Share

Apr 14, 2018

அசோகமித்திரனின் நாவல் ’யுத்தங்களுக்கிடையில்’


”நான் கடைசியாக எழுதி முடித்த நாவல் யுத்தங்களுக்கிடையில்’ நர்மதா பதிப்பாக வந்து பல மாதங்கள் ஆகின்றன. அது வெளிவந்ததாகவே உலகுக்குத் தெரியாது. இந்தப் பத்திரிக்கைகள் அந்த நூலைப் பார்த்து ஒரு குறிப்பு எழுதலாம்.” அசோகமித்திரன் இப்படி தவிக்க வேண்டி இருந்தது.
நாவல் வெளி வரும் முன்னர் திலகவதியின் ’அம்ருதா’ பத்திரிக்கையில் சின்ன ட்ரெய்லர் போல அந்த நாவலின் ஒரு அத்தியாயம் ’ஆற்றில் குளிப்பது எப்படி?’ (முதல்வரி ’செப்டம்பர் 3,1939. யுத்தம் வந்து விட்டது’) பிரசுரமாகியிருந்தது.
நாவல் முதல் உலக யுத்தத்திற்கும் இரண்டாம் உலகயுத்தத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இங்கே மாயவரம் துவங்கி செகண்ட்ராபாட் வரை ஒரு குடும்ப நிகழ்வுகளை உள்ளடக்கியது.
நாவல் நடக்கிற காலம் இப்படியென்றால் இதை எழுதிய காலம் “ Sorrows never come singly”யை நினைவுபடுத்தும் விதமாக இருந்திருக்கிறது. அசோகமித்திரன் ஐம்பது வருடங்களாக குடியிருந்த தி.நகர் தாமோதரன் ரெட்டி தெரு வீட்டில் இருந்து வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்தார். அந்த 2000 மாவது ஆண்டில் அவருடைய குடும்பத்தில் மூன்று பேருக்கு எலும்பு முறிவு, வாரக்கணக்கில் மருத்துவமனை சிகிச்சை. மூவருக்கும் நிரந்தரமாக நினைவு படுத்தும் வகையில் காயங்கள். அந்த நெருக்கடியான காலத்தில் தான் இந்த கடைசி நாவலை எழுத ஆரம்பித்திருக்கிறார் ஆசிரியர்.

எழுபத்தேழாம் வயதில் ‘ ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். பல ஆண்டுகள் முன்பே தொடங்கப்பட்டது. மனதளவில் ஏதோ எதிர்ப்பு இருந்து கொண்டிருக்கிறது.அதை மீறித் தான் அவ்வப்போது எழுத முற்படுகிறேன். இந்த 2009ம் ஆண்டில் அதை முடித்து விட வேண்டும்.’
எழுபத்தெட்டாம் வயதில் ‘ இறுதியாக, பல ஆண்டுகளாக எழுதி வரும் நாவலை ஒரு சிறிய அளவிலேயே முடித்து விட்டேன். இன்னும் ஏராளமான பாத்திரங்களை விரிவு படுத்த வேண்டும். இந்த வயதில் பெரிய திட்டங்கள் எனக்கென வைத்துக்கொள்வது அசாத்தியமானது.’
Perhaps life is Just that….a dream and a fear ....ஜோசப் கான்ராட் தான் இப்படி கவலைப்பட்டான். Byron's Incomplete "DON JUAN"....... Keats's Fractional "HYPERION".....
அசோகமித்திரனின் அப்பா முதல் உலகயுத்த காலத்தில் ஒரு வெள்ளைக்கார துரையிடம் நிஜாம் சமஸ்தானத்தில் வேலைக்கு சேர்ந்து அந்த வேலை யுத்தம் முடிந்தவுடன் முடிவுக்கு வந்த பின் அந்த துரை உதவியுடனேயே ரயில்வேயில் தனக்கும் தன் தம்பிகள் இருவருக்கும் கூட வேலை வாங்கி அங்கே செட்டிலாகி இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின் ஒரு ஐந்து வருடங்களில் சகோதர்கள் தங்கள் மனைவிகளையும், படிப்பை முடிக்காத குழந்தைகளையும் விட்டு விட்டு செத்துப்போகிறார்கள்.
நாவல் மிக கனமான உருக்கமான, இறுக்கமான தளங்களை உள்ளடக்கியது.
இன்று நான்கு முறைக்கு மேல் நான் 2010லிருந்து நாவலை மறு வாசிப்பு செய்து விட்டேன். இன்னும் என் காலம் முடியும் வரை எத்தனை முறை வாசிப்பேனோ?
மாயவரத்தை ஒட்டிய ஒரு கிராமத்திலிருந்து நிஜாம் சமஸ்தானத்திற்கு அந்த சகோதரர்களை எது கொண்டு சேர்த்தது. முற்றிலுமாக வேறு கலாச்சார சூழலில் நடுத்தர வயதில் அன்னியப் பிரதேசத்திலே உயிரையும் விட வைத்தது. இதற்கெல்லாம் சில வரி பதில் சொல்வது அபத்தம்.
18வது அட்சக்கோடு நாவல், எத்தனை சிறுகதைகள், கட்டுரைகள் அந்த ஹைத்ராபாத், செகண்ட்ராபாத் பற்றி எழுதித் தீர்த்திருக்கிறார்.
ஐந்நூறு கோப்பைத்தட்டுகள், மாறுதல் (சாய்னா), சுந்தர், நடனத்துக்குப் பின், பங்கஜ் மல்லிக், தந்தைக்காக, கதர், அபவாதம், அவள் ஒருத்தி தான், உத்தர ராமாயணம், அப்பாவின் சிநேகிதர், சாயம், முனீரின் ஸ்பானர்கள், சில்வியா, இன்ஸ்பெக்டர் செண்பகராமன், திருநீலகண்டர், சகோதரர்கள், மண வாழ்க்கை, இரு முடிவுகள் உடையது, அழகு, பைசா, விடுமுறை, பாதாளம், பாண்டி விளையாட்டு, ஹரிகோபாலின் கார்பன் பிரதி, சேர்ந்து படித்தவர்கள், அலைகள் ஓய்ந்து.., அடுத்த மாதம், கொடியேற்றம், மறதி, ஆறாம் வகுப்பு, 1946ல் இப்படியெல்லாம் இருந்தது, தோஸ்த், கல்யாணி குட்டியம்மா, பரிட்சை, பாலாமணி குழந்தை மண்ணை தின்கிறது, மீரா- தான்சேன் சந்திப்பு, பார்த்த ஞாபகம் இல்லாது போதல், கோபம் ஆகிய சிறுகதைகளெல்லாம் நினைவில் நிழலாடி நிற்கிறது.
அசோகமித்திரனின் பாத்திரங்கள் காலகாலமாக திரும்பத் திரும்ப அவருடைய எழுத்தில் பயணிப்பவர்கள்.
’ஒற்றன்’ நாவல் களத்தில் அமெரிக்க அயோவா சிடி கதைகள் ‘அம்மாவின் பொய்கள்’ (1986), இப்போது நேரமில்லை (1985), ஒரு நாள் அதிகாலைப் போதில் (1975), அழிவற்றது (2004)
‘நான் ஒரு முறை ஓராண்டுக்காலம் அமெரிக்காவில் இருக்க நேர்ந்தது. அங்கு கூட வெகு விசித்திரமாக ஒரு கொரியாக்காரன், ஓர் இந்தோனேஷியாக்காரன், ஒரு ஜப்பானிய மாது, ஓர் அமெரிக்கப்பெண், ஒரு ஹங்கேரிய அம்மாள்- இவ்வளவு பேர்கள் அவர்களுடைய துக்கங்களை என் தோள் மீது கசிய விட்டிருக்கிறார்கள். ஆனால் என் உடம்பெல்லாம் நிறைந்திருக்கும் துக்கத்தை நான் தணித்துக்கொள்ள எனக்கு இன்னும் ஒரு தோள் கிடைக்கவில்லை.” ஒற்றன் நாவல் சூழலைப் பற்றி இப்படி ‘ நானும் ஜே.ராமகிருஷ்ணராஜூம் சேர்ந்து எடுத்த சினிமாப்படம்’ கதையில் சொல்லியிருக்கிறார்.
18வது அட்சக்கோடு நாவலில் வருகிற ஜாபர் அலியை 2002ல் எழுதிய ’சகோதர்கள்’ களத்தில் காணலாம். நாகரத்தினத்தை 1982ல் எழுதிய ‘அப வாதம்’ காட்டுவதுண்டு. 2010ல் எழுதப்பட்ட கதை ’தோஸ்த்’ ரெய்னால்ட்ஸ் காரில் வரும், பளபள ஷேர்வாணி அணிந்த பையன்.
சில்வியா, இன்ஸ்பெக்டர் செண்பகராமன், அப்பாவின் சினேகிதர் சையது மாமா. டாக்டருக்கு மருந்து புருஷோத்தம் டாக்டர்.
18வது அட்சக்கோடின் இறுதி அத்தியாயமாக இருந்திருக்க வேண்டியது ‘ஒரு நாள் நூலகத்திற்குப் போகும் வழியில் நின்று பார்த்த கிரிக்கெட் ஆட்டம்’ என்ற சிறுகதையென்று அசோகமித்திரன் சொன்னார்.
யுத்தங்களுக்கிடையில் அசோகமித்திரனின் அத்தை பணக்கார விதவை சீதா. இவளை மையம் கொண்டு எத்தனை கிளை கதைகள்.
யுத்தங்களுக்கிடையில் ராமசுப்பு ’மானசரோவர்’ நாவலில் ஜபர்தஸ்து பண்ணிய சாமா.
’கோபம்’ சிறுகதை மன்னி யுத்தங்களுக்கிடையில்.
’லீவு லெட்டர்’ குறு நாவல் கேசவராவ் யுத்தங்களுக்கிடையில்.
இந்த நாவலை படிப்பவர்கள் ஆசிரியர் எழுதி 2010ல் வெளிவந்த  குறு நாவல் ’பம்பாய் 1944’, 2014ல் வெளியான நாவல் ‘இந்தியா 1948’ இரண்டையும் அவசியம்  படிக்க வேண்டும். சிவப்பு அண்ணா தான் சுந்தரம். பம்பாய் அண்ணா. யுத்தங்களுக்கிடையில் பம்பாய் அண்ணா பெயர் ராகவன். மூத்த மகன் தான் பம்பாய் அண்ணாவாக மாறினான்.
இளையவன் மணி தான் தத்து எடுக்கப்படுவதை இழந்தான்.
யுத்தங்களுக்கிடையில் கடைசி பாரா ‘ ஒரு தலைமுறை முடிந்தது’ (1988) சிறுகதையை நினைவு படுத்தும்.
“அவங்க அண்ணன் தம்பி ஒருத்தர் கூட அறுபது வயசைத் தாண்டலை. எங்கப்பா போறப்போ ஐம்பத்து மூணு. உங்கப்பாவுக்கென்ன ஐம்பத்தஞ்சு இருக்குமா?’
‘ஐம்பத்தாறு.”
பல வருடங்களாக நாவல் எழுதப்பட்டிருப்பதால் அசோகமித்திரனின் நினைவுக்குழப்பம் ராமேசனை இரண்டொரு இடங்களில் சபேசன் என குறிப்பிட்டிருப்பது பெரிய தவறல்ல.
………..

உலகத்தில் தான் ஒருவரைச் சுற்றி எவ்வளவு கதைகள்! கதைகளுக்கு முடிவே இல்லை. மேலும் எந்தக்கதையும் பூரணமான கதையல்ல.
- அசோகமித்திரன்.

...........................................



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.