Share

Mar 8, 2016

பட்டாளத்து விஜயனும் பாலித்தின் பைகளும்
பட்டாளத்து விஜயனுக்கு ’கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ’பட்டாளத்தான்’ வேடம் செய்ததால் அந்தப்பெயர் கிடைத்தது.
அந்தப்படத்தில் விஜயன் உதவி இயக்குனரும் கூட.

 நிறம் மாறாத பூக்கள் படத்தில் குடிகார பாத்திரத்தில் நடித்த போது குடி அவர் வாழ்க்கையை சீரழிக்கப்போகிற விஷயம் தெரிந்திருக்கவில்லை.


மகேந்திரனின் ’உதிரிப்பூக்கள்’ என்ற க்ளாசிக் மூவியில் விஜயனுக்கு நல்ல கதாபாத்திரம்.


ஷோபாவிற்கு ஊர்வசி விருது வாங்கிக்கொடுத்த பசி படத்திலும் விஜயன் இருந்தார். இந்தப்படம் துரை இயக்கம்.

’ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ படம் காஜா இயக்கிய படமா? பாலசந்தர் படம் போல இருந்தது. ஷோபா சீறி கேட்பார் : அவளுக்கு நீங்க என்ன ரெண்டாவது புருஷனா?
விஜயன்: இல்ல முதல் புருஷன்..
தன்னை விட்டு விட்டு விஜய்பாபுவுடன் ஓடிப்போனஅபர்ணாவின் கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு பாடுவார்.
“ மகன் போல உன்னை மடியேந்தும் என்னை யாரென்று நீ கேளடா உன் அன்னையை. அவள் சொல்லுவாள் உன்னிடம் உண்மையை…..விடுகதை ஒன்று! தொடர்கதையொன்று!”
இந்தப்பாட்டுக்கு இசை கங்கை அமரனா?இளையராஜா பாடல் போல இருந்தது!

இந்த நடிகை அபர்ணா பற்றி ஒரு செய்தி. இவர் அந்தக்காலத்தில் ஒரு நடிகரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். அபர்ணாவிற்கும் ஆண்டனிக்கும் விவாகரத்து கோர்ட் வழங்கியது. ரொம்பகாலம் கழித்து இவர் லட்சுமிக்கு மூன்றாவது கணவராக ஆனார். ஆம் சிவசந்திரனின் இயற்பெயர் ஆண்டனி!

மலர்களே மலருங்கள் என்று சொந்தப்படம் எடுத்ததால் ஏற்பட்ட சிக்கல் தானோ என்னவோ.நல்ல செமை ரௌண்டு சினிமாவில் வந்த பின்னும் விஜயனுக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. குடி சேர்ந்து கொண்டது. 555 சிகரெட்டோடு வலம் வந்த விஜயன் மார்க்கெட் போன பின் ரொம்ப சிரமப்பட நேர்ந்து விட்டது போலிருக்கிறது.

திருமண வாழ்வு கூட சிறக்கவில்லை என்றே தெரிகிறது.

வசதியெல்லாம் போய் அசதியான நிலையில் ஒரு வீட்டு மாடியில் வாட்டர் டேங்க் ஒட்டிய சிறு அறையில் இருந்திருக்கிறார். அந்த அறைக்கு டாய்லட் வசதி கிடையாது.
பாலிதின் பைகளுக்கு எவ்வளவோ உபயோகம். விஜயன் இரவே ஒரு பாலிதின் பை ரெடி செய்து அறையில் வைத்துக்கொள்வார். காலையில் காலைக்கடன் அந்த பாலிதின் பையை ஆசனவாயில் வைத்து முடித்து விடுவார். மேலிருந்து இறங்கி வந்து குப்பைத்தொட்டியில் மலஜலம் நிறைந்த பாலித்தின் பையை போட்டு விடுவார்.


அந்த சமயத்தில் ஒரு தடவை குடிபோதையில் வைரமுத்து வீட்டின் முன் மயங்கிக் கிடந்திருக்கிறார். யாரும் கண்டுகொள்ளவில்லை. யாரோ பொறுக்கி குடித்து விட்டு மட்டையாயிட்டான் என்று தான் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் நினைத்திருக்கிறார்கள்.ஒரு வழியாக பல மணி நேரங்கழித்து அவரே தான் போதை தெளிந்து எழுந்து தள்ளாடி நடந்திருக்கிறார்.
கடைசி காலத்தில் ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருந்தாராம்.

நாயகன், ரமணா போன்ற படங்களில் எல்லாம் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் குணச்சித்திர நடிகராக ஒரு நல்ல ரவுண்டு வர வாய்க்கவில்லை.

லிங்குசாமியின் ’ரன்’, செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி இப்படி.. படங்களில் விஜயனை பார்த்திருக்கிறீர்கள்.
................................

http://rprajanayahem.blogspot.in/2015/03/blog-post_14.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.