Share

Oct 10, 2023

தொட்ட குறை விட்ட குறை

செப்டம்பர் மாத கடைசியில் பத்து நாட்கள் கோயம்புத்தூர், திருப்பூர் சென்றிருந்த போது யாரையுமே சந்திக்கவில்லை.

திருப்பூரில் எதிர்பாராத
தற்செயல் சந்திப்பு. 2003லிருந்து 2011 வரை வேலை பார்த்த பனியன் கம்பெனி முதலாளி பார்த்தசாரதியுடன் இரண்டு நிமிடம்.

2011 ஜூலையில் நான் relieve ஆன போது வருத்தப்பட்டு சொன்னார்.
"உங்களையெல்லாம் வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என்று நினைத்ததில்லை. இப்போது இப்படி சூழ்நிலை" 

பன்னிரண்டு வருடங்களுக்கு பின்  மீண்டும் பார்த்தேன். யதேச்சையான நிகழ்வு.


பார்த்தசாரதியிடம் வேலை பார்த்த போது பல விதத்தில் உதவிகரமாக இருந்திருக்கிறேன்.

மெஷின் இம்போர்ட் செய்தது சம்பந்தமாக நீண்ட காலமாக வராமலிருந்த இருபத்தைந்து லட்சம் ரூபாய் தொகையை தூத்துக்குடி கஸ்டம்ஸில் இருந்து நான் தான் மீட்டுக் கொடுத்தேன்.

அபாண்டமான பொய் வழக்கு ஒன்றில் சிக்கிய போது சேலத்தில் அவருக்கு பிடி வாரண்ட் போட்ட போது அதிலிருந்து மீள உதவினேன்.

ஹை கோர்ட்டில் பார்த்தசாரதி மீது போடப்பட்ட பொய் வழக்கு விஷயமாக அப்போது 
 பல தடவைகள் சென்னை சென்றிருக்கிறேன்.

லோக் அதாலத்தில்
ஒரு முறை நீதியரசர் மலைசுப்ரமண்யம் முன் பார்த்தசாரதி சார்பில் ஆஜராகியிருக்கிறேன்.
மறுமுறை லோக் அதாலத்தில்
நீதியரசர்கள் பாஷா, ரவிராஜ் பாண்டியன், தினகரன் ஆகிய மூவரிடமும் நானே வாதாடியிருக்கிறேன்.

கேஸ் பார்த்தசாரதிக்கு சாதகமாக தீர்ப்பு வர அத்தனை முயற்சிகளையும் செய்தேன்.

2009 ராஜநாயஹம் பதிவிலிருந்து கீழே :

நான் பணி புரியும் நிறுவன முதலாளி மீது அபாண்டமான ஒரு கிரிமினல் கேஸ் போடப்பட்டது. அதை எதிர்த்து சேலத்தில் stay வாங்கியது துவங்கி உயர்நீதிமன்றத்தில் அந்த கேசை நடத்துவது வரை என் பொறுப்பில் இருந்தது.

 அப்போது மக்கள் தீர்ப்பாயம் (Lok Adalat) முன் உயர் நீதிமன்றத்தில்

08-07-2006 அன்று என் எம்.டி சார்பில் 

ஆஜர் ஆக நான் போயிருந்தேன். 

அங்கே நீதியரசர்கள் பாஷா, ரவி ராஜ் பாண்டியன் ஆகிய நீதிபதிகளோடு வழக்குகளை பைசல் செய்ய ஜஸ்டிஸ் தினகரனும் இருந்தார். 

எங்கள் எம் டி மீது கேஸ் போட்டவர் 
பத்து லட்சத்திற்கு ஐந்து லட்சம் கொடுத்தாலே போதும் என்றும் நான்கு வருடங்களுக்கு வட்டியும் வேண்டாம் என்றும் சொன்னார். 

கேஸ் அபாண்டமான பொய் கேஸ்.

இதில் அந்த கேஸ் போட்ட சேட்டு தாராள மனசைக்காட்டினார்.

 தினகரன் என்னிடம் " இது லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்தமாதிரி உங்கள் அதிர்ஷ்டம்.

 பத்து லட்சத்திற்கு ஐந்து லட்சம் போதும் என்கிறார். அதோடு நான்கு வருடத்திற்கு வட்டியும் வேண்டாம் என்கிறார். ஒத்துக்கொள்ளுங்கள் " என்று கறாராக வற்புறுத்தினார்.

அங்கு வந்திருந்த ஜுனியர் அட்வகேட்டும் என்னிடம் " பெரிய நீதிபதிகளை மறுக்க வேண்டாம்.'' என்று கேனத்தனமாக மிரண்டு போய் சொன்னார். 

நான் பிறகு சீனியர் அட்வகேட் அவர்களையும் ,எங்கள் ஜி.எம் அவர்களையும் கன்சல்ட் செய்து விட்டு அவரிடம் அதற்கு மறுப்பு தெரிவித்து 'கோர்ட் பென்ச்சில் பார்த்துக்கொள்கிறோம். தவறு செய்யாத போது ஏன் இதற்கு ஒத்துக்கொள்ளவேண்டும் ' என உறுதியாக சொல்லி விட்டேன். 

மக்கள் தீர்ப்பாயம் என்றாலே கட்டப்பஞ்சாயத்து போலத்தான் என்று அன்று தெரிய வந்தது. 

வக்கீல் சம்பந்தப் படாமல் மூன்றுஉயர் நீதிமன்ற நீதிபதிகள் முன் நானே வாதாடியது எனக்கு ரொம்ப த்ரில்லான அனுபவம். 

அன்று இரவு சன் செய்திகள் வால்டாக்ஸ் ரோடு லாட்ஜில் நான் பார்த்தபோது 

தினகரன் தமிழக முதல்வர் அவர்களை சந்திப்பதை காட்டினார்கள். 

அடுத்த மாதமே (19.08.2006 ) அந்த கேசை இப்போது மறைந்த நீதிபதி எஸ்.அசோக் குமார் (கலைஞர் கருணாநிதி நள்ளிரவு கைதில் 

போலீசை கிண்டியெடுத்த 

அதே நீதிபதி தான் )அவர்கள்

 தள்ளுபடி செய்து தீர்ப்பு செய்தார்கள்.

.... 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.