சரவணன் மாணிக்கவாசகம் பதிவு:
"மதுரை அரசரடி- ஆரப்பாளையம் சாலையில், தி.மு.க மன்றத்தின் முன் இருபது பேர்கள் கூட்டமாக நின்றால், அதன் நடுவே
தோழர் R.P. ராஜநாயஹம் இருக்கிறார் என்று அர்த்தம்.
"அந்த சினிமா என்ன தோழரே"
" பத்மினி சிவாஜியை லவ் பண்ணாங்களா தோழரே" என்பது போல் மக்கள் அடிமனதில் மறைத்துவைத்த சந்தேகங்களுக்கெல்லாம் அவரவர் ரசனைக்கேற்ப பதில் கிடைக்கும்.
செரிமானம் அதிகமாகவும், கையிருப்பு குறைவாகவும் பலருக்கு இருந்து, ஒன் பை டூ டீ குடித்த காலத்தில்,
தோழர் முப்பது வடை, முப்பது ஸ்பெஷல் டீ என்று எல்லோருக்குமாக
ஆர்டர் கொடுப்பார்.
இலக்கியம் குறித்து நிறையவே பேசியிருக்கிறோம். சினிமா அல்லது மற்ற சுவாரசியமான விஷயங்கள் என்று ஆவலுடன் வருபவர்கள் ' நாளை மற்றுமொரு நாளில் கந்தன்....." என்ற பேச்சைக் கேட்டு, வணக்கத்துடன் அப்படியே நழுவும் சிரமத்தை அளிக்க வேண்டாம் என்று நாங்களிருவரும் மதுரைத் தெருக்களில் நடந்து கொண்டே உரையாடி இருக்கிறோம்.
ஒருமுறை சினிமாவில் ரெட்டை வேடத்தை எப்படி எடுக்கிறார்கள் என்று நான் கேட்டதற்கு இவர் அளித்த விளக்கம் இன்றும் நினைவிலுள்ளது.
எண்பதுகளிலேயே ( இணையதளம் இல்லாத காலம் என்பதைத் தவிர்க்க முடியாமல் அடிக்கடி சொல்ல வேண்டியதாகிறது) வசந்தமாளிகையில் சிவாஜியின் அம்மாவாக நடித்த நடிகை, மனோகராவில் டி.ஆர். ராஜகுமாரியின் காதலராக வரும் நடிகர் ( இவ்வேளையில் இவரது பேச்சு கிளைச்சாலையில் ராஜகுமாரியிடம் போய் வரும். மந்தி சிந்து கனிகளுக்கு..... ஆண்குரங்கின் முகபாவத்தோடு வாயைத் திறந்து சிலர் கேட்டுக் கொண்டிருப்பார்கள்) போல சிறுவேடத்தில் வருபவர்கள் குறித்து ஒரு மணிநேரம் இவரால் சுவையாக பேசமுடியும்.
அதைக் கேட்டதால் தானோ என்னவோ, எனக்கு இவர் முரசு டிவியில் தொடர்ச்சியாக நூறாவது நிகழ்ச்சியை நடத்தப் போகிறார் என்பது ஆச்சரியத்தை அளிக்கவில்லை. காலையில் எழுந்தால் மனைவி காப்பி கொடுக்கவில்லை என்றால் தானே அது சம்பவம்.
நூறாவது நிகழ்வில் பி.சுசிலா குறித்துப் பேசுகிறார்.முரசு டிவியில்
15.10.2023 ஞாயிற்றுக்கிழமை
காலை எட்டரை மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
ஒற்றைச் சதத்துடன் நிற்காது பல சதங்களை முடிக்க வாழ்த்துகிறேன்."
https://m.facebook.com/story.php?story_fbid=3698595720353867&id=100006104256328&mibextid=Nif5oz
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.