கண்களை விற்று சித்திரம் வாங்கலாமா ? என்று ஒரு பழமொழி .
சைனி என்று ஒரு இளைஞன் . கிரிக்கெட் ரசிகன் .தோனியின் பரம ரசிகன் . சைனியின் காதலி இவனிடம் சவால் விட்டிருக்கிறாள் . ' தோனியோடு சேர்ந்து நீ நின்று ஒரு போட்டோ எடுக்க முடியுமா ?'
சைனி உடனே உத்தரபிரதேசத்தில் சாரங்க்பூரில் உள்ள தன் கடையை விற்று விட்டு ராஞ்சிக்கு வந்து பல பல பல நாட்கள் காத்திருந்து ஒரு வழியாக தோனியோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு விட்டார் . ஊருக்கு திரும்பி போய் ஏதாவது ஜவுளிகடையில் வேலையில் சேர்ந்து கொள்ள உத்தேசம் . ஊருக்கு திரும்பி போக ராஞ்சியில் உள்ள உறவினர்கள் டிக்கெட் செலவுக்கு கட்டாயம் உதவுவார்கள் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார் .
.. ....
சங்கரன் கோவில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. முத்தையா .தமிழக சட்டசபையில் 1952 to 1957 ல் நாட்டு நடப்புகளை அலசியவர் .
(அந்த 1952பொதுத்தேர்தல் திமுக தேர்தலில் போட்டியிடாத காலம் . இருந்தாலும் ஜி .கோவிந்தசாமி என்பவர் 1952தேர்தலில் ஜெயித்தபின் திமுகவில் சேர்ந்தார் . அந்த வகையில் திமுகவின் முதல் எம்.எல்.ஏ. இவர் தான். பின்னால் அண்ணா மந்திரிசபையில் கோவிந்த சாமி விவசாய மந்திரியானார் . அண்ணா இறந்த மூன்று மாதத்தில் இறந்தார் . அப்போது கருணாநிதி முதல்வர் .)
சிவாஜி கணேசன் ,பத்மினி , கண்ணாம்பா நடித்த " புனர்ஜென்மம்"
படத்தை அந்தக்காலத்தில் 1960 ல் தயாரித்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தையா .
விஷயம் என்னவென்றால் சங்கரன் கோவில் முன்னாள் எம்.எல்.ஏ. தன்
89 வயதில் இன்று திருமங்கலம் அநாதை விடுதி ஒன்றில் சேர்ந்து விட்டார். எந்த திருமங்கலம் ? இடைத்தேர்தலில் ஒரு எம்.எல்.ஏ. வை தேர்ந்தெடுக்க பல கோடி வாரி வாரி இறைக்கப்பட்டதே! அந்த திருமங்கலத்தில் தான் சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் முதல் சட்டசபையின் உறுப்பினர் இன்றைக்கு அனாதை விடுதியில் !
.. ....
"ம்ம் காலம் கெட்டுப்போச்சி"
என்ற வசனம் அறுபது ஆண்டுகளுக்கு முன் டி ஆர் மகாலிங்கம் கதாநாயகனாக நடித்த " நாம் இருவர் " படத்தில் சாரங்கபாணி பேசும் வசனம் . அப்போது இந்த வசனம் ரொம்ப பிரபலம் .
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.