1.R.P. ராஜ நாயஹம் http://rprajanayahem.blogspot.com/ அனுபவக் கடல்
2.அகநாழிகை வாசுதேவன்http://aganaazhigai.blogspot.com/ கவித்துவமான மனிதர்
3.லதானந்த் http://lathananthpakkam.blogspot.com/ சிங்கம்
4.சபாநாயகம் சார் .http://ninaivu.blogspot.com/ என் மண்ணின் மைந்தர்.குரு.
மணிசேஷன் என்ற சே வேங்கட சுப்ரமணியன் என் நண்பர் . அவருடைய ப்ளாகில்( thogamalaiphc.blogspot.com )ஓரு கேள்விக்கு மேற்கண்டவாறு பதில் சொல்லியிருக்கிறார் .
பதினைந்து வருடங்களுக்கு முன் கணையாழியில் தி ஜா நினைவு குறுநாவல் போட்டியில் இவர் எழுதிய " இருள் " குறுநாவல் பிரசுரமாகியிருந்தது .
இவரைப்பற்றி நான் அடிக்கடி நினைக்கும் ஒரு கேள்வி - படைப்பூக்கம் உள்ள இவர் ஏன் எழுதுவதை தொடரவில்லை ?
அப்பா என்ற உறவு மணிசேஷன் மீது செலுத்துகிற ஆதிக்கம் அபூர்வம் . தாயன்பை விடவும் தகப்பனின் ஆளுமையும் அன்பும் மகத்தான எல்லையை தொடக்கூடியது . அப்படிப்பட்ட அப்பாவின்
இழப்பு இவருக்கு .
இந்த நேரம் இதற்கு நேர் எதிராக சுகுமாரன் எழுதிய அப்பா பற்றிய கவிதை நினைவுக்கு வருகிறது .புதுமைப்பித்தனுக்கு மறுமணம் செய்துகொண்ட அப்பாவுடன் சீரான உறவு இருந்ததில்லை . ஜெயகாந்தன் அப்பா ஆஸ்பத்திரியில் இறந்த செய்தியை சாவகாசமாக வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு ஓரு தூக்கம் போட்டு எழுந்து அத்தையிடம் சொன்னதும் ,பின் சில மாதங்களுக்கு பின் இரவு தூக்கம் விழித்து "அப்பா அப்பா " என்று கதறி அழுதார் என்பதும் நினைவுக்கு வருகிறது . "அப்பா" ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தோற்றமளிக்கிறார் . மறக்க முடியாத மற்ற சில அப்பாக்கள் 1.கநாசு வின் அப்பா 2 . சுந்தர ராமசாமியின் அப்பா . 3. அசோகமித்திரனின் அப்பா (அப்பாவின் மரணம் பற்றி எவ்வளவு எழுதியிருக்கிறார் !)4. காலச்சுவடு கண்ணனின் அப்பா ( அப்பாவுக்கு சலிக்காமல் ,தொடர்ந்து ,விடாமல் கண்ணன் திவசம் கொடுத்துக்கொண்டே ,கொடுத்துக்கொண்டே ..திவசம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் என்று பலரும் சலிக்கிறார்கள் .இருக்கட்டுமே. எனக்கு சந்தோசம் தான் .அப்படிப்பட்ட அப்பா ! அப்படி ஓரு அபூர்வமான பிள்ளை கண்ணன் !)
பலவருடங்களுக்கு முன் புதுவையில் பிரபஞ்சன் ஓரு நாவல் -" மகாநதி " எழுதும்போது என்னிடம் சொன்னார் . அப்போது அவருக்கு அப்பாவுடன் பேச்சு வார்த்தை கிடையாது. மனஸ்தாபம் !பாரதி வீதி அப்பா வீட்டில் பிரபஞ்சன் மாடியில் குடும்பத்துடன் குடியிருந்தார் . "மகா நதி " நாவல் அவருடைய அப்பாவைப்பற்றி ! அப்பா மதுக்கடைகள் நடத்தியவர் . ஆனால் ஒரே மனைவி தான் அவருக்கு .பிரபஞ்சனின் அம்மா ! புதுவை கலாச்சார சூழலில் மதுக்கடை முதலாளிகள் பல தாரங்கள் உள்ளவர்களாய் இருப்பது தான் இயல்பு . அப்பா எப்படி பல திருமணம் செய்யாமல் இருந்தார் ! இந்த ஆச்சரியம் தான் தன்னை " மகாநதி " நாவலை எழுத தூண்டியதாக பிரபஞ்சன் புதுவையில் என்னிடம் கூறினார் .
நான் ரசித்த மணிசேஷன் பதில்கள் :
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இது அடிக்கடி நிகழ்ந்து விடுகிறது.என் அப்பாவின் இளமைக்கால நெருக்கமான நண்பரை போனவாரம் தற்செயலாக சந்தித்தபோது.(1984 ல் எனது தகப்பனார் இறந்தார்.)அப்பாவையே நேரில் பார்த்தது போல இருந்தது.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடல் பயம் தனியாக ராட்டிணம் சுற்றுவது மாதிரி
அருவி சுகம் அப்பாவின் மடியில் உட்கார்ந்து ராட்டிணம் சுற்றுவது போல.
10. யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?..
அப்பா. அவர் உயிரோடு இருக்கும் வரை உருப்படாத பிள்ளையாய் இருந்துவிட்டேன்.இப்போது இருந்தால் சந்தோஷப்படுவார். எங்கிருந்தாவது பார்த்துக்கொண்டு தான் இருப்பார்.


\\இவரைப்பற்றி நான் அடிக்கடி நினைக்கும் ஒரு கேள்வி - படைப்பூக்கம் உள்ள இவர் ஏன் எழுதுவதை தொடரவில்லை ?\\
எனக்கு கூட இந்தக் கேள்வி சிலரிடம் வருவதுண்டு.
பகிர்வுக்கு நன்றி.