Share

Apr 11, 2018

(சங்கர்) கணேஷ்


’நானே பனி நிலவு’  மேஜர் சந்திரகாந்த் படத்தில் ஜெயலலிதா மேடையில் ஆடிப்பாடும் பாடல். நாகேஷ் தங்கையாக ஜெயலலிதா. 
நாகேஷ் பக்கத்தில் உட்கார்ந்து ஒருவர் “ மிஸ்டர், குட்டி ரொம்ப ஷோக்காயிருக்குல்ல.யாரது?” என்று கேட்பார். அவர் (சங்கர்) கணேஷ்.

அப்போதெல்லாம் அவர் விஸ்வநாதனிடம் அஸிஸ்டண்ட். மேஜர் சந்திரகாந்த் படத்திற்கு இசையமைத்தவர் வி.குமார்.
சர்வர் சுந்தரம் படத்தில் ‘ அவளுக்கென்ன அழகிய முகம்’ பாட்டில் பேங்கோஸ் வாசிப்பார்.
கலாட்டா கல்யாணம் படத்தில் உறவினில் ஃபிப்டி ஃபிஃப்ட்டி பாடலில் ஒலிக்கும் ஆண் குரல் கணேஷ் தான்.
விஸ்வநாதன் குரூப்பில் இருக்கும்போது “ டேய் கணேஷ், அது யாருடா வயலின் கொஞ்சம் பிசிறு தட்டுதே” என்றால் கணேஷ் ஆர்க்கெஸ்ட்ரா பகுதிக்கு வந்து “ அண்ணே, என்னண்ணே’’ என்பார்.
அப்படியே விஸ்வநாதன் ட்ரூப்பில் conspicuous ஆக தெரியத்தொடங்கியவர்.
ஒருங்கிணைப்புத் திறன் மிகுந்த கணேஷ், இசைஞானமிக்க சங்கருடன் இணையும் தேவையிருந்தது. மகராசி படம் தேவர் தயவில் கண்ணதாசன் சிபாரிசில் கிடைத்து இசையமைப்பாளர்கள் ஆனார்கள்.
கணேஷுக்கு படங்களில் தலை காட்டுவதில் பிரியம் அதிகம்.
புகுந்த வீடு படத்தில் “ மாடி வீட்டுப்பொண்ணு மீனா, கோடி வீட்டு பக்கம் போனா’ பாட்டில் ரவிச்சந்திரன் இசையமைப்பாளர்களை ‘ சங்கர், கணேஷ் என்று அறிமுகப்படுத்துவார்.
’சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் தலைப்பு பாட்டில் நடித்திருக்கிறார். ஒரு படத்தில் ‘ வரவேற்பு, வரவேற்பு’ பாடலுக்கு நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக ரெண்டு படங்களில் நடித்திருக்கிறார்.
கணேஷ் வாழ்க்கை பரபரப்பானது.
ஜி.என்.வேலுமணியின் மகள் ரவிச்சந்திரிகாவை காதல் திருமணம் செய்தவர்.
பார்சலில் வந்த ரேடியோ வெடிகுண்டு இவர் கைவிரல்களை சிதைத்திருக்கிறது.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது இவர் ஐம்பது அடி தூரத்தில் இருந்திருக்கிறார்.
சென்ற வருடம் எக்மோர் ஸ்டேசனில் இவரை பார்த்த போது பழைய நினைவு வந்தது.
ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஆர்.ஆர். ரிக்கார்டிங் தியேட்டரில் சங்கர் கணேஷ் இசையமைத்துக்கொண்டிருந்த போது ஸ்டுடியோவை பார்க்க வந்திருந்த என் தந்தையை அங்கே அழைத்துப்போயிருந்தேன்.
கணேஷ் என்னையும் அப்பாவையும் பார்த்தார். நான் வலது கையை தூக்கி ஒரு சல்யூட் விஷ் செய்தேன். பதிலுக்கு கணேஷ் மிக உற்சாகமாக நெற்றி தொட்டு பிரமாதமாக ரெஸ்பாண்ட் செய்தார்.
என் அப்பா கேட்டார். ‘உனக்கு இவர் தெரிந்தவரா?’
’அறிமுகம்,பழக்கமெல்லாம் இல்லை.இவர் இசையமைப்பாளர் கணேஷ்’ என்றேன்.
தினமும் ஸ்டுடியோவில் அவரையென்றில்லை. பெரியவர்கள் யாரென்றாலும் நான் விஷ் செய்வேன். சங்கர் கணேஷ் எப்போதும் வெறுமனே தலையாட்ட மாட்டார். அவரும் அதிக உற்சாகமாகவே விஷ் செய்வார்.
பல சினிமா பிரபலங்கள் ரொம்ப இறுக்கமாக தலையைக் கூட அசைக்க மாட்டார்கள்.
எக்மோர் ஸ்டேஷனில் அன்று ரயிலில் இருந்து மனைவியுடன் இறங்கிய கணேஷ் என்னை தாண்டி செல்லும் போது நான் ‘ நமஸ்காரம் சார்’ என்றேன்.
பதிலுக்கு “ நமஸ்காரம், நல்லாயிருக்கீங்கள்ள” என்றவாறு நடந்து சென்றார்.
அப்போது அங்கு அதைப்பார்த்துக்கொண்டிருந்த சிலர் கூட எனக்கும் கணேஷுக்கும் நல்ல அறிமுகம் போல என்று தான் நினைத்திருக்கக்கூடும்.
அதான் (சங்கர்) கணேஷ்.
உடை உடுத்துவதில் அவர் தனித்தன்மையுடன் இருப்பது கூட சரி, பரவாயில்லை. ஆனால் ஏன் கழுத்திலும், நெஞ்சிலும், கையிலும் இவ்வளவு தங்க நகைகள்?

................................................No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.