ஒரு கல்லின் மேல் உட்கார்ந்திருந்த பச்சோந்தி தலையைத் தூக்கி, தூக்கி பார்த்துக்கொண்டிருந்தது. அதனை உற்றுப்பார்த்த டால்ஸ்டாய் அதனிடம் சத்தமாக சொன்னாராம் “ஆமாம், நானும் சோகமாக துயர மனநிலையில் தான் இருக்கிறேன்.”
பச்சோந்தி எப்போதும் மரங்களில் தான் மகிழ்ச்சியுடன் இருக்கும். கல்லின் மேல் இருப்பதென்பது ’ஸ்தான சலனம், கௌரவ பங்கம்’. துக்கமாகத் தானே கல்லில் பச்சோந்தி இருக்க முடியும்.
ஒரு அரபு பழமொழி. “ A Chameleon does not leave one tree until he is sure of another.”
பிரமிள் ஞாபகம் வருகிறது. அவருடைய அருமை தெரிந்தவர்கள் எப்போதும் தங்கள் வீட்டிற்கு சந்தோஷமாக அழைப்பார்கள். அவரும் போவார். ஒரு மாதம், ரெண்டு மாதம், அதற்கு மேலும் கூட தங்குவார். பொதுவாக சண்டை போட்டு விட்டு தான் கிளம்புவார். ஆனால் ஒன்று. அடுத்து அவருக்கான ஒரு தங்குமிடம் பற்றி தெளிவாக உறுதியான பின் தான் இந்த வீட்டில் சண்டை போட்டு விட்டு கிளம்புவார். முத்துசாமிக்கும் எனக்கும் கூட பிரமிள் நண்பர் தான்.
என் வீட்டில் ஃப்ரன்ச் விண்டோவை ஒட்டி நிற்கும் பாதாம் மரம். அதில் இரண்டு அண்டங்காக்காய்கள் கிளையில் அமர்ந்திருக்கின்றன.
கூத்துப்பட்டறையில் ஊஞ்சலில் அமர்ந்து நான் முத்துசாமி சாருடன் பேசிக்கொண்டிருக்கும் போது மரங்களை அவருடைய கண்கள் துலாவிய பின் வானத்தை வெறித்து பார்த்து விட்டு அமைந்த குரலில் சொல்வார். “அண்டங்காக்காய தேடி போகணும்” ’அண்டங்காக்காய்கள் ஏன் காணப்படவில்லை’ என்பார். இப்படி ஒரு தடவை இரு தடவையல்ல. பல முறை சொல்லியிருக்கிறார்.
அவை என் வீட்டில் இப்போது தென்படுகின்றன. நான் உரத்த குரலில் இன்று காலை சொன்னேன்.
“அடப்பாவிகளா, முத்துசாமி உங்களை தேடிக்கொண்டிருந்தார் தெரியுமா?”
“அடப்பாவிகளா, முத்துசாமி உங்களை தேடிக்கொண்டிருந்தார் தெரியுமா?”
அந்த அண்டங்காக்காய்கள் என்னை கவலையோடு பார்த்தன. அதற்கு அர்த்தம் ”இனி என்ன செய்ய? ஒரு நாள் முத்துசாமி வீட்டு முன் போய் நின்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தோம். எப்போதும், எல்லோரும் இங்கேயே இருப்போம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது எவ்வளவு தவறு.”
நான் ”அட ஆண்டாளே, தேடுறார்னு தெரிஞ்சே தான் கண்ணாமூச்சி விளையாடுனீங்களா?”
Listen to the tree, animals, birds and the reptiles. They talk.
( என் வீட்டு பாதாம் மர அண்டங்காக்காய்கள் இரண்டை மூத்த மகன் கீர்த்தி
படம் பிடித்தான்.)
( என் வீட்டு பாதாம் மர அண்டங்காக்காய்கள் இரண்டை மூத்த மகன் கீர்த்தி
படம் பிடித்தான்.)
"என் நினைவில் பதிந்த முதல் மரம் பாதாம் மரம். நான் படித்த எலிமெண்டரி ஸ்கூலில் ஒரு வாதா மரம் இருந்தது. பாதாம் பருப்பு கிடைக்குமோன்னு உடைச்சி,உடைச்சி பார்ப்போம். பெரிசா ஒன்னும் இருக்காது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் மரம்” இப்படி ந.முத்துசாமி என்னிடம் சொல்லியிருக்கிறார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.