"யப்பா பைரவா"
- R.P. ராஜநாயஹம்
‘நவக்கிரகம்’ கே.பாலச்சந்தர் படம். அதில் மேஜர் சுந்தர்ராஜன் தன் தம்பியின் நண்பன் நாகேஷிடம்
“உன் பே..ப்பே..பேர் என்ன?” என்பார்.
நாகேஷ் : “ பா.. ப்பா.. பாலு “
’’என்ன கிண்டலா பண்றே?’’ என்று சுந்தர்ராஜன் கோபமாகி நாகேஷ் கன்னத்தில் அறைந்து விடுவார்.
வி.கோபால கிருஷ்ணன்: “ அண்ணே.. உங்கள போல இவனுக்கும் திக்குவாய் தான்”
மேஜர்: “ அடடே.... மன்னிச்சுக்கப்பா.. நீ என்ன imitate பண்றேன்னு உன்னை தெரியாம அடிச்சிட்டேன்..
நாகேஷ் : பெரியவங்கள imitate பண்ணலாம். ஆனா counterfeit பண்ணக்கூடாது.
கரிசல் இலக்கிய மன்னர் கி.ரா மூலமாக எனக்கு அறிமுகமான நண்பர் இளையராஜா. இவரது மூத்த சகோதரர் செந்தில் நாதன். இருவருமே திருப்பூரில் தனித்தனியே பிசினஸ் செய்பவர்கள். இருவருமே நல்ல வாசகர்கள்.சேலம் ஓமலூரைச் சேர்ந்தவர்கள்.
இரண்டு வருடம் முன் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் காரணமாக தொடர்ந்த சிக்கலால் சமீபத்தில் செந்தில் நாதனுக்கு ஒரு பெரிய ஆபரேசன். அவர்கள் வீட்டுக்கு போயிருந்த போது செந்தில் நாதன் சொன்ன விஷயம் இது.
சில வருடங்களுக்கு முன் திருப்பூரில் ஓமலூர் சகோதரர்கள் அங்கேரிப்பாளையத்தில் ஒரு அபார்ட்மெண்டில் குடியிருந்த போது அதே அபார்ட்மெண்டில் புலி சரவணன் – டெய்சி தம்பதியர் குடியிருந்திருக்கிறார்கள். புலி சரவணனுக்கு டையிங் பிசினஸ். Week-end சமயத்தில் செந்தில் நாதனும் புலி சரவணனும் அபார்ட்மெண்ட் மொட்டை மாடியில் ரிலாக்ஸ்டாக மதுவருந்திக் கொண்டிருந்த போது புலி சரவணன்
” நாளைக்கு உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தரப்போகிறேன்.” என்று சொல்லியவர் மறு நாள் ஒரு 20 வயது மதிக்கத்தக்க பையன் ஒருவனை அழைத்து வந்து “ இவர் தான் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்! சாட்சாத் எஸ்.ராமகிருஷ்ணன்! “ என்று சொல்லியிருக்கிறார்.
செந்திலுக்கு புல்லரித்து செடியரித்து மரம் அரித்து விட்டது!
அப்போது தான் ஆனந்த விகடனில் ராமகிருஷ்ணன் முதல் தொடர் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். அந்தத் தொடர் முடிய மூன்று வாரங்கள் தான் இருந்தது. இவ்வளவு சின்ன பையனாக எஸ்.ராமகிருஷ்ணன் இருப்பார் என்று செந்தில் கற்பனை கூட செய்திருக்கவில்லை எனும்போது பரவசமாகி விட்டார்! பால் பருவத்தில் எவ்வளவு அதி அற்புதமாக எழுதுகிறார்.
எஸ்.ரா இப்போது திருப்பூரில் புலி சரவணனிடம் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது. நான்காயிரம் சம்பளம். அந்தப் பையன் தான் ஆனந்த விகடனுக்கு நான்கு வாரம் முன்னதாகவே எப்போதும் எழுதி அனுப்பி விடுவதாகவும் பத்திரிக்கையிலிருந்து வாரம் ரூபாய் பத்தாயிரம் தனக்கு தருவார்கள் என்றும் சொல்லியிருக்கிறான்.
புலி சரவணன் புத்தகமோ, பத்திரிக்கையோ பார்ப்பவரல்ல. பிரபல விகடனில் ’தன் பால் பருவத்தில்’ எழுதும் மிக இளம் எழுத்தாளர் தன்னுடைய கம்பெனியில் வேலை செய்கிறார் என்பதைப்பற்றி தெரிய வந்தவுடன் தன் நண்பர் செந்தில் நாதன்( வாசகர் என்பதால்) பூரிப்புடன் அறிமுகம் செய்திருக்கிறார்!
உடனே, உடனே செந்தில் நாதன் தன் ஃப்ளாட்டுக்கு அழைத்துச் சென்று தன் புத்தக கலெக்சனைக் காட்டியிருக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பு நாவல் இளம் எழுத்தாளர் படிக்கவில்லை என்றதும் மனமுவந்து அதை இவர் பரிசளித்திருக்கிறார்.
செந்தில் நாதன் ரொம்ப வெள்ளை உள்ளத்துடன் புலி சரவணனிடம்
எஸ்.ரா வின் பெருமைகளை எடுத்துச் சொல்லி அவரை இன்னும் கௌரவமாக நடத்தச் சொல்லியிருக்கிறார். உடனே பால் மனம் கொண்ட புலி சரவணன் இந்த பையனின் சம்பளத்தை ஆறாயிரமாக உயர்த்தி விட்டார். வேலை இனி இந்த எஸ்.ரா வுக்கு கம்பெனிக்கு வரவேண்டிய செக், பணம் கலக்சன் மட்டும் பார்த்தால் போதும் என்று சலுகை.
பழம் நழுவி பாலில்!
செந்தில் நாதன் இந்தப் பையன் முதலாளி புலி சரவணனைப் பார்க்க வீட்டிற்கு வந்தால் உடனே எழுந்து நின்று விடுவார். ஞானப்பால் குடித்த ஞானசம்பந்தனாயிற்றே.
புலியிடம் செந்தில் “ மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது. இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய எழுத்தாளன் பாருங்கள். பால் பருவ சாதனையாளன். ஐய்யோ.புலி,உங்களிடம் வேலை செய்வது உங்களுக்கு எவ்வளவு பெருமை! ” என்று மலைத்து மாய்ந்து….......
அந்தப்பையன் அடுத்த வாரம் “ நான் விகடனில் ட்ரையினில் மானபங்கப்படுத்தப் பட்டு ரேப் செய்யப்பட்ட வட நாட்டுப் பெண் பற்றி எழுதியதைப் படித்து விட்டீர்களா? “ என்று கேட்டிருக்கிறான்.
“ ஒரு குறிப்பிட்ட வகை சிலந்தி பற்றி நான் ஆராய்ச்சி செய்திருக்கிறேன். அந்த சிலந்தி ஒரு மனிதனை கடித்தால் குறிப்பிட்ட சில வியாதிகள் குணமாகின்ற என் கண்டு பிடிப்பைப் பற்றி டிஸ்கஸ் செய்வதற்காக என்னை அமெரிக்காவில்’ நாசா’ விலிருந்து அழைத்திருக்கிறார்கள்!” என்று அவன் ஒரு நாள் முதலாளி வீட்டுக்கு வந்த போது அவர் முன்னிலையிலேயே தன்னைப் பார்த்தவுடன் மரியாதையுடன் எழுந்து நின்ற செந்தில் நாதனிடம் கேஷுவலாக சொல்லி விட்டான்.
ஆ! ஆ! ஆ! எஸ். ரா எழுத்தாளர் என்பது தெரிந்ததே. அவர் சின்ன பையன் என்பதும் தெரிந்ததே. எளிமையாக நம் நண்பர் புலியிடம் வேலை பார்க்கிறார் என்பதும் தெரிந்ததே. ஆனால் அவர் இன்று ’நாசா’ போற்றும்,
( கோவை ஜி.டி.நாயுடு பாணியில் சுயம்புவான, மம்சாபுரம் ராமர்பிள்ளை போல பரபரப்பான ) விஞ்ஞானியும் கூட என்பது தான் தெரியாததே!!!
மூன்றே வாரத்தில் எஸ்.ரா வின் தொடர் ஆனந்த விகடனில் முடிவுக்கு வந்த போது எஸ்.ராமகிருஷ்ணனின் புகைப்படம் அதில் அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்த செந்தில் நாதனுக்கு அதிர்ச்சி.
புலி சரவணனிடம் வேலை பார்த்த ஆளுக்கு பதிலாக வேறொரு யாரோ ஒருவருடைய படம் வெளியிடப்பட்டிருந்தது.. சில நிமிடங்கள் குழப்பம். செந்தில் மூளையில் பனி மூட்டம். பனி விலகியதுமே அச்சில் வந்திருந்த அந்த யாரோ ஒருவர் தான் உண்மையான எஸ். ராமகிருஷ்ணன் என்பது உறைத்தது!
உடனே அந்த ஆனந்த விகடனுடன் புலியின் ஃபேக்டரிக்கு புயலாய் கிளம்பிப்போனால் பால் பருவ எழுத்தாளரை அங்கே வேலை பார்ப்பவர்கள் கும்மிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
கலக்ஸனில் செக்குகளை மட்டும் ஒப்படைத்த அந்த எழுத்தாளன் கேஷ் எல்லாவற்றையும் அமுக்கிய விஷயம் வெளி வந்து விட்டதால் மண்டகப்படி.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி விட்டார் செந்தில் நாதன். ஆனந்த விகடனை த் தூக்கிப்போட்டு விட்டார். எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றி விட்டாரேயம்மா.....
யப்பா பைரவா! நீ யாரு பெத்த பிள்ளயோ!
புலி சரவணன்
இந்த கையாடல் தெரிய வந்தபோது எழுத்தாளர் இப்படி அயோக்கியத்தனம் செய்து விட்டாரே என்ற அதிர்ச்சியில் இருந்தவருக்கு கையாடல் செய்தவர் எழுத்தாளரே அல்ல, எஸ்.ராமகிருஷ்ணனும் அல்ல என்று தெரிந்த போது பேரதிர்ச்சி. இப்போது முதலாளியே அந்த ஃப்ராடை அடிக்க ஆரம்பித்து விட்டார். உடனே வேலை பார்ப்பவர்களின் தர்ம அடி பலமாகி விட்டது.
முதலாளியின் மனைவி திருமதி டெய்சி தான் அக்கவுண்ட் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். அவர் தான் கையாடலை அறிய வந்தவர்.
வலி பொறுக்க முடியாமல் அந்த ஃப்ராடுப் பயல் “ மேடம். நானும் ஒரு கிறிஸ்டியன் தான். மேடம். அடிக்க வேண்டாம் என்று சொல்லுங்க மேடம்!” என்று கெஞ்சியிருக்கிறான்.
மூன்று வாரத்தில் கிட்டத்தட்ட முப்பதாயிரம் கையாடல் செய்த அந்த ஃப்ராடிடம் இருந்து ஒரு பைசா கூட ரிகவர் செய்ய முடியவில்லையா?
அவன் யார்? எந்த ஊர்?
அவனுக்கு புலி கொடுத்திருந்த பைக்கை மட்டும் ரிகவர் செய்து விட்டு விரட்டியிருக்கிறார்கள்.
( தி இந்து தமிழில் வெளிவந்த
R.P. ராஜநாயஹம் கட்டுரை)
.....