ஹரநாத் ராஜா
- R.P.ராஜநாயஹம்
ஹரநாத் ராஜா.
பானுமதி நடித்த 'அன்னை' படத்தில்
அவருக்கு வளர்ப்பு மகன்.
தங்கை மகனை தத்து எடுத்து வளர்ப்பார்.
தங்க தட்டில் தான் சோறூட்டி
பொத்தி பொத்தி வளர்ப்பார் படத்தில்.
சச்சு உடன் ஹர நாத் ராஜா வுக்கு ஒரு நல்ல பாடல். அழகான காரில் .
’அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிய ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்’
சுமை தாங்கியில்
எல். விஜயலக்ஷ்மியுடன்
'ஓ மாம்பழத்து வண்டு, வாசமலர் செண்டு '
சரஸ்வதி சபதம் படத்தில் ' நாட்டிய பேரொளி 'பத்மினிக்கு ஜோடி . பரமசிவனாக.
இவர் ஓவர்நைட்டில் ஹீரோ ஆனவர்.
பாண்டி பஜாரில் ஷு வாங்கும்போது
ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் பார்த்து
இவரை தெலுங்கில் கதாநாயகனாக்கினார்
என்று ஒரு வெர்ஷன்.
பைலட் ஆக ஆசைப்பட்டவர்.
சினிமா திசை மாற்றியிருக்கிறது.
கோணசீமா ஜமிந்தார் குடும்பத்தில் இருந்து இவருக்கு மனைவி வாய்த்தார்.
கோட்டையிலே பிறந்தாலும்
விதி போட்ட புள்ளி மாறுமா?
’எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் வில்லன். சிவாஜியை குடித்து விட்டு ஹர நாத் ராஜா நிஜமாகவே நடிக்கும் போது
கன்னத்தில் அறைந்து விட்டார். .
பாலாஜி இவரை பெண்டு கழட்டி விட்டார்.
பாண்டி பஜார் ரோகினி இண்டெர்நேஷனல் லாட்ஜில் வைத்து ஒரு நாள்
சுப்ரமணிய அய்யர் என்பவர் இவர் நடந்து போகும்போது காட்டி
' இவர் யார் தெரியறதோ? ஹர நாத் ராஜா . '
என சுட்டினார்.
ஆர்வமாக பார்த்தேன். வசதி இல்லை இப்போது, அசதியில் இருப்பது பார்த்தவுடன் தெரிந்தது. குடித்தே வீணாக போய் விட்டார்.
ஹர நாத் ராஜா போன சிறிது நேரத்தில்
நான் கிளம்பினேன். பாண்டி பஜார் பஸ் ஸ்டாப்.
ராஜா அங்கே
பஸ்ஸு க்காக நின்று கொண்டிருந்தார்.
நான் அவரை மீண்டும் பார்த்தேன்.
தான் இன்னார் என்று
எனக்கு தெரிந்து புரிந்து தான்
அவரை கவனிக்கிறேன் என்பதை
உணர்ந்து என்னை பார்த்தார்.
அதற்குள் பஸ் வந்து விட்டது.
சரியான கூட்டம் பஸ் நிறைய.
ஏறவும் பலரும் பெரும் முயற்சி
எடுக்க ஆரம்பித்தனர்.
இவர் பின்புற வாசல் கம்பியை பிடித்து ஏற பகீரத பிரயத்தனம் செய்கிறார். நழுவி மீண்டும் முயல்கிறார். கம்பியை பிடித்த பிடியை விடவில்லை.
கண்டக்டர் ' இடமில்லைப்பா. அடுத்த வண்டியில் வாப்பா ' என்று கூப்பாடு போடுகிறார்.
கூட்டம் முண்டிக்கொண்டு இருக்கிறது.
பஸ் கிளம்ப விசில் கொடுத்த கண்டக்டர்
கம்பியை பிடித்திருக்கிற ராஜாவின் கையில் அடித்து ' கைய எடுப்பா. கைய எடுக்க மாட்டே ' சத்தம் போடுகிறார்.
ஹரநாத் ராஜாவின் பிடி தளர்ந்து தடுமாறி
கடைசி படியிலிருந்த ஒற்றை காலை கீழிறக்கி தள்ளாடி தவித்து நிற்கமுடியாமல்
இறங்கி நிற்கிறார். நிலைப்பட சற்று நேரமாகிறது.
'அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிய ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் .'
அந்த பாடல் அந்த கணத்தில் அங்கிருந்த கடையொன்றில் நிஜமாக ஒலித்தது.
அவர் அவமானத்துடன் என்னை ஒரு பார்வை பார்த்தார். உறுத்தும் உண்மையை காண சகியாமல் நான் நடக்க ஆரம்பித்தேன்.
அவர் அடுத்த பஸ்ஸுக்காக காத்துகொண்டிருந்தார்.
ரேடியோ பாடல் சரணம் பாடிகொண்டிருந்தது
"காவிய கண்ணகி இதயத்திலே
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே "
அவர் அந்த பாடலை கேட்டுகொண்டே தான் அடுத்த டவுன் பஸ்ஸை எதிர்நோக்கிகொண்டிருந்தார்.
(2008ல் ’அழகிய மிதிலை நகரினிலே’ என்ற தலைப்பில்
நான் எழுதிய பிரபலமான பதிவு)
https://www.facebook.com/rprajanayahem/posts/2537679046445546
http://rprajanayahem.blogspot.com/2019/10/blog-post_12.html
...