சுரேஷ் கண்ணன்:
ஜெய்ரிகி பதிப்பகம் வெளியிட்டிருக்கும், R.P..ராஜநாயஹத்தின் இரண்டாவது கட்டுரைத் தொகுப்பான 'காரணச் செறிவு' நூல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இந்தப் பிரதியை அனுப்பியிருந்தார், பதிப்பாளர் அசோக். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
*
R.P..ராஜநாயஹம் அவர்களின் முதல் கட்டுரைத் தொகுப்பான 'தழல் வீரம்' நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய எழுத்தை 'மினி ரோலர் கோஸ்டர்' பயணம் எனலாம். அப்படி தவளைப் பாய்ச்சலில் தாவித் தாவி விரைந்து பயணிக்கும் தனித்துவமான எழுத்து. கலைடாஸ்கோப் வழியே காணும் காட்சிகள் போல் எழுத்தின் தொனி சட்சட்டென்று மாறுகிறது.
அவர் உபயோகிக்கும் பிரத்யேகமான ஆங்கில வார்த்கைளுக்கு டிக்ஷனரியைத் தேட வேண்டியதாக இருக்கிறது. ஆங்கில இலக்கியம் படித்தவர் அல்லவா? எனவே மேற்கோள்களிலும் வார்த்தைகளிலும் பின்னியெடுக்கிறார். இதுவே ஒரு தனியான ருசியைத் தருகிறது.
இலக்கியம், இலக்கியப் பூசல்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள் போன்ற ஆளுமைகள், தத்துவம், சினிமா என்று ஒரு வசீகரமான கலவையில் சுவாரசியமான பத்தி எழுத்தாக இந்தக் கட்டுரைகள் மலர்ந்திருக்கின்றன.
குஷ்வந்த் சிங் என்கிற ரகளையான எழுத்தாளரைப் பற்றி அறிந்திருப்போம். ஆனால் அவருடைய மனைவியான
Kawal Malik பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? அவருக்கு இருந்த காதல்களும், அதனால் குஷ்வந்த் சிங்கிற்கு இருந்த மனக்கசப்புகள் பற்றி?!
இப்படி பலரும் அறியாத தகவல்களை விதம் விதமான கோணங்களில் சுவாரசியமான எழுத்தில் கட்டுரைகளாக எழுதியிருக்கும் இந்த இரண்டு நூல்களும் வாசிக்கத் தவறாதவை என்றே சொல்லுவேன்.
*
(பின்குறிப்பு: சந்தையில் நன்றாக விற்பனையாகும் சரக்குகளை பதிப்பித்தோமா, லைப்ரரி ஆர்டர் எடுத்து கல்லா கட்டினோமா என்றெல்லாம் இல்லாமல், காலத்தில் மறைந்து போன சிறந்த எழுத்தாளர்களை, நூல்களை மெனக்கெட்டு தேடி புதிய வாசகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சிரத்தையுடன் பதிப்பிக்கும் நண்பர் அசோக்கை 'பிழைக்கத் தெரியாதவர்' என்றே சொல்லுவேன். ;) அவருடைய பணி தொடர வேண்டுமானால் ஜெய்ரிகி பதிப்பகத்தின் நூல்களை வாங்கி ஆதரவளியுங்கள்)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.