்தில் பிரபல ஜோதிடர். வீடே ஒரு கோவில் போல இருந்திருக்கிறது. சாம்பிராணி, சூடம், புஷ்பங்கள்…
வாழப்பாடி ராமமூர்த்தி, சரத்குமார் போன்ற பிரபலங்கள் ஜோதிடரை பார்க்க வந்திருக்கிறார்கள்.
என்னுடைய பொருத்த விபரங்களை பார்த்து விட்டு ஜோதிடர் மாப்பிள்ளையின் தகப்பனாரிடம் சொன்னாராம்:”இவர் எழுதியிருப்பது சரி தான். ஆனால் என் பெண் நட்சத்திரத்திற்கும் உங்கள் பையன் நட்சத்திரத்திற்கும் விவாகம் நடத்தக்கூடாது என்று ஒரு விசேஷ ஜோதிடக் குறிப்பு இருக்கிறது”
மிகப்பெரிய ஜோதிடர் அவர். இவர்கள் கிளம்பி வந்து என்னைப் பார்த்தார்கள்.
என் பாட்டில் குற்றம் கண்ட புலவன் எவன்? என்ற கோபமெல்லாம் எனக்கு கிடையாது. நான் இரண்டு பக்கத்திற்கு சில விஷயங்கள் கேட்டு எழுதினேன்.
”புலிப்பாணியில் இவ்வாறு இன்னின்ன நட்சத்திரங்களுக்கு இப்படி இப்படி….. வராஹமிகிரர் பிருஹத் விவாகபடலம் இவ்வாறு சொல்கிறது… ஹோரா ரத்னா நட்சத்திரங்கள் பற்றி குறிப்பது… சாரதீபா கிரந்தங்கள்…ஜாதகாபரண விவாக பலன்… சாராவளி என்று….
இவை எதிலும் உங்கள் பெண் நட்சத்திரத்திற்கும் இந்த பையன் நட்சத்திரத்திற்கும் விக்னங்கள் ஏதுமில்லையே. நீங்கள் எந்த கணிப்பின் படி பொருந்தவில்லை என்று சொல்கிறீர்கள்?”
இதை அவருக்கு தபாலில் அனுப்பி வைக்க சொல்லி பையனின் தகப்பனாரிடம் தந்தேன்.
பிரபல ஜோதிடரிடமிருந்து உடனே, உடனே கிளம்பி வரும்படி மாப்பிள்ளை வீட்டாருக்கு தகவல் வந்து விட்டது.
இவர்கள் போனவுடன் முகம் மலர அமர வைத்து சொன்னாராம்
“ இந்த குறிப்பை எழுதிய ராஜநாயஹம் யார்?”
மாப்பிள்ளையின் அப்பா தயக்கத்துடன் : ”இவர் தொழில் முறை அனுபவ ஜோதிடர் அல்ல. என் நண்பரின் மருமகன்…”
பிரபல ஜோதிடர் “ இதை எழுதியவர் குடத்திலிட்ட விளக்கு. மிக அற்புதமான ஜோதிஷ அறிவு மிக்கவர். இவர் எழுதியதை எல்லாம் இரவு ஏழு மணி துவங்கி நள்ளிரவு ஒரு மணி வரை செக் செய்தேன். இவர் சொல்வது மிகச்சரி. உங்கள் பையனுக்கு என் பெண்ணை தாராளமாக திருமணம் செய்து வைக்கலாம். எந்த விக்கினமும் நான் சொல்லப்போவதில்லை.”
இதை ஊருக்கு வந்தவுடன் என்னிடம் வந்து மலைத்து நின்றார்கள். பிரமிப்பாக சொன்னார்கள். ”உங்களைப் பற்றி அவருக்கு ரொம்ப மதிப்பும் மரியாதையும்”
எனக்கு அப்போதிருந்து ஜோதிடத்தின் மீதிருந்த மதிப்பு மரியாதை போய்விட்டது. இவ்வளவு தானா? என்று ஆகிவிட்டது.
இன்று பதினைந்து ஆண்டுகளாகி விட்டன. என்னிடம் இருந்த அத்தனை நூல்களையும் தூக்கியெறிந்து விட்டேன். ஜோதிடம் என்று எவனும் என்னிடம் எதுவும் கேட்டு வரக்கூடாது என்பதை உறுதியாக சொல்லி விட்டேன்.
ஊர்ப்பய கஷ்டத்த கேட்டு கேட்டு, ஜாதகத்த பாத்து பாத்து எனக்கே ‘போதும்,போதும்’னு சொரிஞ்சி விட்டு எந்திரிக்க வேண்டியதாயிடுச்சி.

பெரும் சிறை, புதைகுழியில் இருந்து மீண்ட திருப்தி.
For this relief,much thanks.
ஒரு விஷயம். அந்த பிரபல ஜோதிடரின் மகளுக்கும், என் மாமனாரின் நண்பர் மகனுக்கும் திருமணம் நடக்கவில்லை.
ஜோதிடர் பச்சை விளக்கு காட்டிய பின் பெண்ணை பார்த்த மாப்பிள்ளை வீட்டாருக்கு பிடிக்கவில்லை. பெண் அழகாயில்லையாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.