Share

May 14, 2020

காருக்குறிச்சி அருணாசலம் மரணம் நிகழ்ந்த விதம்

காருக்குறிச்சிக்கு ஆருடக்குறிப்பு மூலம்
நேரம் சரியில்லை என தெரிந்ததால்
சில நாட்களுக்கு முன்பு திருநள்ளாறு
சென்று விட்டு வந்திருக்கிறார்.
மதுரையில் மெடிக்கல் செக் அப் செய்த பின் டயட் கன்ட்ரோல். இரவில் கோதுமை கஞ்சி.
அன்று ஞாயிற்றுக்கிழமை.
காருக்குறிச்சி அருணாசலம் கோவில்பட்டி பங்களாவில் மதிய உணவு சாப்பிடுகிறார்.
அவருடைய முதல் மனைவி ராமலட்சுமி தான் வீட்டின் பட்டத்தரசி.
தன்னுடைய ஓரகத்திகளின் பன்னிரெண்டு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியவர். சமையல் பக்குவத்திலிருந்து கணவருக்கு
முகம் கோணாமல் பறிமாறுவது வரை
பார்த்து பார்த்து செய்பவர்.
சாப்பிட்டு முடித்தவுடன் திருநெல்வேலி கிளம்புகிறார்.
அங்கே ஒரு கச்சேரி. அது முடிந்தவுடன்
கலெக்டரை சந்திக்க வேண்டியிருக்கிறது.
காருக்குறிச்சி 'நாதஸ்வரம் குரு குலம்' நடத்தும் திட்டம் வைத்திருந்தார்.
அதற்கு திருநெல்வேலி கலெக்டர் நிலம் கடலையூர் சாலையில் ஒதுக்கித்தர இசைந்திருந்தார்.
அவரையும் சந்திக்க வேண்டும்.
கச்சேரி முடித்து விட்டு கலெக்டரை சந்திக்கிறார்.
இரவு ஏழு மணி. பேசுக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்திருக்கிறார்.
திருநெல்வேலி ஹை கிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார்.
அவருடன் உப நாயனம் வாசிப்பவர், அவர் பெயரும் அருணாசலம் தான். அந்த அருணாசலம் உடனேயே கோவில்பட்டி வருகிறார்.
அப்போது அவருடைய மனைவியர், புத்திரங்கள் அனைவரும் தியேட்டரில் 'அல்லி' படம் பார்த்து விட்டு அப்போது தான் வீடு திரும்பியிருக்கிறார்கள்.
உப நாயனம் அருணாசலம் தகவல் சொல்கிறார்.
குடும்பம் திருநெல்வேலி பயணம்.
மறு நாள் காருக்குறிச்சிக்கு நினைவு திரும்பி
கண் விழித்து பார்த்த போது துயரத்துடன்
வாய் விட்டு சொல்லியிருக்கிறார்.
"எனக்கு இப்படி ஆயிடுச்சே. நான் புள்ளக்குட்டிக்காரன்"
சுற்றிலும் மனைவியரும் குழந்தைகளும்.
மீண்டும் நினைவு மறந்த நிலை.
அந்த திங்கள்கிழமை, அடுத்த நாள் செவ்வாய் கிழமை இரண்டு நாளும் சுயநினைவு
இல்லாமல் தான் படுக்கையில்.
ஆனால் மறக்கவே முடியாத படி
ஒரு பவித்ர நிகழ்வு.
அவ்வப்போது அவர் வாய் ஸ்வரங்களை முணுமுணுக்கிறது.
கைகள் நாதஸ்வரம் வாசிக்கிற பாவனையில் இயங்குகின்றன.
செவ்வாய் கிழமை அவர் மரணமடைந்து விட்டார்.
Medical report - 'Diabetic Coma.
கோவில்பட்டி கடலையூர் சாலையில் கலெக்டர் கொடுத்த நிலத்திலேயே
காருக்குறிச்சி அருணாசலம் சமாதி.
கோவில்பட்டியில் காருக்குறிச்சி சிலை அமைக்க 
நிதி உதவி ஜெமினி கணேசன் - சாவித்திரி.
திருநெல்வேலி கலெக்டர் எம்.எம்.ராஜேந்திரன் தலைமையில்
ஜெமினி கணேசன் தான் சிலையை திறந்து வைத்திருக்கிறார்.
பின்னாளில் தமிழக தலைமை செயலராக உயர்ந்து,
ஒரிசா மாநில கவர்னர் பதவியும் வகித்த பெருந்தகை எம். எம். ராஜேந்திரன் அவர்கள்.  

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.