Share

Jan 27, 2024

எஸ்.ரா நெடுங்குருதி




'நெடுங்குருதி' நாவலை நான் தான் திருப்பூரில் அறிமுகம் செய்து பேசினேன்.

 எஸ். ராமகிருஷ்ணனை சென்னையில் இருந்து இந்த நாவல் பற்றிய கருத்தரங்கத்திற்கு அழைத்து
 அந்த நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்தேன்.  நண்பர் சரவணன் மாணிக்கவாசகத்தை அதற்கான செலவை ஏற்றுக்கொள்ள சொல்லி கேட்டேன். சந்தோசமாக முன்வந்தார். இப்படி  யாரிடமும் எதுவும் கேட்டதே இல்லை. இப்படி  சாதாரணமாக யாரையும் கேட்டதில்லை. அதற்கு முன்னும் பின்னும். 
எப்படியோ இந்த நாவல் பற்றி அப்படி நான் ஒரு நிகழ்வு நடத்த நினைத்தேன்.

நாவல் அத்தியாயம் மொத்தம் 99. பெரிய நாவல் 469 பக்கங்கள் கொண்டது.
கோடை காலம்,காற்றடி காலம், மழைக்காலம், பனிக்காலம் என நான்கு பாகங்கள்.

நாகு, ரத்னாவதி, வேணி, திருமா, வசந்தா, ஜெயக்கொடி, 
வடுவார்பட்டி குறவர்கள் லட்சுமணன், ஈரத்துணி கள்ளன் சீனி, லயோனல், ஜெசிந்தா, துந்தனா வாசிக்கும் பரதேசிகள், வேல்சிதுரை, 
சிங்கி கிழவன், பண்டார மகள், தேவானை ஜெயராணி, மல்லிகா, சேது,வசந்தா, சங்கு,கிட்நா, நாகுவின் தாத்தா, நாகுவின் அய்யா, அம்மா, அம்மாவோட மயினி, பக்கிர்,
 பக்கிரின் மனைவி, ஆதி லட்சுமி, மரக்கடை வியாபாரி அஷ்ரப், ரத்னாவதியின் அத்தை என்று நிறைய கதாபாத்திரங்கள்.

"மழை நீண்ட உரையாடலை ப்போல நகரோடு பேசி ஓய்ந்தது. மழை வெறித்த பிறகு தெருவில் இறங்கிப்போகின்றவர்களின் பேச்சு கூட நனைந்திருந்தது." எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து நடை.
பானை சோற்றில் இருந்து ஒரு சோறு இங்கே வைக்கிறேன் : "சிங்கிகிழவன் ஒரு திருடன். செத்துப்போன சிங்கியுடன் ஆடு புலி ஆடுபவன். சிங்கி கிழவன் குழந்தைகள் கழுத்தில் அணிந்த நகைகளை கழட்ட மாட்டான். குழந்தைகள் ஏங்கிபோய் விடுவார்கள் என விட்டு ப்போய் விடுவான்."

நெடுங்குருதி கருத்தரங்கம் பற்றி
 R.P.ராஜநாயஹம் உரை பற்றி உயிர்மையில் நிகழ்ச்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள். கோவையில் இருந்து கூட வாசகர்கள் வந்திருந்தார்கள்.

ஆரம்பமாக நாவலை அறிமுகப்படுத்தினேன். தொடர்ந்து எஸ்.ராமகிருஷ்ணன் தன் படைப்பை பற்றி பேசிய பின் மீண்டும் நாவல் பற்றி விரிவாக உரை நிகழ்த்தினேன். வாசகர்கள் கேள்வி பதில் என நிகழ்வு விரிந்தது.

2004 ல் நடந்த நிகழ்ச்சி. 
 இரண்டரை ஆண்டுகள் கழித்து கோவை நண்பர் கவிஞர் தென் பாண்டியன் சொன்னார். " நீங்கள் பேசிய விஷயங்கள் தான் பின்னர் நான் நெடுங்குருதி நாவல் படிக்கும்போது அதனை புரிந்து கொள்ள மிகவும் உதவியாய் இருந்தது. இன்றும் நெடுங்குருதி பற்றிய உங்கள் உரையை என்னால் மறக்க முடியவில்லை."

திருப்பூரில் முகம் தெரியாத சிலர் என்னுடைய 'நெடுங்குருதி ' பேச்சு பற்றி இது போல அடிக்கடி குறிப்பிட்டார்கள்.
அந்த உரை மட்டுமல்ல.
திருச்சியில் நான்காண்டுகள் தமிழ் இலக்கிய கழகத்தில் மணிக்கணக்கில் நான் பேசியதைக்கூட நான் எழுத்தில் கொண்டு வர முயற்சித்ததில்லை.

ஹெமிங்க்வேயின் கிழவனும் கடலும் நாவல் பற்றி ராஜநாயஹம் நிகழ்த்திய உரை குறித்து 
திருப்பூரில் கவிஞர் காயாதவன் சிலாகித்து அடிக்கடி குறிப்பிடுவார்.

திருச்சியில் ஒரு பேராசிரியர் உரை நிகழ்த்தும் முன் சொல்வார்
"R P ராஜநாயஹம் போல என்னால் பேசமுடியாது.மணிக்கணக்கில் பேசினாலும் சுவாரசியம் குறையாமல் பேசுவார். கேட்பவர்கள் ரசிக்கும்படியாக பேசுவார் "
நான் குறிக்கிட்டு சொல்வேன்
 “ I feel flattered”
உடனே அவர் " flattery கிடையாது. 
இது தான் fact. எல்லோருக்கும் தெரிந்த உண்மை " என்பார்.

என் நண்பர் திருச்சி பேராசிரியர் காசியப்பன் சொல்வார் " உங்கள் ஆற்றல் எல்லாம் காற்றில் வீணாகிறது எழுதாமலே."

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.