Share

Apr 29, 2018

சங்கடம்


இன்கம் டாக்ஸ் ரெய்டு. உறவினர் வீட்டில். ரெய்டு முடிந்தவுடன் அவர் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி விட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தவுடன் நான் அவரை பார்க்க போயிருந்தேன்.
‘ தொர, நாலஞ்சு வருடங்களுக்கு முன் ஒரு தடவை கஸ்டம்ஸ் ரெய்டு வீட்டில் நடந்தது. அப்போ ஒன் அப்பா பெயரை சொல்லி ’அவருடைய உறவினர் தான் நான்’ என்று சொன்னேன்.
உடனே ரொம்ப மரியாதை கொடுத்து அந்த ஆஃபீசர்கள் வைர நெக்லஸ்களை கூட திருப்பி கொடுத்து விட்டு போனார்கள். அந்த மரியாத இந்த இன்கம் டாக்ஸ் ரெய்டு நடந்த போது இல்ல.’
’முன் ரூம்ல இருந்த போட்டோவின் பின் பக்கம் இருந்து பேப்பரில் சுருட்டி வைக்கப்பட்ட (லட்சக்கணக்கில்) பண பொட்டலத்தை எடுத்தார்கள். அதன் பிறகு எனக்கு இன்கம் டாக்ஸ் ஆஃபிசர்கள் மரியாதையே கொடுக்கவில்லை. அதனால் தான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக வேண்டியதாகி விட்டது. நிறைய கையெழுத்து வாங்கிக் கொண்டு விட்டார்கள்.’
அவர் என்னிடம் இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது அவருடைய மகளும் மருமகனும் ஊரில் இருந்து வந்தார்கள்.
நேரே மருமகன் எங்களிடம் வந்து உட்கார்ந்தான்.
எடுத்த எடுப்பில் கேள்வி “ எத்தனை பேர் ரெய்டுக்கு வந்தாங்க”
என் உறவினருக்கு மருமகனால் நிம்மதி கிடையாது.
சுரத்தேயில்லாமல் அவன் மாமனார் சொன்னார்: ஏழு ஆஃபிசர்கள்.
மருமகன் : அந்த ஏழு பேர் அட்ரஸ்ஸும் இன்கம் டாக்ஸ் ஆஃபிஸில் வாங்குங்க.
மாமனார் : எதுக்கு?
மருமகன் : 'ஏழு பேர் வீட்டு விலாசம் எனக்கு வேணும். ஏழு பேரையும் நான் காலி பண்ணிடுவேன். ஏழு பேரையும் ஆளு வச்சி காலி பண்ணிடுறேன்.'
என்னை பெருமையாக ஒரு பார்வை பார்த்தான். ’தொர நம்மள கண்டு மிரண்டு, பிரமிச்சு, ஆச்சரியப்படுறாப்ல’ என்று ஒரு தோரணை.
மாமனார் விளக்கெண்ணெய் குடித்தது போல் குழம்பி, எரிச்சலை மறைத்து அவனை பார்த்தார்.
“ ஆளு வச்சி காலி பண்ணிடுவேன். உங்க பேரும் வெளிய வராது. என் பேரும் வெளிய வராது.”
அவன் மாமனார் என்னை ஒரு பார்வை பார்த்தார். அந்த பார்வைக்கு அர்த்தம் ‘தொர, என் தலயில ஓத்த விதிய பாத்தியா’
அவன் மீண்டும் அழுத்தமாக சொன்னான் : 'பயப்படாதீங்க.. இந்த விஷயத்தில ஒங்க பேரும் வெளிய வராது. என் பேரும் வெளிய வராது. ரெய்டப்ப நான் இல்லாம போயிட்டேன். இருந்திருந்தா கிண்டி கிழங்கு எடுத்திருப்பேன்.'
என்னை மீண்டும் ரொம்ப பெருமையாக ஒரு பார்வை பார்த்தான். ‘தொர, மலச்சிப்போய்ட்டாப்ல’ன்னு அர்த்தம்.
உள்ளே கிளம்பிப்போனான். சிரம பரிகாரம் பண்ணி விட்டு மாமியாரிடமும் இந்த டயலாக்கை விட்டுக்கொண்டிருந்தான்.
அவன் மாமனார் வேதனையுடன் புலம்பினார் ‘தொர, ஒனக்காவது நான் பொன்ன கொடுத்தனா? நீயாவது என் பொண்டாட்டிக்கு ரத்த சொந்தம். இப்ப பாரு எந்த காட்டுப்பயலோ வந்து என்னை என்ன பாடு படுத்தறான் பாரு.’

..............................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.