Share

Jul 28, 2008

கோணங்கி என்ற பொன்வண்டு

புதுவைக்கு ஒரு புத்தக சந்தைக்கு வந்திருந்த கோணங்கி யை புதுவையிலேயே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியை அப்போது ரவி குமார் ( விடுதலை சிறுத்தை.இப்போதைய தமிழக சட்டமன்ற உறுப்பினர்-காட்டு மன்னார் கோவில் ) எடுக்க விழைந்தார்.

என்னிடம் கேட்டார். 'உங்களால் கோணங்கிக்கு ஒரு வேலை கொடுக்க முடியுமா?'

எங்கள் தொழிற்சாலை நிறுவனப்பணியில் கட்டட வேலை sedarapattu industrial estate ல் நடந்து முடிந்திருந்தது.மின் வேலைகள் முடிந்து யந்திரங்கள் நிறுவப்படும் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது 25 லக்ஷம் செலவில் உருவான நிறுவனம் . நான் சரியென்றேன். நல்லது தான். அந்த காலத்தில் 600 ரூபாய் சம்பளம் தர ஒப்புக்கொண்டு factory க்கு அழைத்துக்கொண்டு போய் காட்டினேன் . அப்போதே இரண்டு பேர் என்னிடம் application கொடுக்க நிற்பதை கோணங்கி பார்த்தான். ( கோணங்கியை ஏகாரத்தில் குறிப்பிடுவது தான் இயல்பாக இருக்கும். கோணங்கியைபற்றி அவர்,இவர் என்று குறிப்பிடுவது தான் ரொம்ப செயற்கையான விஷயம் ) 'சரி இங்கு வந்து விடுகிறேன்.இப்ப நான் மைலம் போய் அங்க அஷ்வகோஷ் , அவரை பார்த்துட்டு அப்படியே கோவில்பட்டி.பெட்டி படுக்கையோட வந்திடறேன் .'

லாஸ்பேட்டை கி. ரா வாசஸ்தலம் போயிருந்தேன் . கோணங்கி வரப்போகும் விஷயத்தை கி.ராவிடம் சொன்னேன் . புன்னகைத்தார் . நானிருந்த பிருந்தாவன் காலனிக்கு அவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது மறு நாளே .இப்படி எழுதியிருந்தார் 'கோணங்கி என்ற பொன்வண்டு நீங்க போடுற கருவ இலையை தின்று கொண்டு உங்க தீப்பெட்டியில் அடங்கி முட்டையிடுமா?'

சில நாளில் கோணங்கியிடமிருந்து ஒரு கடிதம் . ' நீ எனக்கு கொடுக்கிற வேலையை எனக்கு பதிலா நம்ம அண்ணாச்சி இலக்கிய வெளிவட்டம் நடராஜனுக்கு கொடு' -- -இப்ப்படி! '

'சரி அண்ணாச்சியை உடனே வர சொல் ' -பதில் எழுதினேன். நடராஜன் அண்ணாச்சி - ஜனகப்ரியா.

தொடர்ந்து லாஸ் பேட்டை இலிருந்து ராஜ் கௌதமன் ஒரு கடிதம் எனக்கு எழுதியிருந்தார்.' இலக்கிய வெளி வட்டம் நடராஜன் இங்கு வரமாட்டார். அவர் சொந்த கிராமத்திலிருந்து வேறு ஊர்களுக்கு பிழைப்புக்காக போகக்கூடியவர் அல்ல . தன் ஊரிலேயே சவால்களை சமாளிப்பவர் . இது கோணங்கி யின் வழக்கமான கோணங்கிதனங்களில் ஒன்று .'

கி.ரா எழுதியதும் ராஜ் கௌதமன் எழுதியதும் தான் சரியாகிப்போனது .

ரவிகுமாரிடம் அப்புறம் நான் சொன்னேன் "கோணங்கி நமக்கு அல்வா கொடுத்து விட்டான் ! "
நாடோடி மன்னன் ஆச்சே. அவனை ஒரு ஊரில் அடைக்க முடியுமா ?

காலச்சுவடில் இரண்டு வருடம் முன் "விருது வாங்கலையோ " என்று சிலருக்கு விருது கொடுத்த போது

கோணங்கிக்கு கொடுக்கப்பட்ட விருது
" நாடோடி மன்னன் "

ரவிகுமார் -" திராவிட மாயை"

R.P. ராஜநாயஹம் - " ஊட்டி வரை உறவு ".










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.