Share

Nov 30, 2018

Aesthetic and artistic panorama


’முதியோர் இல்லத்துக்கு முன்புறம் வாகனங்கள் தடை செய்யப்பட்டிருந்த சிறிய சதுக்கத்தில் குழந்தைகளின் கூட்டம் ஒன்று விளையாடிக்கொண்டிருக்கிறது.
மொத்தம் ஆறு குழந்தைகள், எல்லாம் சீனக்குழந்தைகள்..
இந்தக்குழந்தைகளின் வயது ஐந்து முதல் பன்னிரெண்டு வரை. கீறல் போன்ற கண்கள், பாதி நெற்றி வரை நேர்கோடாக வெட்டப்பட்ட கருகருவென்ற முடி. பெரியவர்கள், அதாவது இவர்களில் மூத்த ஐந்து பேரும் சைக்கிள் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதாவது ஐந்து பேருக்கும் சேர்த்து ஒரு சைக்கிள். ஆனால் சைக்கிளில் ஒரே சமயத்தில் மூன்று பேர் மட்டும் போகலாம், மற்ற இருவரும் பக்கத்தில் ஓடி வருவார்கள், பிறகு உடனே மாறிக்கொள்வார்கள். அந்தக் கடைசிக் குட்டிப் பையன் மட்டும் தனியாக விடப்பட்டு இருப்பான். இவன் சைக்கிளின் மேல் ஏறுவதும் இல்லை, அதன் பக்கத்தில் கூடவே ஓடுவதும் இல்லை. என்ன பயன்?’
வெ.ஸ்ரீராம் பிரஞ்சு மொழியில் இருந்து நேரடியாக தமிழில் மொழி பெயர்த்துள்ள ”சின்ன சின்ன வாக்கியங்கள்’ என்ற நாவல் பெண் எழுத்தாளர் பியரெத் ஃப்லுசியோ எழுதியிருக்கிறார்.
இந்த நாவல் இன்னும் ஆங்கிலத்தில் கூட மொழிபெயர்க்கப்படவில்லை என தெரிகிறது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அற்புதமான பிரஞ்சு படைப்புகளை நேரடியாக தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார் வெ.ஸ்ரீராம்.

க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கிறார். நாவலின் 101ம் பக்கத்தில் மேற்கண்ட காட்சியின்பம்.

Perfection, thy name is Crea Ramakrishnan!
நாற்பத்தைந்து ஆண்டுகளாக இருக்கலாம் என நினைக்கிறேன். பதிப்புத்துறையில்   க்ரியா ராமகிருஷ்ணனின் தனித்துவ மிக்க சாதனை உயர்ந்த அளவில் கௌரவிக்கப்படவேண்டியது அவசியம்.







Nov 29, 2018

நெகிழ்ச்சியான புத்தக சமர்ப்பணம் ஒன்று



”லே ஒன் வெர்த்திற்கு

இந்தப் புத்தகத்தைப் பெரியவர் ஒருவருக்குச் சமர்ப்பித்ததற்காக நான் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
இதற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு: இந்தப் பெரியவர் தான் உலகத்திலேயே எனக்குக் கிடைத்த சிறந்த நண்பர்.
மற்றொரு காரணமும் உண்டு: இந்தப் பெரியவர் எல்லாவற்றையும் புரிந்துகொள்வார், குழந்தைகளின் புத்தகங்களைக்கூட.
மூன்றாவது காரணம்: இவரோ பிரான்ஸ் நாட்டில் இப்போது பசியிலும் குளிரிலும் வசிப்பவர். இவருக்கு உண்மையான ஆறுதல் தேவை.
இந்தக் காரணங்கள் எவையுமே போதவில்லை என்றால் இந்தப் புத்தகத்தை ஒரு காலத்தில் குழந்தையாக இருந்த இந்தப் பெரியவருக்குச் சமர்ப்பிக்கச் சம்மதிக்கிறேன். பெரியவர்கள் எல்லாருமே முதலில் குழந்தைகளாக இருந்தவர்கள் தான் (ஆனால் சிலருக்கு மட்டுமே இது நினைவிருக்கும்).
ஆகவே என் சமர்ப்பணத்தைத் திருத்தி அமைக்கிறேன்:
லேஒன் வெர்த்திற்கு
அவர் சிறு பையனாக இருந்தபோது.”
புத்தகத்தை யாருக்காவது சமர்ப்பணம் செய்வது எல்லாருக்கும் வழக்கம். 1981ல் க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்ட குட்டி இளவரசன். பிரஞ்சு மொழியிருந்து வெ.ஸ்ரீராமும் மதன கல்யாணியும் நேரடியாக தமிழுக்கு மொழி பெயர்த்திருந்தார்கள்.
இதை வாங்கி அப்போது முதல் ஒரு பத்து முறையாவது படித்திருப்பேன். அந்த குட்டி இளவரசன் புத்தகத்தை ஆசிரியர் அந்த்வான் து செந்த் – எக்சுபெரி லெஒன் வெர்த் என்ற அவருடைய நண்பருக்கு எவ்வளவு அற்புதமாக சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

இன்று படிக்கும்போது கூட கண் கலங்குவதை தவிர்க்கவே முடியவில்லை. ஒவ்வொரு வரியுமே தான் எவ்வளவு கனமாக இருக்கிறது. ஒரு வரியில் இருந்து அடுத்த வரிக்கு சுலபமாக போக முடிவதில்லை.
Eyes are blind. You have to look with heart. Anything essential is invisible to the eyes.
Only the children know what they are looking for.
அந்த்வான் து செந்த்- எக்சுபரியின் நாவல் ’காற்று, மணல், நட்சத்திரங்கள்’ இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். க்ரியா வெளியீடு. வெ.ஸ்ரீராம் மொழிபெயர்ப்பு. இரண்டு செவாலியெ விருது பெற்றிருக்கிறார்.

ஒரு செவாலியே விருது நெப்போலியன் காலத்திலிருந்து தரப்படுவது. கல்வித்துறை சம்பந்தப்பட்டது. ஸ்ரீராமின் பிரஞ்சு நாலட்ஜுக்காக தரப்பட்டது.
இன்னொரு செவாலியே விருது 1950 தொடங்கி தரப்பட்டு வருகிறது. கலை இலக்கியத்துறை சாதனையாளர்களுக்கு கௌரவம். சிவாஜி கணேசன், பாலமுரளிக்கு கொடுக்கப்பட்ட இந்த விருதும் ஸ்ரீராம் சாருக்கு கிடைத்தது.
ஆஹா.. இந்த ’காற்று, மணல், நட்சத்திரங்கள்’ புத்தக வாசிப்பு எனும் சுகானுபவம் பற்றி எப்படி சொல்வது? ’சுகி எவ்வரோ’ என்ற தியாகப்பிரும்மத்தின் கானடா ராக பாடல் தான் நினைவு வருகிறது. Wind, Sand and Stars.
அந்த்வான் ஒரு பைலட். இவருடைய ஆகாய பயணங்கள் பற்றியது தான் இந்த நாவல். இவர் பைலட்டாக இருக்கும்போது இரு பெரு விபத்துக்களை எதிர் கொண்டு மீண்ட சாகசத்தை தான் எழுதிச்சென்றிருக்கிறார். அந்தக்கால விமானங்களை இயக்குவதில் இருந்த கடும் அதிர்ச்சிகரமான துயர சவால்கள். பாலைவனத்தொடுவானத்தில் மரணதை எதிர்நோக்கி இருப்பவரின் மனக்கிலேசம், யாரும் செவி மடுக்காத பிரார்த்தனை.
Man finds his supreme joy in adventure and creative action.
இந்த நாவல் தான் குட்டி இளவரசன் படைப்புக்கு ஊற்றுக்கண்.
அந்த்வான் வாழ்வு விமான பயணத்தில் தான் கடைசியில் முடிந்தது. அவர் சென்ற விமானம் என்ன ஆயிற்று என்றே கண்டு பிடிக்கமுடியவில்லை. மறைந்தே போனார்.
Nothing in truth, can ever replace a lost companion. Old comrades cannot be manufactured.
ஐம்பதாம் ஆண்டு நினைவு நாளை கௌரவைக்கும் விதமாக பிரஞ்சு அரசு ஐம்பது ஃப்ராங்க் நோட்டில் அவருடைய உருவப்படம், குட்டி இளவரசன் காட்சிகள் சிலவற்றுடன் வெளியிட்டது.

Nov 26, 2018

அது மனிதருக்கு தோழனடி


பேச்சு வழக்கில் ’நாய் மாதிரி ஒழைச்சேன்’ என்பதற்கு கவுண்டமணி காண்டு ஆகி சொன்னது “ நாய் எங்கடா ஒழச்சது. எப்பயும் கொலச்சது, கடிச்சது, இன்னும் எவ்வளவு காலம்டா நாய் மாதிரி ஒழைச்சேன்னு சொல்வீங்க”
ஒரு நாடகத்தில் நாயை பார்த்து நாகேஷ் பதற்றமாவார். பிரமீளா “ நாய் பாவம் சார், வாயில்லா ஜீவன்” எனும் போது நாகேஷ் பயந்து நடுங்கி சொல்வது “ வாயில்லா ஜீவன். ஆனா கடிக்கும், குதறும்.”


1. சென்னை காவேரி ஹாஸ்பிடலில்
பணியாற்றும் என் நண்பர் டாக்டர் ராஜாவின் நாய் கவிதை கீழே:

’எவரேனும் விரட்டியிருக்கலாம்
படியேறி நடக்கையில்
பாய்ந்து வருகிறது அந்த நாய்
வெல மீன் வருவலை
மதியம் உண்டிருந்தாலும்
மனதளவில் நான் விஜிடேரியன்
என்பதை நாயின் மோப்ப சக்தி அறியுமா?
நாலு கால் பாய்ச்சலில் குதிரை ஒன்று கிளம்ப
சுவரொட்டி நடுங்குகிறது
ஓர் பல்லி
நெருங்கி வருகையில்
ஒதுங்கிச் சென்று
தெறித்தோடியதைக்கண்டு
சிரிப்பு வந்து விட்டது எனக்கு
நாயும் சிரித்திருக்குமா என்பதை நானறியேன் பராபரமே’


2. ஆனந்த் கவிதை
நாய்
நாயைப் பார்த்தேன்
பயம் வந்தது.

நான்கு கால்கள்
வளைந்த ஒரு வால்
நான்கு கோரைப்பற்கள்
எச்சில் வழிய
துடித்துத் தொங்கும்
நீண்ட நாக்கு
அனைத்தும் இருந்தது

பயத்துக்கு.


Nov 23, 2018

ரெண்டு கால் ஓநாய்


புதுமைப்பித்தன் சொல் திறன்.

மனித ஜென்மத்தை குறிப்பிடும்போது சுருக்கமாக ’இந்த இரண்டு கால் ஓநாய்’ என்பார்.
 
(ஜி.நாகராஜனின் நம்பிக்கையில்லா தீர்மானம் – மனுசன் மகத்தான சல்லிப்பயல்.)
தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி எனும் ரெண்டு கால் ஓநாயாக வரும் நாகேஷ் ஆசுவாசம்
“ அப்பாடா, மைனர் போயிட்டாரேன்னு பக்குன்னு ஆயிடுச்சு, மிட்டாதார் கெடச்சவுன்னே ஜில்லுன்னு ஆயிடுச்சு.”
மகாராஜா நம்பியாரை பார்த்து விட்டு நாகேஷ்
“பெரிய தலப்பாவா கிடச்சிருக்கான்”

வைத்தி கேரக்டர் நாகேஷின் நகாசு வேலையில் நேர்த்தியாக நெய்யப்பட்டிருந்தது. Vaithi planned ruthlessly to cope with his clumsy world.
(மாமாக்காரப்பயன்னு போட்டு உடைச்சிற வேண்டியது தானேய்யா)
எச்சிக்கலை வைத்தி கேரக்டர் பற்றி விளக்கமா சொல்ல கொஞ்சம் கடுமை காட்ட வேண்டும். கழுதை பொச்சுல வடியிற தேன கூட நக்குறவன் தான் தில்லானா மோகனாம்பாள் வைத்தி.
                                                   காலேஜில படிக்கிற காலத்தில ஒரு ரெண்டு கால் ஓநாய் கூடப்படிக்கிறவர்களை பேர சொல்லி கூப்பிடவே மாட்டான். திறம்பாக ’டேய், டையப்பா’ என்றே கூப்பிடுவான். நண்பர்கள் மனசு ’புண்’படக்கூடாதே என்ற காருண்யம் காரணமாக டையப்பாவுக்கு முன்னால் உள்ள ’புண்’ணை நீக்கி விட்டு கண்ணியமாக சத்தமிடுவான் “டேய், ஒன்னத்தாண்டா டேய், டையப்பா”.

http://rprajanayahem.blogspot.com/2018/03/blog-post_26.html







......

Nov 22, 2018

18th November status in facebook and the 22nd result


18thNovember  status in face book


1. A good newspaper is never nearly good enough
Times of India
2000 K.G 'unwholesome' meat seized.
Some of the meat didn't have legs but had long tails. It may have been 'dressed up' to avoid being identified as that of a Specific Animal.
நாசூக்கு
2. A lousy news paper is a joy for ever
இதே செய்தி தினத்தந்தி பேப்பரில்
2190 கிலோ "நாய்" இறைச்சி பறிமுதல்.
நாய்சூக்கு
Once a newspaper touches a story, the facts are lost.
- Norman Mailer


18ம்தேதி இரண்டு பத்திரிக்கைகளில் வந்த செய்தி ஒன்றை சுட்டிக்காட்டி நான் ஃபேஸ்புக்கில் எழுதியது தான் மேற்கண்ட விஷயம்.


இன்று 22ம் தேதி “நாய்கறி அல்ல, ஆட்டுக்கறி தான்” என்று சென்னை கால்நடை பல்கலைக்கழகம் ஆய்வு செய்து தெரிவித்திருக்கிறது.

Doctored, Motivated news.




Nov 9, 2018

Woollen Elephant


என்னுடைய எழுத்தில் ஞாபக சக்தி பற்றி ரொம்ப ரொம்ப பேர் சிலாக்கியமாக சொல்வதுண்டு. எப்படி இது சாத்தியம் என்று பிரமிப்பதை அடிக்கடி கேட்டு விட்டேன். ”குறிப்பு எடுத்துக் கொள்வீர்களா?”
மையமாக ஒரு புன்னகை தான் என் பதில்.
பியரெத் ஃப்லுசியோ (Pierrette Fleutiaux) என்ற பெண் எழுத்தாளர் எழுதிய பிரஞ்சு நாவலை நேரடியாக தமிழுக்கு வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்திருக்கிறார்.  ’சின்ன சின்ன வாக்கியங்கள்’. க்ரியா வெளியீடு. அதை இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன்.Short sentences.
“ எழுத்தாளர் ஒருவர் எதிர் கொள்ளும் கேள்விகளில் அடிக்கடி இடம் பெறுவது இந்த கேள்வி: ‘ நீங்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்வீர்களா?’ என்னுடைய பதில்: இல்லை, மனதில் ஒன்று தங்கவில்லையென்றால் அது முக்கியமானதில்லை என்று பொருள்.” நாவலின் 96ம் பக்கத்தில் பியரெத் ஃப்லுசியோ இப்படி சொல்கிறார்.
ரொம்ப பால்யத்தில், பள்ளிக்காலத்தில், கல்லூரி காலத்தில் அதன் பிறகும் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக பழகியவர்களைப் பற்றிக்கூட அவர்கள் பேசிய விஷயங்கள் பற்றி நான் சொல்லும்போது எப்போதும் பிரமித்துப் போய் கேட்பார்கள். ’இதையெல்லாம் எப்படி ஞாபகம் வைத்திருக்கிறாய்?’
தாமரையிலைத் தண்ணீராய் ஒரு விலக்கம் என்னிடம் இருந்த போதிலும் நான் பழகிய எல்லாருக்கும் முக்கியத்துவம் கொடுப்பவன். அதனால் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் மறக்காமல் சொல்ல முடிகிறது.
பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் போது ஒரு இளம் ஆசிரியர் புதிதாக பள்ளியில் வேலைக்கு சேர்ந்தவர் எங்கள் வகுப்புக்கு தான் முதன்முதலாக பாடம் எடுத்தார். அன்று அவர் பதற்றத்துடன் இதை சொன்னார்.
நான் அவரை 20 வருடங்கள் கழித்து திருச்சி தெப்பக்குளத்தில் சந்தித்த போது முதன் முதலாக ஆசிரியராக அவருடைய
maiden attempt எங்கள் வகுப்பில் தான் என நினைவு கூர்ந்தேன். புருவத்தை உயர்த்தினார். அது மட்டுமல்ல. அந்த முதல் நாள் அவர் ரோஸ் கலர் சர்ட், க்ரீன் கலர் பேண்ட் அணிந்திருந்ததையும் சொன்னேன். ஆச்சரியத்தில் மூழ்கி விட்டாரென்று சொல்லத்தேவையில்லை.
எனக்கே தெரிகிறது. எனக்கு ஞாபகத்தில் உள்ள விஷயஙகள் போல வேறு யாருக்குமே ஞாபகப்படுத்திக்கொள்வது அசாத்தியம்.
Memory is my fate. I’m sick of many griefs.

நான் அறியாத, அபூர்வ விஷயம் பற்றி அறிய வரும்போது இப்போது குறிப்பு எடுக்கிறேன். ஆனால் எழுதுவதற்காக எந்த குறிப்பையும் பயன்படுத்தியதில்லை.
என்னுடைய ப்ளாக்கில் 1166 பதிவுகள் இன்று வாசிக்கப்பட்டு இருபது லட்சம் ஹிட். 
Everything which exalts life adds at the same time to it’s absurditity – Albert Camus.
இந்த பதிவு 1167 வது பதிவு.
இடாலோ கால்வினோ
‘ love far from home’ சிறுகதையில் சொல்வது போல எல்லா கிறுக்கல்களும் சேர்ந்து ஒரு பிரம்மாண்டமான ’Woollen Elephant’ ஆக மாறியிருக்கிறது.
கம்பளி யானையாய்  என் எழுத்து? Catharsis.
பிக்காஸோவின் ஓவியங்கள் அவனுடைய உன்மத்தத்திற்கேயான Therapy.


Nov 3, 2018

அண்டங்காக்காய தேடி போகணும்


ஒரு கல்லின் மேல் உட்கார்ந்திருந்த பச்சோந்தி தலையைத் தூக்கி, தூக்கி பார்த்துக்கொண்டிருந்தது. அதனை உற்றுப்பார்த்த டால்ஸ்டாய் அதனிடம் சத்தமாக சொன்னாராம் “ஆமாம், நானும் சோகமாக துயர மனநிலையில் தான் இருக்கிறேன்.”
பச்சோந்தி எப்போதும் மரங்களில் தான் மகிழ்ச்சியுடன் இருக்கும். கல்லின் மேல் இருப்பதென்பது  ’ஸ்தான சலனம், கௌரவ பங்கம்’. துக்கமாகத் தானே கல்லில் பச்சோந்தி இருக்க முடியும்.
ஒரு அரபு பழமொழி. “ A Chameleon does not leave one tree until he is sure of another.”
பிரமிள் ஞாபகம் வருகிறது. அவருடைய அருமை தெரிந்தவர்கள் எப்போதும் தங்கள் வீட்டிற்கு சந்தோஷமாக அழைப்பார்கள். அவரும் போவார். ஒரு மாதம், ரெண்டு மாதம், அதற்கு மேலும் கூட தங்குவார். பொதுவாக சண்டை போட்டு விட்டு தான் கிளம்புவார். ஆனால் ஒன்று. அடுத்து அவருக்கான ஒரு தங்குமிடம் பற்றி தெளிவாக உறுதியான பின் தான் இந்த வீட்டில் சண்டை போட்டு விட்டு கிளம்புவார். முத்துசாமிக்கும் எனக்கும் கூட பிரமிள் நண்பர் தான்.
என் வீட்டில் ஃப்ரன்ச் விண்டோவை ஒட்டி நிற்கும் பாதாம் மரம். அதில் இரண்டு அண்டங்காக்காய்கள் கிளையில் அமர்ந்திருக்கின்றன.
கூத்துப்பட்டறையில் ஊஞ்சலில் அமர்ந்து நான் முத்துசாமி சாருடன் பேசிக்கொண்டிருக்கும் போது மரங்களை அவருடைய கண்கள் துலாவிய பின் வானத்தை வெறித்து பார்த்து விட்டு அமைந்த குரலில் சொல்வார். “அண்டங்காக்காய தேடி போகணும்” ’அண்டங்காக்காய்கள் ஏன் காணப்படவில்லை’ என்பார். இப்படி ஒரு தடவை இரு தடவையல்ல. பல முறை சொல்லியிருக்கிறார்.

அவை என் வீட்டில் இப்போது தென்படுகின்றன. நான் உரத்த குரலில் இன்று காலை சொன்னேன்.

“அடப்பாவிகளா, முத்துசாமி உங்களை தேடிக்கொண்டிருந்தார் தெரியுமா?”

அந்த அண்டங்காக்காய்கள் என்னை கவலையோடு பார்த்தன. அதற்கு அர்த்தம் ”இனி என்ன செய்ய?    ஒரு நாள் முத்துசாமி வீட்டு முன் போய் நின்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தோம். எப்போதும், எல்லோரும் இங்கேயே இருப்போம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது எவ்வளவு தவறு.”

நான் ”அட ஆண்டாளே, தேடுறார்னு தெரிஞ்சே தான் கண்ணாமூச்சி விளையாடுனீங்களா?”

Listen to the tree, animals, birds and the reptiles. They talk.

( என் வீட்டு பாதாம் மர அண்டங்காக்காய்கள் இரண்டை மூத்த மகன் கீர்த்தி
படம் பிடித்தான்.)

"என் நினைவில் பதிந்த முதல் மரம் பாதாம் மரம். நான் படித்த எலிமெண்டரி ஸ்கூலில் ஒரு வாதா மரம் இருந்தது. பாதாம் பருப்பு கிடைக்குமோன்னு உடைச்சி,உடைச்சி பார்ப்போம். பெரிசா ஒன்னும் இருக்காது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் மரம்” இப்படி ந.முத்துசாமி என்னிடம் சொல்லியிருக்கிறார்.