Share

Jan 23, 2018

சிலோன் மனோகர்


சிலோன் மனோகர் பாசநிலா என்ற இலங்கை படத்தில் நடித்து விட்டு சாவகாசமாக திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்க வந்து சேர்ந்தவர். அப்போதே அவருக்கு படிக்கிற வயது தாண்டி விட்டது.

ஜோசப் பள்ளி சிறுவர்கள் இவரை பார்த்து ’பாசநிலா பாசநிலா’ என்று கத்திக்கொண்டே பின்னால் வரும் போது “ தம்பிமார்களே, என்னை விட்டு விடுங்களப்பா” என்று கூச்சத்தோடு கெஞ்சுவார்.

நாடகம் ஒன்றில் கொள்ளைக்கூட்ட பாஸ் ஆக நடித்து உயிர் விடுகிற காட்சி கல்லூரி, பள்ளி மாணவர்களால் ரசிக்கப்பட்டது.

சிவாஜி நடித்த ’ஞான ஒளி’ சுந்தர்ராஜனும் அவர் தாய்மாமன் வீரராகவனும் நடித்த பிரபல நாடகம்.
ஞான ஒளி நாடகம் மாணவர்களால் கல்லூரியில் லாலி ஹாலில் மேடையேற்றப்பட்டது.
அதில் சிலோன் மனோகர் கதாநாயகன் ஆண்டனி பாத்திரத்தில் நடித்தார்.

படிக்கிறதாக பேர் செய்து கொண்டு கவனமெல்லாமே சினிமா மீது தான்.
தேவரின் ’மாணவன்’ படத்தில் சிலோன் மனோகருக்கு ஒரே ஒரு வசனம் உண்டு. “மணி தான் சார்”
குட்டி பத்மினியும் கமலும் பாடும் “விசிலடிச்சான் குஞ்சுகளா, குஞ்சுகளா” பாட்டு முடியும்போது குட்டி பத்மினி மீது ஒரு மாணவன் பாம்பை வீசுவான். குட்டி பத்மினி பயந்து கத்தி மயங்கி விழுந்து விடுவார். அப்போது ஜெய்சங்கர் “யார் இந்த காரியத்தை செய்தது?” என்று பதற்றத்துடன் கேட்கும்போது சிலோன் மனோகர் தான் போட்டுக்கொடுப்பார் “ மணி தான் சார்.”
ஜோசப் பள்ளி மாணவர்கள் பாசநிலா என்று கத்துவதை நிறுத்தி விட்டு மனோகரை பார்க்கும்போது “மணிதான் சார்” என்பார்கள்.

ஜெய்சங்கர் மாணவனாக இருக்கும்போதும் சிலோன் மனோகர் மாணவராக வருவார். ஆசிரியராக ஜெய்சங்கர் வரும்போதும் மாணவராக வருவார். ‘ஒரு க்ளப் டான்ஸ்’ காட்சியிலும் வருவார். ’மாணவன்’ படத்தில் ஜெய்சங்கரும், முத்துராமனும் மாணவர்களாக வரும்போது அவர்களுடன் காமெடியன் பாண்டு கூட மாணவன்.
செயிண்ட் ஜோசப் சர்ச் கொயரில் சிலோன் மனோகர் முக்கிய பாடகர். ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்.
சிலோன் மனோகர் அந்தக்காலங்களில் சிவாஜி கணேசனின் வெறி பிடித்த ரசிகர்.
சிவாஜி ரசிகர்களும் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் அப்படித்தான்.

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு,

ஏழு கடல் சீமை, அதை ஆளுகின்ற நேர்மை, இவர் எங்க ஊரு ராஜா,

சொல்லாதே யாரும் கேட்டால், சொன்னாலே தாங்க மாட்டார்,

காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று யாரோ சொன்னார்

போன்ற பாடல்களை உற்சாகமாக பாடுவார்.
எம்.ஜி.ஆர் பாட்டே சிலோன் மனோகர் பாட மாட்டார்.

சினிமா அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.
’மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து இவர் பாடிய பாடல் “ மாமா, மனசு இப்போ நல்லால்லே, ஆமா, சரக்கு ஒன்னும் சரியில்லே.”

சிவாஜியின் ரத்த பாசத்தில் நடித்த நடிகை லிசாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இருவரையும் விஜயாவாஹினியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது சாய்பாபா ஹேர்ஸ்டைலில் இருப்பார். நான் மனோகரை ’பாஸ்’ என்றே கூப்பிடுவேன். எனக்கு பாஸ் என்பதல்ல. பாஸ் என்பது தான் திருச்சி செயிண்ட் ஜோசப்பில் பட்டப்பெயர்.

இரண்டாம் ரக வில்லனாக சில படங்களில் நடித்தார்.
குடிப்பழக்கம் உண்டு. ரொம்ப குடித்தார்.
ரொம்ப கோபப்படுவார் என்றும் அம்ஜத்குமார் சொல்லியிருக்கிறான். இந்த அம்ஜத்குமார், தான் திரைப்படங்களில் கற்பழித்த நடிகைகள் கே.ஆர்.விஜயா துவங்கி எத்தனை பேர் என்று புள்ளி விபரமாக சொல்வான்.
வாடைக்காற்று என்ற இலங்கை தமிழ் படத்திலும் மனோகர் நடித்திருக்கிறார். ”வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே” பாடல்.
பாப் பாடகராக ரொம்ப பிரபலமானார். சுராங்கனி, சுராங்கனி… உலகம் முழுவதும் சென்று பாப் கச்சேரி நடத்தியவர்.
கச்சேரியில் சர்ச் பாடலையும் பாடுவார்: ”மாதாவே சரணம், உந்தன் பாதாரம் எமக்காதாரம், 
கன்னி மாதாவே சரணம் 
மாசில் உம் மனமும் சேசுவின் உளமும்
 மாந்தரின் தவறால் நோவுற கண்டோம், 
ஜெபம் செய்வோம், தினம் ஜெபமாலை செய்வோம், 
பாவத்திற்காக பரிகாரம் செய்வோம், 
கன்னி மாதாவே சரணம்” 

சரண் இயக்கி மாதவன், பூஜா நடித்த ’ஜே.ஜே’ படத்தில் கூட நடித்திருந்தார்.

டி.வி சீரியலில் நடித்தார்.சென்னைக்கு நான் வந்த பின், எப்போதாவது, எங்காவது சிலோன் மனோகரை  மீண்டும் சந்திப்பேன் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன்.

...............................................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.