Share

Mar 21, 2017

தைரிய லட்சுமி


சினிமாவில் ஜெயிக்க தீராவேட்கை நடிக்க, இயக்க முனைபவர்கள் எல்லோரையும் ஆட்டுவிக்கும். காலம் ரயில் மாதிரி. யாருக்காகவும் காத்திருக்காது. திடீரென்று பத்து வருடம் காணாமல் போயிருக்கும். வயிற்றில் புளி கரைத்தாற் போல திகில். பைத்தியம் பிடித்தாற் போல என்ன, பைத்தியமே உச்சந்தலையில் பிடித்து விடும்.


புட்டன்னா கனகல். கன்னட திரையில் இயக்குனராக பெரிய அளவில் சாதித்தவர். முதல் சினிமாஸ்கோப் படம் கன்னடத்தில் இவருடையது.

 தமிழில் இருளும் ஒளியும், சுடரும் சூறாவளியும் படங்களின் இயக்குனர். பாரதிராஜா இவரிடம் உதவி இயக்குனராய் இருந்தவர்.

வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தில் கூட உதவி இயக்குனராக பி.ஆர்.பந்துலுவிடம் வேலை பார்த்தவர் புட்டன்னா.
கன்னடப்படங்களில் உதவி இயக்குனராக இருந்த புட்டன்னா வருடங்கள் காணாமல் போன நிலையில், அதாவது சினிமாவில் குப்பை கொட்டிய நிலையில் எதிர்காலம் பற்றிய பயம் அதிகமாகி மன நிலை பலவீனமாகி தவித்திருக்கிறார்.
நடிகர் கல்யாண்குமார் வீட்டிற்கு போய் வாய் விட்டு கண்ணீர் விட்டு குமுறி அழுதிருக்கிறார்.

கல்யாண்குமார் பிரபல கன்னட நடிகர். தமிழ் ரசிகர்களுக்கு நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, மணி ஓசை படங்கள் மூலம் மறக்க முடியாத ஒரு நடிகராக இவரைத் தெரியும்.

கல்யாண் குமார் தேற்றியிருக்கிறார். புட்டன்னா சமாதானமாகவில்லை. “வாழ்க்கையே பாழாயிடுச்சி சார். சினிமாவை நம்பி வீணாப் போயிட்டேன்” – கன்னடத்தில் புலம்பியிருக்கிறார்.

கல்யாண்குமார் வீட்டுக்குள் போய் அடுப்பில் இருந்த சாம்பலை கையில் எடுத்து வந்து புட்டன்னாவின் நெற்றி நிறைய பூசி விட்டு( கன்னடத்தில் தான்) சொல்லியிருக்கிறார்.
“தைரியமா போடா. நீ நிச்சயமா ஜெயிப்ப. கவலப்படாத. பெரிய டைரக்டரா வருவ.”
………………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_4870.html

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_05.html

http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_16.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_16.html



1 comment:

Note: Only a member of this blog may post a comment.