Share

Oct 12, 2017

Ruthlessness


ரொம்ப பெரிய எடம். அந்த பையன் அங்கே வேலை பார்க்கிறான்.
தினமும் வீட்டிற்குள் உள்ள வேலைகள் தவிர வெளியே தேவையான பொருட்களை வாங்கி வரும் வேலையையும் செய்பவன்.
அந்த பெரியமனிதர் சினிமாவுலகில் பெரிய நடிகர்.
அவருக்கு பச்சை காய்கறிகளில் இருந்து தினமும் சூப் போடப்படவேண்டும். தினமும் அவன் வெளி வேலையாக போகும்போது இந்த ஃப்ரெஷ் விஜிடபிள்ஸ் வாங்கும் வேலையையும் செய்வான்.
அன்று அவனுக்கு காய்கறிகள் பார்த்து வாங்க நேரம் போதவில்லை. பங்களாவுக்கு திரும்ப வேண்டும். அவன் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் அவசரத்தில் ஒரு ரெடிமெட் விஜிடபிள் சூப் பாக்கெட் வாங்கி விட்டான்.
அதனை பங்களாவில் சமையலறையில் கொண்டு வந்து நீர் கொதிக்க வைத்து சூப் போட்டு எடுத்து மாடியேறி நடிகரின் அறைக்குப் போய் அவரிடம் கொடுத்து விட்டான்.
கீழே வந்தவுடன் சமையலறையில் பரபரப்பு. இவன் உள்ளே நுழைந்து பார்த்தால் அந்த பெரிய மனிதரின் மனைவி அங்கே மற்ற வேலையாட்களிடம் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார். அவர் கையில் காலி சூப் பாக்கெட்.
“ என்னடா நினைத்துக்கொண்டிருக்கிறாய். என் கணவர் எவ்வளவு பெரிய ஆள். எப்பேர்ப்பட்ட சாதனையாளர். அவர் உடம்புக்கு ஏதாவதாகி விட்டால் நீ தான் பொறுப்பு. பச்சைக்காய்கறிகளில் தான் சூப் போட்டுத் தரவேண்டும் என்று எவ்வளவு கண்டிப்பாக சொல்லியிருக்கிறேன். இப்படி ஏதோ சூப் பாக்கெட்டில் சூப் போட்டு கொடுத்திருக்கிறாயே. என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்.”
பையன் மன்னிப்பு கேட்டு காலில் விழுந்திருக்கிறான். ’இனிமேல் இப்படி செய்ய மாட்டேன். மன்னிச்சிக்கங்க’
நடிகரின் மனைவி ’விறு விறு’ என்று மாடியேறி நடிகரிடம் சொல்லி விட்டார். அந்த ரெடி மேட் சூப் குடித்த நடிகருக்கு கோபம் தலைக்கேறி விட்டது.
அவர் மாடியிலிருந்து இறங்கி வந்திருக்கிறார். அவர் வருவதைப்பார்த்தவுடன் இந்தப் பையன் பயத்தில் சமையலறை சுவற்றில் ஒட்டி நின்றிருக்கிறான்.
நடிகர் சமையலறை செல்ஃபில் இருந்த பீங்கான் ரக ப்ளேட், கப் அன் சாசர், ஸ்பூன், பௌல் எல்லாவற்றையும் வேகமாக கீழே தள்ளியிருக்கிறார். எல்லாம் உடைந்து சிதறியிருக்கின்றது.
பையனை பார்த்து நடிகர் சொல்கிறார். “ இதையெல்லாம் அப்புறப்படுத்து. அது தான் உனக்கு தண்டனை.”
……………………………………………………………
இதே நடிகரிடம் வேலை பார்க்கும் இன்னொருவன். நடிகரின் ரசிகர் என்பதை விட அவருடைய அத்யந்த பக்தன். அதன் காரணமாகவே அவரிடம் வேலைக்கு சந்தோஷமாக சேர்ந்தவன். தன் இஷ்ட தெய்வத்திற்கு சிச்ருஷை செய்கிற பாக்யத்தில் இரும்பூதெய்திய ஜீவன்.
அவருக்கு தேவையான விஷயங்களை நெருக்கத்தில் இருந்து கவனிப்பவன் தான். காரில் இவர் ஏறும்போது கூட உதவி செய்கிறவன்.

வருடக்கணக்கில் அவரிடம் வேலை செய்பவன். ஒரு நாள் கூட அவனிடம் நடிகர் பேசியதே இல்லை என்றால் நம்ப முடிகிறதா? ஒரு நாள் சந்தோஷமாக, அன்பாக, ஆறுதலாக ஒரு வார்த்தை சொன்னதேயில்லை. 
“உன் பேரு என்னப்பா?” ”உனக்கு எந்த ஊரு” என்று சம்பிரதாய விசாரணை கூட நடிகர் செய்ததேயில்லை.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.