Share

May 3, 2018

சைகல் பாடிய ’பாபுலு மோரா’


நவாப் வாஜித் அலி ஷா எழுதிய உருது பாட்டு ’பாபுலு மோரா’.
Baabul mora
Naihar chhuto hi jaae
Baabul mora
Naihar chhuto hi jaae
O My father! I'm leaving home.
O My father! I'm leaving home.
’அப்பா… நான் நம் வீட்டை விட்டு போகிறேன்.’ ஒரு மணப்பெண் திருமணமாகி தன் பிறந்த வீட்டை விட்டுப் பிரிந்து போகும் நிலையில் பாடுவதாக இந்த பைரவி ராக தும்ரி.
விதி செய்யும் விளைவு. வாஜித் அலி ஷா பிரிட்டிஷாரால் நாடு கடத்தப்பட்டார். வெள்ளையர்கள் அவரை இருட்டு பிரியும் முன் லக்னோவை விட்டு வெளியேறி விட வேண்டும் வற்புறுத்தியுள்ள நிலையில் அப்படியே நவாப் கிளம்பிப்போகிறார். விஷயம் ஊருக்கு அதற்குள் தெரிந்து விட்டது. நல்ல இருட்டில் மக்கள் சாலையின் இரு பக்கமும் கூடி விடுகின்றனர். வாஜித் அலியின் அரண்மணை பாடகன் அவர் இயற்றிய பாடலை உரக்கப் பாடுகிறான். மக்கள் தேம்பித் தேம்பி அழுகின்றார்கள். விம்மலுடன் பாடிய பாடகனுக்கு, அந்த நிலையிலும் நவாப் ஒரு பரிசு தருகிறார். அதை ஏற்க அவன் மறுத்து விடுகிறான்.
இந்த தும்ரி பாடல் அதன் பின் எவ்வளவோ பேர் காலம் காலமாக பாடினார்கள்.
ஜம்முவில் பிறந்தவன் கே.எல்.சைகல். ரயில்வே டைம் கீப்பர், ரெமிங்க்டன் டைப்ரைட்டர் சேல்ஸ்மன், ஓட்டல் மானேஜர் என்று எவ்வளவோ வேலை பார்த்தவன்.

ஹிந்தி திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டார் சைகல். அப்போதெல்லாம் கல்கத்தாவில் தான் ஹிந்தி திரையுலகம் இயக்கம் கொண்டிருந்தது.
சைகல் தான் என் குரு என்று லதா மங்கேஷ்கர், கிஷோர் குமார் என்று பலரும் பேட்டியில் எப்போதும் குறிப்பிட்டிருக்கிறார்கள். முகேஷ் அப்படியே ஒரு copycat ஆக சைகலை பின்பற்றி பாடியவர்.
சைகல் பாடல்கள் அகில இந்தியாவையும் பைத்தியமாக்கியது. பாபுலு மோரா, சோ ஜா ராஜ்குமாரி, மேரே சப்னோ கி ராணி, ஏக் பங்களா பனே நியாரா, கம்தியே முஸ்த்து கில்லு கித்துனா பாடல்களை முணு முணுக்காதவர்கள் யாரும் இல்லை.
’நெஞ்சில் ஓர் ஆலயம்’ கல்யாண் குமார் கூட என்னிடம் சொன்னார். சைகல் பாடல்கள் தான் அவருக்கு பிடிக்கும். சைகல் பாடல்களை மனப்பாடமாக பாடுவார்.
பாபுலு மோரா பாடல் 1938ல் ’ஸ்ட்ரீட் சிங்கர்’ என்ற படத்தில் சைகல் பாடி மிகவும் பிரபலம்.
இந்தப் பாடல் பாடுகிற காட்சியை தத்ரூபமாக படமாக்க வேண்டும் என சைகல் ஆசைப்பட்டார். தனியாக ரிக்கார்டிங் செய்ய அவர் மனம் ஒப்பவில்லை. இயக்குனரையும் இதற்கு சம்மதிக்க வைத்தார். படப்பிடிப்பின் போது சைகல் இதை பாடிக்கொண்டே நடக்கும் போது கேமராவிற்குள் வராமல் இசைக்குழுவினர் பின்பற்றி நடந்து கொண்டே வாசித்திருக்கிறார்கள்.
நாற்பத்திரெண்டு வயதில் சைகல் அற்பாயுசில் இறந்து போனார்.
அதன் பின் இந்த பைரவி ராக பாடலை பண்டிட் பீம்ஷன் ஜோஷி, கிஷோரி அமோங்கர், ஜக்ஜித் சிங் என்று எத்தனையோ பேர் கச்சேரிகளில் பாடியிருக்கிறார்கள்.
ராஜேஷ் கன்னா, ஷர்மீளா டாகூர் நடித்த அவிஷ்கார் படத்தில் கூட இந்தப்பாடல் இடம்பெற்றிருந்தது.
ஐந்து வருடங்களுக்கு முன் தினமணி தீபாவளி மலரில் அசோகமித்திரன் ‘அகோர தபசி’ சிறுகதை எழுதியிருந்தார். காலச்சுவடு வெளியிட்டுள்ள ‘இரண்டு விரல் தட்டச்சு’ சிறுகதைத் தொகுப்பில் பிரசுரமாகியுள்ளது.

’ நான் அந்த மனிதனை ஒரு பஜனை மடத்தில் தான் பார்த்தேன். எல்லோரும் கிருஷ்ணா ராமா என்று பாடினால் இவன் சைகல் பாடல்களைப் பாடினான். சைகல் பாட்டு இந்தி அல்லது உருதுவில். எதைப்பற்றி கூறுவதாக இருந்தாலும் அந்த மனிதன் அப்பாட்டுக்களைப் பாடும்போது கேட்போர் மனதை அவை எங்கெங்கோ அழைத்துச் சென்றன. அதிலும் அவன் ’பாபுலு மோரா’ என்ற பாட்டைப் பாடும்போது மனம் அன்று வரை அறியாத எல்லைகளுக்கு இழுத்துச் செல்லப்படும்.
என் மூடிய கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது. எனக்கு மட்டும் என்றில்லை. வேறு பலரும் அவன் பாட்டைக் கேட்டு அவர்களையறியாது கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தார்கள்.’
இந்தப் பாத்திரத்தை ’சைகல் மனிதன்’ என்றே அசோகமித்திரன் தன் சிறுகதையில் அடையாளமிடுகிறார்.
அவன் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடுகிறது.
சைகல் மனிதன் பசுபதியின் மனைவி சொல்கிறாள் ‘அவரோட கூடப்பொறந்தவா ஆறு பேர். நிறைய பணம் காசோட சௌக்கியமா வேறே வேறே இடங்கள்ளே இருக்கா. இப்போ வீட்டை வித்துப் பாகம் பிரிக்கணும்கறா. இவருக்கு இந்த வீட்டை விட்டா எங்கே போறதுன்னு கவலை.’
’அகோரத் தபசி’ கதையின் கடைசி வரிகள் இப்படி முடிகிறது. ‘ ஒரு வாரத்திற்குப் பிறகு கோட்ஸ் ரோடு சென்றேன். அந்த வீடு பூட்டுப் போட்டிருந்தது. ஒரு மாதத்திற்குப்பிறகு காலி வீட்டை யாரோ வெள்ளை அடித்துக்கொண்டிருந்தார்கள். ஏழு பேரும் சேர்ந்து கையெழுத்துப் போட்டு விட்டார்கள் என்று ஊகித்துக்கொண்டேன்’
பசுபதியின் நிர்க்கதியான சோகம், உணர்விறுக்கம், பிரிவாற்றாமை பற்றி புரிய பாபுலு மோரா பாடல் பற்றி, பாடல் எழுதிய நவாப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். சைகல் பாடலையும் கேட்டு ரசித்திருக்க வேண்டும்.No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.