Share

Jul 2, 2008

பிரசாதம் செய்த மாயம்


திருச்சி செயிண்ட் ஜோசப் பள்ளி பத்தாம் வகுப்பு மாரல் இன்ஸ்ட்ரக்‌ஷன் பீரியட். நீதிபோதனை செய்து கொண்டே வகுப்பில் உலாவி வரும் போது ஆசிரியர் என்னைக் கவனிக்கிறார். நான் ஆர்வமாக, தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கிற புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கி பார்க்கிறார். சரோஜாதேவி எழுதிய வாடாமல்லி. அவருக்கு அதிர்ச்சி. புத்தகத்தை உயர்த்திக் காட்டுகிறார். ‘மாரல் இன்ஸ்ட்ரக்‌ஷன் வகுப்பிலே செக்ஸ் புக் படிக்கிறான்யா’ வகுப்புத் தலைவனிடம் கொடுத்து உடனே புத்தகத்தை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கச் சொல்கிறார். அவன் மூன்றாவது மாடி வெராண்டாவில் ஓட ஆரம்பிக்கிறான். அழுது கொண்டே இறைஞ்சிக் கொண்டு நிற்கிறேன் நான். ஆசிரியர் என்ன நினைத்தாரோ இன்னொரு பையனை அனுப்பி வகுப்புத் தலைவனை உடனே திரும்ப அழைத்து வரச் சொல்லி புத்தகத்தை வாங்கி என்னிடமே திரும்பக் கொடுத்து விடுகிறார். அடிக்கவில்லை. உதைக்கவில்லை. என்னை அமரச் சொல்லி விட்டு வகுப்பைத் தொடர்ந்து நடத்துகிறார். நீதிபோதனை ஆசிரியர் வில்சன்.

ஜெகசிற்பியன் எத்தனை புத்தகம் படித்திருக்கிறேன். நா.பார்த்தசாரதியின் ‘பொன் விலங்கு’ படித்துக் கொண்டிருந்தபோது நான் ஆசிரியரிடம் மாட்டியிருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும். அண்ணாத்துரையின் ‘கம்பரசம்’ ‘ரோமாபுரி ராணிகள்’ படித்தபோது நான் சிக்கியிருந்தால் கூட தேவலாம் தான். வகுப்பில் பாடம் நடத்தும் போது கதைப் புத்தகம் படிப்பதே கடுமையான ஒழுங்கீனம். இப்போது நான் செய்திருப்பதென்ன ?

A BLUNDERING BOY ! 7ம் வகுப்பு படிக்கும்போதே சிகரெட் பழக்கம். 8ம் வகுப்பில் சிகரெட் இல்லாமல் முடியாது என்று ஆகி சிகரெட்டுக்கு பணம் இல்லையே என்று நான் பட்ட கவலையை காண சகியாமல் சக மாணவன் மனிதாபிமானத்தோடு ஒரு பாக்கெட் COOL சிகரெட் வாங்கித் தந்தான்.

முல்லைக்குடி என்ற ஊருக்கு பிக்னிக் சென்ற போது வயல்காட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். மது ருசி ஏற்கனவே அறிந்தவன் நான். கூடவே நான்கு பையன்கள். நான் மட்டும் குடித்தால் காட்டிக் கொடுத்து விடுவார்கள். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு மடக்கு ஒரே டம்ளரில் வாங்கிக் கொடுத்து விட்டு நான் ஒருவனே மூன்று டம்ளர் விழுங்கினேன். சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த குடிமகன்கள் எனக்கு மாலை போடாத குறைதான். குடித்த சந்தோஷத்தில் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி வந்து மாஹிக்ரவுண்டில் ஒரு ரவுண்டு ஓடித்தான் நிறுத்தினேன்.

எட்டாம் வகுப்பு நான் படிக்கும் போது எனக்கு ஐந்து இளைய சகோதரர்களும், இரண்டு இளைய சகோதரிகளும். பள்ளிக் கூட காலங்களில் அந்த வயதுக்கேற்றாற் போல எம்.ஜி.ஆர். ரசிகராகத் தான் இருந்தேன். அண்ணாத்துரை இறந்த போது தேம்பித் தேம்பி அழுது சாப்பிட மறுத்து விட்டேன்.

S.S.L.Cயில் 82% மார்க் எடுத்து தேர்வு பெற்ற போது டாக்டராகி விடுவேன் என்று எல்லோருமே எதிர்பார்த்தார்கள். P.U.C யில் மெஜிரா காலேஜில் 3ம் வகுப்பில் தான் தேறினேன். அப்போது தமிழில் பாடத்திட்டத்தில் தி.ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி பாடமாக வைக்கப்பட்டிருந்தது. பின்னாளில் தி.ஜாவின் பரமரசிகனாக முத்திரை குத்தப்பட்ட நான் அப்போது ‘அக்பர் சாஸ்திரி’ சிறுகதைத் தொகுப்பை புரட்டிக் கூட பார்ககவில்லை. P.U.C படிக்கும்போது சிகரெட், மதுவோடு இன்னொரு பழக்கமும் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் LEBATON, MANTRAX போன்ற போதை மாத்திரைகளை விழுங்கினேன். இந்த போதை மாத்திரைகளைப் போட்டு கொண்ட பின் முள் மரங்களைப் பார்த்தால் கூட ரொம்பச் சந்தோஷமாயிருக்கும்.

பி.ஏ., பட்டப்படிப்பு ஆங்கில இலக்கியம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாமாண்டிலேயே ஜெயகாந்தனின் ‘ஒரு பிடிச் சோறு’ துவங்கி ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ வரை அத்தனை நூல்களையும் படித்து முடித்து என் இயல்புபடி Revise செய்துவிட்டேன். English Fiction என்ற அளவில் James Hadleychase, Alistair Maclean, Denise Robins, Agathachristie என்று படித்துகொண்டிருந்த நான் அப்போது தமிழில் மட்டும் ஜெயகாந்தனை முழுமையாக ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்ததை இப்போது நினைத்துப் பார்க்கும் போது முரண் நகையாகத் தோன்றுகிறது.

நாங்கள் வசித்த பகுதியில் ஸ்தாபன காங்கிரஸ் கூட்டத்தில் பேச ஜெயகாந்தன் வருகிறார். எம்.ஜி.ஆர். ரசிகனாக இருந்த நான் அ.தி.மு.க. கட்சி தோன்றிய பிறகு தி.மு.க. காரனாக கருணாநிதியின் தொண்டனாக மாறியிருந்தேன். அப்போது ‘குருபீடம்’ நூலில் ஜெயகாந்தனிடம் கையெழுத்து வாங்குகிறேன். சிரிக்காமல் சிடு, சிடு வென்று அவசரமாக பலருக்கும் ஆட்டோகிராப் செய்து கொண்டிருந்த ஜெயகாந்தன் அவருடைய நூலில் கையெழுத்து வாங்கும் என்னை நிமிர்ந்து பார்த்து புன்னகைக்கிறார். அந்தப் புன்னகை கோடி பெறும். கூட்டத்தில் ஜெயகாந்தனின் பேச்சு பிரமிக்க அடிக்கிறது. ‘ஏண்டா நீங்க திறந்து விட்டா நாங்க குடிக்கனும். நீங்க திடீர்னு மூடிட்டா உடனே நாங்க காந்தியாயிடனுமா?’ என்று கருணாநிதி அரசை எதிர்த்து முழங்கினார். சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் அது. மேடையில் மகாத்மா காந்தி, காமராஜர் படங்களுக்கு நடுவே சிவாஜி கணேசனின் படத்தை வைத்திருந்தார்கள்.

‘இது யாரு? தேசப் பிதா. அது யாரு ? கர்ம வீரர் காலா காந்தி நடுவிலே யாருடா இது? திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு சைத்தானை வளர்த்தார்கள். அது சில குட்டிச் சாத்தான்களை சேர்த்துக் கொண்டு வெளியே வந்து அண்ணா தி.மு.க. என்று ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டது. ஸ்தாபன காங்கிரஸிலும் நீங்கள் ஒரு சைத்தானை வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று துணிச்சலுடன் பகிரஙகமாக ஜெயகாந்தன் கர்ஜித்தபோது ஒரு சிங்கத்தை பார்த்தாற்போலவே இருந்தது. அதன் பிறகு நான் படித்த அமெரிக்கன் கல்லூரி தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பாக அவர் அழைக்கப்பட்டு வந்து உரையாற்றிய போதும் SHOCK VALUE அவருடைய பேச்சில் இருந்தது. ‘KANJA IS MY SOUL. LIQUOR IS MY BODY ‘ என்றார்.

கஞ்சாப் பழக்கம் என்னையும் தொற்றிவிட்டது. அரசரடி – ஆரப்பாளையம் பகுதியில் அந்தக் காலத்தில் கஞ்சா என்பது டீ, காபி சாப்பிடுவது மாதிரி சகஜமான விஷயம். அமெரிக்கன் கல்லூரியிலும் மரத்தடி மகாராஜாக்கள் எப்போதுமே கஞ்சா புகை சூழ இருப்பது தான் அப்போது இயல்பான விஷயம். பாரதி கஞ்சா அடித்தவர். என்னுடைய அபிமான எழுத்தாளரே கஞ்சா அடிப்பவர். ஜெயகாந்தன் தான் எழுத்தாளர். வேறு யாரையும் படிக்கவே மாட்டேன் என்ற பிடிவாதம் ஏற்பட்டுபோனது. பி.ஏ. இரண்டாமாண்டு என் தம்பியொருவன் அப்போது ‘பிரசாதம்’ என்று ஒரு புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு வந்திருந்தான். ‘சுந்தர ராமசாமி’ என்று பெயர் போட்டிருந்தது. அந்தப் புத்தகத்தை அசுவாரசியமாகப் புரட்டினேன். முன்னுரையை வாசித்தேன். ‘வாழ்வின் கதி நதியின் பிரவாகம். நம்முடைய திட்டம், தத்துவம், அனுமானம், ஹேஸ்யம், ஜோஸ்யம் இத்தனைக்கும் ‘பெப்பே’ காட்டிவிட்டு ஓடுகிறது. எனக்கு என் வாழ்க்கை என்றாலே என் அனுபவம் மட்டும் தானே. ஆக, இது தான் வாழ்க்கை என்று நான் ‘பிடித்து’ வைத்துக் கோடு கீச்சுகிற போதே நான் சற்றும் எதிர்பாராத விதமாய், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வண்ணமாய் இவ்வுலகம் புதுக்கோலம் கொண்டு இயங்குகிறதே. அது தான் வாழ்க்கையா?’ என்றெல்லாம் விரிந்த அந்த முன்னுரை என்னைச் செயலோயச் செய்துவிட்டது. முதல் சிறுகதை ‘பிரசாதம்’ படித்தவுடனே உற்சாகம் ஏற்பட்டது. ‘சன்னல்’ கதையைப் படித்து முடித்தபோது பித்துப் பிடித்தாற் போல் ஆகிவிட்டது. எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் தான் கிணற்றுத் தவளை. என்னுடைய நம்பிக்கை உடைந்து விட்டது. அப்புறம் மறு நாள் தான் ‘லவ்வு’ கதையைப் படித்தேன். கிடாரி, ஒன்றும் புரியவில்லை,வாழ்வும் வசந்தமும் ஆகிய கதைகள் என்னை ஒரு புரட்டு புரட்டிப் போட்டுவிட்டன. எல்லாக் கதைகளுமே ஸ்டாம்பு ஆல்பம், சீதை மார்க் சீயக்காய்த் தூள், மெய்+பொய்=மெய் எல்லாமே ரொம்ப வித்தியாசமான அனுபவத்தைத் தந்தன. எதுவுமே சோடையில்லை.

SERENDIPITIOUS HAPPY DISCOVERY ! யார் இந்த சுந்தர ராமசாமி? ஜெயகாந்தனின் அத்தனை நூல்களிலுமிருந்து மாறுபட்ட உயர்ந்த வாசிப்பு அனுபவத்தை ஒரு சிறுகதைத் தொகுப்பிலேயே தந்து விட்ட சுந்தர ராமசாமி. ஜெயகாந்தனிடம் காணக் கிடைக்காத LITERARY CLEVERNESS வேறு தூக்கலாக இவரிடம் தெரிகிறது. இப்போது நினைக்கிறேன். எனக்கு வாசகனாக ஒரு TRANSFORMATION சுந்தர ராமசாமியின் ‘பிரசாதம்’ மூலமே கிடைத்தது.

மிக தற்செயலாக என் வாழ்வில் நடந்த SUBLIMATION பற்றியும் சொல்ல வேண்டும். இப்போது 20 ஆண்டுகளாக சிகரெட், கஞ்சா, குடி எதுவுமே கிடையாது. விளையாட்டாகக் கூட நான் தொட்டதேயில்லை.

‘செளந்திர சுகன்’ – டிசம்பர் 2004 இதழில் பிரசுரமாகியுள்ளது.

1 comment:

 1. Sir
  Hope you are talking about this story..
  http://www.youtube.com/watch?v=C5xR2nauBxg

  Thanks
  Kalees

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.