Share

Jul 22, 2008

நிரோஷ்டா ராகமும் இலக்கியவெளி வட்டமும்

பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சக்கரத்தாழ்வார் சன்னதி யில் திருப்பாவை உற்சவம் . சேஷகோபாலன் "ராஜ ராஜ ராதிதே" பாடிகொண்டிருந்தார். ஹரிகேஷ நல்லூர் முத்தையா பாகவதரின் கீர்த்தனை. இந்த நிரோஷ்டா ராகம் பாடும்போது உதடுகள் இரண்டும் ஒட்டவே ஒட்டாது . பாட்டு முடிந்ததும் என் வலது பக்கம் உட்கார்ந்திருத்த வத்ராப் புதுப்பட்டி நாயக்கர் இசை சுகம் பற்றி என்னிடம் சிலாகித்த போது நான் கேட்டேன் ." உங்க ஊரிலே நடராஜன் அண்ணாச்சி தெரியுமா? "
அவர் "எந்த நடராஜன்"
"நாங்க இலக்கிய வெளி வட்டம் நடராஜன் என்று சொல்வோம் . இலக்கிய வெளி வட்டம் னு அந்த காலத்திலே ஒரு நல்ல பத்திரிகை நடத்தினார். பிள்ளைமார் ஆளு .( ஜாதியை சொன்னால் தான் அந்த பக்கம் அடையாளமும் தெரிய வாய்ப்பு.)
உங்க ஊர் பாலகுரு அண்ணாச்சி , அப்புறம் ராஜ் கௌதமன் இப்போ புதுவையிலே பேராசிரியர் ஆக இருக்கார் . இவங்கல்லாம் எனக்கு நல்ல பழக்கம் ." என்றேன் .
"அந்த நடராஜன் கம்யூனிஸ்ட் ஆச்சே. naxalite ஆச்சே .அவரா உங்களுக்கு நண்பர் "புதுபட்டி நாயக்கர் பதறி விட்டார். என் இடது பக்கம் உட்கார்ந்திருந்த குடுமி ஒருவர் திரும்பி எங்களை அதிர்ச்சியோடு முறைத்து பார்த்தார். 'என்ன இது . இந்த இடத்திலே naxalite அது இத்துண்டு அபச்சாரம் ' என்று அர்த்தம் .


ஆயிரத்திதொள்ளயிரத்து எழுபத்தி எட்டாம் ஆண்டு ஒரு நாள் புதுபட்டி கிராமத்தில் போலீஸ் படை நுழைந்து நடராஜன் வீட்டில் அலசு அலசு என்று அலசி அண்ணாச்சியையும் தூக்கி கொண்டு போய் துருவி துருவி விசாரணை . நடராஜன் அண்ணாச்சி செய்த தவறு இலக்கிய வெளி வட்டம் பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருந்தார் என்பது தான் . ஜனகப்ரியா என்ற பெயரில் இவரை இலக்கிய உலகம் அறியும் .

இலக்கிய வெளி வட்டம் பத்திரிக்கையை மறக்க முடியுமா? அதன் ஒவ்வொரு இதழின் உள்ளடக்க விசயங்களையும் ஸ்ரீவில்லி புத்தூர் வாசகர் திருப்பதி இப்போதும் மனப்பாடமாக ஒப்பிக்கிறார்! இன்றைக்கும் நாகார்ஜுனன், சாரு நிவேதிதா இலக்கிய வெளிவட்டத்தையும் நடராஜன் அண்ணாச்சி பற்றியும் உற்சாகமாக குறிப்பிட்டு எழுதுகிறார்கள்!! அண்ணாச்சியின் மகள் கவிதா இன்று "காலச்சுவடு" பத்திரிகையில் உதவி ஆசிரியர் ஆக வேலை பார்த்துகொண்டே படித்துக்கொண்டும் இருக்கிறார்.

1 comment:

  1. சார், இப்போ தமிழை எழுத முடிகிறது போலும்... அசத்தல் பத்தி. நிரோஷ்டா ராகம் பற்றி தெரிந்து கொண்டேன். எங்காவது பேசும் போது எனக்கும் கொஞ்சம் ராகம் பற்றி தெரியும் என்று ஜம்பமடிக்கலாம் அல்லவா.. இது போல ராகங்கள் பற்றியும் அதன் சுவாரசியமான விஷயங்கள் பற்றியும் எழுதுங்களேன்.. இது என் வேண்டுகோள்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.