முகப்பேரில் என்னை அடையாளம் கண்டு
வந்து பேசிய அன்பர் ஒருவர்
"சார் நீங்க ராஜநாயஹம் தானே?
நான் உங்கள் வாசகன்.
என்னுடைய சித்தப்பா நீங்கள் எழுதிய 'சிவாஜி கணேசன்' ஆர்ட்டிக்கிள் படித்து விட்டு தேம்பியழுதார் சார்' என்றார்.
சிவாஜி கணேசன்
திருவிளையாடல் படத்தில்
கடற்கரையில் ஒரு நடை,
மன்னவன் வந்தானடி பாட்டில்
முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை,
’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை.
’ செல்வம்’ படத்தில் ’காற்றிலே நீந்தும் கொடியிடை என் கைகளில் தவழட்டுமே’ என்ற வரி
முடிந்ததும் ஒரு நடை.
’யாருக்கு மாப்பிள்ளை யாரோ!அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!’பாடலை ரசித்துக்கொண்டே ஊனமுற்ற காலோடு
ஒரு அழகு நடை.
நடப்பதில் கூட இவ்வளவு வெரைட்டி
காட்டி விட முடியுமா!
பராசக்தி மூலம் புயலாக வீசி,
மனோகராவில்கொந்தளித்து ’குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே’ என்று சீறிய, சீரிய கலைஞன்.
உத்தம புத்திரனில் விந்தையான வேந்தனாக காட்டிய ஸ்டைல்!
’ராஜா ராணி’ படத்தில் சேரன் செங்குட்டுவனாக ஒரு lengthy single shot ல் மடை திறந்த வெள்ளம் போல பேசிய அடுக்கு மொழி வசனங்கள்.
”காவிரி கண்ட தமிழகத்துப் புதுமணலில் களம் அமைத்து சேர,சோழ பாண்டி மன்னர், கோபுரத்து கலசத்திலே யார் கொடி தான் பறப்பது என்று இன்று போல் அன்றும் போர் தொடுத்துக்கொண்டிருந்த காலமது!”
எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து
’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’
என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்.
குறவஞ்சி படத்தில் “ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால்
கொன்றே விடுகிறார்கள்” என்ற குமுறல்.
வணங்காமுடி படத்தில் ’பாடுடா’ என்று நம்பியார் அதிகாரமாக தங்கவேலுவிடம் வற்புறுத்துவார்.
தங்கவேலு திகைத்து தவிக்கும்போது நம்பியார் ஒரு அடி பலமாக கன்னத்தில் அறைவார்.
அடுத்த நொடியில் சிவாஜி பாடுவதாக ” பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் பயன் தருமா- ஓங்காரமாய் விளங்கும் நாதம்”
இதில் சிவாஜி கணேசனின்
தொண்டை நரம்பு புடைக்கும்.
எந்த பாடலாயிருந்தாலும் தானே பாடுவதான பிரமையை உண்டாக்கிய நடிகர்.
தமிழர்கள் பாக்கியசாலிகளல்லவா!
தமிழ் திரை கண்ட அசுர நடிகன்
எங்கள் சிவாஜி கணேசன்.
கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.
’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய
“அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நாம் ஆடி வரும் ஓரங்கம்
உடல் நான் அதில் உரம் நீ
என உறவு கண்டோம் நேர்மையாய்
பகல் இரவாய் வானத்திலே கலந்து நின்றோம் பிரேமையால்.............
ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ வா என் பக்கம்” ஆஅ ஆஅ ஆ...
இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான
கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.
”அன்பாலே தேடிய ” என்று அடி வயிற்றில் இருந்து குரல் எடுப்பது போல் பாவனை செய்வார்.
சபாஷ் மீனா ”காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலம் தானோ”
”மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையின் பொன்வண்ணம் கண்டான்”
இந்தப் பாடல் காட்சியை பார்க்கும்போது,
அவர் வாயசைக்கும் நேர்த்தி பற்றி
சொல்ல வார்த்தைகளே கிடையாது.
கைத்துப்பாக்கியை சுடுவதற்குத் தானே
யாரும் பயன்படுத்த முடியும்.
எந்த நடிகனும் எத்தனை ஸ்டைலாக துப்பாக்கியைப்பிடித்தாலும் நோக்கம் சுடுவதாகத்தானே இருக்கும்.
ஆனால் ஆவேசமாக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்து,
பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டு,
சுட வந்த கைத்துப்பாக்கி கொண்டு,
கண்ணீரை துடைக்க முற்பட்ட ஒரே நடிகன்
இந்த உலகத்திலேயே சிவாஜி கணேசன்
ஒருவர் மட்டுமே! என்ன ஒரு கவிதாப்பூர்வம்!
”காதலிக்கிறேன் என்றாள். பின் கல்யாண தேதி நிர்ணயித்தாள்.அதன் பின் காத்திருக்கிறேன் உங்களுக்காக என்று கை தேர்ந்த நாடகமாடினாள்.முடிவில் வாக்குத்தவறி விட்டாள்.வந்த வழியே செல்லுங்கள் என்றாள்.நடக்காது நம் கல்யாணம் என்று கூறி விட்டாள். கடைசியாகச் சென்று பார்த்தால் கல்நெஞ்சக்காரி கண்ணுறங்குகிறாள்!நம்பிக்கைக்கு துரோகமா? கல்யாணம் என்று மோசமா? கடைசியில் கண்ணுறக்கமா? ”ஆவேசமான கணேசனின் கணீர் என்ற குரல்...
இடி.. ..மின்னல். இடி.. மின்னல்.
’ ராதா, ராதா, ராதா’என்ற கதறல்.
தொடர்ந்து டி.எம்.எஸ் பாடல்
’உன்னைச்சொல்லி குற்றமில்லை
என்னைச்சொல்லி குற்றமில்லை!
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
மயங்கவைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி’
இன்றைக்கு 'அடிடா அவளை!ஒதடா அவளை!...
why this கொலவெறி.....
என்று வந்த காட்சிகளுக்கெல்லாம்
மூலம் இந்த ’குலமகள் ராதை’ தானே.
ஒரே நேரத்தில் உடலின் அத்தனை அங்கங்களையும் இயக்கி நடிக்கவைத்த கலைக்குரிசில் கணேசன்.
’ஐயா பாரதி... போய்விட்டாயா’ என்று
கலங்கிய கப்பலோட்டிய தமிழன்.
’நான் எங்க போவேன்..எனக்கு யாரைத்தெரியும்..மாமா நிசமாவே போவச்சொல்றீங்களா மாமா’
என்று தேம்பிய வெகுளி ரங்கன்.
’கண்ணில் தெரியும் வண்ணப்பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’ - தவித்த பலே பாண்டியா
’சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்’
என்ற வரிகளுக்கு
முகத்தின் குளோஸ் அப் மூலம்
அர்த்தம் சொன்ன கலை மேதை.
’நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா,
சட்டி சுட்டதடா கை விட்டதடா’
’நவராத்திரி’ நவரச நாயகன்.
’புதிய பறவை’ ஜென்டில்மேன்.
ஸ்டைலாக சிகரெட் குடிப்பதில் எவ்வளவு வகைபாடு காட்டலாம்?’சாந்தி’ படத்தில்
-”யார் அந்த நிலவு, ஏனிந்த கனவு”
சிவாஜி மட்டும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் திருவிளையாடல் தருமி பாத்திரத்தில் நாகேஷ் தூள் கிளப்பி கலக்கியிருக்கமுடிந்திருக்குமா??
’நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் அரிதாரம் பூசாமலே ‘முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ நெஞ்சம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை’ என்ற நெகிழ்ச்சி.
ரிலாக்ஸ்டாக கலாய்த்த ’கலாட்டா கல்யாணம்’
’மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்’
உயர்ந்த மனிதன் அவருக்கு 125 வது படம்.
124 படங்களுக்குப்பிறகு
புதிதான ஒரு பாத்திரத்தை எப்படி சித்தரிக்க முடிந்தது என்பதில் இருக்கிறது
கணேசனின் சாதனை வீச்சு.
சுருக்கமாக ’செல்லும்’ இந்த வார்த்தைகளோடு கணேசன் நடித்த படங்களின் அத்தனைக்காட்சிகளும்
முழுமையாக விரிகிற அதிசயம் நிகழ்கிறது.
கிருஷ்ணன் பஞ்சு, எல்.வி.பிரசாத், பி.ஆர்.பந்துலு, பீம்சிங், ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், கே.எஸ்.ஜி, ஏ.சி.திருலோக்சந்தர் போன்ற இயக்குனர்களின் படைப்புகளில் விதவிதமான அவதாரங்கள்
எடுத்த மகத்தான கலைஞன்.
1960களில் மேக்கப் இல்லாமல்
வேட்டி சட்டை போட்டு
நெற்றியில் விபூதி குங்குமம் இட்டு
பொது நிகழ்வுக்கு வரும்போது முகவசீகரம்.
அந்த ஸ்பெஷல் கண்கள்! அந்த ஸ்பெஷல் மூக்கு!
அந்த அடர்ந்த இயற்கையான கேசம்!
70 வயதில் கொஞ்ச காலம் குடுமி கூட வைத்துக்கொண்டிருந்தார்!
ஃபுல் சூட் கனகச்சிதமாக பொருந்திய கணவான் கணேசன்.
ஒரு கதாநாயகன் அந்தக்காலத்தில் நினைத்தே பார்க்க விரும்பாத ‘அந்த நாள்’தேசத்துரோகி.
’பார் மகளே பார்’ வரட்டு கௌரவ,
அகங்கார, பணத்திமிர்.
நண்பனையே கொல்லத்துணியும்
’ஆலயமணி’ பொறாமை.
இமேஜ் பற்றிய பிரக்ஞை கிஞ்சித்தும் இல்லாத ஒரே ஹீரோ நடிகர்.
ராமன் எத்தனை ராமனடி படத்தில் மாஸ்டர் பிரபாகர் நடிகர் திலகத்தைப் பார்த்து ’டே சாப்பாட்டுராமா’ என்பான்.
ராஜராஜ சோழன் படத்தை விட்டுத்தள்ளிவிடலாம்.
ஆனால் அப்படத்தில் டி.ஆர் மகாலிங்கம்
இவர் வீசும் வார்த்தைகளை எடுத்துப்பாடும் காட்சி.
’தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்
அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள்.
தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள்
தரணியெல்லாம் புகழ் மணக்க தாயென வந்தாள்
மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும்
திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்
அணிமுத்து மாலை எட்டுத்தொகையாகும்
அவன் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும்
புலவரெல்லாம் எழுதி வைத்த இலக்கியங்கள்
பொன்மேனி அலங்கார சீதனங்கள்....’
’ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல’ தங்கபதக்கம் சௌத்ரி.
அவருடைய 24 வயதில் ஆரம்பித்து கடைசி வரை, முதுமை வியாதிகள் அவரை சித்திரவதை செய்த போதும் சிவாஜி கணேசன் ஷூட்டிங் என்றால் சம்பந்தப்பட்ட யூனிட் ஆட்கள் பதறி அடித்துக்கொண்டு காலை ஆறு மணிக்கே தயாராக வேண்டும்.
முழு மேக்கப்புடன் ரெடியாக ஸ்பாட்டில்
‘என்னடா, உங்களுக்கு இன்னும் விடியலயா?’ என்று குறும்பு பேசும் சிங்கத்தமிழன்
சிவாஜி கணேசன்.
நேரில் சந்திக்கிற மனிதர்களை
தன் கதாபாத்திரங்களுக்கு பிரதிபலிப்பார்.
’ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு பாடலில் கடைசி ஸ்டான்சாவில் கிருபானந்த வாரியார் (இந்தப் பாடலில் அவருடைய நடை மற்றொரு விஷேசம்) ..கடலை சாப்பிடுகிற அழகு.
திருவருட்செல்வர் ‘அப்பர்’ பாத்திரத்திற்கு
காஞ்சி பரமாச்சாரியாள்
'காவல் தெய்வம்' பட கௌரவ வேடத்திற்கு
மதுரை செண்ட்ரல் தியேட்டர் கண்ணாயிரம்
தங்கப்பதக்கம் சௌத்ரி பாத்திரத்திற்கு
வால்டர் தேவாரம்
வியட்நாம் வீடு சுந்தரம் சொல்கிறார்:’பிரிஸ்டிஜ் பத்பனாய்யர் பாத்திரத்திற்கு
இந்தியா சிமெண்ட் நாராயணசாமி.
’கௌரவம்’பாரிஸ்டர் ரஜினிகாந்த் தோற்றத்திற்கு டி.எஸ் கிருஷ்ணா( டி.வி.எஸ்).
பாரிஸ்டர் பேசும் பாணி பிரபல வக்கீல்
கோவிந்த் சுவாமிநாதன்’
1994ல் ஜெமினியோடு நான்
ஒரு சில மணி நேரம் இருந்த போது-
டி.வி யில் ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன்
பென்சில் சீவும் காட்சி-
அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே
மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன்
என்னை விட எட்டு வயசு
இளையவன் தான்...
ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”
சிவாஜி கணேசன் மரணம் நிகழ்ந்த போது செத்த உடலைப் பார்த்த பிரபலங்கள்,பொதுமக்கள் பெரும்பாலும் வாய் விட்டுப் பேசினார்கள்.
“ அய்யா நீ தானே பிறவிக்கலைஞன்!”
”உனக்குமா சாவு” “
உன் சாதனை இனி எவனாலும் முடியாது”
உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்போது கூட மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகன் ஆவேசத்துடன் ”இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா” என்று ரஜினிகாந்த், வடிவேலுவைப் பார்த்து கத்தினானே.
(சிவாஜி சிலை திறப்பு விழாவில் ரஜினி
இதை சொன்னார்)
........