Share

Oct 14, 2017

பழனி To பாண்டிச்சேரி



பழனியில் ரைஸ் ஆயில் ஏஜன்ஸி எடுத்து போராடி இழப்பு ஒரு லட்சத்து பத்தாயிரம். வருடம் 1988. கம்பெனி ரைஸ் ஆயில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று சொன்ன எண்ணெய் நிறுவனம் ஒரு வருடத்தில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை காட்டிலும் அதன் raw material தவிட்டெண்ணெய் விற்பதில் லாபம் அதிகம் இருப்பதை கண்டு ரைஸ் ஆயில் சுத்திகரிப்பு வேலையை நிறுத்தி விட்டான்கள். ஏன் சிரமப்பட வேண்டும். 

மிகவும் குறைவாக எண்ணெய் டின்கள் எனக்கு சப்ளை செய்யப்பட்டன. அதிலும் கோவை டீலர் மூலம் வாங்கிக்கொள்ள சொன்னான்.
ரைஸ் ஆயில் மட்டும் ஏன் விற்கிறீர்கள். மற்ற நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய், கடலை எண்ணெய் வியாபாரமும் செய்ய வேண்டியது தானே என்று சொல்ல ஆரம்பித்தான்கள். இந்த கம்பெனி ரைஸ் ஆயிலுக்காக விளம்பரத்திற்கே பெருந்தொகை செலவழித்து சிரமப்பட்டு மார்க்கெட்டிங் செய்திருந்தேன்.
பரவலாக எண்ணெய் விற்பனை தொழில் கோமுட்டி செட்டியார்கள் கையில் இருப்பது தெரிந்தது. என்னால் எப்படி தொழிலை தொடர முடியும்? நஷ்டம் தான்.

ஒரு கணக்கப்பிள்ளை. வசூல் செய்ய ஒரு ஆள். இரண்டு பேர் எனக்கு. அவர்களிடம் நிலவரத்தை சொல்லி அனுப்பி விட்டேன்.

எண்ணெய் சப்ளை செய்த வகையில் பலகாரக்கடைக்காரன் ஒருவன் பெருந்தொகை மோசடி செய்து விட்டான். அவனிடம் போலீஸ் மூலம் மிரட்டி தான் பணம் பெற முடிந்தது. போலீஸ் செலவு பற்றி சொல்லவும் வேண்டுமோ? எரியற வீட்டுல பிடுங்குன வரை ஆதாயம்.
என்னிடம் வேலை செய்த இரண்டு பேரும் வேலையில் இருந்து நின்ற போது கலங்கிப்போனார்கள். நினைத்துப்பார்க்க முடியாத நல்ல சம்பளம் அவர்களுக்கு கொடுத்திருந்தேன்.
கணக்கப்பிள்ளைக்கு தினமும் பத்து நிமிட வேலை தான் இரண்டு வருடமாக.
அந்தப்பெரியவர் தொண்டை உடைந்து சொன்னார் “ என் பிள்ளைய நீங்க படிக்க வச்சீங்க”
………………………….


புதுவையில் கெமிக்கல் ஃபேக்டரி அடுத்த வருடம்.1989. பாண்டிச்சேரி இண்டெஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லோன் பதினைந்து லட்சம் கிடைத்தது. ஏழரை லட்சம் எங்கள் பணம். Subsidy இரண்டரை லட்சம்.
புதுவையில் ஒரு இண்டஸ்ட்ரியலிஸ்ட் என்றே நான் அறியப்பட்டேன்.

அவ்வளவு தொகையை பில்டிங், மெசினரி இவற்றில் இன்வெஸ்ட் செய்தோம். என் அப்பா அப்போது கம்ஸ்டம்ஸில் இருந்து ரிட்டயர் ஆகியிருந்தார். அவரும் நானும் தான் இந்த இண்டஸ்ட்ரியில் முழுமையாக உழைத்தோம். என் அப்பா உழைப்பை விட என் பங்கு அதிகம்.
மெசினரியில் அப்போது டெக்னோக்ராட் பெரிய கமிஷன் பெற்று விட்டார் என்று கண்டு பிடித்த போது நொறுங்கி போனேன்.
அந்த கம்பெனி நிர்மாண வேலையில் அஸ்திவார குழி தோண்டுவது தொடங்கி கட்டடத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நான் தான் கவனித்தேன்.
எலக்ட்ரிக் வேலை காண்ட்ராக்ட் கேட்டு ஒருவன் வந்தான். அவன் பெயர் மறந்து விட்டது. ஆனால் அவனுடைய தாத்தா பொன்னுரங்கம் பிள்ளை மகாகவி பாரதியின் நண்பர். இந்த பொன்னுரங்கம் பிள்ளை பற்றி ஆதவன் தன்னுடைய புழுதியில் வீணை நாடகத்தின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். பாரதிக்கு பல வகையில் நல்ல உதவிகள் செய்தவர் செல்வந்தர் பொன்னுரங்கம் பிள்ளை. ஆனால் அவருடைய பேரனான இந்த எலக்ட்ரிஷியன் ரொம்ப சிரமத்தில் பரம ஏழையாக இருந்தான். அவன் தாயுடன் இருந்த வாடகை வீடு ஒரே அறை கொண்டது. பொது கழிப்பிடம்.
எலக்ட்ரிகல் ஒர்க் ஒரு கம்பெனியில் கட்டட நிர்மாணத்தின் போது கிடைப்பது மிகப்பெரிய விஷயம்.
நான் அவனுக்கு அந்த வேலையை கொடுத்தேன்.
ஸ்டேட் பேங்க் டெவலப்மெண்ட் ஆஃபிசர் ஒருவர் என்னுடைய விசிட்டிங் கார்ட் பார்த்து விட்டு என்னைப்பற்றி சொன்னது “ இந்தப் பையனைப் பார்த்தா எனக்கு பொறாமையாக இருக்கு. இந்த வயசில இவன் இதை சாதிச்சிருக்கான். நானும் என் நண்பன் ( எம்.இ. கெமிக்கல் எஞ்சினியர்) ஒருவனும் இந்த கெமிக்கல் ஃபாக்டரி கட்டுவதை லைப் டைம் ஆம்பிசனா ப்ளான் பண்ணினோம். ஆனா இவன் இதை சாதித்திருக்கான். எனக்கு பொறாமையா இருக்கு. இந்த வயசில இப்படி ஒரு வாழ்க்கை இவனுக்கு கிடைச்சிருச்சி. இனி என்ன கவலை இவனுக்கு.”
கட்டட வேலை, மெசினரி எரக்சன் எல்லாம் முடிந்த பிறகு ஒர்க்கிங் கேப்பிடல் ரொம்ப அதிகமாக தேவைப்பட்டது. நிர்ப்பந்தம் காரணமாக திருச்சி இண்ட்ஸ்ட்ரியலிஸ்ட் ஒருவரிடம் பேச்சு நடத்தினோம்.
அவர் சொன்னார் “ இது வரை இண்டஸ்ட்ரி போட நீங்க செஞ்சிருப்பது தான் பெரிய சாதனை. இப்ப இதில் நான் ஒரு எனக்கு பங்கு உங்களிடம் கேட்கிறேன் என்றாலே கூட அது உங்களுக்கு செய்கிற துரோகம். ஆனால் என்னை ஒரு பார்ட்னராக உங்களால் ஜீரணிக்கவே முடியாது. ஆட்ட தூக்கி மாட்டில போடுவேன். மாட்ட தூக்கி ஆட்டுல போடுவேன். மூணே மாசத்தில என் கூட நீங்க பகையாயிடுவீங்க.  இந்த கம்பெனிய எனக்கே கொடுத்தால் தான் நல்லது. Pipdic லோன நான் கட்டிடுறேன். உங்களுக்கு கிடச்ச subsidy எவ்வளவு பெரிய தொகை. உங்க சின்சியாரிட்டிக்கு கிடச்ச தொகை. அத என்னால் உங்களுக்கு தர முடியாது. இதுவே கூட நான் செய்ற துரோகம் தான். நீங்க இன்வெஸ்ட் செய்திருக்கிற ஏழரை லட்சத்தில் மூன்று லட்சம் இப்போது தரமுடியம். மீதி நாலரை லட்சத்தை மூன்று வருடம் கழித்துத் தான் என்னால் தரமுடியும். சம்மதமென்றால் சொல்லுங்கள். பார்ட்னர்சிப் வேண்டாம். சரிப்பட்டு வராது” என்றார்.
நானும் என் தகப்பனாரும் சம்மதித்தோம்.
கம்பெனியை தாரை வார்த்தோம். அங்குலம் அங்குலமாக நான் பார்த்துப்பார்த்து சேதாரப்பட்டு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் உருவாக்கிய ஃபாக்டரி கை விட்டு போயிற்று.
என் மனைவிக்கு அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டாவது மகன் அஷ்வத் சுகப் பிரசவம். 1990 டிசம்பர்.
திருச்சிக்கு நான் வீடு மாற்ற வேண்டி சாமான்களை பேக் செய்து கொண்டிருந்தேன்.
அந்த ஸ்டேட் பேங்க் ஆஃபிசர் வீடு தேடி வந்தார். “ என் கண்ணே உங்க மேல பட்டுடுச்சி. உங்கள பார்த்து அப்படி நான் பொறாமைப்பட்டேன். இப்படி ஊரை விட்டே கிளம்புகிறீர்கள்.”
புதுவையில் கடைசி நாள். சாப்பிடுவதற்காக வெளியே வந்தேன்.
பாரதியின் செல்வந்த நண்பர் பொன்னுரங்கம்பிள்ளையின் பேரனான எலக்ட்ரிசியன் ரோட்டில் என்னைப்பார்த்து “ சார்,சார்” என்று கத்தினான்.
“ இப்ப தான் சார் சேதாரப்பட்டுல கேள்விப்பட்டேன். நீங்க கம்பெனிய வித்துட்டு ஊர விட்டுப் போறீங்களா சார்..”
அவன் வாய் கோணிற்று. கேவி கேவி அழ ஆரம்பித்தான்.
“ ரெண்டு வேள சாப்பாட்டுக்கு வழியில்லாம பிறந்ததில இருந்து கஷ்டப்பட்டவன் சார் நான். இன்னக்கி உங்களால தான் மூணு வேளை வயிறார சாப்பிடுகிறேன் சார். என் வாழ்க்கயில இருந்து வறுமைய துரத்தினீங்க. நீங்க என் தெய்வம். நீங்க ஊர விட்டே போறீங்களே. நல்லவங்களுக்கு ஏன்  இந்த சோதனை. பாண்டிச்சேரி வந்தவங்க யாரும் ஊர விட்டு போகவே மாட்டாங்க.. நீங்க எங்கள விட்டுட்டுப் போறீங்களே சார்.”
அவனுடைய கேவல் கதறலாகி சுற்றிலும் இருப்போர் கவனிக்கும்படியானது.
இன்று வரை நான் பாண்டிச்சேரிக்கு திரும்ப ஒரு முறை கூட போனதேயில்லை. இருபத்தேழு வருடங்கள் ஓடி விட்டன.


3 comments:

Note: Only a member of this blog may post a comment.