ராஜ நாயகன்!
2005ம் வருடம். திருப்பூர் அரிமா சங்கம். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் ஏற்பாடு செய்திருந்த ஒரு குறும்பட நிகழ்வு. நானும் சென்றிருந்தேன். ஒவ்வொரு குறும்படமாக ஒளிபரப்பப்பட, அதை பார்வையாளர்கள் விமர்சிக்கலாம். நான் ஒவ்வொரு குறும்படத்துக்கும், விதவிதமாக விமர்சனம் செய்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு கலந்துரையாடல் மாதிரி, பிற பார்வையாளர்களும் அவர்களது கோணத்தை எடுத்துரைத்துக் கொண்டிருந்தனர்.
ஒரு குறும்படத்திற்கு, நான் ஏதோ கருத்து சொல்ல எனக்கு இரண்டு வரிசை பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் அதற்கு மாற்றுக் கருத்து வைத்தார். நான் என கருத்தை மீண்டும் வலியுறுத்த, அவர் அவரது கருத்தை முன்வைக்க ஒரு விவாதமாக அது அமைந்தது.
நான்கைந்து குறும்படங்கள் திரையிட்ட பிறகு, நன்றியுரை சொன்ன சுப்ரபாரதி மணியன், “சிறப்பாக விமர்சனக் கருத்துகளை முன்வைத்த ஒருவருக்கு பரிசு கொடுக்க உள்ளோம்..” என்று சொல்லிவிட்டு சடாரென முன் வரிசையில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து, “உங்க பேரு?” என்று கேட்க ஒரு மகிழ்ச்சியோடு என் பெயர் சொன்னேன்.
‘கிருஷ்ணகுமாருக்கு பரிசளிக்க R.P. ராஜநாயஹம் அவர்களை அழைக்கிறேன்’ என்றார்.
ராஜநாயஹம். ஆர்.பி.ராஜநாயஹம். அந்தப் பெயரை அடிக்கடி இலக்கியப் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். அது போக சில எழுத்தாளர்களின் எழுத்தில் அடிபடும் அந்தப் பெயருக்குரியவரா எனக்கு பரிசளிக்கப் போகிறார் என்று ஒருவித ஆர்வமோடு அவரை எதிர்பார்க்க...
எனக்கு இரண்டு வரிசை பின்னால் இருந்து, என்னோடு விவாதித்தவரே எழுந்து வந்து, அந்தப் பரிசை எனக்கு அளித்தார். அவர்தான் ஆர்.பி.ராஜநாயஹம் என்று அறிந்து அதிர்ந்து போனேன்.
நிகழ்ச்சி முடிந்ததும் அவரை சந்தித்து, “சார்... நீங்கன்னு தெரியாம விவாதிக்கறப்ப அதும் இதும் பேசிட்டேன்.. மன்னிச்சிடுங்க. உங்களைப் பத்தி நிறைய பத்திரிகைகள்ல படிச்சிருக்கேன்” என்றேன். அவர் சிரித்துவிட்டு, “அச்சச்சோ... அதெல்லாம் இல்லைங்க. கருத்துப் பரிமாற்றம்ங்கறப்ப விவாதங்களும் வரத்தானே செய்யும்” என்று சொல்லிவிட்டு அவரது நூல் விமர்சனங்கள் வந்த ஒன்றிரண்டு நகல்களைப் பகிர்ந்து கொண்டார்.
----
அதன்பிறகு வெகுநாள் கழித்து, 2008ல் அவர் வலைப்பூ ஆரம்பித்து எழுதத்தொடங்கியதும் “சார்.. உங்களை எனக்கு தெரியும்.. சந்திச்சிருக்கேன்” என்று கேனத்தனமாக ஒரு பின்னூட்டமெல்லாம் போட்டேன். அவ்வளவு பெரிய ஆள் பதிலெல்லாம் போடுவாரா என்று விட்டு விட்டேன்.
சமீபத்தில் திருப்பூர் புத்தகக்கண்காட்சியின்போது எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருந்தார். எதேச்சையாக ஆர்.பி.ராஜநாயஹம் அவர்களும் அங்கே செல்ல எஸ்.ரா அவரைப் பார்த்து அளவளாவியிருக்கிறார். (ராஜநாயஹத்தை அறியாத எழுத்தாளர்களே இல்லை) அப்போது, எஸ்.ரா., தன்னுடன் இருந்த சேர்தளம் நண்பர்களை ‘இவர் வெயிலான்... இவர் முரளிகுமார் பத்மநாபன்” என்று அறிமுகப்படுத்த ராஜநாயஹம் ‘பரிசல்காரன் இருக்காரா?’ என்று கேட்டிருக்கிறார். முரளி “இனிமேதான் வருவார்” என்றாராம். இதை நண்பர்கள் சொன்னபோதும். ‘அவ்ளோ பெரிய ஆளு என்னையக் கேட்கறாரா? ஓட்டாதீங்க” என்று விட்டுவிட்டேன்.
கொஞ்ச நாட்களாக ட்விட்டரிலும் எழுதிவருகிறார் ராஜநாயஹம். ஒரு முறை “திருப்பூரில் நான் சந்திக்க விரும்பும் நபர் பரிசல்காரன்” என்று அவர் ட்விட்டவே, “சார்.. அப்டிலாம் சொல்லாதீங்க. வா-ன்னா வர்றேன்” என்று சொன்னேன். அதன்பிறகு போனவாரம் என் தளத்திலிருந்து என் எண்ணைப் பிடித்து எனக்கு அழைத்து என்னோடு பேசினார். அப்போது நான் ஒரிசாவில் இருந்தேன். அங்கே சந்தித்த சவாலை (அது வரும் பதிவில்..) குறித்து பேசினார். “பத்திரமா இருங்க கிருஷ்ணா” என்று அக்கறையோடு சொன்னார்.
நேற்று மாலை அவர் வீடு இருக்கும் பகுதி வழியே சென்றபோது, ‘இங்கேதானே எங்கோ
அவர் வீடு இருக்கிறது?’ என்ற சிந்தனை எழவே, ட்விட்டரில் அவர்
குறிப்பிட்டிருந்த விலாசத்தை, விசாரித்துக் கொண்டே அவர் வீட்டு முன்
நின்றேன். கொஞ்ச நேர, “சார்.. மேடம்..”களுக்குப் பிறகு அவருக்கு
அலைபேசியில் அழைத்தேன்.
நான்: “சார்.. வெளில இருக்கீங்களா?”
அவர்: “இல்லைங்க.. வீட்ல இருக்கேன்”
நான்: “நான் வெளில இருக்கேன்”
அவர்: “ஓ.. இன்னும் வீட்டுக்கு போகலியா?”
நான்: “அதில்லைங்க.. நான் உங்க வீட்டுக்கு வெளில இருக்கேன். காலிங்பெல் வேலை செய்யல” என்றேன்.
அவர் பதட்டப்படுவது தெரிந்தது. “அச்சச்சோ.. இருங்க வர்றேன்” என்று கொஞ்ச நேரத்தில் வெளியில் வந்தார்.
கொஞ்ச நேரம் நான் வெளியில் நின்றதற்கு வருத்தப்பட்டுக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றார்.
“என்ன சாப்பிடறீங்க? சப்பாத்தியா பூரியா?” என்றார். வழக்கமாக ‘காஃபியா டீயா
என்றுதானே கேட்பாங்க?’ என்று ஆச்சர்யப்பட ”இல்லைங்க.. நான் இரவு
டின்னருக்கு கேட்டேன். கண்டிப்பா சாப்பிட்டுட்டுதான் போகணும்” என்றார்.
“சார்.. சும்மா இருங்க.. வீட்ல சின்ன மக லீவுக்கு வந்து தனியா இருக்கா. நீங்க வேற” என்று மறுத்தேன்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பேச ஆரம்பித்தார். கேட்டுக் கொண்டே இருந்தேன். ஒரு ஆல்பத்தை எடுத்து வந்து காண்பித்தார்.
கிரா, அசோகமித்திரன், தர்மு சிவராம் (பிரமிள்), ஜெமினி கணேசன், திருப்பூர்
கிருஷ்ணன், ஜெயந்தன், மதுரை முன்னாள் மேயர் முத்து என்று பலரோடு பல
சமயங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள். இலக்கிய உலகில் ஒருவரையும்
விட்டு வைக்கவில்லை. வாசிப்பில் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. ஊட்டி
சந்திப்பில் ஜெயமோகனோடு நடந்த விவாதம், சாரு என்று எல்லாவற்றைப் பற்றியும்
பேசுகிறார்.
பிரமிப்போடு கேட்டுக் கொண்டே இருந்தேன். அவர் மனைவி முந்திரி பக்கோடாவும்,
இனிப்பும் கொண்டு வந்து, காப்பியோடு வைத்துவிட்டு உபசரித்தார்.
பிற எழுத்தாளார்கள், சினிமா, இலக்கியம் என்று அவர் பேசுவதையும் கிட்டத்தட்ட
இரண்டு மணி நேரம் கேட்டுக் கொண்டே இருந்தேன். நேரமாகிவிட்டதால் புறப்பட
எத்தனிக்க, மேசையில் அந்த மாத ‘காட்சிப் பிழை’ பத்திரிகை. எடுத்துப்
புரட்ட, அதில் இவர் எழுதிய ‘என்னத்தே கண்ணையா’ பற்றிய கட்டுரை கண்ணில்
பட்டது.
'சாப்பிடாம போறீங்க.. ' என்று அவரும் அவர் மனைவியும் குறைபட்டுக் கொண்டே
வழியனுப்பினர். அவர் மனைவி ஒருபடி மேலே போய்... -- வாசலில் ஒரு படி கீழே
வந்து -- “ஆப்பிள் குழந்தைகளுக்கு எடுத்துப் போங்க” என்றார். விடைபெற்று
வந்தபின்னும் அவர் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.