Share

Apr 29, 2018

சங்கடம்


இன்கம் டாக்ஸ் ரெய்டு. உறவினர் வீட்டில். ரெய்டு முடிந்தவுடன் அவர் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி விட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தவுடன் நான் அவரை பார்க்க போயிருந்தேன்.
‘ தொர, நாலஞ்சு வருடங்களுக்கு முன் ஒரு தடவை கஸ்டம்ஸ் ரெய்டு வீட்டில் நடந்தது. அப்போ ஒன் அப்பா பெயரை சொல்லி ’அவருடைய உறவினர் தான் நான்’ என்று சொன்னேன்.
உடனே ரொம்ப மரியாதை கொடுத்து அந்த ஆஃபீசர்கள் வைர நெக்லஸ்களை கூட திருப்பி கொடுத்து விட்டு போனார்கள். அந்த மரியாத இந்த இன்கம் டாக்ஸ் ரெய்டு நடந்த போது இல்ல.’
’முன் ரூம்ல இருந்த போட்டோவின் பின் பக்கம் இருந்து பேப்பரில் சுருட்டி வைக்கப்பட்ட (லட்சக்கணக்கில்) பண பொட்டலத்தை எடுத்தார்கள். அதன் பிறகு எனக்கு இன்கம் டாக்ஸ் ஆஃபிசர்கள் மரியாதையே கொடுக்கவில்லை. அதனால் தான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக வேண்டியதாகி விட்டது. நிறைய கையெழுத்து வாங்கிக் கொண்டு விட்டார்கள்.’
அவர் என்னிடம் இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது அவருடைய மகளும் மருமகனும் ஊரில் இருந்து வந்தார்கள்.
நேரே மருமகன் எங்களிடம் வந்து உட்கார்ந்தான்.
எடுத்த எடுப்பில் கேள்வி “ எத்தனை பேர் ரெய்டுக்கு வந்தாங்க”
என் உறவினருக்கு மருமகனால் நிம்மதி கிடையாது.
சுரத்தேயில்லாமல் அவன் மாமனார் சொன்னார்: ஏழு ஆஃபிசர்கள்.
மருமகன் : அந்த ஏழு பேர் அட்ரஸ்ஸும் இன்கம் டாக்ஸ் ஆஃபிஸில் வாங்குங்க.
மாமனார் : எதுக்கு?
மருமகன் : 'ஏழு பேர் வீட்டு விலாசம் எனக்கு வேணும். ஏழு பேரையும் நான் காலி பண்ணிடுவேன். ஏழு பேரையும் ஆளு வச்சி காலி பண்ணிடுறேன்.'
என்னை பெருமையாக ஒரு பார்வை பார்த்தான். ’தொர நம்மள கண்டு மிரண்டு, பிரமிச்சு, ஆச்சரியப்படுறாப்ல’ என்று ஒரு தோரணை.
மாமனார் விளக்கெண்ணெய் குடித்தது போல் குழம்பி, எரிச்சலை மறைத்து அவனை பார்த்தார்.
“ ஆளு வச்சி காலி பண்ணிடுவேன். உங்க பேரும் வெளிய வராது. என் பேரும் வெளிய வராது.”
அவன் மாமனார் என்னை ஒரு பார்வை பார்த்தார். அந்த பார்வைக்கு அர்த்தம் ‘தொர, என் தலயில ஓத்த விதிய பாத்தியா’
அவன் மீண்டும் அழுத்தமாக சொன்னான் : 'பயப்படாதீங்க.. இந்த விஷயத்தில ஒங்க பேரும் வெளிய வராது. என் பேரும் வெளிய வராது. ரெய்டப்ப நான் இல்லாம போயிட்டேன். இருந்திருந்தா கிண்டி கிழங்கு எடுத்திருப்பேன்.'
என்னை மீண்டும் ரொம்ப பெருமையாக ஒரு பார்வை பார்த்தான். ‘தொர, மலச்சிப்போய்ட்டாப்ல’ன்னு அர்த்தம்.
உள்ளே கிளம்பிப்போனான். சிரம பரிகாரம் பண்ணி விட்டு மாமியாரிடமும் இந்த டயலாக்கை விட்டுக்கொண்டிருந்தான்.
அவன் மாமனார் வேதனையுடன் புலம்பினார் ‘தொர, ஒனக்காவது நான் பொன்ன கொடுத்தனா? நீயாவது என் பொண்டாட்டிக்கு ரத்த சொந்தம். இப்ப பாரு எந்த காட்டுப்பயலோ வந்து என்னை என்ன பாடு படுத்தறான் பாரு.’

..............................................

Apr 26, 2018

பழசு ஒன்னு, புதுசு ஒன்னு


Sudhakar is Nothing
ஹிண்டு ரங்கராஜனின் படத்தில் நடிகர் சுதாகர் நடித்துக்கொண்டிருந்த போது, ஹிண்டு பத்திரிக்கையில் அந்த நேரத்தில் ரிலீசாகியிருந்த ஒரு சுதாகர் படத்தின் விமர்சனம் பிரசுரமாகியிருந்தது. அதில் Sudhakar is nothing என்றே எழுதப்பட்டிருந்தது.
சுதாகரின் பெரும்பாலான படங்கள் தரமில்லாமல் தான் இருந்தது. மார்க்கெட் முடிவுக்கு வரும்படியான சூழ்நிலை வெகு சீக்கிரமாக உருவாக இருந்தது. தயாரிப்பில் இருந்த ஹிண்டு ரங்கராஜனின் படமும் படுதோல்வியை தழுவ இருந்த படம் என்பது தான் வேடிக்கை.

’கௌரவம்’ படத்தை எடுத்த ஹிண்டு ரங்கராஜன். நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார். ஜெமினி கணேசன் ஹிண்டு முதலாளியின் நல்ல நண்பர். மற்றபடி எந்த நடிகரையும் அவர் மதிக்கக்கூடியவர் அல்ல. ஒரு மஹாராஜா தோரணையில் இருப்பவர்.
’ நான் இவர் படத்தில் கதாநாயகன். என்னைப்பற்றி அவருடைய பத்திரிக்கையில் இப்படி ‘Sudhakar is nothing’ என்று எழுதுவது நியாயமா?’
வெளிப்படையாக முனகினார் சுதாகர்.
ஹிண்டு ரங்கராஜன் காதுக்கு இது போன போது அவருடைய ரீயாக்சன் சுதாகருக்கு இன்னும் அவமானமாய் ஆகி விட்டது.
ஹிண்டு பத்திரிக்கையை சுதாகரால் influence செய்ய முடியுமா?
புகைப்படங்கள்
ஹிண்டு ரங்கராஜனின் அந்த படத்தில் ராஜநாயஹம்
..........................................................

ஷோபா சக்தி
விகடன் ந.முத்துசாமிக்கு பெருந்தமிழர் விருது கொடுத்து கௌரவித்த விழாவுக்கு சில மாதங்களுக்கு முன் போயிருந்த போது அ.மார்க்ஸ் பக்கத்தில் அமர்ந்திருந்த ஷோபா சக்தியை சந்தித்தேன்.
ஃபேஸ்புக்கில் என்னை படிப்பதாக சொன்னார்.
ஃபேஸ்புக்கில் படிக்கும் பலரும் எனக்கு லைக் கொடுப்பதில்லை.
2002ல் நான் எழுதிய “ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை” கட்டுரையை படித்து விட்டு எனக்கு ஃப்ரான்சில் இருந்து ஒரு கடிதம் ஷோபா சக்தி எழுதியிருந்தார்.
திருச்சி தமிழ் இலக்கிய கழகத்தில் ’கொரில்லா’ நாவலைப் பற்றி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தேன். அதற்காக புத்தகமெல்லாம் பேராசிரியர்களுக்கு நானே விலை கொடுத்து வாங்கி படிக்க கொடுத்தேன்.

விகடன் விழாவில் ஷோபா சக்தி என்னிடம் வந்து கேட்டார் “ சிகரெட் பிடிப்பீங்களா?”
’இல்ல. நான் சிகரெட் பிடிக்கிறதில்ல சார்’
சிகரெட் பிடிக்க கம்பெனி கிடைக்குமா என்பதற்காக என்னிடம் கேட்டிருக்கிறார்.
”உங்க அப்பா கஸ்டம்ஸ் ஆஃபிசர்?”
நான் ”ஆமா சார்”
அவர் சிகரெட் பிடிக்க கிளம்பிப் போனார்.
அப்புறம் எனக்கு தோன்றியது. ஷோபா சக்தியுடன் போயிருக்கலாம். அவரிடம் பேசிக்கொண்டிருக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணி விட்டேனே!
ஷோபா சக்தியின் ’விகடன் தடம்’ பேட்டி அந்த மாதத்தில் தான்.

Apr 21, 2018

சமயக்கார பாய்


சமயக்கார பாய் தென்காசியில் இருந்து மதுரை சவ்வாஸில் சமையல் செய்ய வந்தவர். சவ்வாஸ் ரெடிமேட் கடை முதலாளிகள், வேலை பார்ப்பவர்களுக்கு சமையல் செய்வது தான் இவருடைய வேலை. தென்காசியில் மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள்.
சவ்வாஸ் கடை ஒரு ஜாலியான வருத்தமில்லா வாலிபர் சங்கமாக இருந்தது. நண்பர்கள் சங்கமமாகும் கலகலப்பான இடம்.
நான் சினிமாவில் இருந்து ஒரு விலகல் நேரத்தில் இங்கே பொழுதை போக்கியிருக்கிறேன். என் நண்பர்களான சவ்வாஸ் சகோதரர்கள் அங்கே நான் போனால் “ இங்கே இருங்கள். வீட்டுக்கு நாளைக்கு போகலாம்” என்பார்கள்.
அப்போதெல்லாம் நான் குறுந்தாடியுடன் தான் இருப்பேன். சமயக்கார பாய் எப்போதும் என்னை தாடிக்கார பாய் என விளிப்பார்.
நான் சினிமாவில் அஸிஸ்டண்ட் டைரக்டராய் இருந்தவன் என்பது சமயக்கார பாய்க்கு ஒரு பெரிய அட்ராக்ஷன்.
ஒரு நாள் சமயக்கார பாய் “ தாடிக்கார பாய், சினிமாவில என்னயும் சேத்துக்குவாங்களா?” என்று கேட்டார்.

சரி, சினிமாவில் ப்ரொடக்சனில் சமையல் வேலை எதிர் பார்க்கிறாரோ என்று நினைத்தால் அது இல்லை இல்லை என்று தலையை ரெண்டு பக்கமும் ஆட்டி மறுத்தார். சினிமாவில் நடிக்க ஆசையாம்.
என்ன ரோலில் உங்களால் நடிக்க முடியும்?
சமயக்கார பாய் “ கதாநாயகனாக”
வில்லன் ரோல்?
சமயக்கார பாய் “ நம்பியார், அசோகன் மாதிரியெல்லாம் எனக்கு நடிக்க வராதே..”
சரி. காமெடி?
சமயக்கார பாய் “ எனக்கு சிரிப்பு நடிகரா நடிக்கத்தெரியாது. ஹீரோவா தான் நடிக்கத்தெரியும்”
பாய் குட்டையாக பொதுக்கையாக, தொப்பையுடன் தட்டான் போல் இருப்பார்.
சமயக்கார பாய் தீர்மானமாக வேறு எந்த கதாபாத்திரமும் ஏற்கத் தயாரில்லை என்பதை தெளிவு படுத்தினார்.
இது சீரியஸ் என்பது அவர் நச்சரிப்பு ரொம்ப அதிகமான போது தெரிய வந்தது.
கொஞ்ச நாள் விளையாட வேண்டியது தான். வேறு வழியில்லை.
உடனடியாக ஒரு ’இன்லெண்ட் லட்டர்’ ஜே.பி மாமா பெயரில் எழுதப்பட்டது.
“ அன்பு மிக்க சமயக்கார பாய்
நான் சினிமாவிலிருந்து ஜே.பி மாமா எழுதுகிறேன்.

தாங்கள் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க விரும்புவதை அறிந்து மகிழ்கிறோம்.
நான் தான் இந்தி ஹேமா மாலினி, ரஜினி காந்த், ஸ்ரீதேவி போன்றவர்களுக்கு நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தவன். அவர்கள் நடிக்க ஆரம்பித்து ஐந்து வருடங்கள் சம்பளத்தில் எனக்கு கமிசன் பத்து பெர்சண்ட் எனக்கு கொடுத்திருக்கிறார்கள்.
உங்களிடமிருந்தும் அந்த கமிசனை நான் ஒவ்வொரு படத்திற்கும் ஐந்து வருடங்கள் வாங்கி விடுவேன் என்பதை பணிவன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஐந்து வருடங்களுக்கு பின் நீங்கள் நடிக்கப்போகும் படங்களுக்கு எனக்கு கமிசன் தர தேவையில்லை.
கீழே சில ஷரத்துகளை கவனமாக படிக்கவும். கடுமையான ஷரத்துக்கள் என்பதால் நீங்கள் மனம் புண் பட்டு விடக்கூடாது.
1. வருடத்திற்கு ஐந்து படங்கள் தான் உங்களுக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு தரப்படும்.
2. ஒரு படத்திற்கு இருபது லட்சம் ரூபாய் தான் தரப்படும். இதற்கு மேல் நீங்கள் சம்பளம் கேட்டு தகராறு செய்யக்கூடாது.
3. ஸ்ரீதேவி, அம்பிகா, ராதா, மற்றும் மாதவி ஆகியோர் தான் உங்களுடன் கதாநாயகியாக நடிப்பார்கள். மற்ற நடிகைகளை கதாநாயகியாக படத்தில் போடச்சொல்லி நீங்கள் வற்புறுத்தவே கூடாது.
4. இப்படி ஐந்து வருடங்களுக்கு மட்டும் தான் உங்களுக்கு கதாநாயகன் வாய்ப்பு தரப்படும். பின்னர் நீங்களே தான் உங்களுக்கான பட வாய்ப்புகளை தேடிக்கொள்ள வேண்டும். இதற்காக தாங்கள் அதிர்ச்சியடையவோ, வருத்தப்படவோ கூடாது.
5. எல்லா படங்களுமே கலர் படங்கள் தான். மாறுதலுக்காக ஒரு கறுப்பு வெள்ளை படத்தில் நடிக்கிறேனே என்று நீங்கள் போர்க்கொடி உயர்த்தினால் அது எங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.
6. நீங்கள் வருடத்திற்கு நடிக்கும் ஐந்து படங்களில் ஒன்றிரண்டை கே.பாலச்சந்தரோ, மகேந்திரனோ, பாலு மகேந்திராவோ, அல்லது பாரதிராஜாவோ இயக்க வேண்டியிருக்கும். அதற்கு நீங்கள் ஒப்புதல் அளித்து ஒத்துழைக்க வேண்டும். எந்த காரணத்தைக்கொண்டும் ‘மாட்டேன்’ என்று பிடிவாதம் பிடிக்கவே கூடாது என்பதை கறாராக தெரிவித்துக்கொள்கிறோம். மற்ற படங்களை தான் எஸ்.பி. முத்துராமன், ஐ.வி.சசி, ஏ.ஜெகன்னாதன் ஆகிய இயக்குனர்கள் இயக்குவார்கள்.
7. ஒரு படத்தில் கதாநாயகியோடு ஐந்து பாடல்கள் மட்டுமே டூயட் பாடல்கள்.  கதாநாயகியோடு ஆடிப்பாட  கூடுதலாக பாடல்கள் வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படக்கூடாது. அதோடு பாடல் காட்சிகள் ஊட்டி, கொடைக்கானலில் படம்பிடிக்க வேண்டியிருக்கும். ’எனக்கு குளிரும். என்னால் வரமுடியாது’ என்று நீங்கள் சொல்லவே கூடாது.
8. எனக்கு ஐந்து வருடங்கள் கமிசன் பத்து பெர்சண்ட் தரவேண்டும் என்பதை மீண்டும் நினைவுறுத்துகிறேன்.
மேற்கண்ட சட்டதிட்டங்கள் உங்களுக்கு சம்மதமா?இவ்வளவு கடுமையாக இருக்கிறதே என்று நீங்கள் மலைக்கவே கூடாது.
இப்போதே கதாநாயகிகள் ஸ்ரீதேவி, அம்பிகா, ராதா, மற்றும் மாதவி தங்களுடன் சமயக்கார பாய் கதாநாயகனாக நடிக்க இருப்பதறிந்து உங்களுக்கு தங்கள் அன்பை தெரிவிக்க சொன்னார்கள். உங்களை நேரில் பார்க்க ஆவலாயிருக்கிறார்கள்.
ரஜினிகாந்த், கமல் இருவரும் சமயக்கார பாய் நடிக்க வந்தால் தங்களுக்கு வேலைப்பளு குறையும் என்று நிம்மதி பெரு மூச்சு விட்டார்கள். சென்னை வரும் தங்கள் சக கதாநாயகனை சந்திக்க ஆர்வமாயிருக்கிறார்கள்.
இப்படிக்கு அன்புள்ள ஜே.பி. மாமா
பின் குறிப்பு : நீங்கள் தரப்போகும் கமிசன் தான் எனக்கு மிகவும் முக்கியம். வருடத்திற்கு ஐந்து படங்களுக்கு கிடைக்கும் மொத்த பணம் ஒரு கோடியில் பத்து லட்சம் எனக்கு அவசியம் தரவேண்டும்.
....................
கடிதத்தை சமயக்கார பாய்க்கு வாசித்து காண்பிக்க வேண்டியிருந்தது. பாய் ஒவ்வொரு ஷரத்துக்கும் ரொம்ப விளக்கங்கள் கேட்டு தீவிர சிந்தனையிலாழ்ந்தார். ' அஞ்சு வருஷம் கமிஷன் கேக்காஹ. '
கடிதத்தை வாங்கி கவனமாக உஷார் பண்ணிக்கொண்டார்.

ஒன்றிரண்டு ஷரத்து குறித்து ஓரளவுக்கு அதிருப்தி சமயக்கார பாய்க்கு இருந்தது.
உதாரணமாக வருடத்திற்கு ஐந்து படங்கள் எனும் போது நான்கு கதாநாயகிகள் தான் என்பது சிலாக்கியமாக படவில்லை. சில்க் ஸ்மிதாவையும் சேர்த்துக்கொள்ளலாமே. சமயக்கார பாய்க்கு சில்க்கு ரொம்ப பிடிக்குமாம்.
…………………………
சமயக்கார பாய்க்கு அன்றிரவே கடை மூடியதுமே சாப்பாட்டுக்குப் பின் நடிப்பு பயிற்சி தரப்பட்டது.
கடையில் வேலை பார்க்கும் காதர், ரஹமத்துல்லா இருவரும் supporting actors.
“சமயக்கார பாய், ரஹமத்துல்லா தான் உங்க அம்மா. அவங்க செத்துட்டாங்க. நீங்க அழுது நடிங்க.’
 லைட்ஸ் ஆன், ஸ்டார்ட் கேமரா, க்ளாப், பை ஃபைவ் டேக் ஒன், ஆக்ஸன்.
சமயக்கார பாய் ஓடிப்போய் ரஹமத்துல்லா மேல் விழுந்து கூப்பாடு போட்டார் “என்னை ஆறு மாசம் செமந்து பெத்த தாயே”
’கட்..கட்.. சமயக்கார பாய், பத்து மாசம் பாய், நீங்க கொற மாசத்திலயா பொறந்தீங்க…’
சமயக்கார பாய் விரல் விட்டு எண்ணி வசனத்தை மனப்பாடம் செய்தார்.
அடுத்த சீன்.
சமயக்கார பாய் நம்ம காதர் ஒரு பொண்ணு. நீங்க கற்பழிக்கிற சீன் இது.”
சமயக்கார பாய் “ தாடிக்கார பாய், என்ன சொல்லுதியோ… எனக்கு வில்லனா நடிக்கத்தெரியாதெ… எம்.ஜி.ஆர் ஒரு படத்திலும் பொம்பளை கிட்ட தப்பா நடிக்க மாட்டாரே…”
’இல்ல பாய், குடிகார அப்பாவ திருத்த மகள கற்பழிக்கிற மாதிரி எம்.ஜி.ஆர் நடிச்சிருக்கார். கடைசில ‘தங்கச்சி என்ன மன்னிச்சிக்கம்மா.. ஒன் அப்பாவ திருத்தத் தான் ஒன்ன கற்பழிக்கிற மாதிரி நடிச்சேன்’ம்பார். நடிப்புன்னா எது சொன்னாலும் செய்யனும்”
’லைட்ஸ் ஆன், ஸ்டார்ட் கேமரா, க்ளாப், பை சிக்ஸ், டேக் ஒன், ஆக்ஸன்.’
சமயக்கார பாய் “ என்னடி, என்ன நெனச்சிக்கொண்டு இருக்கிறாய்.. நான் கூப்பிட்டால் வர மாட்டாயோ?” என்று காதர் மேல் பாய்ந்தார்.
காதர் அவரை உடனே கீழே போட்டு மேலே ஏறி படுத்தான்.
சமயக்கார பாய் “ ஏலெ காதரு… நடிப்பு தாம்ல இது. ஏலே எந்தில…எந்தில…
காதரோ லாக் போட்டு அவரை நெருக்கினான்.
“ தாடிக்கார பாய்.. இவன எந்திக்க சொல்லுங்க பாய்.. எல காதரு நடிப்பு தானல…ஏம்ல இப்படி செய்த..”
காதர் பின்னி படர்ந்துட்டான்.
“ ஏல, காதரு..எந்தில… எல எனக்கு மூச்சு முட்டுதுல.. செத்த மூதி…. என்னல செய்த.. ஏல எனக்கு இந்த சோலியே பிடிக்காதுல.. இந்த ஒரு சோலி மட்டும் எனக்கு பிடிக்கவே செய்யாதுல..”
………………..
ஒரு நாள் ஜே.பி. மாமா சென்னையிலிருந்து வந்தவர் சாவகாசமாக சவ்வாஸுக்கு வந்து விட்டார். அவருக்கு ஓடிக்கொண்டிருந்த ரீல் பற்றி விவரிக்கப்பட்டது. ரீல் அந்து விடாமல் மேலே ஓட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
வெங்காயம் நறுக்கிக்கொண்டிருந்த சமயக்கார பாய்க்கு தகவல் போய் உடனே கீழே இறங்கி வந்து விட்டார்.
கைலியை மடித்துக்கட்டியிருந்தார். விஸ்பர் வாய்ஸில் “சமயக்கார பாய், கைலிய இறக்கி விடுங்க…”

ஜே.பி. மாமா: என்னய்யா.. கண்டிஷன்லா சரி தான…
சமயக்கார பாய்: நாங்க பெரிய குடும்பம்..அண்ணந்தம்பி ஏழு பேரு….கொஞ்சம் கமிசன கொறச்சா நல்லது..
ஜே.பி. மாமா: போய்யா..என்ன ஆளுய்யா…ஏய்யா இந்த மாதிரி ஆள ஏங்கிட்ட சிபாரிசு பண்றீங்க..

சமயக்கார பாய்: நல்லா நடிப்பேன் நான்.. அதுக்கு நான் கியாரண்டி…கமிசன மட்டும் கொஞ்சம் கம்மி…

ஜே.பி.: ஓடிப்போயிடு.. நான் செம காண்ட்டாயிடுவேன்.
ஜே.பி மாமுவை  சமாதானப்படுத்த செய்த முயற்சி விழலுக்கு இறைத்த நீராகி விடுமோ என்று எல்லோரும் அஞ்ச வேண்டியிருந்தது.
சமயக்கார பாய் உடனே சரணாகதியடைந்து ஜே.பி. மாமா காலில் விழ செய்த முயற்சியும் கூட வீணாகும் அளவுக்கு ஜே.பி. கொப்பில் ஏறினார்.
சமயக்கார பாய் : ஜேப்பி மாமா.. என்ன மன்னிச்சிக்கங்கங்க… நீங்க என்னென்ன சொன்னாலும் கவிதை… நான் தட்ட மாட்டேன்.
ஜே.பி. ”சரி…சரி….பொழச்சுப்போ…சினிமாவுக்கு வந்த பிறகு கமிசன கொறைங்கன்னு சொன்னே பாத்துக்க” விரலை நீட்டி நாக்கை கடித்தார்.
சமயக்கார பாய் மேல படியேறிப் போய் சமையலை தொடர்ந்தார்.
குழம்பில் உப்பை அதிகமாக போட்டார். டீயில் ஜீனி போட மறந்தார். சோறு அடிக்கடி குழைந்து போனது. கறியில் காரம் போட மறந்தார்.
அவரிடம் இருந்த ஜேபி மாமா ஷரத்துக்கள் அடங்கிய இன்லெண்டு லெட்டர் கவனமாக கைப்பற்றப்பட்டு சுக்கு நூறாக கிழிக்கப்பட்டது.
”ஐயோ…தாடிக்கார பாய்… என்ன செய்தியோ.. ஆதாரத்த பாழாக்கி போட்டீங்களெ..”

Apr 14, 2018

அசோகமித்திரனின் நாவல் ’யுத்தங்களுக்கிடையில்’


”நான் கடைசியாக எழுதி முடித்த நாவல் யுத்தங்களுக்கிடையில்’ நர்மதா பதிப்பாக வந்து பல மாதங்கள் ஆகின்றன. அது வெளிவந்ததாகவே உலகுக்குத் தெரியாது. இந்தப் பத்திரிக்கைகள் அந்த நூலைப் பார்த்து ஒரு குறிப்பு எழுதலாம்.” அசோகமித்திரன் இப்படி தவிக்க வேண்டி இருந்தது.
நாவல் வெளி வரும் முன்னர் திலகவதியின் ’அம்ருதா’ பத்திரிக்கையில் சின்ன ட்ரெய்லர் போல அந்த நாவலின் ஒரு அத்தியாயம் ’ஆற்றில் குளிப்பது எப்படி?’ (முதல்வரி ’செப்டம்பர் 3,1939. யுத்தம் வந்து விட்டது’) பிரசுரமாகியிருந்தது.
நாவல் முதல் உலக யுத்தத்திற்கும் இரண்டாம் உலகயுத்தத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இங்கே மாயவரம் துவங்கி செகண்ட்ராபாட் வரை ஒரு குடும்ப நிகழ்வுகளை உள்ளடக்கியது.
நாவல் நடக்கிற காலம் இப்படியென்றால் இதை எழுதிய காலம் “ Sorrows never come singly”யை நினைவுபடுத்தும் விதமாக இருந்திருக்கிறது. அசோகமித்திரன் ஐம்பது வருடங்களாக குடியிருந்த தி.நகர் தாமோதரன் ரெட்டி தெரு வீட்டில் இருந்து வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்தார். அந்த 2000 மாவது ஆண்டில் அவருடைய குடும்பத்தில் மூன்று பேருக்கு எலும்பு முறிவு, வாரக்கணக்கில் மருத்துவமனை சிகிச்சை. மூவருக்கும் நிரந்தரமாக நினைவு படுத்தும் வகையில் காயங்கள். அந்த நெருக்கடியான காலத்தில் தான் இந்த கடைசி நாவலை எழுத ஆரம்பித்திருக்கிறார் ஆசிரியர்.

எழுபத்தேழாம் வயதில் ‘ ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். பல ஆண்டுகள் முன்பே தொடங்கப்பட்டது. மனதளவில் ஏதோ எதிர்ப்பு இருந்து கொண்டிருக்கிறது.அதை மீறித் தான் அவ்வப்போது எழுத முற்படுகிறேன். இந்த 2009ம் ஆண்டில் அதை முடித்து விட வேண்டும்.’
எழுபத்தெட்டாம் வயதில் ‘ இறுதியாக, பல ஆண்டுகளாக எழுதி வரும் நாவலை ஒரு சிறிய அளவிலேயே முடித்து விட்டேன். இன்னும் ஏராளமான பாத்திரங்களை விரிவு படுத்த வேண்டும். இந்த வயதில் பெரிய திட்டங்கள் எனக்கென வைத்துக்கொள்வது அசாத்தியமானது.’
Perhaps life is Just that….a dream and a fear ....ஜோசப் கான்ராட் தான் இப்படி கவலைப்பட்டான். Byron's Incomplete "DON JUAN"....... Keats's Fractional "HYPERION".....
அசோகமித்திரனின் அப்பா முதல் உலகயுத்த காலத்தில் ஒரு வெள்ளைக்கார துரையிடம் நிஜாம் சமஸ்தானத்தில் வேலைக்கு சேர்ந்து அந்த வேலை யுத்தம் முடிந்தவுடன் முடிவுக்கு வந்த பின் அந்த துரை உதவியுடனேயே ரயில்வேயில் தனக்கும் தன் தம்பிகள் இருவருக்கும் கூட வேலை வாங்கி அங்கே செட்டிலாகி இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின் ஒரு ஐந்து வருடங்களில் சகோதர்கள் தங்கள் மனைவிகளையும், படிப்பை முடிக்காத குழந்தைகளையும் விட்டு விட்டு செத்துப்போகிறார்கள்.
நாவல் மிக கனமான உருக்கமான, இறுக்கமான தளங்களை உள்ளடக்கியது.
இன்று நான்கு முறைக்கு மேல் நான் 2010லிருந்து நாவலை மறு வாசிப்பு செய்து விட்டேன். இன்னும் என் காலம் முடியும் வரை எத்தனை முறை வாசிப்பேனோ?
மாயவரத்தை ஒட்டிய ஒரு கிராமத்திலிருந்து நிஜாம் சமஸ்தானத்திற்கு அந்த சகோதரர்களை எது கொண்டு சேர்த்தது. முற்றிலுமாக வேறு கலாச்சார சூழலில் நடுத்தர வயதில் அன்னியப் பிரதேசத்திலே உயிரையும் விட வைத்தது. இதற்கெல்லாம் சில வரி பதில் சொல்வது அபத்தம்.
18வது அட்சக்கோடு நாவல், எத்தனை சிறுகதைகள், கட்டுரைகள் அந்த ஹைத்ராபாத், செகண்ட்ராபாத் பற்றி எழுதித் தீர்த்திருக்கிறார்.
ஐந்நூறு கோப்பைத்தட்டுகள், மாறுதல் (சாய்னா), சுந்தர், நடனத்துக்குப் பின், பங்கஜ் மல்லிக், தந்தைக்காக, கதர், அபவாதம், அவள் ஒருத்தி தான், உத்தர ராமாயணம், அப்பாவின் சிநேகிதர், சாயம், முனீரின் ஸ்பானர்கள், சில்வியா, இன்ஸ்பெக்டர் செண்பகராமன், திருநீலகண்டர், சகோதரர்கள், மண வாழ்க்கை, இரு முடிவுகள் உடையது, அழகு, பைசா, விடுமுறை, பாதாளம், பாண்டி விளையாட்டு, ஹரிகோபாலின் கார்பன் பிரதி, சேர்ந்து படித்தவர்கள், அலைகள் ஓய்ந்து.., அடுத்த மாதம், கொடியேற்றம், மறதி, ஆறாம் வகுப்பு, 1946ல் இப்படியெல்லாம் இருந்தது, தோஸ்த், கல்யாணி குட்டியம்மா, பரிட்சை, பாலாமணி குழந்தை மண்ணை தின்கிறது, மீரா- தான்சேன் சந்திப்பு, பார்த்த ஞாபகம் இல்லாது போதல், கோபம் ஆகிய சிறுகதைகளெல்லாம் நினைவில் நிழலாடி நிற்கிறது.
அசோகமித்திரனின் பாத்திரங்கள் காலகாலமாக திரும்பத் திரும்ப அவருடைய எழுத்தில் பயணிப்பவர்கள்.
’ஒற்றன்’ நாவல் களத்தில் அமெரிக்க அயோவா சிடி கதைகள் ‘அம்மாவின் பொய்கள்’ (1986), இப்போது நேரமில்லை (1985), ஒரு நாள் அதிகாலைப் போதில் (1975), அழிவற்றது (2004)
‘நான் ஒரு முறை ஓராண்டுக்காலம் அமெரிக்காவில் இருக்க நேர்ந்தது. அங்கு கூட வெகு விசித்திரமாக ஒரு கொரியாக்காரன், ஓர் இந்தோனேஷியாக்காரன், ஒரு ஜப்பானிய மாது, ஓர் அமெரிக்கப்பெண், ஒரு ஹங்கேரிய அம்மாள்- இவ்வளவு பேர்கள் அவர்களுடைய துக்கங்களை என் தோள் மீது கசிய விட்டிருக்கிறார்கள். ஆனால் என் உடம்பெல்லாம் நிறைந்திருக்கும் துக்கத்தை நான் தணித்துக்கொள்ள எனக்கு இன்னும் ஒரு தோள் கிடைக்கவில்லை.” ஒற்றன் நாவல் சூழலைப் பற்றி இப்படி ‘ நானும் ஜே.ராமகிருஷ்ணராஜூம் சேர்ந்து எடுத்த சினிமாப்படம்’ கதையில் சொல்லியிருக்கிறார்.
18வது அட்சக்கோடு நாவலில் வருகிற ஜாபர் அலியை 2002ல் எழுதிய ’சகோதர்கள்’ களத்தில் காணலாம். நாகரத்தினத்தை 1982ல் எழுதிய ‘அப வாதம்’ காட்டுவதுண்டு. 2010ல் எழுதப்பட்ட கதை ’தோஸ்த்’ ரெய்னால்ட்ஸ் காரில் வரும், பளபள ஷேர்வாணி அணிந்த பையன்.
சில்வியா, இன்ஸ்பெக்டர் செண்பகராமன், அப்பாவின் சினேகிதர் சையது மாமா. டாக்டருக்கு மருந்து புருஷோத்தம் டாக்டர்.
18வது அட்சக்கோடின் இறுதி அத்தியாயமாக இருந்திருக்க வேண்டியது ‘ஒரு நாள் நூலகத்திற்குப் போகும் வழியில் நின்று பார்த்த கிரிக்கெட் ஆட்டம்’ என்ற சிறுகதையென்று அசோகமித்திரன் சொன்னார்.
யுத்தங்களுக்கிடையில் அசோகமித்திரனின் அத்தை பணக்கார விதவை சீதா. இவளை மையம் கொண்டு எத்தனை கிளை கதைகள்.
யுத்தங்களுக்கிடையில் ராமசுப்பு ’மானசரோவர்’ நாவலில் ஜபர்தஸ்து பண்ணிய சாமா.
’கோபம்’ சிறுகதை மன்னி யுத்தங்களுக்கிடையில்.
’லீவு லெட்டர்’ குறு நாவல் கேசவராவ் யுத்தங்களுக்கிடையில்.
இந்த நாவலை படிப்பவர்கள் ஆசிரியர் எழுதி 2010ல் வெளிவந்த  குறு நாவல் ’பம்பாய் 1944’, 2014ல் வெளியான நாவல் ‘இந்தியா 1948’ இரண்டையும் அவசியம்  படிக்க வேண்டும். சிவப்பு அண்ணா தான் சுந்தரம். பம்பாய் அண்ணா. யுத்தங்களுக்கிடையில் பம்பாய் அண்ணா பெயர் ராகவன். மூத்த மகன் தான் பம்பாய் அண்ணாவாக மாறினான்.
இளையவன் மணி தான் தத்து எடுக்கப்படுவதை இழந்தான்.
யுத்தங்களுக்கிடையில் கடைசி பாரா ‘ ஒரு தலைமுறை முடிந்தது’ (1988) சிறுகதையை நினைவு படுத்தும்.
“அவங்க அண்ணன் தம்பி ஒருத்தர் கூட அறுபது வயசைத் தாண்டலை. எங்கப்பா போறப்போ ஐம்பத்து மூணு. உங்கப்பாவுக்கென்ன ஐம்பத்தஞ்சு இருக்குமா?’
‘ஐம்பத்தாறு.”
பல வருடங்களாக நாவல் எழுதப்பட்டிருப்பதால் அசோகமித்திரனின் நினைவுக்குழப்பம் ராமேசனை இரண்டொரு இடங்களில் சபேசன் என குறிப்பிட்டிருப்பது பெரிய தவறல்ல.
………..

உலகத்தில் தான் ஒருவரைச் சுற்றி எவ்வளவு கதைகள்! கதைகளுக்கு முடிவே இல்லை. மேலும் எந்தக்கதையும் பூரணமான கதையல்ல.
- அசோகமித்திரன்.

...........................................



Apr 11, 2018

(சங்கர்) கணேஷ்


’நானே பனி நிலவு’  மேஜர் சந்திரகாந்த் படத்தில் ஜெயலலிதா மேடையில் ஆடிப்பாடும் பாடல். நாகேஷ் தங்கையாக ஜெயலலிதா. 
நாகேஷ் பக்கத்தில் உட்கார்ந்து ஒருவர் “ மிஸ்டர், குட்டி ரொம்ப ஷோக்காயிருக்குல்ல.யாரது?” என்று கேட்பார். அவர் (சங்கர்) கணேஷ்.

அப்போதெல்லாம் அவர் விஸ்வநாதனிடம் அஸிஸ்டண்ட். மேஜர் சந்திரகாந்த் படத்திற்கு இசையமைத்தவர் வி.குமார்.
சர்வர் சுந்தரம் படத்தில் ‘ அவளுக்கென்ன அழகிய முகம்’ பாட்டில் பேங்கோஸ் வாசிப்பார்.
கலாட்டா கல்யாணம் படத்தில் உறவினில் ஃபிப்டி ஃபிஃப்ட்டி பாடலில் ஒலிக்கும் ஆண் குரல் கணேஷ் தான்.
விஸ்வநாதன் குரூப்பில் இருக்கும்போது “ டேய் கணேஷ், அது யாருடா வயலின் கொஞ்சம் பிசிறு தட்டுதே” என்றால் கணேஷ் ஆர்க்கெஸ்ட்ரா பகுதிக்கு வந்து “ அண்ணே, என்னண்ணே’’ என்பார்.
அப்படியே விஸ்வநாதன் ட்ரூப்பில் conspicuous ஆக தெரியத்தொடங்கியவர்.
ஒருங்கிணைப்புத் திறன் மிகுந்த கணேஷ், இசைஞானமிக்க சங்கருடன் இணையும் தேவையிருந்தது. மகராசி படம் தேவர் தயவில் கண்ணதாசன் சிபாரிசில் கிடைத்து இசையமைப்பாளர்கள் ஆனார்கள்.
கணேஷுக்கு படங்களில் தலை காட்டுவதில் பிரியம் அதிகம்.
புகுந்த வீடு படத்தில் “ மாடி வீட்டுப்பொண்ணு மீனா, கோடி வீட்டு பக்கம் போனா’ பாட்டில் ரவிச்சந்திரன் இசையமைப்பாளர்களை ‘ சங்கர், கணேஷ் என்று அறிமுகப்படுத்துவார்.
’சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் தலைப்பு பாட்டில் நடித்திருக்கிறார். ஒரு படத்தில் ‘ வரவேற்பு, வரவேற்பு’ பாடலுக்கு நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக ரெண்டு படங்களில் நடித்திருக்கிறார்.
கணேஷ் வாழ்க்கை பரபரப்பானது.
ஜி.என்.வேலுமணியின் மகள் ரவிச்சந்திரிகாவை காதல் திருமணம் செய்தவர்.
பார்சலில் வந்த ரேடியோ வெடிகுண்டு இவர் கைவிரல்களை சிதைத்திருக்கிறது.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது இவர் ஐம்பது அடி தூரத்தில் இருந்திருக்கிறார்.
சென்ற வருடம் எக்மோர் ஸ்டேசனில் இவரை பார்த்த போது பழைய நினைவு வந்தது.
ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஆர்.ஆர். ரிக்கார்டிங் தியேட்டரில் சங்கர் கணேஷ் இசையமைத்துக்கொண்டிருந்த போது ஸ்டுடியோவை பார்க்க வந்திருந்த என் தந்தையை அங்கே அழைத்துப்போயிருந்தேன்.
கணேஷ் என்னையும் அப்பாவையும் பார்த்தார். நான் வலது கையை தூக்கி ஒரு சல்யூட் விஷ் செய்தேன். பதிலுக்கு கணேஷ் மிக உற்சாகமாக நெற்றி தொட்டு பிரமாதமாக ரெஸ்பாண்ட் செய்தார்.
என் அப்பா கேட்டார். ‘உனக்கு இவர் தெரிந்தவரா?’
’அறிமுகம்,பழக்கமெல்லாம் இல்லை.இவர் இசையமைப்பாளர் கணேஷ்’ என்றேன்.
தினமும் ஸ்டுடியோவில் அவரையென்றில்லை. பெரியவர்கள் யாரென்றாலும் நான் விஷ் செய்வேன். சங்கர் கணேஷ் எப்போதும் வெறுமனே தலையாட்ட மாட்டார். அவரும் அதிக உற்சாகமாகவே விஷ் செய்வார்.
பல சினிமா பிரபலங்கள் ரொம்ப இறுக்கமாக தலையைக் கூட அசைக்க மாட்டார்கள்.
எக்மோர் ஸ்டேஷனில் அன்று ரயிலில் இருந்து மனைவியுடன் இறங்கிய கணேஷ் என்னை தாண்டி செல்லும் போது நான் ‘ நமஸ்காரம் சார்’ என்றேன்.
பதிலுக்கு “ நமஸ்காரம், நல்லாயிருக்கீங்கள்ள” என்றவாறு நடந்து சென்றார்.
அப்போது அங்கு அதைப்பார்த்துக்கொண்டிருந்த சிலர் கூட எனக்கும் கணேஷுக்கும் நல்ல அறிமுகம் போல என்று தான் நினைத்திருக்கக்கூடும்.
அதான் (சங்கர்) கணேஷ்.
உடை உடுத்துவதில் அவர் தனித்தன்மையுடன் இருப்பது கூட சரி, பரவாயில்லை. ஆனால் ஏன் கழுத்திலும், நெஞ்சிலும், கையிலும் இவ்வளவு தங்க நகைகள்?

................................................



Apr 5, 2018

பாம்பறியும்


நத்தம் ரோட்டிலிருந்த மதுரை எஸ்.பி. (நார்த்) ஆஃபிஸில் ஸ்பெஷல் ஆஃபிசராக இருந்த என் நண்பன் சொன்ன சமாச்சாரம்.
தேனி மாவட்டத்தில் ஒரு போலீஸ் ஸ்டேசன் எஸ்.ஐ  கோர்ட் விஷயமாக மதுரை வந்திருக்கிறார். சொந்த வேலைக்காக பதினைந்தாயிரம் ரூபாய் பணம் யூனிபார்ம் சட்டைப்பையில் வைத்திருந்திருக்கிறார்.
மதுரையில் வேலையெல்லாம் முடித்து விட்டு, அப்போது ரிலீசாகி சென்ட்ரல் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த கமல் ஹாசன் “காக்கி சட்டை” படம் பார்த்து விட்டு ஊர் திரும்புவதாக திட்டம். But life is what happens when we make other plans.
மதுரை பஸ் ஸ்டாண்டில் இறங்கியவுடன் அதிர்ச்சி. பணம் காணவில்லை. யூனிஃபார்ம் பாக்கெட் கிழிந்திருக்கிறது. பஸ்ஸில் இறங்குவதற்கு கொஞ்ச நேரம் முன் கூட பணம் இருக்கிறதை செக் செய்து அறிந்திருக்கிறார். பணம் காணாமல் போய் விட்ட வேதனை. எஸ்.ஐக்கு அவமானம் தாங்க முடியவில்லை. யூனிஃபார்மில் இருக்கும்போது பிக் பாக்கெட் நடந்திருக்கிறது. தைரியமாய் செய்திருக்கிறான்.
Is it an honor for a police officer to be pickpocketed?  Disgrace.
கொஞ்ச நேரம் நடந்த விஷயத்தை ஜீரணிக்க முடியாமல் பரபரப்பான பஸ் ஸ்டாண்டில் நின்றிருக்கிறார்.
பஸ் ஸ்டாண்ட் போலீஸ் பூத்தில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிளிடம் சென்றிருக்கிறார்.
கான்ஸ்டபிள் “ஐயா”
எஸ்.ஐ. தான் மொஃபசல் ஏரியாவில் போலீஸ் எஸ்.ஐ. என்பதை சொல்லி நடந்ததை சொல்லியிருக்கிறார்.
கான்ஸ்டபிள் எந்த ஊர் பஸ்ஸில் இருந்து அவர் இறங்கினார் என்பதை கேட்டு விட்டு அந்த பஸ் நிற்குமிடத்தை உற்று ஒரு பார்வை பார்த்திருக்கிறார். பின் எஸ்.ஐ.யிடம் சொல்லியிருக்கிறார். “ஐயா.. நீங்க இங்க பூத்திலயே இருங்க..நான் ஒரு பத்து நிமிஷத்தில் வந்திட்றேன்.”
கான்ஸ்டபிள் போய் அரை மணி நேரம் கடந்திருக்கிறது. எஸ்.ஐ நகத்தை கடித்து கொண்டு உட்கார்ந்திருந்திருக்கிறார். இன்னும் ஒரு அரை மணி ஓடியிருக்கிறது.
கான்ஸ்டபிள் வேர்க்க விருவிருக்க வந்திருக்கிறார்.
’ஐயா, எவ்வளவு பணம்னு சொன்னீங்க..’
’பதினைந்தாயிரம்’
‘பத்தாயிரம் தான்னு சாதிக்கறானுங்க..’
’பதினைந்தாயிரம்டா’ அழாத குறையாக எஸ்.ஐ. பதில்.

முப்பது வருடங்களுக்கு முந்தைய ’பதினைந்தாயிரம்’ மதிப்பு மிக்க கணிசமான தொகை.

‘ஐயா இன்னக்கி பதினைந்தாயிரம் காணாம போயிடுச்சின்னு நினைக்காதிங்க.. லாட்டரியில உங்களுக்கு ஏழாயிரம் விழுந்திருக்குன்னு நெனச்சிக்கங்க.. காடைய காட்டில விட்டா பிடிக்க முடியுமா?’
’என்னய்யா சொல்ற’
’நான் போறதுக்குள்ள ஆறு பய கைக்கு அமௌண்ட் மாறிடுச்சி. கை மாறும் போது அமௌண்ட் கொறஞ்சி கிட்டே வரும். ஏழாவது பயல நான் பிடிச்சப்போ அவன் கிட்ட இவ்வளவு தான் இருந்திச்சி.’
ஏழாயிரம் ரூபாயை கான்ஸ்டபிளிடம் இருந்து பெற்றுக்கொண்ட எஸ்.ஐக்கு தெளிவாக புரிந்த விஷயம். கான்ஸ்டபிளுக்கும் பங்கு பிரிந்திருக்கிறது.
வேலியே வேலியை மேய்ந்த கதை.

...........................................................................

Apr 2, 2018

கெட்ட பொம்மன்


தின்னவேலி பாஷையில தான கட்ட பொம்மன் பேசியிருப்பான்.. எப்படி பேசியிருப்பான் என்பதை இன்று கூத்துப்பட்டறையில்
பேசிக்காட்டினேன்.
இது ஒரு பயிற்சி. வட்டார வழக்கில வசனம் பேசுவது.


மதுரை அமெரிக்கன் காலேஜ் மரத்தடியில அற்றைத்திங்கள் பட்டப்பகலில் நான் அடித்த லூட்டி தான் இதெல்லாம்.
”ஏல, ஜாக்சன், என்னல எசளி? செத்த மூதி...
ஏம்ல எங்க வயக்காட்டுக்கு வந்தியா?
நாத்து நட்டியா? கள புடுங்குனன்னு சொல்வியோடேய்?
உங்க அம்ம தாலி... என்னத்துக்குலே ஒனக்கு வரி, வட்டி...
சவத்துக்கூதி வியாபாரமால்ல இருக்கு...ஓஞ்சோலி மயித்த பாத்துட்டு போயம்ல..
ஏல என்னல முழிக்க... மொறக்க.. செத்த சவமே...
ஒளருதாம்னு பாக்கியோலே...ஈனப்புண்டழுத...
எல...எந்தம்பி ஊமத்தொர
ஒன்ன வகுந்துருவாம்ல..
நாரப்புண்டழுத...
எங்கருந்து வந்து எங்கள ஆழம் பாக்கற...
வெள்ள பன்னிகளா...பானர்மென், ஜாக்சன்னு எவனையும் சட்ட பண்ண மாட்டோம்ல.. மோதிப்பாக்கணும்னு நெனச்சன்னா.. அரிப்பெடுத்து அருவாமனல்ல ஏறுனா ஒனக்குத் தாம்ல நஷ்டம். ஒக்கா புண்ட..”

ஒரு வேளை கட்டபொம்மன் மதுரைக்காரனாயிருந்தா எப்படி பேசியிருப்பான்.
“ அப்பு..டேய்....ஜாக்சன்.. ”

 பக்கத்தில் நிற்கும் வெள்ளயத்தேவனிடமும், ஊமைத்துரையிடமும் கட்ட பொம்மன் அமைந்த குரலில் “தாழன் சைஸ் சரியில்லயே..”

“ நாங்கள்ளாம் மதுரக்காரங்கடா... கொண்டே போடுவோம்டா..எங்களுக்கெல்லாம் எந்திரிச்சிச்சின்னு வச்சிக்க..அப்றம் மடக்க ஆளே இல்லடா..
டேய் வெள்ளயத்தேவா...ஏன்டா சில்றய எடுத்த இப்ப... நாந்தான் வெள்ளக்காரன்ட பேசிக்கிட்டு தான இருக்கேன்.
டேய் ஊமத்தொர. இப்ப ஏன் கத்திய படக்கிண்டு..மடக்கிண்டு...இர்றா...
டே ஜாக்சன்... நம்ப பயல்க ரொம்ப அசிங்கமானவனுங்கடா.. ரொம்ப மோசமான பிக்காலிக.. சட்டுன்னு சொருகிடுவானுங்க..சூதானமா இருந்துக்க...
ஒங்கொம்மாட்ட குடிச்ச சினப்பால கக்க வச்சிருவம்டா... நாங்களாம் ஆளயும் வோத்து நெழலயும் வோத்துட்டு போறவங்கடா..
எனக்கு நீ குடுறா வட்டி... என்ன சீட்டிங்கா? ங்கொம்மாலோக்க.. ’வரி..வட்டி..’மொத்தம் ஒவ்வாம பேசிக்கிட்டு..
சும்மா நட்டுத் தாழங்கள்ளாமாடா எங்கள அடிச்சிப்பாக்கறது. எங்க தாட்டிங்களுக்கு மஞ்ச அரச்சியா ...? ஏன்டா....யார்ரா நீ? ஊள்டக்கர்.
வாய உடாம போடா டேய்..
செவனேன்னு எங்கள இருக்க விடுங்கடா..எனக்கு கண்ணு செவேல்னு ஆயிடுச்சி.... ஏன்டா வாயக்குடுத்து சூத்தப்புண்ணாக்கிக்கிறீங்க. ”
............................

Apr 1, 2018

வி. நாகையா - வித்யாவதி


வித்யாவதி சினிமாவில் நடிகையாக அக்கா சந்தியாவுக்கு முன்னதாகவே நுழைந்தவர். அவர் தான் பின் அக்காவையும் சினிமா நடிகையாக உதவியவர். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா.
கல்யாண்குமார் என்னிடம் சொன்ன ஒரு தகவல். 1954ல் கல்யாண்குமார் கதாநாயகனாக கன்னடப்படத்தில் அறிமுகமான போது அவருக்கு முதல் படத்தில் ஜோடி வித்யாவதி தான். ஜெயலலிதாவுடனும் கல்யாண்குமார் பின்னால் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.
1953ம் ஆண்டு நடிகர் வி.நாகையா தயாரித்த ’என் வீடு’ படத்தில் வில்லியாக வித்யாவதி நடித்தார்.

வாழ்க்கையிலும் இருவரும் இணைந்தனர். நாகையாவின் அபிமான தாரமாக வித்யாவதி ஆகிப்போனார்.
வி. நாகையா கண்ணியமான பாத்திரங்களில் படங்களில் வருபவர்.
1956ம் ஆண்டு ’அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் எம்.ஜி.சக்ரபாணிக்கு ஜோடியாக நடித்தார். விசிறியால் விசிறிக்கொண்டு வரும் வில்லி.
ஃபியட் கார் செல்ஃப் ட்ரைவிங். சிகரெட் புகைத்த நடிகை வித்யாவதி.
சந்தியாவும் வித்யாவதியும் கூட இணைந்து நடித்திருக்கிறார்கள்.
நாமக்கல் சேஷையங்காரின் சிஷ்யர்களில் பிரதானமானவர் சித்தூர் வி நாகய்யா.
நாகய்யா பற்றி ... எம். எஸ் . சுப்புலக்ஷ்மிக்கு ஜோடியாக ' மீரா ' படத்தில் நடித்தவர்.
புஷ்பவல்லிக்கும் ஒரு படத்தில்(கோரகும்பர் ) ஜோடியாக நடித்தவர். அந்த புஷ்பவல்லி -நாகய்யா படத்தில் ஒரு சின்ன ரோல் ஜெமினி கணேசன் செய்திருக்கிறார்.
தெலுங்கு, தமிழ் படங்களில் சிறந்த நடிகராக நாகையா அறியப்பட்டிருந்தார். நல்ல உயரமான நடிகர்.
சொந்தப்படம் எடுக்கிற ஆசை இவரை நஷ்டப்படுத்தி பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பும் நிலைக்கு ஆளாக்கியது.

பின்னால் 1960களிலும் 1970களின் ஆரம்பத்திலும் அப்பா ரோல்,மாமனார் ரோல்களிலும் சாமியார் ரோல்களிலும் தமிழ் படங்களில் வந்து இடைவேளைக்கு முன் அல்லது படம் முடியுமுன் பெரும்பாலும் செத்துப்போவார், பாவம்.
எத்தனையோ நல்ல பாடல் காட்சிகள்.
’சின்ன சின்ன ரோஜா, சிங்கார ரோஜா, அன்ன நடை நடந்து அழகாய் ஆடி வரும் ரோஜா’ குழந்தையாக குட்டி பத்மினி. பி.பி.எஸ். பாடல்.
’நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு’
’அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்பான் கீதையிலே கண்ணன்’

ஒரு பெரியவர் சொன்னார். ஒரு படம் செகண்ட் ஷோ போயிருக்கிறார்.
அந்த படத்தில் நாகய்யா இடைவேளையின் போதோ, அதன் பின்னரோ,என்ன எழவோ நாகய்யா இருமி அழுது கண்ணீர் விட்டு,நடுங்கும் குரலில் உருக்கமாக பேசிவிட்டு வழக்கம்போல செத்துப்போயிருக்கிறார்.
படம் முடிந்து வீட்டுக்கு வந்து இரண்டரை மணி போல இந்த பெரியவர் தூங்கிவிட்டு காலை ஏழு மணிக்கு எழுந்து தினசரியைப் பிரித்தால் மூன்றாம் பக்கம் சின்ன புகைப்படத்துடன் " பத்மஸ்ரீ வி.நாகய்யா மரணம் " என்று செய்தி சின்ன அளவில்.
செய்தி படித்த பெரியவருக்கு அதிர்ச்சி கிஞ்சித்தும் இல்லை. வருத்தமும் கொஞ்சம் கூட இல்லை.
ஒரு ஐம்பது படத்திலாவது நாகய்யாவின் மரணத்தைப் பார்த்து சலித்திருந்த தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு யாருக்குமே இது செய்தியாக அப்போது சலனமேதும் ஏற்படுத்தவே இல்லை.
ஆனால் நாகய்யா பன்முக ஆற்றல் நிறைந்தவர். திரை இசைப் பாடல்களில் கூட இவர் சொந்தக்குரலில் பாடிய " திருமுருகா என ஒரு தரம் சொன்னால் உருகுது நெஞ்சம் " இன்றும் கேட்கக்கிடைக்கும்.
இப்போது தி நகர் பனகல் பார்க்கில் சிலையாக இன்று நிற்கிறார்!
அசோகமித்திரன் கடைசி கால கதையொன்று ஆனந்த விகடனில் வெளியானது.
நான் அவருக்கு போன் பண்ணி சொன்னேன்.
இதில் முக்கிய கதாபாத்திரம் சித்தூர் வி. நாகையா.
”அடேடே..ஆமாம்” என்றார்.
அந்தக் கதை ‘பாண்டி பஜார் பீடா’
தன்னை சிலாகித்து புகழ்ந்து பேசும் ரசிகனிடம் “இந்த மாதிரி பேச்செல்லாம் நான் நிறைய கேட்டிருக்கேன். இதுக்கெல்லாம் அர்த்தமே கிடையாது” என்று சொல்லும் நடிகர் வெங்கையா தான் நாகையா.
’பாண்டி பஜார் பீடா’ கதையில் வரும் சி.எஸ்.ஆர் என்ற ஸ்டார் நடிகர் சி. எஸ். ஆர். பாதாள பைரவியில் மகாராஜாவாக நடித்தவர்.  தெலுங்கு நடிகர்.

‘பாத்திரத்தின் முன் மாதிரியை அடையாளம் கண்டு கொள்வது ஒரு தனித்தேர்ச்சியின் பேரில் வருவது’   
- அசோகமித்திரன்