Share

Jul 7, 2008

லீலார்த்தம்


இந்திரா பார்த்தசாரதி தன் படைப்புகளில் பாரதி, கிருஷ்ணன், ராமாநுஜர், ஆண்டாள், மகாத்மா காந்தி, ஷேக்ஸ்பியர் அவ்வப்போது பேசுவதை நாம் காணமுடியும். ராமாநுஜர் பற்றி நாடகம் எழுதி ‘சரஸ்வதி சம்மான்' விருது கிடைத்ததை அறிவோம். இப்போது ‘கிருஷ்ணா கிருஷ்ணா' என்று ஒரு நாவல் எழுதி வெளிவந்திருக்கிறது. கிருஷ்ணன் என்ற அரசியல்வாதியை, அவனுடைய லீலைகளை, லீலைகளின் அர்த்தபுஷ்டியை கிருஷ்ணனே ஜரா என்ற வேடனிடம் சொல்லி ஜரா என்ற அந்த வேடன் அந்த லீலார்த்தத்தை நாரதர் என்ற உலகின் Frist Ever journalist இடம் சொல்லி அதை வாய்மொழியாகச் சொல்வதாக ‘கிருஷ்ணா கிருஷ்ணா' நாவல் அமைந்திருக்கிறது. கிருஷ்ண லீலார்த்தம் எவ்வளவு கனமானதாக அடர்த்தியானதாக இப்போதும் சாசுவதத்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றது என்பதை இயல்பாக இ.பா. சொல்லியிருக்கிற நாசூக்கு அவருடைய புத்திசாலித்தனமான எழுத்துக்கு அந்நியமான விஷயமில்லை.

பல வருடங்களுக்கு முன்னர் நான் புதுவையில் இந்திரா பார்த்தசாரதியுடன் இரண்டு வருடம் பழகிய நாட்களில் ஒரு முறை வி.என்.ஜானகி - ஜெயலலிதா அரசியல் போட்டியில் Power Monger ஆக ஜெயலலிதா விஸ்வரூபமெடுத்து ‘கட்சி' அவர் கைவசமாக ‘தொண்டர்கள்' காரணமான விஷயம் பற்றி பேச்சு வந்தது. அப்போது இ.பா. சொன்னார். ‘ நம்முடைய கலாச்சாரம்' அப்படி. யாராவது 'ருக்மணி கிருஷ்ணன்' என்று பெயர் வைக்கிறார்களா? ‘ராதா கிருஷ்ணன்' என்ற பெயர்தானே பிரபலம். யோசித்துப் பார்க்கும்போது சுவாரசியமாக இருந்தது. ஆமாம் முன்னாள் ஜனாதிபதி முதல் இன்னாள் ஆபீஸ்பாய் வரை ராதாகிருஷ்ணன் என்ற பெயர் அமைந்தவர்கள்தான் !. The other Woman is Always Powerful !!

ராதா என்ற அந்தப் பெண் கிருஷ்ணனுக்கு அத்தை முறை. இன்னொருவனின் மனைவி. கிருஷ்ணனை விட ஏழு வயது மூத்தவள். ஆனால் கிருஷ்ணனுக்கு ராதா மேல் தான் ப்ரீதியும் பிரேமையும் மிக அதிகம்.

அவனுடைய அவதாரம் பற்றி பேசப்படுகிற பாகவதம், பாரதம் என்று எந்தக் காவியத்திலும் கிருஷ்ணன் கதா நாயகன் இல்லை. அவன் அரசனாகவும் இல்லை. கிருஷ்ணாவதாரத்தின் முக்கிய எதிரி ஜரா சந்தனை கிருஷ்ணன் கொல்லவில்லை. பீமன் தான் கொல்கிறான். கிருஷ்ண லீலார்த்தம் ஒழுங்கமைவை சீர் குலைத்து விடுகிறது.

பிருந்தாவனப் பெண்களுக்கு கிருஷ்ணனால் கிடைக்கும் விடுதலையுணர்வு, ராதவுடனான Bridal Misticism இவற்றை உணரும்போது தான் கிருஷ்ண லீலார்த்தப் பரிமாணம் புரிகிறது. கிருஷ்ணன் இல்லாது போயிருந்தால் நம் இந்தியக் கலைகள், இசை, நடனம், காவியங்கள் யாவுமே உலர்ந்து போய் ஒரு ‘ Ennui ' கவிழ்ந்திருக்கும்.

வாழ்க்கை எனும் அலகிலா விளையாட்டின் அர்த்தத்தை கிருஷ்ணனின் முரண்பட்ட குணச்சித்திரத்தின் மூலம் நுட்பத்துடனும் ஒரு அலட்சிய பாவத்துடனும் இந்திரா பார்த்தசாரதியே பேசுவது போன்ற நடை. நாவல் ஒரு காவிய சம்பந்தப்பட்டது என்பதற்காக செயற்கை இறுக்கமாக உரை நடையை அவர் அமைக்கவில்லை என்பது வாசகனுக்கு ஆசுவாசம் தருகிறது. நாரதன் ‘ திரிலோக சஞ்சாரி. சகஜமாக Macbeth பற்றி பேசுகிறான். முனிவர்கள், ரிஷிகள் எப்போதுமே Kill - Joys தான் என்கிறான்.

இந்திரா பார்த்தசாரதியின் எழுத்து பற்றி ஒரு ஜோக் இலக்கிய வட்டாரங்களில் உண்டு. ‘இ.பா.வின் நாவலை தமிழில் மொழிபெயர்க்க அவரிடம் அனுமதி வாங்க வேண்டும் ‘ என்று. ஓரளவு ஆங்கில பரிச்சயம். ஓரளவு என்ன நல்ல ஆங்கில அறிவு உள்ளவர்கள் இ.பாவை ரசிக்க முடியும். இந்த நாவலிலும் ஆங்கிலம் எந்த reservation னும் இன்றி இயல்பாக வந்து விழுகிறது. தனித்தமிழ் அன்பர்கள் திசைச்சொற்கள் அதிகமாகயிருப்பதால் முகம் சுளிக்க வேண்டியதுதான் வேறு வழியில்லை.

மு.கருணாநிதி சமீபத்தில் சென்ற 10.09.2004 முரசொலியில் கிருஷ்ணன், ராதா பற்றி எதிர்மறையாக உடன்பிறப்புக்கு ஒரு கடிதம் எழுதியிருந்த வேடிக்கை வினோதம் பற்றி இலக்கிய உலகம் அறியுமா என்று தெரியவில்லை.

‘கிருஷ்ணன் அடுத்தவன் மனைவி ராதாவுடன் உறவு கொண்டவன். பாஞ்சாலி ஐந்து பேருடன் படுத்தவள். கிருஷ்ணன், ராதா, பாஞ்சாலி ஒழுக்கமில்லாதவர்கள் - துரியோதனன் குடும்பம் கண்ணியமான குடும்பம். அவனுடைய மனைவி பானுமதி ஒரு பத்தினி என்றெல்லாம் கருணாநிதி உடன் பிறப்புக்கு கடிதமெழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதம் எனக்குப் படிக்க வாய்த்தபோது இந்திரா பார்த்தசாரதியின் ‘கிருஷ்ணா கிருஷ்ணா' நாவலுக்கு எழுதப்பட்ட திராவிட இயக்க விமர்சனம் போல தோன்றியது கூட ஒரு Irony தான்.

துரியோதனனும் பீமனும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். இன்னொரு சுவையான தகவல் இந்த நாவலில் தெரிய வருகிறது. இருவருக்கும் உள்ள ஒரு முக்கிய உறவு இருவரும் சகலைபாடிகளும்கூட. பானுமதியின் தங்கை ஜலந்தரா பீமனை மணக்கிறாள். கிருஷ்ணன் தான் இதற்கும் தூது போகிறான்.

கிருஷ்ணன் ஒரு சமுதாயக் கனவு என்பதை நிறுவிக் காட்டுவதில் இந்திரா பார்த்தசாரதிக்கு வெற்றி கிட்டியிருக்கிறது.

கிருஷ்ணன் தன் ஆத்ம அன்பன் பார்த்தனிடம் ‘ எனக்கு எட்டு மனைவியர் உண்டு. ஆனால் ஒரே ஒரு காதலி தான்' என்று அந்தரங்கமான ரகசியத்தை வெளிப்படுத்துகிறான்.

அப்படிப்பட்ட ஒரே காதலி ராதாவைத்தான் தன் அந்திமக் காலத்தில் சந்திக்க விரும்புகிறான். Classical Situation.

ராதாவின் குடிசைமுன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அவளுடைய பேரப்பிள்ளைகள். ‘ராதா எங்கே' என்று அந்தச் சிறுவர்களிடம் கேட்கிறான். அவர்கள் ‘ராதாப் பாட்டியா ? ' என்று கிருஷ்ணனைக் கேட்கிறார்கள். இவனுடைய அழகு நளினம், குழல் நரைத்து தளர்ந்து கூனி கண்ணில் கைய குடையாக்கி இவனைப் பார்ப்பதை பார்க்கவேண்டுமா ? வேண்டாம். அங்கிருந்து கிளம்பி ஜரா என்ற வேடனை காண வருகிறான். ஜரா தான் கிருஷ்ணவதாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறவன்.

Fate Proves Stronger than Misfortune !

விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீதுளரோ ?

‘ தந்திர பூமி' கஸ்தூரி. 'சுதந்திர பூமி' முகுந்தன் போன்றவர்களிடம் கூட கிருஷ்ணனின் சாயலைக் காண முடியும். இந்திரா பார்த்தசாரதியின் ‘மாயமான் வேட்டை' நாவலிலும் கிருஷ்ண லீலார்த்தம் விரவிக் கிடக்கும். அவருடைய ‘ ஒளரங்கசீப்' நாடகத்திலும் கூட. Krishna is a colorful, Multi - Dimensional Evergreen Charactor. He is not a Hero. But he is the dominating charactor.

நாம் அனுபவிக்கும் துயரங்கள் தாம் நம் மன வலிமையை நிர்ணயிக்கும் அளவுகோல். மனிதனுடைய பிரச்சினைகள் தீராதவை என்பதில் தான் வாழ்க்கையின் சுவாரசியம் இருக்கிறது.

The Intray is never Finished

கிருஷ்ணா கிருஷ்ணா நாவல் – இந்திரா பார்த்தசாரதி.

புதுப்புனல் வழங்கும் பன்முகம் ஏப்ரல் – ஜூன் & ஜூலை – செப்டம்பர் 2005

1 comment:

  1. லீலார்த்தம் கட்டுரையினை படித்தபோது என்னென்னவோ நினைவுக்கு வந்தது. அப்படியும் இருக்குமோ ????

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.