Share

Oct 22, 2017

சோழா ஷெரட்டான் சலூன்


சோழா ஷெரட்டான் ஹோட்டல் பகுதியெல்லாம் அப்போது இவ்வளவு பிசியாக இருக்காது. இன்று சோழாவின் சுற்றுப்புறம் பார்க்கக்கிடைக்கும் போதே மூச்சு திணறுகிறது. மெட்ராஸ் முகமே சென்னையாக மாறி விட்டதே.
முடிவெட்டுவதற்கு எப்போதும் மாதாமாதம் சோழா தான் போவது என்று ஒரு காலம் எனக்கு இருந்திருக்கிறது.

சோழாவில் நுழைவதற்கு முன் பார்த்த காட்சி இன்னும் மறக்கவில்லை. காம்பவுண்டின் முனையில் ரிக்ஷா ஒன்று. ரிக்ஷாக்காரர் கையில் முரசொலி. கருணாநிதியின் கார் கோபாலபுரத்திலிருந்து திரும்புகிறது. நான் கருணாநிதியின் காரைப் பார்க்கிறேன். கருணாநிதி அமர்ந்திருக்க மு.க.தமிழ் காரை ஓட்டிக்கொண்டு வருகிறார். ரிக்ஷாக்காரர் கருணாநிதி காரில் வருவதை கவனித்து விடுகிறார். நானும் அந்தக்காட்சியை கவனிப்பதை பார்த்து விட்டு என்னிடம் சொல்கிறார் : ’தலைவர் போறாரு.’
கொஞ்சம் நிறுத்தி பின் என்னிடம் ரகசியம் ஒன்றை உரக்கச் சொல்வது போல ஒரு கையை உயர்த்தி சொல்கிறார் “ வருவாரு”
பின் மீண்டும் சிலேடையை உடைத்து “ கோட்டைக்கு வருவாரு.”
மீண்டும் கருணாநிதி ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை. இரண்டாவது முறையாக எம்.ஜி.ஆர் முதல்வராக ஆட்சி செய்து கொண்டிருந்த நேரம் அது.

இன்று முதுமை நோய் மூடியுள்ள நிலையில் கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம் செல்வது ‘செய்தி’யாகிறது. அன்றும் கூட 
அவர் முரசொலி அலுவலகத்துக்கு தான் சென்று கொண்டிருந்திருப்பார்.



சோழாவில் சலூன் பார்பர் சொல்வார் : 'இப்ப தான் வைஜயந்திமாலா அவர் பையனுக்கு முடி வெட்ட வந்திருந்தார்.'
சோழாவில் அந்த பில் முதலில் நீட்டுவார். மெனு போல நிறைய அழகு சம்பந்தமாக வரிசை கட்டி ஏதேதோ இருக்கும். நான் ஹேர்கட் மட்டும் டிக் செய்வேன். ஷேவிங், ஃபேஷியல் என்று டிக் செய்தால் அவ்வளவு தான். பில் எகிறி விடும்.
ஹேர் கட் செய்யும்போதே பார்பர் நிறைய பேசுவார்.
ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன், மாதத்தில் பத்து நாட்களாவது சென்னை ஷூட்டிங். சோழாவில் தான் தங்குவார்கள்.
ராஜேஷ் கன்னா ஷூட்டிங் இல்லாத நேரத்தில் பெரும்பாலும் பாரில் குடித்துக்கொண்டிருப்பார்.
Introvert. யாரிடமும் பேசக்கூட மாட்டார்.
யாருக்கும் டிப்ஸ் தரமாட்டார். முடி வெட்டிக்கொண்ட போதும் டிப்ஸ் தந்ததேயில்லை.
அமிதாப் எல்லோருக்கும் அப்போதே நூறு ரூபாய் டிப்ஸ் தருவார். ரொம்ப கலகலப்பாக இருப்பார். அவர் குளித்தவுடன் ஹேர் செட்டிங்க்காக அறைக்கு அழைப்பார். அதற்கே கூட பார்பருக்கு நூறு ரூபாய் தருவார்.
எனக்கு முடிவெட்டியதும் பார்பருக்கு நான் ஐந்து ரூபாய் டிப்ஸ் கொடுப்பேன். ராஜேஷ் கன்னா அளவுக்கு என்னை அவர் நினைக்கத் தேவையில்லை.

1 comment:

  1. 5 ரூபாய் டிப்ஸ் கொடுத்தீர்களா, நீங்கள் தங்கம்!!

    சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் -- சோழா ஹோட்டல் மேல் மாடியில் சாகரி ரெஸ்டூரண்ட்டுக்கு ரஜினி அவர் மனைவி லதா உடன் மாதம் ஒரு முறை வருவார். வருவதே 11 - 12 மணியளவில் ஹால் மூடும் பொது தான். ஓரமாக அமர்ந்து குடித்தபடி மனைவியுடன் பேசிக்கொண்டு இருப்பர். இவர் வந்து விட்டாலே அங்கு பணியாற்றும் அனைவருக்கும் கடுப்பு ஏறும். வி.ஐ பி ஆயிற்றே. ஹால் மேனேஜர், தலைமை செப், தோலான், துருத்தி, எல்லோரும் கை கட்டி, கூப்பிடும் தூரத்தில் இருக்க வேண்டும். பெரிதாக ஆர்டர் இருக்காது, ஆனால் எவரும் கிளம்ப முடியாது. சுமார் மூன்று மூன்றரை மணிக்கு ரஜினி சோம்பல் முறித்து, டைம் ஆகலே இல்லே? என்று சிரிக்க, நாங்களும் அசடு வழிவோம். பில் வரும், செட்டில் செய்வார் , டிப்ஸ் ரூபாய் 20 க்கு மேல் தாண்டாது !! சாகரி கதவை அவர்கள் தாண்டும் வரை காத்திருந்து அவரை கவனித்த steward தட்டை விட்டெறிவான் பாருங்கள்!! கூடவே கெட்ட வார்த்தை அர்ச்சனை காதை கிழிக்கும். !! நக்கீரன்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.